ஆழி செந்தில்நாதன்
Via Facebook
2017-04-08
தருண் விஜய்: நுண்ணிய நூல் பல கற்பினும்...
தருண் விஜயுடைய திருக்குறள் ஆர்வம், தமிழ்க்காதல் இதையெல்லாம் பெரும்பாலும் நான் கிண்டலடிப்பதில்லை. மனுசங்களுக்கு சில விஷயங்களில் ஆர்வம் இருக்கலாம்.
கடந்த முறை சிங்கப்பூர் சென்றிருந்தபோது, அங்கே வைத்து ஒரு நிகழ்வில் தருண் விஜயின் பேச்சைக் கேட்டேன். தமிழ், தமிழர் வரலாறு, ராசேந்திரசோழன், வேலு நாச்சியார் என எல்லாவற்றையும் பேசினார். தமிழர்களின் வரலாற்றை அறியாத வட இந்தியர்களான தாங்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்று கூட கூறினார்.
தமிழ்நாட்டில் காவி அரசியலை நுழைப்பதற்கான சதிகளில் ஒன்றுதான் தருணுடைய செயல்பாடு என்பதைக் கூட நாம் பொருட்படுத்தாமல், தருணுக்கு உண்மையிலேயே குறள் மீது பற்று இருக்கிறது, தமிழ் தருண் என்று அழைக்கப்படுவதில் பெருமை கொள்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் தனனை மிகவும் பாதித்ததாகவும் உத்தரகாண்டில் தலித்களுக்கு ஆதரவாக தான் செயல்பட்டதற்குக்கூட அந்த குறள்தான் காரணம் என்றும் அந்தக் கூட்டத்தில் கூறினார். நான் கூட கொஞ்சம் நெகிழ்ந்துபோய்விட்டேன்!
ஆனால் ஒரு சங்கியால், ஒரு சாவர்ண கருத்தாளரால், ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தவாதியால் - அதில் ஊறிப்போன ஒருவரால் - 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதை உண்மையிலேயே உட்கிரகிக்க முடியுமா?
முடியாது என்பதுதான் உண்மை. அவர் சொல்லியிருக்கும் வார்த்தைகள்தான் அதற்கான ஒரே அத்தாட்சி. அவர் தென்னிந்தியர்களை கருப்பர்களாகப் பார்ப்பது மட்டும் சிக்கல் இல்லை, இந்தக் கருப்பர்களோடு நாங்கள் இணைந்து வாழவில்லையா என்று அவர் கேட்கிறாரே அந்த பார்வைதான் சங்கியின் பார்வை.
இந்தியா என்பது இந்து மேல்சாதிக்கார்ரகள் - மூவர்ணர்களின்- நாடு என்பதுதான் அவரது பார்வை. அவர் தென்னிந்தியாவிலும் வடக்கு மத்திய மாநிலங்களிலும் கோடிக்கணக்கான கருப்புத் தோலர்களை சகித்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார் என்பதுதான் உண்மை. நாங்கள் வெள்ளையர்கள், நீங்கள் கருப்பர்கள் என்கிற எதிர்வை அவர் முன்வைத்திருக்கிறார். இதுதான் தருண். இதுதான் ஆர்எஸ்எஸ்.
எங்கிருந்து வந்தது இந்த வெள்ளை vs கருப்பு பிரிவு? இது பழைய பிரிவா? கார்மேனியனையும் பச்சை மா மலை போல் மேனியை உடையவனையும் காளியையும் கும்பிட்டவனிடமிருந்து வந்த பிளவு அல்ல இது. ஒரே சமயத்தில் பொன்னார் மேனியனையும் காக்கை நிறத்துக் கண்ணனையும் கும்பிட்டவர்களின் குரலா இது?
உண்மையில் ஆர்எஸ்எஸ்ஸின் இந்துத்துவா என்பது மேலைநாட்டு ஆரியவாதத்திடமிருந்து, வெள்ளை நிறவெறி சித்தாந்தங்களிலிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறது. தருணின் ஆழ்மனத்திலுள்ள வெள்ளை vs கருப்பு என்பது பாசிசத்தின் நாங்கள் vs நீங்கள் என்ற உளவியலோடும் ஐரோப்பிய நிறவெறியோடும் இணைகாண வேண்டிய ஒன்று.
இந்திய வர்ண சித்தாந்தமும் ஐரோப்பிய வண்ண சித்தாந்தமும் இணைந்த ஒரு புள்ளியில்தான் இந்தியாவில் தோலின் நிறம் பார்க்கப்படுகிறது. அதை மேலும் அழகூட்டுகிறது சிவப்பழகு மோகச் சந்தை.
உண்மையில் இந்தியாவில் யாரும் கருப்பும் அல்ல வெள்ளையும் அல்ல என்பான் அமெரிக்கன், நாமெல்லாம் அவனுக்கு colored people.
தோலின் நிறம் பற்றிய தமிழர்களின் கலாச்சாரப் பதிவுகள் என்ன என்பதைப் பார்க்கவேண்டும். எப்போது தோல் நிறம் சார்ந்த உயர்வு, தாழ்வு மனப்பான்மைகள் நம்மை பீடிக்க ஆரம்பித்தன என்பதைப் பார்க்கவேண்டும்.
தருணுடைய குரல் என்பது வட இந்திய / தென் இந்திய மேல்சாதிகளின் குரல்தான். அது வண்ணம் தொடர்புடையது மட்டுமல்ல, வர்ணம் தொடர்புடையது.
ஆனால் அவர் தென்னிந்திய "வெள்ளைத் தோலர்களை" சட்டென்று கைகழுவிவிட்டார் என்பதில் இங்கு பலருக்கு அவர் மீது கோபம் ஏற்படலாம். நாங்களும் வெள்ளைதான் அல்லது சிவப்புதான் என்று அவர்கள் குதிக்கலாம்.
இந்துவத்துவ சக்திகளின் கலாச்சார தேசிய அடையாளங்களில் ஒன்றாக திருக்குறளை ஆக்க முயன்ற தருணால், ஒருபோதும் திருவள்ளுவரை புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் உண்மை.
இறுதியாக ஒரு திருக்குறளைப் பார்ப்போம்.
"நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்"
இதற்கு தமிழ்நாட்டு 'வெள்ளையர்' (நன்றி: டிகேஎஸ் இளங்கோவன்) கலைஞர் எழுதிய உரை:
"கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்."
இங்கே உண்மை அறிவு என்பது என்ன? ஒரு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிக்கு உண்மை அறிவு என்பது என்னவாக இருக்கமுடியும்?
No comments:
Post a Comment