Saturday, May 5, 2018

ஏன் தமிழர்கள் இந்தியாவை நம்பவில்லை?

Dharmaraj thumburaj
Via Facebook
2018-05-05

ஏன் தமிழர்கள் இந்தியாவை நம்பவில்லை?

பாளையங்கோட்டைக்கு வந்து, வகுப்புத் தோழன் அந்தோணியை (ஜூனியர் விகடன்) அழைத்தால் எர்ணாகுளத்திலிருந்து என்ன? என்றான்.  நீட் தேர்வுக்காக மகனை அழைத்துக் கொண்டு நேற்றே எர்ணாகுளம் போய் விட்டான். 

இங்கே, திருநெல்வேலியில் நிறைய பேருக்கு வெளி மாநிலங்களில் தான் நீட் தேர்வு.

எல்லோருமே ஒரு சவால் போல இதை எதிர் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.  நிறைய பேருக்கு இது கொஞ்சம் சிரமம், அவ்வளவு தான்.  ஆனால், முடியாது என்பதெல்லாம் இல்லை. 

கொஞ்சமே கொஞ்சம் பேருக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலத் தான் இருக்கிறது.  அவர்களையும், கைப் பிடித்து அழைத்துச் செல்ல உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் (வெளி மாநிலத்திலும் என்றும் வாசிக்கலாம்!) தமிழ் அமைப்புகள் தயாராக இருக்கின்றன.அதனால், நடைமுறை சார்ந்து பெரிய பிரச்சினைகள் எதுவும் வரப்போவது இல்லை.

ஆனால், மீண்டுமொரு முறை, தமிழர்கள் ஒதுக்கப்பட்டதாய் உணரத் தொடங்கி விட்டார்கள்.  இந்தியா, தங்களை உதாசீனப்படுத்துகிறது என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த உணர்வு தமிழர்களிடம் நெடுங்காலமாகவே இருந்து வந்திருக்கிறது.  இந்திய சுதந்திரத்திற்குப் பின் இது இன்னும் மோசமாக மாறியிருக்கிறது.  தமிழகத்தில் தேசிய கட்சிகளின் தோல்வி என்பதும், திராவிடக் கட்சிகளின் எழுச்சி என்பதும், பிராமண எதிர்ப்பு என்பதும் இந்திய தேசியத்திலிருந்து மனதளவில் விலகி நிற்கிறோம் என்பதன் அடையாளங்கள் தான்.

கலைஞர் முதல் ஜெயலலிதா வரையிலான முதலமைச்சர்களை தமிழர்கள் நம்பியதன் முக்கியக் காரணமே, இவர்கள் இந்திய அரசை துணிச்சலாக எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை மட்டுமே.

அப்படி நம்புவதற்கு யாருமற்ற பரிதவிப்பைத் தான் ஜல்லிக்கட்டுப் போராட்டம் முதல் இன்றைக்கு நீட் பிரச்சினை வரை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்திய ஜனநாயக அரசியல் அமைப்பு அதன் தென் கோடியில் கலகலக்கத் தொடங்கியிருக்கிறது.  இது ஆயுதம் தாங்கிய தனிநாடு பிரச்சினை அல்ல.  மனதளவில் இந்தியாவிலிருந்து வெகு தூரம் விலகிப் போவது. 

பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு பாரபட்சமற்றது என்பதை தமிழர்கள் என்றைக்குமே நம்பியிருக்கவில்லை.  அதனால் அவர்களுக்குத் தேசியம் என்றைக்குமே ஒரு பொருட்டாக இருந்தது இல்லை; இந்திய தேசியமென்றாலும் சரி தான் தமிழ் தேசியமென்றாலும் சரி தான்.  அவர்களுக்கு அதில் பெரிய மயக்கமெல்லாம் இல்லை.

இந்திய தேசியத்தை அவர்கள் முதலமைச்சர்கள் என்ற தரகர்களைக் கொண்டே ஜெயலலிதா வரையிலும் சமாளித்துக் கொண்டிருந்தார்கள்.  அந்த வெற்றிடம், தரகர்களுக்கான வெற்றிடம், இன்றைக்கு மிக அதிகமாக உணரப்படுகிறது.  அதன் ஒரு வெளிப்பாடு தான் இந்த நீட் தேர்வு விவகாரம்.

இதன் மூலம்,இந்தியா, பாராளுமன்ற ஜனநாயக அமைப்பிற்கு மாற்று தேட வேண்டிய அவசியத்தை தமிழர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  அதை கேட்கிற காதுகள் தான் யாருக்கும் இல்லை. 

தமிழகத்தில் பிரவாகமெடுத்து பாயும் பிராமண எதிர்ப்பு என்பது சாதி எதிர்ப்பு என்பதைக் காட்டிலும், பாராளுமன்ற ஜனநாயக அமைப்பின் மீதான எதிர்ப்பு என்ற கோணத்தில் யோசித்துப் பாருங்கள், வேறொரு புதிய வரலாறு உங்களுக்குத் தெரிய வரும்.

https://m.facebook.com/story.php?story_fbid=10208963484322859&id=1788829289

No comments:

Post a Comment