Saturday, April 1, 2017

இட ஒதுக்கீடு சில சிந்தனைகள்:

இட ஒதுக்கீடு சில சிந்தனைகள்:
.
இட ஒதுக்கீடு குறித்த வாத பிரிதி வாதங்கள் தொடர்ந்து நடக்கின்றன. கேட்ட கேள்விகளே திரும்பத் திரும்ப வருகின்றன. சொன்ன பதில்களே திரும்பத் திரும்ப சொன்னாலும் கேள்விகள் நிற்ப்பதில்லை. புள்ளி விவரங்கள் பற்றி யாருக்கும் கவலை இல்லை. அது குறித்து சில கருத்துக்கள்.
.
1. முதலாவதும் அடிப்படையாகவும் ஒரு புரிதல் வேண்டும். இட ஒதுக்கீடு ஒரு வறுமை ஒழிப்பு திட்டமல்ல. இரண்டாயிரம் ஆண்டு மனுவின் இட ஒதுக்கீட்டிற்கான ஒரு எதிர்வினை.
.
2. முற்றிலும் தகுதி இல்லாதவர்கள் இட ஒதுக்கீடு மூலம் அரசு பணியைப் பெறுகிறார்கள், கல்லூரியில் படிக்கிறார்கள் என்ற வாதம் ஆதாரமற்றது. புள்ளி விவரங்கள் வேறு கதையை சொல்கின்றன. முற்றிலும் தகுதியற்ற ஒரு மேல் சாதி மாணவன் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர்கிறான். இப்படி சேர்ந்து மருத்தவர் ஆனவர்களின் பட்டியல் எடுத்துப் பாருங்கள். அதில் எத்தனை தலித்துகள் என்று சொல்லுங்கள்.
.
3. மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற வாதம் தவறானது. 5 சதவீதம் உள்ள பழங்குடி மக்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு என்று சொன்னால், வரலாற்றில் அவர்களுக்கு இழைக்கப் பட்ட துரோகத்தை வெறும் 5 சதவீதம் என்று ஒத்துக் கொள்வதைப் போன்றதே. 20 சதவீதம் மக்கள் தொகை உள்ள தலித்துகளுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற வாதம் வரலாற்றில் அவர்களுக்கு இழைக்கப் பட்ட துரோகம் 20 சதவீதம் என்று சொல்வதைப் போன்றது. 100 சதவீதம் துரோகம் இழைக்கப் பட்ட மக்கள் தலித்துகள். அந்த வரலாற்றுத் தவறுக்கான பரிகாரமே இட ஒதுக்கீடு. அதை மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடலாம் என்று சொல்வதில் நியாயம் இல்லை.
.
4. இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வாதம் புரிபவர்கள் சற்று நேரத்தில் தங்கள் வாதம் நிற்காது என்று உணர்கிறார்கள். உடனே அதிக கல்லூரிகள் வேண்டும், அதிக வேலை வாய்ப்பு வேண்டும் போன்ற வாதங்களை முன் வைப்பார்கள், எல்லோருக்கும் படிப்பும் வேலையும் அரசு தர வேண்டும் என்று சொல்ல ஆரம்பிக்கிறார்கள். எல்லோருக்கும் வேலை எல்லோருக்கும் படிப்பு என்பது எல்லோருக்கும் சந்தோசம் தானே, யார் இல்லை என்றது. இப்போது உள்ள இட ஒதுக்கீட்டை எதிர்க்க மேலே சொன்ன வாதம் எப்படி பொருத்தமானது என்று புரியவில்லை. பற்றாக் குறையான வளங்களை எப்படிப் பகிர்வது என்ற வாதத்தில் பற்றாக் குறை என்ற கருத்தை நீக்கி விட்டு வாதம் புரிவது எப்படி சரியாகும்.
.
5. சாதி நம் சமூகத்தில் உள்ள மிகப் பெரிய சிக்கல். அரசு அந்த சிக்கலை நீக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சாதிய சிக்கலுக்கான ஒரு மிகச் சிறிய நடவடிக்கையாக வேறு வழியின்றி எடுக்கப்பட்ட நடவடிக்கையே அரசின் இட ஒதுக்கீடு. சாதி ஒழிப்பிற்கு ஒரு கால எல்லையை நிர்ணயிங்கள். அதற்க்கான வழி முறைகளைப் பட்டியலிடுங்கள். அந்த வழி முறைகளை கட்டாயப் படுத்துங்கள். சாதி ஒழிக்கப் பட்ட அன்றிலிருந்து இட ஒதுக்கீட்டை நிறுத்துங்கள்.
.
6. இட ஒதுக்கீடு ஒரு முழு முற்றான தீர்வல்ல. உண்மைதான். ஏழை பிராமணன் என்ன செய்வான், ஏழை தலித்தல்லாத சாதியினர் வாழ்வுக்கு என்ன செய்வர், முன்னோர்கள் செய்த தவறுக்கு நாங்கள் ஏன் பலி கடாவாக வேண்டும் என்ற கேள்விகள் இன்னமும் உள்ளது. அவற்றுக்கான பதில் இட ஒதுக்கீட்டைஎதிர்ப்பதில் உள்ளது என்று நம்புவது தவறு. அப்படி உங்களை நம்பச் சொல்லும் சக்திகள் யாரென்று பாருங்கள்.
.
7. சமனற்ற சமூகத்தில் எந்த ஒரு திட்டமும் எல்லோருக்கும் நலன் தரும் என்று எதிர்பார்ப்பது தவறு.
.
- துணைத் தளபதி மார்கோஸ்

No comments:

Post a Comment