Saturday, May 5, 2018

திராவிடர்களுக்கு கல்விதான் உயிர்மூச்சு

Suriya Moorthy
Via Facebook
2018-05-05

ஆச்சர்யமாக இருக்கிறது

இரண்டு நாட்களாக சமூக ஊடகங்கள் அதகளப்பட்டுக்கொண்டிருக்கிறது, நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு குறித்த முழுமையான தகவல்கள் என்னிடம் இல்லை அதனால் அங்குள்ள உண்மையான சூழல் என்ன, யாரெல்லாம் பாதிக்கப்படிருக்கிறார்கள், எத்தனை பேருக்கு இந்த சிக்கல், இந்த ஒதுக்கீடுகள் திட்டமிட்டு செய்யப்பட்டதா, முறையாக திட்டமிடப்படாததால் வந்த விளைவா, மாணவர்கள் குறிப்பிட்ட மூன்று மையங்களுக்கு வெளியே பிற மையங்களில் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்தெல்லாம் என்னிடம் முழுமையான புரிதல் இல்லை

ஆனால் சென்னை வெள்ள காலத்தை நினைவுருத்துவதுபோல் எல்லா திசைகளிலிருந்தும் உதவிகள் குவிந்து கொண்டிருப்பது மட்டும் தெளிவாக புரிகிறது

வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என்று எங்கொங்கோவிருந்து உதவிக்கரங்களை அமைப்புகளும், தனிநபர்களும் நீட்டுகின்றனர். ஏராளமான தமிழ் சங்கங்கள் உதவ முன்வந்த பிறகு தான் தெரிகிறது இந்தியா முழுமையிலும் தமிழர்கள் சின்ன சின்ன குழுக்களாக தொடர்ந்து செயல்பட்டுவருகிறார்கள் என்பது

இந்த என்.ஜி.ஓ நடவடிக்கைகள் சரியா, அரசின் கடமைகளை தனியார் செய்வது முறையா, இது மறைமுகமாக அரசை காக்கும் முயற்சியா போன்ற விவாதங்கள் பிறகு செய்யப்பட வேண்டியவை, இப்போதைக்கு இந்த பரபரப்புகள் சில செய்திகளை நமக்கு சொல்லுகின்றன

1. எங்கேனும் ஒரு சிக்கல் என்றால் உதவுவதற்கு ஒரு கூட்டம் எப்போதும் தயாராகவே இருக்கிறது

2. கல்வி சார் பிரச்சனைகளில் தமிழ் சமூகம் ஒரு உணர்வு நிலையிலேயே இருக்கிறது, அது கல்விக்கு ஒரு சிக்கல் என்றால் அதீதமாக கோவம்  கொள்கிறது (நான் விதிவிலக்குகளை கணக்கெடுக்கவில்லை / பொதுப்படையாகவும் சொல்லவில்லை என்னை சுற்றி இருப்போரை வைத்து மட்டும் சொல்கிறேன்)

இந்த கோவத்தின் வேர் எங்கிருந்து வந்தது என்பதற்கு இந்த நிலத்தின், இந்த சமூகத்தின் இயல்புகளில் ஒன்று கல்வியை பெரும் சொத்தாக நினைப்பது, அதற்காக சொத்துக்களை வித்தேனும் கல்வியை பெறுவது என்கிற அடிப்படையே பதில்

நீதிக்கட்சி இந்த அடிப்படையை வளர்க்க பெரும்பாடு பட்டிருக்கிறது, பிற்படுத்தப்பட்ட/ ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்த அவர்கள் நம்பியது கல்வியையும் அதை தொடர்ந்த பிரதிநிதித்துவத்தையும் மட்டும் தான். ஒவ்வொரு சமூகங்களையும் குழுவாக இணைத்து அவர்களில் உயர்நிலைகளில் இருப்பவர்களின் உதவியோடு அந்த பகுதி/ சமூக குழந்தைகளுக்கு பள்ளிகளை அவர்களையே உருவாக்க செய்வது அல்லது அரசை உருவாக்க வைக்க மக்களை திரட்டி முயற்சிகள் செய்வது, பண வசதி படைத்தவரை குழுந்தைகளுக்கு வழிகாட்டவும் கல்வி வழங்கவும் செய்வது என்கிற நுணுக்கமான பல செயல்பாடுகள் அவர்கள் வேலை திட்டத்தில் இருந்தன. இரட்டை ஆட்சி முறையில் குறைந்தபட்ச அதிகாரத்தை வைத்துக்கொண்டு வரலாற்றின் மகத்துவங்களை அவர்கள் நிகழ்த்துவதற்கு இந்த micro management உம் ஒரு காரணம்

கல்விக்கான முக்கியத்துவத்தை உணர செய்து அதற்கு பிறகு வாய்ப்புகளை உருவாக்கி ஒரு நூற்றாண்டுக்குள் பெரும் கட்டமைப்புகளை தமிழகம் உருவாக்கிக்கொண்டது அதனால் தான் தன்னுடைய சொத்துக்கு ஒரு ஆபத்து வரும்போது அது பதறுகிறது  (அதற்கு முந்தைய வரலாற்றில் எனக்கு இது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை)

3. ஒரு காலகட்டம் வரை எந்த உரிமைகளும் அற்றவர்களாக இருந்தவர்கள் கல்வியின் வழியே இன்று உலகின் பல பகுதிகளிலும் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள், குறைந்தபட்சம் உதவுகின்ற அளவுக்கு வசதியோடு வாழ்கிறார்கள், இதைத்தான் இரண்டு நாட்களாக வரும் உதவி அறிவுப்புகள் காட்டுகின்றன

என்னுடைய அச்சமெல்லாம் என் தலைமுறைக்கு ஒரு இடர் காலத்தில் உதவக்கூடிய அளவிற்கு என் முந்தைய தலைமுறை வசதியோடும் வாய்ப்புகளோடும் உலகமெல்லாம் பரவிக்கிடக்கிறது ஆனால் எதிர்காலத்திலும் இதே வசதியும் வாய்ப்பும் இருக்குமா என்பது தான். எத்தனையோ நெருக்கடிகளையும், தாக்குதல்களையும் தாண்டி  இந்த நிலை எதிர்காலத்திலும் இருக்கும் என்று ஒரு சின்ன நம்பிக்கை இன்னமும் இருக்கிறது

அந்த நம்பிக்கைக்கு ஒரு காரணமும் இருக்கிறது, அவர்களின் இந்த வசதியான நிலை முழுக்க முழுக்க கல்வியின் வழியே மட்டுமே பெறப்பட்டது, கல்வி இல்லாமல் போகும்போது தான் அடுத்த தலைமுறை இந்த வசதிகளையும் வாய்ப்புகளையும் இழக்கும். தமிழர்களுக்கு கல்வி ஆகப்பெரும் சொத்து என்கிற உணர்வு அவர்கள் மரபின் தொடர்ச்சி எனவே எந்த மனிதனும் சொத்து பறிபோகும்போது மரம்போல நிற்க மாட்டான், எப்பாடப்பட்டாவது அதை காப்பாற்றியே தீருவான் ஆகவே கல்விக்கொரு பாதகமென்றால் தமிழகம் கொந்தளிக்கவே செய்யும்

#No2NEET

-
https://m.facebook.com/story.php?story_fbid=1790571457631965&id=100000373853488

No comments:

Post a Comment