Friday, April 14, 2017

விஸ்வரூபம், முஸ்லிம்களுக்கு மத்தியில் உருவாக்கிய தேவையற்ற சிக்கல்களையும் இன்னல்களையும் சிக்கெடுத்தவர்கள

களந்தை பீர் முகமது
Via Facebook
2017-04-14

*
கமல்ஹாஸனின் விஸ்வரூபம் முதல் பாகம் வந்தபோது உண்டான சிக்கல்களைப் பற்றி, ஜெயலலிதா அரசைக் குற்றம் சாற்றி அண்மையில் கமல்ஹாஸன் பேசியிருந்தார்.  அப்போது பெரும்பான்மையோர் இஸ்லாமிய இயக்கங்களின் மீது அதிருப்தி அடைந்தார்கள்;  முஸ்லிம்களைப் பற்றிப் படத்தில் எத்தகைய கருத்து முன்வைக்கப்பட்டிருந்தாலும் படம் தணிக்கை செய்யப்பட்டபின் இன்னொரு தடை ஏற்படக்கூடாது என்று எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் கூறினார்கள்.  எதையும் விமர்சனத்திற்கு உட்படுத்துவதே நேரான வழிமுறை என்பது அவர்களின் வாதம்.

விஸ்வரூபம் தோல்விப்படம்.  அப்படத்தின் மீது குவிந்த கவனத்தால் அது வசூலில் வென்றது.  அந்தச் சூட்டோடு அதன் இரண்டாம் பாகமும் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், அப்படி நடைபெறவில்லை.  அதற்குக் காரணம் உண்டு.  படம் தடை செய்யப்பட்டதற்கு இஸ்லாமிய இயக்கங்களைச் சீறிப்பாய்ந்த பலரும் அது வெளிவந்தபின் கமல்ஹாஸனின் மீது சீறலானார்கள்.  தமிழகத்தில் பொறுப்பான அரசியல் கருத்துகளை முன்வைக்கும் அனைத்து இலக்கிய இதழ்களும் எழுத்தாளர்களும் ஆனந்த விகடன் உள்ளிட்ட பெரிய பத்திரிகைகளும் விஸ்வரூபம் படத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்தார்கள்.  தமிழகத்தின் மனச்சாட்சியை இவர்களே முன்னெடுத்துப் பேசினார்கள்.  விஸ்வரூபம், முஸ்லிம்களுக்கு மத்தியில் உருவாக்கிய தேவையற்ற சிக்கல்களையும் இன்னல்களையும் சிக்கெடுத்தவர்கள் இந்த எழுத்தாளர்களும் பத்திரிகைகளும்தான்.  ஒரு பத்திரிகை கூட படத்தை விதந்தோதவில்லை.  அன்று விஸ்வரூபத்தின் மீது கடுமையானதும் கூர்மையானதுமான விமர்சனங்களை வைத்த எழுத்தாளர்கள் குறைந்தபட்சம் நூறு பேராவது இருப்பார்கள்.  எல்லா பெரிய எழுத்தாளர்களும் (ஓரிருவர் தவிர) முஸ்லிம்களின் மனசாட்சியாக நின்று போர்க்குரலை எழுப்பினார்கள். களத்தில் நின்று முஸ்லிம் எழுத்தாளர்கள்தான் இந்த விமர்சனக் கணைகளை ஏவியிருக்க வேண்டும்.  ஆனால், அந்தச் சூழலுக்கு இடமில்லாமல் நம் தமிழ் எழுத்தாளர்கள் ஒரு மாபெரும் இயக்கமாக அணி திரண்டார்கள். இந்தக் கோபக் கனலைத் தாங்கமுடியாமல் கமல்ஹாஸன் திணறினார்.  அப்போது விமர்சனம் வெளியான அனைத்து இதழ்களையும் எழுதிய எழுத்தாளர்களையும் கமல் நன்றாகவே அறிவார்.  எப்படியோ அவரின் மனசாட்சியை அவ்விமர்சனங்கள் உலுக்கிவிட்டன.  சூடு ஆறிப்போனதும் “ விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகம் இணக்கமான சூழலை மேம்படுத்தும்படி அமையும்”  என்றார் கமல்ஹாஸன்.

தமிழ் எழுத்தாளர்களின் இந்த ஆவேசப் போர் முழக்கத்தை எத்தனையெத்தனை முஸ்லிம்கள் உணர்ந்திருப்பார்கள்?  அவர்களில் எத்தனைபேர் இந்த இதழ்களின் பெயரையோ எழுத்தாளர்களின் பெயரையோ அறிந்திருப்பார்கள்?  தம் சமூகத்தின் மீது விழுந்த தீராப்பழியைத் துடைத்துச் சென்ற எழுத்தாளர்களிடம் இருந்த இரும்பு விரல்களின் தீச்சூட்டை அவர்கள் அறிவார்களோ?  தம்முடைய சமூகக் கடமை என்பதைப் போல எழுதிய எழுத்தாளர்கள் அதற்கான பிரதிபலன்களை எதிர்பாராமலே தம் வழக்கமான பணிகளுக்குச் சென்றுவிட்டார்கள்.
தமக்காகக் களம் பொருதிய இவர்களை வருங்கால முஸ்லிம் இளைஞர்களுக்கும் ஆலிம்களுக்கும் நாம் அறிமுகப்படுத்த வேண்டாமா?  அதற்கு இந்த முஸ்லிம் சமுதாயம் ஏதாவது முயற்சி எடுத்திருக்கின்றதா?

2007ஆம் ஆண்டிலிருந்து நான் ஒரு கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்துக்கொண்டு வருகிறேன்.  அதாவது, சமூகத்தில் வசதிபடைத்த செல்வந்தர்கள் ஒன்று கூடியோ தனித்தனியாகவோ தமிழகத்தின் மதரஸாக்களுக்குத் தமிழ் இலக்கிய இதழ்களை அனுப்பிவைத்து உதவிபுரிய வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை.  இதை முஸ்லிம் சமூகக் கூட்டங்களிலோ நூல் வெளியீட்டு விழாக்களிலோ இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொதுக்குழுவிலோ தொடர்ந்து முன்வைத்து வந்திருக்கிறேன்.  அந்தக் கூட்டங்களுக்கு முஸ்லிம் செல்வந்தர்கள் பலர் வந்திருந்தது கண்கூடான உண்மை.  ஆனால், அதை எத்தனைபேர் செவிமடுத்தார்கள்?

அவர்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அங்கேயே விளக்கியிருக்கிறேன்.  ஒரு முஸ்லிம் எவ்வளவு அப்பாவியாக இருந்தாலும், அவருக்குத் தீவிரவாத இயக்கங்களோடு உறவு உண்டு என்ற வதந்தியைப் பரப்பிவிட்டால் போதும், அந்த இளைஞனின் வாழ்க்கை அத்தோடு பாழாகிவிடும்.  முஸ்லிம் இயக்கங்களோ ஜமாத்துகளோ துணிந்துநின்று அந்த வழக்கை எதிர்கொள்வதில்லை. இதனால், இஸ்லாமிய இளைஞர்களும் மாணவர்களும் தாம் அநாதையாக நிற்பதைப்  போன்ற உணர்வுகளோடு இருக்கிறார்கள்.  தமக்காகப் பேச, வாதாட யாருமில்லை என்று பரிதவிக்கின்றார்கள். எழுத்தாளர்களும் கவிஞர்களும் பத்திரிகையாளர்களும் கூடவே இடதுசாரி, ஜனநாயக முற்போக்கு சக்திகளும் எப்படி சுழன்று பணியாற்றி எழுதுகிறார்கள் என்கிற அந்த உண்மையை முஸ்லிம் இளைஞர்களின் கண்களில் காட்டிவிட்டால் போதும்;  தம் சமூகத்தைக் காக்கும் அந்த எழுத்தாளர்கள், இதழ்களோடு மனத்தடைகள் இல்லாமல் அவர்கள் ஒன்றித்துவிடுவார்கள்.  நாம் இணைந்து பணியாற்ற வேண்டியது இத்தகைய சக்திகளுடன்தானே அன்றி, மதவாதக் கட்சிகளுடன் அல்ல என்ற உண்மையை உணர்ந்துகொள்வார்கள்.  தமக்கு யாரும் ஆதரவில்லை என்ற அநாதைத் தன்மை அவர்தம் மனத்திலிருந்தும் அகன்றுவிடும்.

நான் இந்தக் கோரிக்கையை முன்வைத்த காலத்தில், விஸ்வரூபம் படம் வெளியாகியிருக்கவில்லை என்பதை முதலில் ஞாபகம் கொள்ள வேண்டும்.  முஸ்லிம்களின் மீது சர்வதேச ரீதியாக உண்டாகியிருக்கும் தீவிரவாத அவச்சொல்லைத் துடைத்தெறிவதில் சர்வதேச எழுத்தாளர்கள் முன் நின்றார்கள்;  அதுபோலவே தமிழக எழுத்தாளர்களும் சற்றும் குறைவில்லாமல் முன்நின்றார்கள்.

முஸ்லிம் மாணவர்களோ இளைஞர்களோ போதுமான இலக்கியத் தொடர்புகள் இல்லாமல் இருந்ததால் இந்த உண்மையை அறியாமல் போய்விட்டார்கள்.  கலையும் இலக்கியமும் இஸ்லாத்திலிருந்து வெகுதூரத்தில் இருப்பவை என்பனபோன்ற கருத்துகள் எப்படியோ முஸ்லிம் சமூகத்தின் பொதுவான புரிந்துகொள்ளலாக இருக்கிறது.  இதனால் தமிழ் எழுத்தாளர்களின் உலகத்துக்குள் முஸ்லிம் சமூகம் நுழையவில்லை.

இனிமேலும் இந்த அவலநிலை நீடிக்கக்கூடாது;  இதனை மாற்ற வேண்டும்.   ஆகையால்,  முஸ்லிம் செல்வந்தர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி,  தமிழ் இலக்கிய இதழ்களை மதரஸா மாணவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment