Saturday, April 1, 2017

ஐரோப்பாவில் எப்படி கம்யூனிஸம் அமல்படுத்தப்பட்டதோ, அதே மாதிரியை அச்சு அசலாக இங்கே இயந்திரம் மாதிரி பொருத்திப் பார்ப்பது நம்மூர் கம்யூனிஸ்டுகளின் பலவீனம்

நாட்டில் அவ்வப்போது எவ்வளவோ
பிரச்சினைகள் கிளம்பிக்
கொண்டிருக்கலாம். எல்லாவற்றுக்கும்
எதோ ஒருவகையில் தீர்வினை
கண்டெடுக்க முடிகிறது.
சாதிப்பிரச்சினைக்கு மட்டும்
கண்ணுக்கெட்டும் தூரத்துக்கு எந்தத்
தீர்வும் இருப்பதாக தெரியவில்லை.

இதன் இந்துத்துவ கட்டுமானம்
மிகவும் பலமானது. மனித
மனங்களின் அடிப்படையில் சாதியம்
இயங்குவதாலும், அது பரம்பரை
பரம்பரையாக ஜீன்களின் வழியாக
அறிவியல்பூர்வமாகவே
கடத்தப்படுவதாலும் நவீன
உலகிலும் பூதாகரமாக நமக்கு முன்
வளர்ந்து நிற்கும் பிரச்சினையாக
இருக்கிறது. மதம் மாறினாலும்
சாதியம் மனதில் தங்குமளவுக்கு
மிகப்பலத்த கட்டுமானம் என்றால்
பார்த்துக் கொள்ளுங்களேன்.

இப்படியொரு பிரச்சினை இந்திய
சமூகத்தில் இருப்பதைச் சொன்னால்,
ஏழை-பணக்காரன் என்கிற வர்க்கப்
பிரிவினை மற்றும் ஒரு சில இன,
மொழிப் பிரிவினைகளை மட்டுமே
கேள்விப்பட்ட மேல்நாடுகளில்
இதையெல்லாம் நம்பக்கூட
மாட்டார்கள். கிட்டத்தட்ட நாலாயிரம்
சாதிகள் இங்கே உண்டு.
முற்படுத்தப்பட்ட சாதி எனப்படும்
பார்ப்பனர்களிலேயே கூட
ஐம்பதுக்கும் மேற்பட்ட சாதிகள்
இருக்கின்றன.

‘எல்லோரும் சமம்’ என்கிற
கருத்தியலைக் கொண்ட சோஷலிஸம்
இதற்கு தீர்வாக தோன்றுகிறது. நேரு
முன்நிறுத்திய போலி சோஷலிஸத்தை
இங்கே நினைத்துக்கூட பார்க்க
வேண்டாம். அது வெறும்
வார்த்தையளவில் சொல்லப்பட்ட
சித்தாந்தம். துரதிருஷ்டவசமாக
சோஷலிஸத்தை இங்கே
முன்னெடுக்கக்கூடிய வெகுஜன
கம்யூனிஸ்ட்டு கட்சிகளோ
வர்க்கத்துக்கு முக்கியத்துவம்
தரக்கூடியவையாக இருக்கின்றன.

ஐரோப்பாவில் எப்படி கம்யூனிஸம்
அமல்படுத்தப்பட்டதோ, அதே
மாதிரியை அச்சு அசலாக இங்கே
இயந்திரம் மாதிரி பொருத்திப் பார்ப்பது
நம்மூர் கம்யூனிஸ்டுகளின்
பலவீனம். ஐரோப்பாவில் முதலாளி-
தொழிலாளி என்று இரண்டே இரண்டு
வர்க்கப் பிரிவு. மாறாக இந்தியாவில்
நாலாயிரத்து சொச்சம் சாதிப்பிரிவுகள்.
இந்தியாவுக்கு ஏற்ற கம்யூனிஸ
சிந்தனைகளை புதியதாக
உருவாக்கியிருக்க வேண்டும். இந்தப்
போதாமையின் காரணமாகதான்
மார்க்ஸால், சேகுவேராவால்
ஈர்க்கப்பட்டு கம்யூனிஸப் பாதைக்கு
வந்த இந்திய தலித்துகளும்,
பழங்குடியினரும் பிற்பாடு நக்சலியப்
பாதைக்குச் சென்றார்கள்.

கம்யூனிஸ்டுகள் செய்யத்
தவறியதை திராவிட இயக்கம்
தனக்கான பலமாக உருவாக்கிக்
கொண்டது. சோஷலிஸ
கம்யூனிஸ்ட்டு சிந்தனைகளை ‘பிட்’
அடித்து, தென்னிந்திய சமூக
சாதிப்பிரிவுகளை கணக்கில் கொண்டு,
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வாகான
புதிய சிந்தனைகளை உருவாக்கி
மக்களிடம் பிரபலமானது. ஆனால்
திராவிட இயக்கம் கூட
சாதிப்பிரச்சினைக்கு தற்காலிகமான
தீர்வினைதான் வழங்கியிருக்க
முடிகிறது.

பிற்படுத்தப்பட்டோரின்
எழுச்சியை துரிதமாக்கி
செயல்படுத்திக் காட்டிய
இவ்வியக்கம், தலித்துகளின்
முன்னேற்றம் குறித்த சிந்தனைகளில்
ஈடுபாடு காட்டவில்லை. மாறாக
திராவிட இயக்கத்தின்
செயல்பாடுகளால் வளர்ந்த
பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகளை
நசுக்குவதை (முன்பு
முற்படுத்தப்பட்ட சாதியினர்
பிற்படுத்தப்பட்ட சாதியினரை
செய்தது மாதிரி) வழக்கமாகிக்
கொண்டார்கள். திராவிட இயக்கங்கள்
வளர்ச்சி பெற்றதில் பக்க விளைவாக
இன்றைய பிற்படுத்தப்பட்டவர் –
தலித்துகள் சமூக மோதல் சூழலை
நாம் சாட்சியாக எடுத்துக்
கொள்ளலாம்.

எனினும் கூட
மனுதர்மத்தை முழுமையாக
செயல்படுத்தப்பட விடாமல்
முட்டுக்கட்டையாக முன் நிற்பதால்,
திராவிட இயக்கத்தின் தேவை
இன்றும், இன்னும் சில
ஆண்டுகளுக்கும் அவசியமென்றே
கருதுகிறேன். சாதியம்
ஒட்டுமொத்தமாக ஒழிவதற்கான
ஒளிக்கீற்று தெரியும் வரையாவது
இங்கே திராவிட இயக்கங்கள் ஆதிக்கம்
செலுத்தியாக வேண்டும்.

முதலாளித்துவம் ஓரளவுக்கு
சாதியத்தை மற்றுக்கக்கூடிய பண்பு
கொண்டதாக தெரிகிறது. அறிவோ,
பணமோ, ஆற்றலோ கொண்டவனாக
இருந்தால், அவனையும்
மேல்தட்டுக்கு ஈர்த்துக் கொள்வதில்
இது சாதி பாகுபாடு எதையும்
பார்ப்பதில்லை என்பதை ஒப்புக்
கொள்ளலாம். அதே நேரம்
முதலாளித்துவத்தின் முக்கிய
விளைவாக வர்க்க வேறுபாடு
அதிகரித்துக் கொண்டே செல்லுவது
பெரும் ஆபத்தில் முடிகிறது. இந்தியா
ஏழை நாடாக 90களுக்கு முன்பாக
இருந்தபோது கூட விவசாயிகள்
தற்கொலை செய்துக் கொண்டதில்லை.

வளரும் நாடாக, இன்னும் சில
ஆண்டுகளில் வல்லரசு
ஆகப்போகிறது என்றிருக்கும் சூழலில்
ஆயிரக்கணக்கான விவசாயிகள்
இங்கே தொழில் செய்யமுடியாமல்
கொத்து கொத்தாக தற்கொலை செய்துக்
கொள்கிறார்கள். டங்கலின் காட்
ஒப்பந்தம் வந்த காலக்கட்டத்தில்
உறுதி கூறப்பட்ட விஷயங்கள்
இன்னமும் நினைவில் இருக்கிறது.
இந்தியாவில் நிறைய பணம்
இருக்கும். லட்சாதிபதி கோட்டீஸ்வரன்
ஆவான். ஏழை நடுத்தரவாதியாக
உயர்வு பெறுவான் என்றெல்லாம்
நாக்கில் தேன் தடவி சொன்னார்கள்.

இருபது ஆண்டுகள் கழிந்த நிலையில்
அவர்கள் சொன்னதில் பாதி
நிறைவேறியிருக்கிறது. இந்தியாவில்
இப்போது நிறைய பணம் இருக்கிறது.
லட்சாதிபதிகள் கோட்டீஸ்வரன்களாக
மட்டுமல்ல, குபேரன்களாகவும்
ஆகியிருக்கிறார்கள். ஆனால்
ஏழைகளோ சிரமப்பட்டு
வாழமுடியாமல் தற்கொலை செய்துக்
கொள்கிறார்கள்.

முதலாளித்துவத்துக்கு சொல்லிக்
கொள்ளக்கூடிய சாதியப் பண்புகள்
குறைவு என்பதற்காக, அதை
வரவேற்றுவிட முடியாது.
அதனுடைய மற்ற பக்கவிளைவுகள்
சாதிய ஏற்றத்தாழ்வுகளை விட
கொடுமையானதாக இருக்கிறது.
நாம் இப்போது வைத்துக்
கொண்டிருக்கும் படு வீக்கான
ஜனநாயகத்தைக் கொண்டு இந்த
விஷயத்தில் புல்லு கூட புடுங்க
முடியாது என்பதுதான் யதார்த்தம்.

ஸ்டாலின், மாசேதுங் மாதிரி
யாரேனும் இரும்பு மனம் கொண்ட
தலைவர் முற்போக்கு எண்ணங்களோடு
கூடிய ஒரு சோஷலிஸ
சர்வாதிகாரத்தை இங்கே
அமல்படுத்தினால் மட்டுமே
ஒட்டுமொத்தமாக இந்திய சமூகத்தின்
சாதியப் பிரிவுகளை அடித்து
நொறுக்கக்கூடிய வாய்ப்பு
இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு
வாய்ப்பு இன்னும் ஒரு நாற்பது,
ஐம்பது ஆண்டுகளுக்குள் எல்லாம்
நடந்து விடும் வாய்ப்பிருப்பதாக
தெரியவில்லை.

நன்றி : யுவகிருஷ்ணா

No comments:

Post a Comment