Sunday, May 20, 2018

கலைஞரும் மே 18 ம்

Don Ashok
Via Facebook
2018-05-20

"பேய்களுடன் சண்டையிடும்போது கவனமாக இருங்கள்.  நீங்களும் பேயாக மாறக்கூடும்," என்கிற நீட்சேவின் வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நிற்க.

மே மாதம் என்பது லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட மாதம்.  யூதர்களைப் போல தமிழர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எந்த பேதமுமின்றி கொன்றழிக்கப்பட்ட மாதம்.  2010 காலகட்டங்களில் மே மாதம் என்பது எத்தகைய தாக்கத்தையும், துக்கத்தையும் நெஞ்சில் கொடுத்துப் போனது என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.  2009ல், 2010ல் எத்தனையோ ஈழ ஆதரவு கட்டுரைகளையும், நியாயம் கோரிய கட்டுரைகளையும், போரின் பாதிப்புகளை உணர்த்தும் சிறுகதைகளையும் நெஞ்சு நிறைய கோபத்துடனும், துக்கத்துடனும் எழுதியதை நினைத்துப் பார்க்கிறேன்.  இந்திய ராணுவத்தின் அட்டூழியத்தை ஆவணப்படுத்திய, இந்தியாவில் தடை செய்யப்பட்ட, இந்தியாவில் தேடி தேடி அழிக்கப்பட்ட, 'சாத்தான் படைகள்' எனும் நூலைப் பற்றி ஒரு வெகுஜன பத்திரிக்கையில் முதன்முதலில் ஆவணப்படுத்தியதையும் எண்ணிப் பார்க்கிறேன். 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறோம்?  மனமெங்கும் ஆக்கிரமித்திருந்த அந்த துக்கமும், கோபமும் எப்படி மனதின் இரண்டாம் அடுக்குக்குப் போனது?  போரில் இழந்த உயிர்களுக்காக கண்ணீர் சிந்தப்பட வேண்டிய மாதம் எப்படி ஓவ்வொரு ஆண்டும் போர் விசாரணை மாதமாக, போர் பகுப்பாய்வு மாதமாக மாறியது?

ஆரம்பத்தில் இருந்தே கொலைகாரன் ராஜபக்சேவை விட்டுவிட்டு கலைஞர் பக்கம் மடையைத் திறப்பியது யார்?  கடந்த சில ஆண்டுகளாக ராஜபக்சேவை கிட்டத்தட்ட எல்லோருமே மறந்துவிட்டார்கள்.  ஆனால் யாரெல்லாம் அநியாயமாக கலைஞரை, திமுகவை, திராவிட இயக்கத்தை ஈழப்போரில் காரணகர்த்தாக்கள் ஆக்கினார்களோ அவர்கள் எல்லாம் இன்னும் மறக்காமல் மே18 என்றால் கலைஞரை தூற்றவேண்டும், ஈழ இனப்படுகொலை என்றாலே கலைஞர் பெயர்தான் பந்தாடப்பட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.  ஒருத்தர் சுவரிலும் ராஜபக்சேவைக் காணோம்!!! எல்லோர் சுவரிலும் கலைஞர் இருக்கிறார்!!  அடப்பாவிகளா!! 

தமிழகத்திலேயே மிக அதிகமான ஈழ ஆதரவாளர்கள், புலி ஆதரவாளர்கள் இருந்ததும், இருப்பதும் திமுகவில்தான்.  ஆனால் அதில் பாதிப்பேரை முழுதாக அழக்கூட விடாமல் தங்கள் மேல் விழுந்த கொலைப்பழி துடைக்க நியாயம் பேச வைத்தது யார்?   சுடுகாட்டில் அழுது கொண்டிருந்தவர்களை கோர்ட்டுக்கு கொண்டுவந்தது யார்?

புலிகளைப் பற்றி இன்றளவும் திமுக தலைமையோ, திமுக ஆதரவு தலைவர்களோ விமர்சித்ததே இல்லை.  ஏனெனில் புலிகள் கடைசிவரையில் ஈழத்தோல்விக்கு திமுகவையோ, திராவிட இயக்கத்தையோ காரணம் கூறவில்லை.  இயக்கங்களின் தலைமைகள் அவரவர் சக்தி எல்லைகள் புரிந்தே இருந்தார்கள்.  அவ்வளவு ஏன்?  இலங்கையில் ராஜபக்சே ஆதரவாளர்களும், புலிகளுக்கு எதிரான கொழும்பூ தமிழர்களும் எரித்தது கலைஞர் கொடும்பாவியைத் தானே!  புலிகள் தலைமையகம் செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவுக் கடிதம் அனுப்பி வாழ்த்து தெரிவிக்கவில்லையா!!   எதிரிக்கு அவன் எதிரி யார் என்பது புரிந்திருக்க, நண்பனுக்கும் அவன் நண்பன் யார் எனப் புரிந்திருக்க,  ஆனால் ஈழப்போராட்டத்தை திராவிட இயக்கம்தான் அழித்தது என்பதைப் போல இங்கே கதை பரப்பியது யார்?  நிறுவத்துடிப்பவர் யார்?

விபு தலைவருக்கு வரும் வாரண்டுகள் எந்த முகவரிக்கு தெரியுமா வரும்?  பெரியார் திடலுக்கு!  அந்தப் பெரியாரை, அந்த திராவிட இயக்கத்தை ஈழப்போருக்குப் பின் தமிழின விரோதியாக, தமிழ்தேசியத்தின் எதிரியாக சித்தரித்தது யார்?  எல்லா மே மாதங்களிலும் எங்களை எதிர்வினை மட்டுமே ஆற்றவேண்டிய சூழலுக்கு அடுக்கடுக்கான பொய்களின் மூலம் தள்ளியது யார்?

எல்லாவற்றையும் விடுங்கள்.  சக குழுக்களை அழித்ததில் இருந்து, ராஜீவ் கொலையில் இருந்து,  இறுதிப்போர் வரை புலிகள் மீது எனக்கு ஆயிரம் விமர்சனங்கள் உண்டு.  ஆனால் புலிகளை ஆமைக்கறி, ஏ.கே74, விஜய் படம் பார்ப்பாரு, போர் பயிற்சி கொடுத்தாரு, "நீதான்டா எல்லாமே,"னு சொன்னாரு என்றெல்லாம் பேசி கேலிப்பொருள் ஆக்கியது யார்?  அதைச் சொன்னவர்களும், அதையெல்லாம் நம்பி அள்ளி அள்ளித் தந்தவர்களும் தானே!  

மாவீரர் தின ஊர்வலத்திற்கு ஜெயலலிதா தடை விதித்தால், கல்யாண மண்டபத்தில் பம்மிக்கொள்ளும் ஒரு பயந்தாங்கொள்ளியை, விபு தலைவரின் மறு அவதாரம் எனப் புகழ்ந்து ஒட்டுமொத்த விபுக்களையும் இன்று கேவலப்படுத்துவது யார்?   நாங்கள் வைத்ததெல்லாம் இறுதிப்போரின் மீதான விமர்சனங்கள்.  அதுவும் அதை நாங்களாகத் துவக்கவில்லை.  அந்தச் சூழலுக்குத் தள்ளப்பட்டோம்.   

சுபவீ அய்யா இன்று விபுக்களை விமர்சிக்கும் உடன்பிறப்புகளுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் எழுதியிருக்கிறார்.  அதில் உடன்பிறப்புகளின் புலி எதிர்ப்பு, விமர்சனம் இப்போது தேவை இல்லாதது என்றும், அது திமுகவுக்கே கூட தீங்கு விளைவிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.  அதை மதிக்கிறேன் என்றாலும், மாறுபடுகிறேன். 

இன்று  மைய அரசியலில் விபுக்களின் தம்பிகளாக தங்களை முன்னிறுத்துகின்றவர்கள் எப்படியான அரசியலை முன்னிறுத்துகின்றார்கள் என நாம் பார்க்க வேண்டும்.  திராவிட அரசியலை failure modelஆக பொய்ப்பிரச்சாரம் செய்து, அதற்கு மாற்றாக விபு அரசியலை நிறுவ முயற்சிக்கிறார்கள்.  ஆயுத அரசியலே தேவைப்படாத தமிழ்நாட்டில் பிரபாவை பெரியாருக்கும், அண்ணாவுக்கும் மாற்றாக நிறுவ முயற்சிக்கிறார்கள். உயிரோடிருந்தபோது பிரபா என்பவர் திராவிட இயக்கத்தின் தோழமைத் தலைவர் என்பதையே மறைக்கிறார்கள்.   நாம் அதை நினைவூட்டுவதுடன், அந்த இயக்கம் செய்த தவறுகளையும், அது அந்த மக்களுக்கு ஏற்படுத்திய இழப்புகளையும் எந்த இடக்கரடக்கல்களும் இன்றி வெளிப்படையாகப் பேசுவதே நம் இளைஞர்கள் வழிதவறாமல் இருக்கவும், ஆயுதவழிமுறை என்பது அவர்களுக்கு புகட்டப்படுவதைப் போல 'ஹீரோயிசம் அல்ல அழிவு இசம்,' என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவும் உதவும்.  திமுகவுக்கு இதனால் லாபமா, நட்டமா என்கிற கணக்குகளை எல்லாம் தாண்டி, தமிழக அரசியலின் எதிர்காலத்திற்கு இது அத்தியாவசியம் என்பது என் நிலைப்பாடு.

ஈழத்தை வைத்து வசூல் செய்தோமா, கார் வாங்கினோமா, ஃபாரின் டூர் போனோமா என்றில்லாமல், தமிழ்தேசிய முகம் அணிந்துகொண்டு திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பொய்ப்பிரச்சாரமும், பெரியாரிய வேடம் அணிந்துகொண்டு ஓட்டரசியலால் வீழ்ந்தோம் என்று அயோக்கியப் பிரச்சாரமும் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் சிந்தனைத் திருடர்களை அம்பலப்படுத்துவதும், காணாமல் போகச்செய்வதும் தொடர்ந்து தொடர வேண்டும்.  2009க்கு முன்னர் ஒரு ஆள் நன்றாக பேசுகிறார் என்பதற்காக பெரியாரிய தலைவர்கள் எல்லோரும் அவரை மேடை ஏற்றினீர்கள்.  அவரும் பெரியாரை பேசினார்.  பின்னர் திமுகவை திட்டினால் வியாபாரம் கொழிக்கும் என அறிந்து அந்தப்பக்கம் போனார்.  நீங்களும் திமுக எனும் கட்சியைத்தானே திட்டுகிறார் என அமைதியாக இருந்தீர்கள். பின்னர் பெரியாரை திட்டினார்.  திராவிட இயக்கத்தை திட்டினார்.  இப்போது துடிக்கிறீர்கள்.  எங்களுடன் சேர்ந்துகொண்டு இப்போது திட்டுகிறீர்கள்.  இதையே 2009ல் உடனே செய்திருந்தால் இந்த அளவு கூட அந்த ஆளினால் டேமேஜ் ஏற்பட்டிருக்காது.  இப்போது அதேபோல இன்னொரு ஆள் பெரியார் பேரை சொல்லிக்கொண்டு திமுகவை திட்டுகிறார்.  அது பரவாயில்லை.  ஆனால் அண்ணாவை பொய்யாக அவதூறு செய்கிறார். திட்டுகிறார்.  அண்ணாவை பெரியாருக்கு எதிராக நிறுத்துகிறார்.  வழக்கம்போல் நாங்கள் துடிக்கிறோம்.  நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.  வழக்கம்போல் லேட்டாக வருவீர்கள்.  சரி விடுங்கள்.  எண்ணற்ற திராவிட இளைஞர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். 

இந்த மே மாதத்தின் துவக்கத்திலேயே வழக்கம்போல கலைஞர் மீதான, திமுக மீதான வரம்புமீறிய அவதூறுகள் துவங்கிவிட்டது.  கலைஞருக்கு அவர் பேத்தி பாட்டு பாடும் காணொளியில் போய் விவரிக்க இயலா வண்ணம் அசிங்கமாகவும், அவதூறாகவும் திட்டி வைத்திருந்தார்கள் தமிழ்நாஜிக்களும், புலம்பெயர்த்தமிழர்களும்.  ஈழப்போரின் பாவம் ஏற்படுத்திய சாபத்தினால்தான் கலைஞர் இப்படி தவிக்கிறாராம்.  பின் யாருடைய சாபத்தால் விபு தலைவர் இறந்தார்?  யாருடைய சாபத்தால் அத்தனை லட்சம் ஈழத்தமிழர்கள் இறந்தார்கள்?  அறிவென்பது கொஞ்சமாவது வேண்டாமா?  இன்னும் சில இடங்களில் கர்நாடகாவில் காங்கிரஸ் தோல்வியை, பிஜேபி வெற்றியைக் கொண்டாடி பல புலம்பெயர்த்தமிழர்கள் ஆடுகிறார்கள்.  இந்த குரூரர்களின் கண்களுக்கு எங்கள் அனிதாவின் உயிரோ, கிருஷ்ணசாமிகளின் உயிரோ தெரிவதே இல்லை.  ஏனெனில் தமிழகத்தமிழர் எப்போதும் இழிபிறவிகள், தாழ்வானவர்கள் தானே!!   நான் புலம்பெயர் தமிழர்களை ஒட்டுமொத்தமாக திட்டுகிறேன் எனப் பல பெரியாரிய, அம்பேத்கரிய புலம்பெயர்த்தமிழர்கள் புலம்பினார்கள்.  வருவோர் போவோரிடம் ஒப்பாரி வைத்திருக்கிறார்கள்.  நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். உங்கள் ஆட்களை கொஞ்சமேணும் நீங்கள் ஆரம்பத்தில் இருந்து துணிச்சலாக கண்டித்திருந்தால் நாங்கள் மே மாதத்திலும் விசாரணை 'mode'யில் திரிய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது!!  ஆனால் நீங்களும் என்ன செய்வீர்கள் பாவம்!!   உங்களுக்குள்ளேயே ஆயிரம் குழுக்கள்.  ஆயிரம் கருத்து வேறுபாடுகள்.  ஆயிரம் சண்டைகள்!!  ஆயிரம் அரசியல்!! இங்கு எப்படி பலருக்கு ஈழம் வியாபாரமோ, உங்களுக்குள்ளும் எண்ணற்றோர் அப்படி இருக்கிறார்கள் என்பது தெரியாமல்
இல்லை!!

ஆனால் நான் அதையெல்லாம் இப்போது விவாதிக்க விரும்பவில்லை.  நான் இறுதியாகச் சொல்வது இதைத்தான். ஈழத்திற்காக கலைஞரைத் திட்டிய அவசரக்குடுக்கை ஆர்வக்கோளாறுகளில் ஒருவனாக, "உங்கள் இறுதி ஊர்வலத்தில் சிந்துவதற்கு எங்கள் கண்களில் கண்ணீரை மீதம் வையுங்கள்," என கலைஞருக்கு கடிதம் எழுதியவன்தான் நானும்.  அப்போது என் கோபத்தினால் அறிவு பின்தங்கி, உணர்வு மட்டும்தான் மேலோங்கி இருந்தது.   ஆனால் இன்று பிண அரசியல் செய்யும் அயோக்கியர்களின் பொய்களுக்கு எதிர்வினை ஆற்றி ஆற்றி எதோ ஒரு இடத்தில் அந்த உணர்வு பின்னுக்குப்போய், அறிவு முன்னுக்கு நிற்கிறது.  அதுவும் மே மாதத்திலும் அதையே செய்துகொண்டிருப்பது எனக்கு ஒருவகையில் வேதனையைத் தருகிறது.  ஒரு மனிதனாக அவமானத்தைத் தருகிறது.   

இந்த மாதத்தின் துவக்கத்தில், வழமையான கோபத்தில் எதிர்வினையாற்றுவதற்காக நானும் சில மீம்களைப் போட்டேன்.  சில நிமிடங்களிலேயே உறுத்த, அவற்றுள் சிலவற்றை நீக்கியும் விட்டேன்.  இனியும் தொடர்ந்து பேய்களுடன் சண்டையிட்டு  பேயாக மாற நான் விரும்பவில்லை.  சாவு வீட்டில் நாகரீகமில்லாமல் தர்க்க நியாயங்களை பேசுகிறவனாக காலம் நம்மை நிறுத்தியதை எண்ணி வெட்கிப்போகிறேன். 

எனவே நான் சுபவீ அய்யாவின் கடிதத்தில் உள்ள வேண்டுகோளை மே மாதம் மட்டும் ஏற்கிறேன்.  ஈழம் சார்ந்த எந்த அரசியல் எதிர்வினையையும் நான் இனப்படுகொலை மாதமான, 'மே மாதத்தில்,' செய்யவே போவதில்லை என உறுதியாக முடிவெடுத்திருக்கிறேன்!   மே மாதத்தில் மட்டும்!  அதுதான் இறந்துபோன மக்களுக்குச் செய்யும் நேர்மையான அஞ்சலியாக இருக்கும். 

இனி நெற்றிக்காசு திருடர்களை விரட்டும் கடமை உணர்ச்சியில், நம் வீட்டில் விழுந்த இழவை மறக்கபோவதில்லை.

மே மாதம் இனப்படுகொலை மாதம்.   "இனப்படுகொலையாளன் ராஜபக்சே எங்கே?"  என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுப்பார்க்க வேண்டும்.   நாம் எங்கு தவறவிட்டோம் எனப் புரியும். தமிழர்களுக்கான நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ, செத்துப்போனவர்களையும், கொன்றவனையும் மட்டுமே மே மாதத்தில் நினைத்திருப்போம்.   அரசியல்களை மறந்து.  கடந்து.

-அசோக்.R (டான் அசோக்)
மே 20, 2018.

குறிப்பு:  நான் விபு என்றும் பிரபா என்றும் எழுதுவது மரியாதைக் குறைவுக்காக இல்லை.  முழு பெயரைப் போட்டால் keyword வைத்து முகநூல் பதிவை தூக்கி விடுகிறது.  அதை தவிர்க்கவே.

https://m.facebook.com/story.php?story_fbid=1704475679660390&id=815716175203016

No comments:

Post a Comment