Friday, April 28, 2017

50 சதவீத ஒதுக்கீடு தொடர,

அரசியல் அரக்கர் அண்ணன் சிவசங்கர் ex MLA அவர்கள் எழுதியது.

-----------------------------------------

பள்ளி காலங்களில் சைக்கிளில் இருந்து விழுந்தால் நேரே செல்லும் இடம் ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தான். அப்போதெல்லாம் ஓரிரு டாக்டர்கள் தான் இருப்பார்கள். 

1996ல் மாவட்டக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, யாருக்காவது சிபாரிசு செய்ய மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையங்களோடு தொடர்பு ஏற்பட்டது. அப்போது நிறைய மருத்துவர்களோடு செயல்பட்டது.

2006ல் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராக ஆன போது, ஆரம்ப சுகாதார  நிலையங்களின் செயல்பாட்டை நேரடியாக அறியும் வாய்ப்பு கிடைத்தது.

கிராமங்களில் மிக முக்கியமாக தேவைப்படும் மருத்துவ சேவை, பிரசவம். அது அப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் எளிதாகக் கிடைத்தது. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் அதிக செலவாகும் நிலையில், இங்கு இலவசம்.

அதைவிட முக்கியம், அங்கு பணியாற்றியோரின் செயல்பாடு. எல்லோரும் இளைஞர்கள். சுறுசுறுப்பாகப் பணியாற்றுவார்கள். நான் அவர்களை சந்திக்கும் போது, அந்த மாதத்து பிரசவ எண்ணிகையை பெருமையாகத் தெரிவிப்பார்கள்.

இது மாத்திரமல்லாமல் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுதல், தொற்று நோய் எதிர்ப்பு மருத்துவம் என குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவம் பார்த்து 'குடும்ப மருத்துவர்கள்' போல் ஆகி விடுகின்றனர், செலவில்லாமல்.

அப்போது சுற்று வட்டாரப் பகுதியில் டாக்டர்கள் சிவகுருநாதன், வெங்கட்ராமன், இளவரசன், கண்ணன் ஆகியோர் பணியாற்றினார்கள். பம்பரமாய் சுழன்று பணியாற்றுவார்கள்.

இவர்கள் எல்லோருமே பின்னர் மருத்துவ மேற்படிப்பு முடித்து விட்டார்கள். கிராமப்புறங்களில் பணியாற்றியோருக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு பெற்று படித்தார்கள். மீண்டும் கிராமப்புறத்தில் பணியாற்றுகிறார்கள்.

எம்.பி.பி.எஸ் முடித்தப் பிறகு, அனைவருக்கும் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது கனவு. அரசுப் பணியாற்றுவோருக்கு ஒதுக்கீடு இல்லை என்றால், அனைவரும் அந்தத் தேர்வுக்கு தயார் செல்லும் பணிக்கு சென்று விடுவர். கிராமப்புற பணிக்கு மருத்துவர்கள் வருவது சிரமமாகி விடும்.

ஒரு நாட்டின் அடிப்படை சுகாதாரம் எப்படி இருக்கிறது என்பதை சரியாக கணிக்க ,
அந்த நாட்டின் குழந்தை இறப்பு  அளவீடு ( infant mortality rate ) என்பதை உலக சுகாதார நிறுவனம் வைத்திருக்கிறது .

2000மாவது ஆண்டில்  அந்த நிறுவனம் சில இலக்குகளை நிர்ணயித்தது.

ஒரு நாட்டில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் சுமார் 88 குழந்தைகள் மரணமடைந்து வந்தன. இதை  2015க்குள் 30க்குள் கொண்டு வர வேண்டும். 

இதற்கானப் பணியை மாநில  சுகாதாரத்துறைகள் செய்தது.

2015 ஆம் ஆண்டு, உலக சுகாதார நிறுவன ஆய்வாளர்கள் இந்திய மாநிலங்களை ஆய்வு செய்தனர்.

ஒட்டுமொத்த இந்தியாவின் இறப்பு விகிதம் 40க்கு கீழ் வரவில்லை .

சுமார் 23 மாநிலங்கள் இந்த 40 மரணங்களுக்கு கீழ் கொண்டு வர முடியாமல் விழிபிதுங்கின.

ஆனால் ஆறு மாநிலங்கள் மட்டும்
நினைத்ததை விட சரி பாதியாக குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்து காட்டினர்.

அவை

1. கேரளா
2. தமிழ்நாடு
3. மகாராஷ்ட்ரா
4. பஞ்சாப்
5. ஹிமாச்சல் பிரதேசம்
6. மேற்கு வங்காளம்

இதில் தமிழகத்தின் infant mortality rate - 21.

இந்த சாதனையை எட்ட துணையாய் இருந்தவர்கள், நான் முன்னர் குறிபிட்டது போல், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுபவர்கள்.

முப்பது வருடங்களுக்கு முன்பு வரை பிரசவம் என்றால், கிராமத்து மருத்துவச்சிகள் பார்ப்பார்கள். சரியான மருத்துவ முறை இல்லாததால், இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. பெண் குழந்தைகளை கொன்று விடுதலும் நடந்தது.

அப்படியான சூழல் இல்லாமல், நல்ல மருத்துவ சேவையோடு, அனைத்து பிரசவத்தையும் மருத்துவமனையில் நடக்குமாறு மாற்றிக்காட்டியவர்கள் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள்.

அரசு மருத்துவர்கள் பயன்பெறும்
50% ரிசர்வேசனை ஒழித்தால் என்ன ஆகிவிடும் என்று சிலருக்கு எண்ணம் இருக்கிறது.

பிரசவத்திற்கு, அரசையும் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நம்பி வாழும் பல கோடி கிராமத்து மக்கள் அவதியுறுவார்கள்.

இன்றும் தமிழ்நாட்டில் நடக்கும் பிரசவங்களில் 70 விழுக்காடு அரசு மருத்துவமனைகளில் தான் நடக்கின்றன.

அரசு மருத்துவமனைகளில்
டாக்டர்கள் இல்லாத நிலை வந்தால்,
கார்ப்பரேட்  மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்ல வேண்டி வரும். அதற்கு ஏக செலவாகும்.

வசதி இல்லாதவர்கள், மீண்டும் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் நிலை வரும் .

மீண்டும்  IMR ஏறும் .

மருத்துவர்கள் தங்களுக்காக போராடுவது போல இன்று தோன்றினாலும்
இதில் நாளைய தமிழகத்தின் நலன் அடங்கியுள்ளது.

மருத்துவர்கள் போராட்டத்தால், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்காமல் சிரமப்படுகிறார்கள் என்று வாதிடுவோர் உண்டு. இது சில நாட்கள் சிரமம் தான், இந்த ஒதுக்கீடு இல்லாமல் போனால், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மிகக் குறைவான மருத்துவர்களே இருக்கும் நிலை வரும். அப்போது இன்னும் கூடுதல் சிரமம காலத்திற்கும்.

ஏற்கனவே மத்திய அரசின் "நீட்" தேர்வால், கிராமத்து மாணவர்கள் சேர்க்கை மருத்துவத்துறையில் குறையும். நுழைவித் தேர்வு பயிற்சியில் நகர்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகம். அவர்கள் கிராமப்புறங்களுக்கு வர வாய்ப்பு குறைவு.

இன்னொரு புறம் மருத்துவ சேர்க்கை எதிர்காலத்தில் குறையும் என்ற ஒரு பேச்சும் இருக்கிறது. காரணம் எம்.பி.பி.எஸ் படிக்க ஐந்தரை வருடம் ஆகிறது. கஷ்டப்பட்டும் படிக்க வேண்டும். இவ்வளவு படித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றினால், குறைவான சம்பளம் தான். ஒரு மாத அரசு சம்பளத்தை, ஒரு வார சொந்தப் பணியில் (own practice) சம்பாதித்து விடலாம்.

எம்.பி.பி.எஸ் மாத்திரம் எதிர்காலத்தில் உதவாது. கூடுதல் மேற்படிப்பு அவசியம். அதற்கு செலவு செய்து பயிற்சிக்கு சென்று, நுழைவுத் தேர்வு எழுதி மூன்று வருடம் படித்து வந்தால், படிப்புக்கே பத்தாண்டுகள் போய்விடும். இதற்கு வேறு துறைக்கு சென்று படித்தால், நான்காவது ஆண்டில் சம்பாதிக்கலாம் என்ற பேச்சு வந்துவிட்டது.

இதை எல்லாம் கருத்தில் கொண்டால், மருத்துவப் படிப்பு படிக்கவும், மேற்படிப்பு படிக்கவும் சற்றே அரசு தான் ஊக்கப்படுத்த வேண்டும்.

அதிலும் மருத்துவர்கள் கிராமப்புறத்தில் பணியாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

மருத்துவர்கள் போராட்டத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, 50 சதவீத ஒதுக்கீடு தொடர,  அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

# கிராமப்புற மக்களின் நலம் கருதி !

சிவசங்கர்

No comments:

Post a Comment