என். சொக்கன்
நண்பர் ஒருவருடைய தம்பி முதன்முறையாக ஒரு பெரிய நிறுவனத்தில் தொலைபேசி வழி நேர்காணலுக்குச் (Telephone Interview) செல்கிறார். ‘எனக்கு என்னோட துறையில ஓரளவு அனுபவம் இருக்கு, ஆனா, பெரிய நிறுவனங்கள் எதிர்பார்க்கறமாதிரி அதை ஒழுங்கா, சுருக்கமாத் தொகுத்துச் சொல்லத் தெரியலை. எனக்கு ஒரு Structure அமைச்சுக் கொடுங்களேன், அதுல என்னோட அனுபவங்களை அழகா மாட்டிவிட்டுப் பேசிடறேன்’ என்றார். அவருக்கு எழுதிக் கொடுத்த குறிப்புகள் இவை:
1. முதலில், நீங்கள் பேச விரும்பும் பிரச்சனையைப்பற்றிய பின்னணியைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். அதில் அவர்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளனவா என்று கேளுங்கள். இது மிகவும் முக்கியம். ஒருவேளை நீங்கள் இப்படிக் கேட்காமல் தொடர்ந்து அடுத்தடுத்த விஷயங்களைப் பேசிக்கொண்டே சென்றால், பின்னால் சொல்லப்படுகிற எந்த விஷயமும் அவர்களுக்குப் புரியாது.
2. அடுத்து, அந்தப் பிரச்சனையைத் தெளிவாக விவரியுங்கள். அது ஏன் பிரச்சனை என்று புள்ளிவிவரங்களுடன் விளக்குங்கள். ‘என்னுடைய மேனேஜர் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கச் சொன்னார், அதனால் நான் தீர்த்தேன்’ என்று சொல்லாதீர்கள், மேனேஜர் ஏன் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்பினார் என்று உங்களுக்குத் தெரியவேண்டும், அதாவது, அந்தப் பிரச்சனையால் யார் அவதிப்பட்டார்களோ அவர்களுடைய வலியைச் சொல்லவேண்டும், இல்லாவிட்டால் ‘உங்கள் ப்ராஜெக்ட் உங்களுக்கு உசத்திதான். ஆனால், அதனால் யாருக்கு என்ன பயன்?’ என்கிற கேள்வி வரும்.
3. மூன்றாவதாக, அந்தப் பிரச்சனையை எப்படித் தீர்த்தீர்கள் என்று சொல்லுங்கள். அதில் உங்கள் குழுவின் பங்கைச் சுருக்கமாகவும், உங்கள் பங்கை விரிவாகவும் பேசுங்கள், ஆனால் நீங்கள் செய்யாத எதற்கும் Credit எடுத்துக்கொள்ளாதீர்கள். அதற்காக, ‘எல்லாம் அவர்கள் செயல்’ என்றும் விட்டத்தைப் பார்க்காதீர்கள். உங்கள் செயலும் அதில் உண்டு. அதை உரக்கச் சொல்லுங்கள்.
4. நான்காவதாக, அந்தப் பிரச்சனை தீர்ந்தபின் என்ன மாற்றம் வந்தது, என்ன பலன் விளைந்தது என்று புள்ளிவிவரங்களுடன் சொல்லுங்கள். ‘இந்தப் பணிக்காக என் மேனேஜர் என்னைப் பாராட்டினார், எனக்குப் பிரமோஷன் வந்தது, சம்பளம் உயர்ந்தது’ என்பவற்றைவிட, ‘இதனால் 28% வாடிக்கையாளர்களுக்குத் தலா 25 ரூபாய் மிச்சமானது’ என்பது உசத்தியான புள்ளிவிவரம்.
5. இதுபற்றி அவர்களுக்கு ஏதும் கேள்விகள் உள்ளனவா, எதையாவது இன்னும் விரிவாகப் பேசவேண்டுமா என்று கேளுங்கள், அவர்களுடைய குறுக்குக் கேள்விகளுக்குத் தெரிந்த பதில்களைச் சொல்லுங்கள், தெரியாததை ஒப்புக்கொள்ளுங்கள்.
6. அடுத்த எடுத்துக்காட்டுக்குச் செல்வதற்குமுன்னால், ‘முதல் எடுத்துக்காட்டை விளக்குவதற்கு நான் எடுத்துக்கொண்ட நேரம் சரிதானா? இன்னும் சுருக்கமாகச் சொல்லவேண்டுமா, இன்னும் விரிவாகப் பேசவேண்டுமா?’ என்று கேளுங்கள். அதன்படி அடுத்தடுத்த எடுத்துக்காட்டுகளை அமையுங்கள்.
7. எதையும் சரியாக வடிகட்டிச் சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியும் என்பதால் அனைத்தையும் கொட்டவேண்டியதில்லை, எதைச் சொன்னால் மறுமுனையில் உள்ளவருக்கு ஆர்வம் வரும் என்பதைத் தெரிந்துகொண்டு அதைமட்டும் சொல்லவேண்டும், அது ஒரு கலை, பயிற்சியால்தான் வரும்.
8. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது என்றால், குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள். நேர்காணலின் தொடக்கத்தில், ‘நான் குறிப்புகளைப் பார்த்துப் பேசலாமா?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் தாளில் உள்ளதை அப்படியே படிக்காதவரை யாரும் மறுக்கமாட்டார்கள். ஒருவேளை மறுத்தால் நினைவிலிருந்து பேசுங்கள். இது ஒன்றும் மெமரி ஒலிம்பிக்ஸ் இல்லை, தகவல்களைவிட நீங்கள் என்ன செய்தீர்கள் என்கிற (உண்மைக்) கதைதான் முக்கியம்.
9. நீங்கள் எந்த நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பம் செய்திருக்கிறீர்களோ அவர்களுடைய பணிப் பண்பாடு (Work Culture), கொள்கைகள் (Principles) போன்றவற்றைப்பற்றிப் படியுங்கள். அநேகமாகக் கேள்விகள் அதை ஒட்டிதான் இருக்கும். உங்கள் எடுத்துக்காட்டுகளை அதனுடன் பொருத்திப் பேசினால் உடனடி வரவேற்பைக் காணலாம். இதற்குக் கொஞ்சம் கூடுதல் உழைப்பு தேவைப்படும். ஆனால், உங்கள் பதிலை அவர்கள் அவர்களுடைய கொள்கைகளுக்குப் பொருத்துவதைவிட, நீங்களே அதைப் பொருத்திவிட்டால் அவர்களுக்கு வேலை மிச்சம், அவர்கள் மாற்றிப் பொருத்திவிடுகிற ஆபத்தையும் தவிர்க்கலாம்.
10. நிறைவாக, பொய் வேண்டாம். ஒரு பொய்யை மறைக்க நூறு பொய் சொல்கிற அவஸ்தை ஒருபுறமிருக்க, பலனைப்போல வழியும் தூய்மையாக இருக்கவேண்டும் என்கிறார் காந்தி. முறையற்ற வழியில் கிடைக்கும் பலன் எப்பேர்ப்பட்டதாக இருந்தாலும் நமக்கு வேண்டாத அசிங்கம்தான்.