Saturday, April 1, 2017

அண்ணலும் பெரியாரும் - 3

அண்ணலும் பெரியாரும் - 3
.
அண்ணல் பெரியவரா, பெரியார் பெரியவரா என்ற விவாதத்தைவிடவும் அறிவிலித்தனமானதாக வேறொன்றும் தோன்றவில்லை எனக்கு. அம்பேத்கருக்கு இணையானவரா பெரியார் என்ற ஆராய்ச்சியின் முடிவில் நீங்கள் இந்த மக்களுக்கு சொல்ல வருவது என்ன?
.
காலங்காலமாக நம்மை இழிவினும் இழிமக்களாக கருதி, இன்று வரை நாம் தொடர்ந்து அனுபவிக்கும் இன்னல்களுக்கு காரணமான பார்ப்பனீயத்தையோ இந்து மதத்தையோ எதிர்த்து போர்க்கொடி உயர்த்தாமல், சூத்திரப்பெரியார் சூத்திரர்களுக்காகத்தானே பாடுபட்டார், பட்டியலின மக்களுக்கு என்ன செய்தார் என்று முஷ்டி உயர்த்துகிறார்கள்.
.
பட்டியலின தலைவர் அம்பேத்கர் மட்டுமே என்பது நமது ஈகோ யுத்தத்திற்கு வேண்டுமானால் சரியாகலாம். ஆனால் ஒட்டுமொத்த சமூக மக்களின் நன்மைக்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்துக்கொண்ட இரு மாபெரும் தலைவர்களை சூத்திரத் தலைவர், பட்டியலினத் தலைவர் என்ற உங்கள் குறுகிய புத்திக்குள் அடைத்துப் பார்ப்பது மிக மோசமான முன்னெடுப்பாகவே படுகிறது.
.
குலக்கல்வி திட்டம் கொண்டு வந்த ராஜாஜி இங்கே மூதறிஞர் ஆக்கப்படுகிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறு நன்மையும் கிடைத்துவிடக்கூடாதென சூழ்ச்சிவலை பின்னிய காந்தி மகாத்மா ஆக்கப்படுகிறார். ஆனால் சமூகத்தின் எல்லாவித ஆதிக்கங்களையும் சுரண்டல்களையும் தங்கள் பேச்சாலும் செயலாலும் துவைத்துக் காயப்போட்டு நாமெல்லாம் விழிப்புறக் காரணமாக இருந்தவர்களை சூத்திரத் தலைவர், பட்டியலினத் தலைவர் என பட்டம் கட்டி, யார் பெரியவர் என அடித்து மாய்கிறோம்.
.
பார்ப்பனக்கூட்டம் நம்மிடம் எதிர்பார்ப்பதும் இதைத் தானே...!
.
-லியோ ஜோசப்

No comments:

Post a Comment