Saturday, April 1, 2017

எல்லோர்க்கும் எல்லாம் , எல்லோர்க்கும் சம அந்தஸ்து, சம வாய்ப்பை அளிக்கும் சம நிலை தான் கம்யூனிசமாக இருக்கமுடியும்

கம்யூனிசம் என்றதும் பலரும் அதை
பொதுவுடமை அல்லது பொதுமைத்துவம்
என்பதாக மட்டுமே அர்த்தப்படுத்திக்
கொள்கிறார்கள். கம்யூனிச சித்தாந்தம்
உருவான ரஷ்ய நாட்டில் ஏழை
பணக்காரன் என்ற பொருளாதார
வேறுபாடே பிரதானமாக இருந்தது.
மக்களிடையே சமநிலை உருவாக
வேண்டுமெனில் அந்த பொருளாதார
ஏற்றத்தாழ்வை சமப்படுத்த வேண்டும்,
ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு
களையப்பட்டு உடமைகளனைத்தும்
பொதுமையாக்கப்பட வேண்டும் என்ற
கருத்தாக்கம் மிகச் சரியே.

ஆனால் நமது நாட்டை பொறுத்தவரை
மக்களிடம் சம நிலையை உருவாக்க
வெறுமனே பொருளாதார சமத்துவம்
மட்டுமே எவ்வகையிலும் உதவக்கூடிய
விடயமன்று. எல்லோர்க்கும் எல்லாம் ,
எல்லோர்க்கும் சம அந்தஸ்து, சம
வாய்ப்பை அளிக்கும் சம நிலை தான்
கம்யூனிசமாக இருக்கமுடியும் என்பது
என் கருத்து.

இந்தியாவிலும் பொருளாதார
ஏற்றத்தாழ்வு இருக்கவே செய்கிறது.
ஆனால் அதை விடவும் மக்கள்
அனைவருக்குமான சம அந்தஸ்து,
சம உரிமை, சம வாய்ப்பை சவக்குழியில்
தள்ளி மண்மூடுவது சாதியமே.
பொருளாதாரத்தை விடவும் இங்கு
சாதியத்தைக் கொண்டே
மற்றவர்களுக்கான மதிப்பளிக்கப்
படுகிறது.

ஒரு அடித்தட்டு சாதியைச் சேர்ந்த
ஒருவன் பொருளாதாரத்தில் எவ்வளவு
உயர்வு பெற்றாலும் அவன்
கீழ்சாதியாகவே சாகும்வரையிலும்
பார்க்கப்படுகிறான். அதே
உயர்சாதியைச் சேர்ந்த ஒருவன்
பொருளாதாரத்தில் நலிவுற்றிருக்கும்
நிலையிலும் தன்னை பிராமணன்
என்றோ ஆண்டசாதி என்றோ தம்பட்டம்
அடித்துக்கொள்ள முடிகிறது.

ஆனால் அண்ணல் அம்பேத்கர் தமது
கட்டுரையொன்றில் குறிப்பிடுவது போல ,
இங்கே பலரும் கார்ல்மார்க்சை வரிக்கு
வரி காப்பியடிப்பவர்களாகவே
இருக்கிறார்கள். வர்க்கபேதத்தை
ஒழித்துவிட்டால் சாதிபேதம்
தானாகவே ஒழிந்துவிடுமென
தப்புக்கணக்கு போடுகிறார்கள்.

ஆனால் ஒரு தாழ்த்தப்பட்டவன்
பொருளாதாரத்தில் எந்த நிலையில்
இருந்தாலும் அவன் "தாழ்த்தப்பட்ட "
என்ற அடையாளத்திலிருந்து ஒருபோதும்
விடுபடவே முடிவதில்லை. அவனது
பிறப்பு முதல் இறப்பு வரை, ஏன்
இறப்பிற்கு பின்னும் அவனை சாதி
விடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது.

வர்க்கம், சாதியம் இரண்டுமே மக்களை
பிரிக்கின்ற சக்திகளாக இருந்தபோதும்
அவற்றிற்கிடையேயான முக்கிய
வேறுபாடு இருக்கிறது. வர்க்கம் என்பது
சமூக நிலை மாற்றத்திற்குரிய சாதியம்.
அதாவது வர்க்கம் என்பது மாறக் கூடியது.
இன்று ஏழையாக இருப்பவர் பணக்காரர்
ஆகலாம் நாளை; அப்படியே பணம்
படைத்தவரும் ஏழையாகலாம் ஒருநாள்.
ஆக வர்க்கத்தை சாதியதோடு ஒப்பிட்டு
கூறுவோமெனில் அதை மாறக் கூடிய
அல்லது மாற்றத்திற்கு ஏதுவான
சாதியநிலை எனக் கூறலாம்.

ஆனால் சாதி என்பது சமூக நிலை
மாற்றத்திற்கு வழிகொடாத வர்க்கநிலை.
ஒருவன் தனது தலைமுறைதோறும்
ஏழையாகவோ அல்லது பணக்காரனாகவோ
தொடர்வான் என்பதற்கு எவ்வித
உத்திரவாதமுமில்லை. ஆனால் அப்படி
மாற விடாத, இறுகிப் பிடிக்கின்ற வர்க்க
நிலையைத்தான் சாதியம் என்கிறோம்.
ஒருவன் தன்னை மதமற்றவனாக
அறிவித்துக்கொண்டாலும் சாதி அவனை
விடுவதில்லை. அவன் மீது திணிக்கப்பட்ட
சாதிநிலையிலிருந்து அவன்விடுபட
வாய்ப்பேதும் இல்லை.

ஏழை பணக்காரன் என்ற வர்க்க
அடுக்குகளைப் போல சாதியமும்
தனக்குள் பல அடுக்குகளைக்
கொண்டிருக்கிறது. ஆனால் வர்க்கம்
போல சாதியம் நெகிழ்வு தன்மை
உடையதல்ல. உங்களது சாதி
அடுக்குநிலையை மாற்ற முடிவதேயில்லை.

ஆக வர்க்க பேதத்தை ஒழித்துவிட்டாலே
சாதியம் தானாக அழிந்துவிடுமென்பது
இந்திய சமூகநிலையோடு கம்யூனிசத்தை
பொருத்திப் பார்க்கும் நோக்கு
அற்றவர்களின் கூச்சலாகவே இருக்க
முடியும். சாதியத்தை ஒழிக்காமல்
கம்யூனிசத்தின் அடிநாதமான சமநிலை
என்பதை அடையமுடியாது என்பதை
நாம் உணர வேண்டும்.

- லியோ

No comments:

Post a Comment