Saturday, April 1, 2017

அரசியல் பேசுவோம் - 1

லியோ ஜோசப்

அரசியல் பேசுவோம் - 1
" படிக்குற வயசுல அரசியல் எதுக்கு? "
" உங்களுக்கு அதனால ஏதும் பாதிப்பா? அப்றம் ஏன் நீங்க பேசறிங்க? "
" எந்த கட்சி இப்போ உத்தமம்? அரசியல்னாலே சாக்கடை தான் "
" அரசியல் பதிவு போடாதிங்க சிஸ்டர்.. எல்லாரும் மோசமா கமெண்ட் பண்ணுவாங்க"
" ஏன் எப்போ பார்த்தாலும் சாதி பத்தியே போஸ்ட் போடறிங்க?"
நமது வாயை அடைக்கத்தான் எத்தனை அஸ்திரங்கள்?
யார் அரசியல் பேசலாம், யார் அரசியல் பேசக் கூடாது? அரசியல், அரசியலாக்கப்படுதல் என்ன? நல்லவர்களாய் வாழ்வது வேடிக்கைப் பார்ப்பதா? எதுவெல்லாம் அரசியல்? நமக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு? எது நமக்கான அரசியல்? அரசியல் பேசாவிட்டால் என்ன இழப்பு?


அரசியல் பேசுவோம் - 2
கட்சியிலோ அல்லது இயக்கத்திலோ இணைந்து செயல்படுவதற்கு பெயர்தான் அரசியல் என்றல்ல ; நமது ஒவ்வொரு வார்த்தைகளும் செயல்களும், ஏன் நமது மௌனமும் கூட அரசியல் தான்.
ஆண் குழந்தை வேண்டுமென்று தவம் கிடக்கிறோமே, அது அரசியல். பெண் குழந்தையா என ஸ்கேனில் கண்டறிந்து கலைத்துவிடுகிறோமே அது அரசியல். ஆண் பிள்ளை என்றால் கொண்டாட்டமாகவும் பெண் பிள்ளை என்றால் குடியே மூழ்கிவிட்டதாகவும் பாகுபாடு காட்டுகிறோமே அது அரசியல். ஆண் பிள்ளையை தான்தோன்றித் தனமாய் வளர்க்கவும் பெண் பிள்ளையென்றால் ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகளுடன் சுழலவும் உருவாக்கி வைத்திருக்கிறொமே அது அரசியல்.
பெண்களின் இயல்பான உடல்மாற்றத்தை மஞ்சள்நீராட்டு என கொச்சைப்படுத்துகிறோமே அது அரசியல். திருமணமாகவில்லை என்றால் ஏதோ விலைப் போகா பொருள் போல பெண்களை ஏளனப்படுத்துகிறோமே அது அரசியல். பெண்கள் ஆண்களுக்கு அடங்கித்தான் கிடக்கவேண்டுமென ஆதிக்கம் செலுத்துகிறோமே அது அரசியல்.
சாதியை பெருமைமிக அடையாளமாக்கிக்கொள்கிறோமே அது அரசியல். ஒடுக்கப்பட்டவர்களின் ரணங்களையெல்லாம் கண்டும் காணாமல் கண்மூடி கடக்கிறோமே அது அரசியல். மக்களுக்கான அரசு கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியாக மாறிப்போனதே அது அரசியல். கொள்ளையடிப்பதில் எல்லா கட்சிகளும் சிண்டிகேட் போட்டு பல்லிளிக்கின்றனவே அது அரசியல்.
அதானிகளும் அம்பானிகளும் வளர்ந்து கொண்டேயிருக்க விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்களே அது அரசியல். ஒடுக்கப்பட்டவனின் வளர்ச்சிப் பொறுக்காமல் உடமைகளை எரித்து கொக்கரிக்கிறார்களே அது அரசியல். இன்னும் தீண்டாமை இல்லாத மாவட்டங்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை நீடிக்கிறதே அது அரசியல்.
சிறுபான்மையினர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற முத்திரை வலிய திணிக்கப்படுகிறதே அது அரசியல். பாபு பஜ்ரங்கிக்களும் ஜெயேந்திரன்களும் உல்லாசமாய் திரிய இந்திய தேசபக்தியின் பெயரால் யாகூப் மேமன்கள் காவு கொடுக்கப்படுகிறார்களே அது அரசியல்.
செத்த பிறகும் சுடுகாட்டில் இடமில்லையென ஒடுக்கப்பட்டவன் ஒதுக்கப்படுகிறானே அது அரசியல். தாழ்த்தப்பட்டோர் நல நிதி யாவும் இலவசங்களுக்கு மடைமாற்றிவிடப்படுகிறதே அது அரசியல். நாம் என்ன உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும் என்பதைக் கூட விளம்பரங்கள் தீர்மானிக்கின்றனவே அது அரசியல். நடுநிலைப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு எல்லா அசிங்கங்களையும் சப்பு கொட்டி வேடிக்கைப் பார்க்கிறோமே அது அரசியல்.
எல்லாம் அரசியல். எதிலும் அரசியல். நீங்கள் அரசியலில் பங்கு பெற முதல்படி என்ன தெரியுமா?
எதையும் கேள்வி கேளுங்கள்!
- பேசலாம்...


அரசியல் பேசுவோம் - 3
ராமதாஸ் போன்ற சாதியவாதிகள் மதுவிலக்கு கோஷமிட்டபோதெல்லாம் அதை மௌனமாக வேடிக்கைப் பார்த்தவர்கள் அல்லது ராமதாஸை ஜி கே மணி போல காந்தி மகானாக சித்தரித்தவர்கள் இன்று அதே போராட்டத்தை மற்ற கட்சிகள் முன்னெடுத்தால் எப்படியெல்லாம் ஊளையிடுகிறார்கள் என்று நினைத்தால் நகைப்பாக இருக்கிறது.
ஏற்கெனவே பலமுறை மதுவிலக்கு கோரிக்கையை முன்னெடுத்து போராடிய திரு.வைகோ அவர்கள் மக்களின் எழுச்சியோடு போராட்டத்தை முன்பைவிட முனைப்பாய் கூர் தீட்டியதும் முதலில் வெலவெலத்தது பாமகவின் ராமதாஸுக்கு தான். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற பொறுக்கிக்கெல்லாம் மாநில பதவி கொடுத்து அழகு பார்க்கும் சாதி தாஸுக்கு, மக்கள் முன் நிற்கும்போது தன் மேல் வழிந்தோடும் சாதி மலத்தை துடைத்துப் போடக் கூடிய ஒரு வஸ்துவாகத்தான் மதுவிலக்கு இருந்தது. அந்த ஒரே அஸ்திரமும் பறிப்போனால் சாதி நாற்றம் தாங்காமல் மக்கள் நம்மை கல்லாலடித்து விரட்டுவார்களே என்ற கவலை பொங்க அறிக்கை விடுகிறார். அதுவும் எப்படி?
" நாங்கள் தான் முதலில் இந்த கோரிக்கையை முன்வைத்தோம். நாங்கள் தான் போராடுவோம், மற்ற கட்சிகள் போடுவதெல்லாம் நாடகம், அந்த கட்சிகளின் மதுவிலக்கு போராட்டத்திற்கு எந்த ஆதரவுமில்லை "
இதிலிருந்தே ராமதாஸ் தன்னை யோக்கிய சிகாமணியாக காட்டிக்கொள்ள மட்டுமே இதுவரை மதுவிலக்கை பயன்படுத்தி வந்திருக்கிறார் என்ற அவரின் மட்டமான புத்தி அப்பட்டமாய் தெரியவில்லையா?
உண்மையிலேயே மதுவிலக்கை முன்னெடுப்பவர்களாக இருந்தால் காலமும் சூழலும் மக்கள் ஒத்துழைப்பும் கனிந்து வரும்போது அதை பயன்படுத்திக் கொள்வதுதானே புத்திசாலித்தனம், ஒரு நல்ல தலைவனுக்கும் அழகு! மதுவிலக்கு போராட்டத்துக்கு நான் மட்டும் தான் காப்பிரைட் வச்சிருக்கேன், யாருக்கும் காப்பிரைட் தர மாட்டேன் றது எந்தவகை அரசியல்? சொந்த சாதியில லவ் பண்ணா உண்மை காதல், மத்த சாதிக்காரனா நாடக காதல். சொந்த கட்சி நடத்துனா மதுவிலக்கு போராட்டம். அடுத்தக் கட்சி நடத்துனா நாடகப் போராட்டம்.. வாட்டே ராமதாஸ்! wink emoticon
- பேசலாம்..


அரசியல் பேசுவோம் - 4
இந்திய சமூகத்தில் மிகவும் அநீதிக்குள்ளாகிற இரண்டு சமூக பிரிவுகள் உண்டெனில் அது தாழ்த்தப்பட்ட மக்களும் இஸ்லாமியர்களும் தான். ஒரு பக்கம் சமூகம் புறக்கணிக்க , மறுபுறம் அரசும் இவர்களை புறக்கணிக்க, இரட்டை புறக்கணிப்புக்கு உள்ளாகிற இவர்களை பற்றி பேச எந்த பெரிய கட்சியும் முன்வராத நிலைதான் இன்றுவரை தொடர்கிறது.
பாஜக உள்ளிட்ட எல்லா கட்சிகளிலுமே சிறுபான்மையினர் அணி இருக்கிறது. ஆனால் இஸ்லாமியர்களின் கண்ணீரை, ஆறா ரணத்தை பற்றி பேசத்தான் இங்கே ஒருவருமில்லை. சொந்த நாட்டிலேயே இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகிற அவலத்தை இந்திய ஜனநாயக சுதந்திர நாடு இன்றளவும் அனுமதித்து மௌனமாக வேடிக்கைப் பார்க்கிறது.
பாரத் மாதா கீ ஜே சொன்னாலன்றி இஸ்லாமியர்களின் தேசபக்தி கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது. இஸ்லாமியர்கள் தங்கள் தேசப் பற்றை ஒவ்வொரு நொடியும் நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறது இந்துத்துவ இந்திய தேசம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரிலும் புனையப்பட்ட வழக்குகளில் சிறைதள்ளப்பட்டவர்களுமாக இந்திய சிறை இஸ்லாமியர்களின் வாழ்வையே சித்திரவதைக் கூடமாக காட்சியளிக்கிறது. எந்த குற்றமும் நிரூபிக்கப்படாமலேயே தங்கள் வாழ்வை கம்பிகளின் பின்னால் தொலைத்து வாழ்வை இழந்து கண்ணீர் வடிக்கும் இஸ்லாமியர்களுக்கு விடியலை காட்டத்தான் யாருக்கும் தோன்றவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின்னும் விசாரணைக் கைதிகளின் நிலை அப்படியேதான் தொடர்கிறது.
தாழ்த்தப்பட்ட முஸ்லீம்களுக்கு பட்டியலின அந்தஸ்து மறுக்கப்படுகிறது. தலித் கிறிஸ்தவர்களுக்கும் இதே அநீதி தான். இரண்டு மத தலைமைகளும் தங்கள் மதத்தில் சாதி இல்லை என்று சொல்லிவிட்டதைக் காரணம் காட்டி அரசு பட்டியலின அந்தஸ்தை மறுக்கிறது. இத்தனை காலமாய் அவர்களை வஞ்சித்த சாதி அரக்கத்தனத்திற்கு நிவாரணம் கேட்டே இன்னும் போராடிக் கொண்டேயிருக்கிறோம்.
ஒருபுறம் தாழ்த்தப்பட்டவன் அர்ச்சகராகக்கூடாது, கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று அநீதி இழைத்தபடியே தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்கள் தான் என்று கூறி மக்களை வஞ்சிக்கும் நிலைதான் இப்போதும். தீண்டாமை இல்லாத மாவட்டங்களே இல்லை என்பது இந்திய தேசத் தாயின் முகத்தில் காறி உமிழப்பட்ட எச்சிலாய் காட்சி தருகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர் சாதிய கொடூர தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். அநியாயமாக கொலை செய்யப்படுகிறார்கள்.
மாறி மாறி ஆட்சியிலிருந்த இரண்டு திராவிடக் கட்சிகளுமே நமக்கு பூச்சாண்டியைத்தான் காட்டிவந்திருக்கின்றன என்பதே கடந்த கால கசப்பான உண்மை. நம்மிடையே ஒற்றுமை இல்லாததே நம்மை வீழ்த்த நினைப்பவர்களின் பலமான ஆயுதமாக இருக்கிறது. மதுவிலக்கு என்ற சொல் இன்று திருமாவளவன், ஜவாஹிருல்லா என்ற இரு தலைவர்களை இணைத்திருப்பதில் உண்மையில் பெருமகிழ்ச்சி. இந்த ஒற்றுமை இனி எல்லா காலங்களிலும் எல்லா நிலைகளிலும் தொடர வேண்டும். இது தலைவர்களுக்கிடையேயான ஒட்டாக மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களும் இஸ்லாமியர்களும் தங்களின் பொது எதிரி யார் என்பதை நன்கீ உணர்ந்து கரம் கோர்க்க வேண்டும். இணைந்தே போராடுவோம், நமது பறிக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்போம்.
- பேசலாம்...

No comments:

Post a Comment