Saturday, April 1, 2017

இறந்து போன ஒருவரைப் பற்றிப் பேசாதீர்கள், எழுதாதீர்கள் என்கிறீர்கள். க்ஹைர்....

இறந்து போன ஒருவரைப் பற்றிப் பேசாதீர்கள்,
எழுதாதீர்கள் என்கிறீர்கள். க்ஹைர்....

இறந்தவரின் ஆன்மா சுவனத்திற்கு
அருளப்பட்டதா, நரகத்திற்கா என்பதை
இறைவன் அறிவான். அதன் மீதான
எந்த வழக்கும் நம் கையில் தீர்ப்புக்கில்லை.

எனினும், இன்றைய சமுதாயமும், நாளை
வர இருக்கும் சமுதாயமும் இவரைப்
பற்றிய சரியான புரிதல்கள் இல்லாமல்
போனால், மீண்டும் ஒரு பிழையான
வரலாறு அரங்கேறிடவும், நீரோக்களும்,
ஹிட்லர்களும், மோடிகளும், பட்டேல்களும்,
அவர்தம் கூஜாக்களும் வரலாற்றின்
பொன்னேடுகளில் பதிக்கப்பட நாமே
சாட்சியாகி விட மாட்டோமா.... நாமே
மை நிறைத்து தந்தவர்களாகி விட
மாட்டோமா....??

இறந்து போன ஒருவர் சாமான்யனாக
இருக்கும் பட்சத்தில், கூற்றில் உண்மையுண்டு.
நகர்ந்து செல்லலாம். கண் காணாது,
செவியேற்காது, மௌனித்திருக்கலாம்.

ஆனால், பெரும்பான்மையான மக்கள்
ஒருவரை ஐகானாக, தங்களின் குலக்கொழுந்தாக
கொண்டாடியும், அவரின் மரணத்தை தங்கள்
இவ்வுலக வாழ்விற்கே நேர்ந்து விட்ட அவலம்
போன்றும் உணர்ச்சிவசப்பட்டு பிதற்றும்
வேளையில், தம் சமூக மக்களுக்காக,
தம் சமுதாய மக்களுக்காக, தாம் வாழ்ந்த
நிலத்தின் வேர்களுக்காக, தமக்கு உணவும்,
உறைவிடமும், ஞானமும் தந்தருளிய,
இல்லாத சமயங்களில் அன்பின் மிகுதியால்
அள்ளிக்கொண்ட மக்களுக்காக அவர் என்ன
செய்தார் என்பதுவும் கேள்விக்குட்படாதா????

அந்த பிம்பத்தை வைத்துத்தானே கொண்டாடுகின்றீர்கள்???
அதுவே உண்மை இல்லை எனும்போது
அதனை வெளிச்சமிட்டுக்காட்டுதல் நம்
கடமையில்லையா?? இறந்தது ஓர் முஸ்லிம்
என்பதற்காகவே சதாம் ஹுசேனும், இடி
அமீனும் இரட்சிப்பாளர்களாகி விடுவார்களா??

சதாம் ஹுசேன் அளவுக்கும், இடி அமீன்
அளவுக்கும் டாக்டர் அப்துல் கலாம்
இருந்திருக்க வில்லைதான். ஆனால்
கொலை செய்பவனை விட அந்தக் கொலைக்கு
ஆதரவு தெரிவித்தவனும், வாய் மூடி மௌன
சாட்சியானவனும் அதே அளவுக்கு கொலை
செய்தவர்கள் அல்லவா.... கூடங்குளத்தினால்
மாள்பவர்களும், இனி மாள இருப்பவர்களும்,
பாலிஸ்டிக் மிசைலினால் பிணமாகுபவர்களும்,
அனாதைகளாகும் குடும்பங்களும் மனிதர்கள்
இல்லையா.

இவர்களையெல்லாம் காவு
கொடுத்தா ஒரு மணி மண்டபம் எழுப்ப
துணை நிற்கப் போகிறீர்கள்...? எந்த மாணவர்களின்
முன்னோடியாக காட்டப்படுகின்றாரோ அதே
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கென ஒரு
துரும்பும் கிள்ளாதவரையும், கல்வி எனும் பெயரில்
கொள்ளை வியாபாரம், கொலை வியாபாரம்
ஆவதைத் தடுக்காதவரையும், சாதி, மதம், நிறம்
இன்ன பிற பிரிவுகளால் தற்கொலைக்கு தள்ளி
விடும் பாடச்சாலைகளை எதிர்க்காதவரையும்,
அவரைப் போன்றே ஏழ்மையில் பிறந்து
ஏழ்மையிலேயே வாடிய விவசாயிகளின்
வேரறுபட்டபோது கள்ளமௌனம் காத்தவரையுமா
கொண்டாடச் சொல்கிறீர்கள்...?

சரியை தவறு எனக் கொள்வதை விட்டும்
பெரிய தவறு, தவறை, தவறானவர்களைச்
சரி எனக் காண்பது. சத்தியம், எத்தனை கசப்பாக
இருப்பினும், சத்தியத்திற்கே துணை நில்லுங்கள்.
நம் நிகழ்கால வாழ்வில் அசத்தியத்தின்
எழுத்தாணிகள் விதியினை மாற்றியமைப்பது
போல, நாளை வரும் சமுதாயத்தையும்
பொய்களால் நிரப்பாதீர்கள்.

-Umm Omar

No comments:

Post a Comment