Saturday, April 1, 2017

ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்களெல்லாம் ஏன் முதலாளித்துவச் சிந்தனைகளிலேயே இருக்கிறார்கள்?

ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்களெல்லாம் ஏன் முதலாளித்துவச் சிந்தனைகளிலேயே இருக்கிறார்கள்?

(அல்)

முதலாளித்துவவாதிகளெல்லாம் ஏன் ஆன்மிகத்தையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்?

இன்றைய யுகத்திலும் ஏன் ஆன்மிகத் தரிசனவாதிகளால் முதலாளித்துவத்தின் பெருங்கேடுகளை உணர்ந்துகொள்ள இயலவில்லை?

இதுபோன்ற கேள்விகளை ஒருமுறையேனும் எழுப்பிப் பாருங்களேன்.

ஆனால் மாதா அமிர்தானந்த மயி தன்னுடைய ஆன்மிக உரைகளில், உலகமயமாக்கலின் பெரும் கொடுமைகளையும் அது சமூகத்தைச் சீரழித்து வரும் அவலங்களையும் தொடர்ந்து பேசியபடியே இருக்கிறார். ஆன்மிக மேடையில் இருந்தபடியே உலகமயமாக்கலின் ரத்த வேட்டையைப் பேசுவதற்கு இந்தப் பெண்மணிக்கு ஒரு “”ஆண்மை””யா தேவைப்பட்டது? அப்படியானால் ஆண்மையிலேயே உரம் பெற்றிருக்கிற ஆன்மிகவாதிகளுக்கு ஏன் இந்த”ஞானக் கண்கள்” கிட்டவில்லை?

இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரகர்களிடமும் இந்த உலகமயமாக்கல் பார்வை கிடையாது. ஆனால் உலகளந்த நாயகனாகப் பேசுவார்கள்0. கிறித்தவப் பிரச்சாரகர்களிடமும் இதைக் காண வாய்ப்பில்லாது இருக்கிறது. ஏன் இந்த உலகத் துயரைப் பேச மறுக்கிறார்கள்? சொல்லப்போனால் இஸ்லாமியப் பிரச்சாரகர்கள்தான் உலகமயமாக்கலின் மீது தங்களின் நெற்றிக்கண்களைத் திறக்கவேண்டும். ( இப்படிச்சொன்னால் சகோ.பீர்முகம்மது அவர்களே, நம்முடைய வேதத்தில்தான் நெற்றிக்கண் கிடையாதே, பாருங்களய்யா இவனது இஸ்லாமிய அறிவை என்று கிண்டலடிக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள்). போகட்டும், அவர்களையெல்லாம் இத்தனை ஆண்டுக்காலமும் தாண்டித்தான் வந்திருக்கிறேன்.

இஸ்லாமிய வளம் என்று மார்க்கப் பிரச்சாரகர்கள் எதை மனதில் எண்ணிப் பேசுகிறார்களோ, அந்த இயற்கை வளங்களை மேலை நாடுகள் உலகமயமாக்கலின் பேரால் ஒட்டச் சுரண்டிக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. இதனைச் சுரண்டிச் செல்ல வாகாகவே அரேபிய மன்ன்ர்களையும் சர்வாதிகாரிகளையும் தங்களின் பெட்டிக்குள் பாம்பாகச் சுருட்டி வைத்திருக்கிறார்கள். இதை, சவூதியிலிருந்து வஹாபியத்தை மொத்தமாகக் கொள்முதல் செய்து வந்திருக்கிற நம்ம ஊர் வஹாபியப் பேரறிஞர்களும் உணர்வதில்லை. தொழுகையில் ஓர்மையை உணரவைக்கும் அத்தஹியாத்தில் இருந்தபடி, விரல் நடனங்களைப் புரிவதற்கான இஸ்லாமிய ஞானம் மட்டும்தான் அவர்களிடமும் இருக்கிறது.

நீங்கள் அரசியலை வெறுக்கலாம்; ஆன்மிகத்தை மட்டும் பேசுவதே இறைப்பணி எனவும் கருதலாம். ஆனால் ஆன்மிகத்தின் பொருட்டாக அரசியலைப் பேச மறுக்கும் ஒவ்வொரு மதத்தின் உள்ளிருந்தும் தீவிரவாதம் மட்டுமே வெடித்துக் கிளம்பும். அரசியலை உணராததால்தான் அரச பீடங்களுக்கு எதிரான கோபங்கள் தீவிரவாதமாக ஆயின எனும் உண்மையை எல்லோரும் யோசிக்கவேண்டிய தருணம் இது. குறிப்பாக முஸ்லிம் சமூகம். உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல் ஆகியவற்றுக்கான எதிர்ப்பை ஆக்கப்பூர்வ அரசியலாக மாற்ற முன்வர வேண்டும். இதற்காகவேனும் மாதா அமிர்தானந்த மயியின் உரைகளை மனம்கொள்ள வேண்டும்.

மனங்கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்!

-களந்தை பீர் முகம்மது

No comments:

Post a Comment