Friday, April 14, 2017

பிறமதத்தவர்களின் பெருநாள் தினங்களில் வாழ்த்து தெரிவித்தல் தொடர்பிலான இஸ்லாமிய நிலைப்பாடு குறித்த ஒரு பார்வை

ஷெய்க் அக்ரம் ஸமத்
Via Facebook
2017-04-15

இலங்கையில் இஸ்லாத்தை முன்வைத்தல் தொடர்பில்...

பிறமதத்தவர்களின் பெருநாள் தினங்களில் வாழ்த்து தெரிவித்தல் தொடர்பிலான இஸ்லாமிய நிலைப்பாடு குறித்த ஒரு பார்வை.

இது தொடர்பிலான பத்வாக்களை வாசிக்கின்ற பொழுது இரண்டு வகையான கருத்துக்களை காணமுடிகிறது.
1. வாழ்த்துத் தெரிவித்தல் ஹராமானது என்று கூறும் ஒரு கருத்து, இதனை முன்வைப்பவர்கள் மிகப் பெரும்பாலும் இதுபற்றிய இமாம் இப்னுல் கையிம் இமாம் இப்னு தைமியா போன்றோரின் பத்வாக்களை மையப்படுத்தியே இக்கருத்தை வலியுறுத்துகின்றனர், இதற்கான மிகப் பிரதானமான நியாயமாக, பெருநாள்கள் அவா்களது வணக்கமாகும் எனவே அவற்றுக்கு வாழ்த்து தெரவிப்பது அவற்றை நாம் அங்கீகரிப்பது போன்றதாகும் என்று சொல்கிறார்கள்.
2. வாழ்த்துத் தெரிவித்தல் அனுமதிக்கப்பட்டது, என்பது இரண்டாவது அபிப்ராயம், நவீன அறிஞர்களில் பெரும்பான்மையானவாகளுடைய நிலைப்பாடு இதுதான், நிறுவன ரீதியாக சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம், ஆய்வுக்கும் பத்வாவிற்குமான ஐரோப்பிய சபை போன்றன மிக விரிவாக ”அனுமதிக்கப்பட்டது” என்ற பத்வாவை தெளிவுபடுத்தியுள்ளன.
இரண்டாம் கருத்தைப் பேசுகின்றவர்கள் தமது கருத்துக்கு நியாயமாக சில விடயங்களை முன்வைக்கின்றனர், குறிப்பாக பிற சமூகங்களுடன் கலந்து வாழ்கின்றவா்களைப் பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக உறவு, தொழில், பக்கத்து வீடு, படிப்பு போன்ற அடிப்படைகளில் தொடர்புள்ளவர்களைப் பொறுத்தவரையில் இந்த வாழ்த்துத் தெரிவித்தல் தவிர்க்க முடியாதது, சமூக வாழ்வில் இந்தப் பண்பாடு அவசியமானது என்பார்கள், இத்தகைய ஒரு சுமூகமான சமூக வாழ்வைத்தான் இஸ்லாமும் வலியுறுத்துகிறது என்கிறார்கள்,
: {لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون} [الممتحنة: 8-9].
மேற்கண்ட அல்குர்ஆன் வசனம் இந்த விடயத்தை மிகத் தெளிவாகப் பேசுகிறது, இங்கு முஸ்லிம்களுடன் சமாதானமாக வாழும் மக்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறைமை பற்றிப் பேசுகின்ற பொழுது, பிர், கிஸ்த் என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, கிஸ்த் என்பது நீதி, அதாவது பிறர்க்கு வழங்கப்பட வேண்டியவற்றை குறைவின்றி வழங்குதல் என்பது இதன் பொருளாகும், பிர் என்பதன் கருத்து, தனது உரிமைகளில் விட்டுக் கொடுப்பு செய்து பிறா்க்கு நன்மையளித்தல் என்பதாகும். அந்தவகையில் பெருநாள் தினங்களில் வாழ்த்துத் தெரிவித்தல் என்பது இந்த பிர் கிஸ்த் என்ற சொற்களின் பிரயோகங்களில் ஒன்றுதான் என்று கூறுவார்கள்.
மேற்கண்ட இரண்டு நிலைப்பாடுகளிலும் நாம் வாழும் நாட்டிற்கு இரண்டாவது நிலைப்பாடே மிகவும் பொறுத்தமானது என்பதை நிச்சயமாக எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.
இமாம்களான இப்னு தைமியா, இப்னுல் கையிம் போன்றோர், இஸ்லாத்தில் மிக உயர்ந்த கண்ணியத்திற்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆனாலும் அவர்களது இந்த பத்வா அவர்கள் வாழ்ந்த அந்த சூழலில் வழங்கப்பட்டதாகும், கலாநிதி யுசுப் அல் கர்ளாவி அவர்கள் கூறுவது போல், இன்றைய உலக மாற்றம் நாம் அவர்களது பத்வாவில் தங்கியிருகக்காது வேறு வகையில் சிந்திக்கவேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது, அவா்களது பெருநாட்கள் அவர்களுக்கு வேண்டுமானால் வணக்கமாக இருக்கலாம் ஆனால் அது சந்தோசங்களைப் பரிமாறிக் கொள்வதற்குத் தடையானதல்ல, ஏனெனில் சந்தோசங்களைப் பரிமாறிக் கொள்ளுதல் என்பது ஒரு உயர்ந்த பண்பாடு,
"أكمل المؤمنين إيماناً أحسنهم خلقاً" "إنما بعثت لأتمم مكارم الأخلاق".
ஒரு சம்புரணமான முஃமின் சிறந்த பண்பாட்டாளனாவான் என்பது ஹதீஸ், அது போல் நபியவா்கள் அனுப்பப் பட்டதன் நோக்கம் உயாந்த பண்பாடுகளைப் புரணப்படுத்துவதற்காகவாகும் என்பதும் நபியவா்கள் வாக்காகும்.
அடுத்து இலங்கைச் சூழலில் இவ்விடயம் குறித்த சிந்தனை அகீதா சம்பந்தப் பட்டதாகநோக்கப் படுவதை விடவும், அதாவது அவா்களது வணக்கத்திற்கு நாம் துணைபோகிறோம் என்று பார்ப்பதை விடவும் இலங்கையின் சுமூகமான சமூக வாழ்க்கைக்கு எது நன்மையானது என்ற சிந்திப்புதான் மிகவும் பொறுத்தமானது, மட்டுமல்ல, இஸ்லாம் பற்றிய நல்லபிப்ராயம், அதனை நோக்கிய ஈர்ப்பு என்பன இந்த கலந்த வாழ்வின் ஊடாகவே சாத்தியப் படுகிறது.

- ஷெய்க் அக்ரம் ஸமத்

No comments:

Post a Comment