Saturday, April 1, 2017

அரசியல்சாசனம் என்பது புனித நூலா?

அரசியல்சாசனம் என்பது புனித நூலா?

பிரதமர் நரேந்திரமோடி பேசியதிலிருந்து இது பற்றி விவாதம் நடந்துவருகிறது. என்னுடைய தாழ்மையான கருத்துகள் இவை.

1. அரசியல்சாசனம் என்பது புனிதமான நூல் அல்ல. புனிதம் என்ற சொல்லின் எந்த அர்த்தத்திலும் அதை அவ்வாறு கருதுவது என்பது தவறானது.

2. அரசியல்சாசன ரீதியிலான ஜனநாயகம் (constitutional democracy) என்பதும் குடியரசு (republic) என்பதும்தான் அடிப்படையான விழுமியங்கள். (ஆனா்ல் அவை கூட புனிதமானவை அல்ல). அந்த விழுமியங்களி்ன் அடிப்படையில் அரசாங்கம் (government) என்கிற அலகு எவ்வாறு செயல்படவேண்டும் என்பதற்கான வழிகாட்டியும் சட்ட ஆதாரமும்தான் அரசியல்சாசனம் ஆகும்.

3. அரசியல்சாசனத்தின் எல்லா பிரிவுகளும் மாற்றத்துக்குட்பட்டவை. வழிகாட்டும் அடிப்படைகள் மட்டுமே அதற்கு விதிவிலக்கு.

4. அரசிய்ல்சாசனத்தை மாற்றும், திருத்தும், மறுவார்ப்பு செய்யும், இருப்பதை நீக்கிவிட்டுவிட்டு புதிதாக ஒன்றைக் கொண்டுவரும் எ்ந்த ஒரு செயல்பாடும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உண்டு. இதுவே அரசாங்கத்தின் சட்டமியற்றும் பிரிவுக்கான (legislative) தார்மீக அடிப்படை. இதை நடைமுறைப்படுத்துவது நிறைவேற்றுகை பிரிவு (executive), பாதுகாப்பது நீதிப் பிரிவு (judiaciary). இதுதான் நவீன அரசியத்தின் (polity) அடிப்படை.

5. எல்லா அரசியல்சாசனங்களும் அந்தந்த காலகட்டத்தின் அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தொடரவும் மாற்றவும்படுகின்றன. அந்த அரசியல் கோட்பாடுகள் என்பவை அடிப்படையில் பல்வேறு சமூகப் பிரிவுகளின் அதிகாரம் தொடர்பான சமன்பாடே தவிர வேறில்லை.

6. இந்தியா போன்ற இவ்வளவு பிற்போக்கான ஒரு நாட்டில் அண்ணல் அம்பேத்கரும் ஜவஹர்லால் நேருவும் பிற அரசியல்சாசன கர்த்தாக்களும் உருவாக்கியிருக்கும் இந்திய அரசியல்சாசனம் உண்மையிலேயே ஒரு பெரிய புரட்சிதான். அதை முற்றிலும் மறுவார்ப்பு செய்யவேண்டும் என்று கூறுகிற என்னைப் போன்றவர்களாலும்கூட அதைஒரு அதியசமாகவே பார்க்க இயலுகிறது. பாகிஸ்தானிய நீதியரசர் ஒருவர் (பெயர் மறந்துவிட்டது) கூறியதுபோல, கடந்த ஐந்நூறு ஆண்டுகால தெற்காசிய வரலாற்றில் மிகப்பெரிய புரட்சி என்றால் அது இந்தியாவின் அரசியல்சாசனம்தான். இந்திய அரசியல்சாசன நிர்ணய அவையின் விவாதங்களையும் சாசனத்தின் பிரதியையும் இதுவரையில் அது குறித்து செய்யப்பட்டுள்ள ஆய்வுகளையும் ஒரு அரசியல்செயல்பாட்டாளும் விமர்சகரும் படிக்கவேண்டும். அதை எதிர்ப்பவர்களும்கூட!

7. இந்திய அரசியல்சாசனத்தை மறுவார்ப்பு செய்து இந்தியாவை ஒரு இணையாட்சியாக (confederation) ஆக மாற்றுவதற்கான நிகழ்ச்சி நிரலையே கோட்பாட்டு ரீதியில் நாம் முன்மொழிகிறோம். அந்த அடிப்படையான மாற்றமே அரசியல்சாசனரீதியிலான ஜனநாயகத்தையும் குடியரசுக் கோட்பாடுகளையும் அவற்றின் அடிப்படையிலான சமூக நீதியையும் மேலும் திறமாக நிறைவேற்றவும் பாதுகாக்கவும் வழிசெய்யும்.

8. அது சாத்தியமில்லாதபோது, வரலாற்றின் வேறு பல காரணிகளும் துணைவரும்பட்சத்தில், இந்தியாவின் அரசியல்சாசனத்தையே மக்கள் தூக்கி எறிவார்கள். ஏனென்றால் அரசியல்சாசனம் என்பது புனிதமானது அல்ல. அது நமக்கு நாமே ஏற்படுத்தி்க்கொள்ளும் கூட்டு ஒப்பநதமே. அதை ஊறப்போட்டுவைத்திருக்கமுடியாது. அரசியல்சாசனம் நடைமுறையில் சமநிலை தவறும்போது, அரசின் ஒரு அங்கம் மற்றொரு அங்கத்தைத் திருத்தமுயல்கிறது. இந்த அதிகார சமன்படுத்தம்தான் (balance of power) எல்லா குடியரசுகளையும் உயிரோடு பாதுகாத்துவருகிறது. இதுவே ஒரு ஜனநாயகத்தின் சாதகமாகவும் இருக்கிறது பாதகமாகவும் இருக்கிறது.

9. ஆனால் இந்தியாவில் அரசியல்சாசன ரீதியிலான ஜனநாயகம் முற்றிலும் நிலைகுலைந்துவருகிறது. அது கார்ப்பரேட்களுக்கும் மதவெறியர்களுக்கும் சேவை செய்யும் ஆட்சியாளர்களின் கையில் இப்போது மாட்டிக்கொண்டிருக்கிறது. மோடி அதைப் புனித நூலாக சொன்னதற்குப் பின்னால் ஒரு தமாஷ், பச்சைப் பொய் அல்லது வேறு ஏதாவது ஒரு சூழ்ச்சிதான் இருக்குமே ஒழிய வேறு எதுவம் இருக்காது. இந்தியாவில் அரசியல்சாசனத்தின் மற்றும் அரசியல்சாசன ரீதியிலான ஆட்சிமுறையின் மிகப்பெரிய எதிரிகளே சங் பரிவாரங்கள்தான்.

10. இந்தியாவில் அரசு (state) என்கிற கட்டமைப்புக்கு எதிரான போராட்டம் இன்னும் நெடுங்காலம் அரசியல்சாசனரீதியிலான போராட்டமாகவே இருக்கும். விதிவிலக்கான சில சமூகங்கள் அல்லது மாநிலங்களில் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் அரசியல்சாசன கட்டமைப்பு நன்கு ஊறிப்போயிருக்கிறது. அதை ஃப்பூ என்று ஊதிவிடமுடியாது. எனவே இந்தியாவில் மாற்றத்தை விரும்புவோர் இந்திய அரசியல்சாசனத்தையும் அரசியல்சாசன ரீதியிலான ஜனநாயக முறைகள் குறித்த கோட்பாடுகளையும் ஆழமாக கற்று, அதன்படி தங்கள் வியூகங்களை வகுக்கவேண்டியிருக்கும்.

11. மத்திய மாநில உரிமைகளை வரையறுக்கும் மத்திய, மாநில, பொதுப்பட்டியல்கள், இட ஒதுக்கீடு, ஆட்சி மொழி உள்ளிட்டட எல்லா அம்சங்களும் காலத்துக்கு ஏற்ப மாறக்கூடியவை. 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு தரமுடியாது, தமிழை ஆட்சிமொழியாக்கமுடியாது என்று கூறுவதெல்லாம் அரசியல்சாசனத்தை ஒரு குண்டாந்தடியாக மாற்றி நம்மை அடிக்கும் முயற்சி. இவை அத்தனையுமே அரசியல் காரணங்களைப் பொறுத்தே வெற்றிபெறவும் தோற்கவும் செய்கின்றன.

இறுதியாக,

அரசியல்சாசனம் மற்றும் அரசியல்சாசன ஜனநாயகம் குறித்து நிறைய படிக்கவும் ஆராயவும் வேண்டிய தேவை முன்பு எப்போதும்வரை நமக்கு இருக்கிறது.

அத்துடன், மோடியின் இந்த வார்த்தைகளைக் கண்டு மயங்காதீர்கள்...

No comments:

Post a Comment