Saturday, April 1, 2017

IIT நுழைவுத் தேர்வில் தமிழகப் பாடத் திட்டத்தில் பயின்றோரின் வெற்றி வீதம் வெறும் 0.12% !

IIT நுழைவுத் தேர்வில் தமிழகப் பாடத் திட்டத்தில் பயின்றோரின் வெற்றி வீதம் வெறும் 0.12% !
*************************************************************************************
மத்திய அரசு பாடத் திட்டத்தில் பயின்றோர் 57% ; ஆந்திர மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்றோர் 11.1%
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைந்துள்ளது. சென்ற ஆண்டில் வெற்றி பெற்றவர்கள் 65. இந்த ஆண்டிலோ வெறும் 33.

இந்தியா முழுவதிலும் 26,456 பேர் வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 33 என்றால் எங்கே பிரச்சினை உள்ளதென்பதை நாம் அலசி ஆராய வேண்டும்.

இது குறித்து விரிவான ஒரு அறிக்கையை உடன் வெளியிட்ட பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களைப் பாராட்ட வேண்டும்.

இதற்கான ஒரே காரணமாக அவர் தமிழ்நாடு அரசு பாடத் திட்டம் மத்திய அரசு பாடத் திட்டத்துடன் (CBSE) ஒப்பிடும்போதும், பிற மாநிலங்களின் பாடத் திட்டங்களுடன் ஒப்பிடும்போதும் மிகவும் தாழ் நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி அதைத் தரம் உயர்த்த வேண்டும் என்கிறார்.

மத்திய அரசு பாடத் திட்டத்தின் கீழ் பயில்கிறவர்களின் எண்ணிக்கை மாநிலப் பாடத் திட்டங்களின் கீழ்ப் படிக்கும் மாணவர்களைக் காட்டிலும் மிக மிகக் குறைவு. ஆனால்நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் மத்திய அரசுப் பாடத் திட்டத்தில் படித்தவர்களின் பங்கு 57 சதம்.

அதேபோல தமிழகப் பாடத் திட்டத்தில் படித்து வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 33 ஆக இருக்கும் நிலையில், ஆந்திர மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்களில் 2,938 பேர்களும் மகாராஷ்டிர மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களில் 1,610 பேர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.

இவற்றைச் சுட்டிக் காட்டி தமிழகப் பாடத் திட்டத்தின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என மருத்துவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
இது உண்மைதான். ஆனால் இது பகுதி உண்மையே. நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதுபோல இங்கு 9 மற்றும் 11ம் வகுப்புகளில் தேர்வுகள் இல்லாமை என்பது இப்படி நம் மாணவர்கள் மிக மோசமாகப் பின்தங்குவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

அதேபோல நமது தேர்வு முறையில் அறிவு சார்ந்த கேள்விகளுக்கு (knowledge based qns) உரிய இடமில்லை. இப்படி ஆனதற்குத் தனியார் பள்ளி 'லாபி' தான் முக்கிய காரணம். 100 க்கு 100, 200க்கு 200 மதிப்பெண்கள் வாங்குகிற மாணவர்கள் எங்கள் பள்ளிகளில்தான் அதிகம் என விளம்பரம் பண்ணி வசூல் வேட்டையாட அவர்கள் கேள்வித்தாள்கள் text based கேள்விகளால் நிரப்பப்பட்டால் போதும் என்கிற நிலையை ஏற்படுத்திவிட்டனர்.

இதன் விளைவு..

10ம் வகுப்பிலும், 12ம் வகுப்பிலும் 100க்கு 100, 200க்கு 200 வாங்குகிறவர்கள் ஆயிரக் கணக்கில் இருந்தபோதும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுகிறவர்கள் ஒரு சதம் கூடத் தேருவதில்லை.
என்ன வெட்கக் கேடு....

இந்நிலை மாற,

1) +!, +2 இரண்டு ஆண்டுகளும் அரசுத் தேர்வுகள் நடத்தி, சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ்கள் அளிக்கப்பட வேண்டும்.

2) கேள்வித் தாள்களின் உள்ளடக்கம் மாற்றியமைக்கப்பட வேண்டும். மொத்த கேள்விகளில் அறிவு சார் கேள்விகள் 20 சதத்திலிருந்து 30 சதம் வரை அமைய வேண்டும்.

3) தமிழ்நாடு பாடத் திட்டம் மத்திய அரசின் பாடத் திட்டத்திற்கு இணையாக்கப்பட வேண்டும்.

மருத்துவர் அவர்கள் தனது கோரிக்கையில் மேலும் முக்கியமான இந்த இரு அம்சங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறோம்.
தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ள பிற அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இது குறித்துப் பேச வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசு இப்படி நம் மாநிலம் தரம் தாழ்ந்துள்ள நிலையை ஆராய உடனடியாக ஒரு கல்வியாளர் குழுவை அமைக்க வேண்டும்.
இது குறித்த கவன ஈர்ப்புக் கூட்டம் ஒன்றை புதுச்சேரி மாநிலத்திலுள்ள (அங்கும் தமிழ்நாடு பாடத் திட்டம்தான்) அக்கறையுள்ள கல்வியாளர்கள் வரும் ஜூன் 27 (சனி) காலை 10 மணி அளவில் புதுச்சேரியில் ஏற்பாடு செய்துள்ளனர்.

-Marx Anthonisamy

No comments:

Post a Comment