Saturday, April 1, 2017

தந்திரசாலி என்றால் அதற்கு ஓநாய் அல்லது நரி. அப்பாவி என்றால் அதற்கு ஆட்டுக்குட்டி அல்லது மான்

தந்திரசாலி என்றால் அதற்கு ஓநாய் அல்லது நரி. அப்பாவி என்றால் அதற்கு ஆட்டுக்குட்டி அல்லது மான். இந்தக் குறியீடுகள் பொதுவாகப் பொதுப் புத்தியில் இருக்கிறது. இதுவே சிறுவர்களுக்கான கதைகளாகவும்…

ஓநாய்-நரியைப் பற்றிய அபிப்பாராயத்தை விடுங்கள். தாவர உண்ணிகள் என்றால் அப்பாவிகள் என்கிற கருத்து, பஞ்சதந்திர கதைகள் உட்படப் பல கதைகளில் இருக்கிறது.

சைவ உணவு பழக்கமுள்ளவர்களை வெகுளிகளாக அப்பாவிகளாகக் குறிக்கிற குறியீடு அது. இதுபோன்ற ஒரு பொதுப் புத்தியை அவர்களே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

கமல்ஹாசன் தயாரித்து எழுதி அவர் இயக்கிய முதல் படமான இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்றான ஹேராமில், அபயங்கரிடம் சாகேத்ராமனின் இரண்டாவது மனைவி ஜானகி, ‘ஓநாய்ப் பசிக்கிறது என்றால், உங்க குழந்தையைத் தூக்கி கொடுத்திடுவீங்களா?’ என்று அசைவ உணவுப் பழக்கத்தைக் கேள்வி கேட்பார்.

அதற்கு அபயங்கர், ‘ஓநாயா இருந்து பாத்தாதான் அதன் நியாயம் புரியும்’ என்பார்.

அதுபோல், தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்று நிருபிக்கப்பட்டதற்குப் பின், இன்னும் இந்தக் குறியீடுகள் முட்டாள்தனமானவை.

ரோஜா செடிகள், இன்னும் அழகிய மலர்கள், அழகில்லாத தாவரங்கள் இவைகளின் நிலையிலிருந்து பார்த்தால் தெரியும் ஆடுகளும் மாடுகளும் மான்களும் எவ்வளவு கொடூரமானவை நரிகளும் ஓநாய்களும் புலிகளும் எவ்வளவு சாந்தமானவை என்று.

விலங்குகளின் உணவு பழக்கத்தை வைத்துக் கொண்டு அதன் குணங்களைக் குறிப்பிடுகிற அறியாமையை விட்டொழிக்க வேண்டும். அந்தக் குறியீடுகளில் அறியாமை மட்டுமல்ல, மற்ற மனிதர்களை இழிவாகப் பார்க்கிற கண்ணோட்டமும் இருக்கிறது.

வேட்டையாடி உண்பவை வீரமும் இல்லை. தந்திரமும் இல்லை. புத்திசாலியும் இல்லை. கொடூரமும் இல்லை. அது அதன் உயிர் வாழ்தலின் இயல்பு.

- தோழர் வே மதிமாறன்

No comments:

Post a Comment