Thursday, May 31, 2018

ரஜினி தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் மீடியாவை நோக்கிப் பாய்ந்தார்

Karl marx ganapathy
2018-05-31

தூத்துக்குடியில் அரச வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் ரஜினியை நோக்கி “யார் நீங்கள்...? என்று கேட்டதும், ரஜினி தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் மீடியாவை நோக்கிப் பாய்ந்ததும் பெரும் விவாதமாக மாறியிருக்கிறது.

கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், ஒரு கட்டம் வரை தமிழகத்தில் ரஜினியின் இருப்பு சிக்கலுக்கு உள்ளாகிக்கொண்டே இருந்தது. குறிப்பாக காவிரி மற்றும் வீரப்பன் விவகாரங்கள். இரண்டையும் கம்பி மேல நடப்பது போல அவர் கையாண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

இங்கு காவிரி என்பது உணர்ச்சிப்பூர்வமான விவகாரமாக மாறும்போதெல்லாம் வழக்கம்போல சினிமா ஆட்கள் அதில் கோமாளித்தனமான கூத்தில் ஈடுபடுவார்கள். தனது ஹீரோ இமேஜுக்கு பங்கம் வராத வகையில் ரஜினியும் அந்த போராட்டங்களில் வந்து உரையாற்றிவிட்டு, பிறகு கர்நாடகாவில் போய் நெளிந்து வளைந்து அதை சரிசெய்துகொண்டிருந்தார்.

இன்று இந்த மீடியா சந்திப்பு விஷயத்தில் சொல்கிறார்களே, ரஜினியின் ஈகோ அந்த இளைஞனின் கேள்வியால் காயமடைந்துவிட்டது அதனால்தான் அவர் ஆத்திரப்பட்டுவிட்டார் என்று, அதை விட அதிகமாக அவரது ஈகோ காயமடைந்த காலம் அது. அந்த சிக்கலை அப்போது அவர் எவ்வாறு எதிர்கொண்டார்?

அவர் மிகத் தந்திரமாக தான் ஒரு ஹீரோ என்பதையும், அதே நேரத்தில் அதிகாரத்தால் பாதிக்கப்பட்டவன் என்பதையும் சமமாகத் தக்கவைத்துக்கொண்டதன் வழியாகவே அதை சமாளித்தார். எம்ஜியாருக்கு அடுத்து ஜெயலலிதாவின் ஆணவம் அவருக்கு இதில் பெருமளவில் உதவியது.

மக்கள் அபிமானம் கொண்ட ஒரு சினிமா உச்ச நட்சத்திரம் தன்னை ஒடுக்கப்படுபவராகவும் காண்பித்துக்கொண்டதன் வழியாக அவரது இயல்புக்குப் தொடர்பில்லாத வகையில் ஒடுக்கப்படுபவர்களின் தரப்புடன் வைத்து எளிய மக்களால் புரிந்துகொள்ளப்பாட்டார்.

மேலும் எளிய மக்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்ட அவரது சினிமா கதாப்பாத்திரங்கள், அதிகாரத்துக்கு எதிரான எளிய மனிதன் எனும் சித்திரத்துக்கு வண்ணம் கூட்டின. அதனால்தான் ஜெயலலிதா மீதான அவரது கோபம் “மேட்டிமை மனநிலை கொண்ட இரண்டு ஆளுமைகளுக்கு இடையிலான சில்லறைச் சச்சரவு” என்கிற எதார்த்தத்தைத் தாண்டி அதற்கு ஒரு அரசியல் மதிப்பு கிட்டியது. அதற்கு ஜெயலலிதாவின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியும் உதவியது. அது எங்ஙனம்?

ஜெயலலிதாவின் அந்த அவல ஆட்சியை எதிர்த்து அப்போது ஒட்டுமொத்த தமிழகமே அலறியது. ரஜினியும் தேர்தல் நேரத்தில் மிகத் தீவிரமாக வாய்ஸ் கொடுத்தார். அதற்கு ஒரு பெறுமதியும் இருந்தது. இங்குதான் ரஜினியின் மதிப்பை சிலர் அங்கீகரிக்க மறுக்கிறார்கள். அவரது எதிர்க்குரலை மக்கள் அங்கீகரித்தார்கள் என்பதும் அது ஜெயலலிதாவின் படுதோல்விக்கு அதனளவில் பங்களித்தது என்பதும் உண்மை.  கருணாநிதி, மூப்பனார் கூட்டணிக்கு ரஜினியின் வாய்ஸ் கூடுதல் பலமாக அமைந்தது.

இந்த காலகட்டத்தில்தான் ரஜினியின் அரசியல் பிரவேச பூச்சாண்டி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. அதை அவ்வாறு நகர்த்தியதில் பத்திரிகைகளுக்குப் பெரும் பங்குண்டு. அவரது அரசியல் பிரவேச செய்திகள், மங்காத வசீகரம் கொண்ட அமுதசுரபியாக இருந்ததை அவைப் புரிந்துகொண்டு, அதைத் தங்களது வியாபாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள விழைந்தன. மந்தமான காலகட்டங்களில் மக்களை கிளுகிளுப்பூட்டுகிற மற்றும் அரசியல் கொதிநிலையான காலங்களில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அட்டைப்பட கட்டுரைகள் எழுதி மற்றும் திசை திருப்புகிற பணியை அவை செய்தன.

இன்று அவர்களை நோக்கி ஏய்... என அவர் விளிக்கும் அந்த அதிகார தொனிக்கு பத்திரிகையாளர்களின் அறமற்ற சமரசத்துக்கும் பங்கிருக்கிறது. ஆனால் அன்று விகடன், குமுதம் போன்ற இதழ்கள் அவரை முன்னிறுத்தியதற்கும் இன்று ஹிந்து போன்ற இதழ்கள் அவர் குறித்த செய்திகளுக்கு தரும் முக்கியத்துவத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

ஜெயலலிதா எதிர்ப்பு அரசியலை உந்து சக்தியாகக் கொண்டு ரஜினி ஒரு அரசியல் பிம்பமாக உருவகிக்கப்பட்ட அந்த காலகட்டத்தில், பெரும்பான்மை சமூகம் தவற விட்ட ஒரு புரிதல் இருக்கிறது. அதுதான் ரஜினியின் மக்கள் விரோத அரசியலாக இப்போது வடிவெடுத்து நிற்கிறது. அது என்ன?

ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் அன்று ஏற்பட்ட உரசல், “மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டதா...?” என்கிற ஆதார கேள்வியே அது. அன்று ரஜினியின் எதிர்க்குரல் கிட்டத்தட்ட ஒரு ஹீரோவின் குரலாகவே பார்க்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் அதற்கு அன்று ஜெயா நடத்திய காட்டாட்சிதான் காரணமே தவிர, ரஜினியின் ஆளுமை குறித்த பிரமிப்போ அல்லது ரஜினி அரசியலுக்கு வந்திருக்க வேண்டிய தேவையோ அல்ல.

இப்போதும் கூட அதுதான் அரசியல் நிலைமை. கருணாஸின் அரசியல் இருப்புக்கு இங்கு என்ன அவசியம் இருக்கிறதோ அதேதான் ரஜினிக்கும் கமலுக்கும் இருக்கிறது. முன்னவர் வெளிப்படையான கோமாளி என்றால் பின்னவர்கள் கொஞ்சம் வர்ணம் பூசப்பட்ட கோமாளிகள். அவ்வளவே.

ஜெயலலிதா மீதான ரஜினியின் கோபத்திற்குக் காரணம், அவர் ரஜினியின் இருப்பை, அவரது ஹீரோ பிம்பத்தை மயிரளவுக்குக் கூட மதிக்காத அகம்பாவத்தைக் கைகொண்டார் என்பதும், அதற்கு எதிராக ரஜினியால் அன்று ஒன்றுமே செய்யமுடியாமல் இருந்ததும்  என்பதே. ஏனெனில் அந்தக் காட்டாட்சி காலத்தில் அப்போது நடந்த எந்த மக்கள் திரள் போராட்ட நடவடிக்கைகளிலும் ரஜினி மக்களுக்கு ஆதரவாகக் கருத்து கூறியவரில்லை. சினிமாத் துறையில் நடந்த போராட்டங்கள், சிக்கல்கள் போன்றவற்றிலும் கூட அவர் தன்னை தள்ளிவைத்துக்கொண்டவராகவே இருந்தார்.

கங்கை அமரனின் பண்ணை வீடு சகிகலா வகையறாவால் மிரட்டி வாங்கப்பட்டபோதும், தயாரிப்பாளர் ஜீவி அதே கும்பலின் ஆதரவு பெற்ற ஒரு கந்துவட்டிக்காரனால் மிரட்டப்பட்டு தற்கொலையை நோக்கி தள்ளப்பட்டபோதும் அவரது வாய்ஸ் ம்யூட் மோடில் தான் இருந்தது. இவை வெறும் உதாரணங்கள் மட்டுமே. ஆக ரஜினி ஒரு  அரசியல் பிம்பமாக  உருவாக்கப்பட்டதன் பின்னால்  “மக்கள் அரசியல்” என்னும்  கருதுகோளே கிடையாது.

இந்த மக்கள் நலன் என்கிற நிபந்தனையற்ற ஜிகினா அரசியல், தனது அரசியல் பண்பாக உள்ளீடற்ற மேட்டிமைத்தனத்தையும், அகம்பாவத்தையுமே  அரசியல் ஆளுமைத் திறனாக  வரித்துக்கொள்ளும். இப்போது ரஜினியிடம் வெளிப்படுவது அதுதான். தம்மை மக்களின் மீட்பராக கருதிக்கொள்வதற்கு, அவருக்கு தனது ஹீரோ இமேஜ் மட்டுமே போதுமானதாக இருக்கிறது.

இத்தனை நாட்களாக இத்தகைய முதலீடுகளையும் பரணில் போட்டு வைத்திருந்த ரஜினி, இப்போது மட்டும் அதை எடுத்துக்கொண்டு ஏன் புறப்படுகிறார்? அவருக்கு மக்கள் நலன் குறித்த அக்கறைகள் வந்துவிட்டன என்பதா அதற்குப் பொருள்? இல்லை.

இன்றைய தமிழகத்தின் அரசியல் நிலைமை மிகவும் குழம்பிக் கிடக்கிறது என்பதும், அதைப் பயன்படுத்திக்கொண்டு சித்து வேலைகளில் ஈடுபட முயலும் வலதுசாரி அரசியலுடன் கைகோர்ப்பதன் வழியாக, சுயமான தனது அரசியல் எதிர்காலத்தை இங்கு பரீட்சித்துப் பார்க்கலாம் என்கிற  நப்பாசையே  அதற்குக் காரணம்.

ஏனெனில், மக்கள் நலன் குறித்து சிந்திக்கும் எந்த இயக்கமும், இன்று நடக்கும் எடப்பாடி அரசை நிராகரிப்பதில் இருந்தே தமது அரசியலைத் துவங்கமுடியும். ஆனால் ரஜினியின் வழிமுறை அந்த திசையில் இல்லை. மட்டுமல்லாமல், இப்போது ரஜினியின் குரலில் வெளிப்படும் அதிகாரமும், அவரது வெளிப்படையான அரசியல் நடவடிக்கைகளும் சொல்லும் செய்தி என்ன?

தம்மால் எதிர்க்கப்பட்ட ஜெயலலிதாவின் வாகன டயரை நக்கிகொண்டிருந்த  இரண்டு அடிமைகளில் ஒன்று முதல்வராகவும், மற்றொன்று துணை முதல்வராகவும் வலம் வருகிறபோது, அவர்களை விட எல்லா விதத்திலும் மேட்டிமை நிலையில் உள்ள தாம் ஏன் அரசியலில் இறங்கக் கூடாது என்கிற எண்ணம்தான்.

மேலும் மிகத் திட்டமிட்ட வகையில் மத்தியில் ஆளும் வலதுசாரி அரசு, புதிய அரசியல் வழிகளை  பரீட்சித்துப் பார்க்கும் காலகட்டத்தில், ரஜினிக்குக் கிடைக்கும் “பாதுகாப்புணர்வு” என்பது அவருக்கு இதுவரை கிடைத்திராதது. மீடியாவின் முன்பான அவரது வீரத்துக்கான வேகத்தை வழங்குவதும்  அந்த கதகதப்புதான். அதனுடன் அவரது இயல்பான அகம்பாவமும் சேர்ந்துகொள்ளும்போது போராடும் எளிய மக்கள் சமூக விரோதிகளாக உறுமாருகிறார்கள். மேலும் அதனுடன் வலதுசாரி கருதுகோள்கள் இணைந்துகொள்கிற போது அந்த மூர்க்கம்  அடுத்த பரிமாணத்தை எட்டுகிறது.

நடந்த நிகழ்வுகளின் வழியாக, நமக்கு அவர் சொல்லும் செய்தியை விட, அவரை முன்னிறுத்துபவர்களுக்கு அவர் வெளிப்படுத்திய சமிஞ்ஞையே இங்கு மிக முக்கியமானது. அது “நீங்கள் நினைக்கும் வேலைக்கு நான் பொருத்தமானவன்” எனும் உறுதி.

அவரது நேர்காணல்கள், அவர் மீடியாவை எதிர்கொண்ட விதம் போன்றவற்றை விதந்தோதுகிற, போராடும் மக்களை அவமதிக்கிற ஒரு தரப்பு தனது எக்காளத்தின் மூலம் வெளிப்படுத்துவது அந்த வரவேற்பைத்தான்.

திரையில் எளிய மக்களின் மீட்பரான ஜொலிப்பதற்கும் எதார்த்தத்தில் அவ்வாறு இருப்பதற்கும் பாரிய வேறுபாடு உண்டு. அது ரப்பர் குண்டுக்கும் நிஜ குண்டுக்குமான வேறுபாடு. அந்த வேறுபாட்டை ஸ்தூலமாக  புரிந்துகொண்டவன்தான் “யார் நீ...” என்று முகத்துக்கு நேராகக் கேட்கிறான். ஆன்மீகத்தில் மட்டுமல்ல, ரஜினி அரசியலிலும் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி இது!

https://m.facebook.com/story.php?story_fbid=1969746836392163&id=100000705985759

No comments:

Post a Comment