Saturday, January 27, 2024

இராமனின் ஒழுக்கம் குறித்து... அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பதிவு

*- இராமனின் ஒழுக்கம் குறித்து... அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பதிவு -*

   *#இராமனை ஒரு மன்னன் எனும் நிலையில் வைத்து ஆராய்வோம்:- அறநெறி பிறழாத இலட்சிய மன்னன் என இராமன் கருதப்படுகிறான். ஆனால்... இந்த முடிவு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதா? உண்மை என்னவெனில்... இராமன் மன்னனாயிருந்து ஒரு போதும் கோலோச்சவில்லை. பெயரளவில்தான் அவன் மன்னனாய் இருந்திருக்கிறான். ஆட்சிப் பொறுப்பு அனைத்தும் அவன் தம்பி பரதனிடமே ஒப்படைக்கப் பட்டிருந்தது என்று வால்மீகியே சொல்கிறார். அரசாட்சி மற்றும் நாட்டுப் பரிபாலனத்திலிருந்து இராமன் முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டிருந்தான். இராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை குறிப்பாகவும், தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறார்#.* 👇

   *#👉"அதன்படி... இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்குப் பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறை வேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் கழிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான்"👈#.*

   *#👉"இராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்கு தான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமனின் உணவில் அருஞ்சுவைப் பொருட்கள் அனைத்தும் இடம்பெற்றன. மது, மாமிசம், பழவகைகள் உட்பட. இராமன் மதுவை அறவே தொடாதவன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்துகொள்ளச் செய்தான் என  வால்மீகி குறிப்பிடுகிறார்"👈#.*

   *#👉"அந்தப்புரப் பெண்களுடன் இராமன் வாழ்ந்து கழித்ததாய் வால்மீகி சொல்லும் விவரங்கள் அற்பமானவை அல்ல. அந்தப்புரத்தில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ் பெற்ற கிண்ணரி, உரகா மற்றும் அப்சரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்ணழகிகளெல்லாம் அந்த அந்தப்புரத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். இந்த அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து, கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் இராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர். பதிலாக இராமன் அப்பெண்களுக்கு மாலை அணிவிப்பானாம். வஞ்சியரின் வளையத்துள் கிடந்த ஆடவருள் இளவரசன் இராமன் முதல்வன் என்கிறார் வால்மீகி. இவை இராமனின் ஒருநாள் வாழ்க்கை நிகழ்ச்சிகளல்ல. இராமனுடைய வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளே இவை"👈#.*

   *#👉"நாட்டு நிர்வாகத்தில் இராமன் எப்போதும் பங்கேற்றதில்லை என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக்கூட இராமன் ஒருபோதும்கடைபிடிக்கவில்லை. தம்மக்கள் குறைகளை ஏதோ ஒருதடவை இராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தைக் குறிப்பிடுகிறார். அதுவும் ஒரு துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் இராமன். அப்படி செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் இராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்"👈#.*

*ஆதாரம்:-*
*1. உத்தரகாண்டம், சருக்கம் 42, சுலோகம் 27.*
*2. உத்தரகாண்டம், சருக்கம் 43, சுலோகம் 1.*
*3. உத்தரகாண்டம், சருக்கம் 42, சுலோகம் 8.*

*- கிளர்ச்சியாளர் 'போதிசத்துவர்' Dr B.R.அம்பேத்கர் -*

*பாபாசாகேப் Dr B.R.அம்பேத்கர் அவர்களின்...பேச்சும் எழுத்தும், நூல் தொகுதி -8 பக்கம் - 462-463.*
#வாட்சப்பில்வந்தது

Monday, January 22, 2024

பாண்டேவும் கருங்குரங்கு! RSS-ன் சிலிப்பர் செல்

பாண்டேவும் கருங்குரங்கும் !
கட்டுரை  -ராஜா ராஜேந்திரன்.

முன் குறிப்பு : 

இந்தக் கட்டுரை ஜூலை 2017 உயிர்மையில் வெளியானது.

சங்கிகள் எப்படி இந்த பாபர் மசூதியை தங்களின் வக்கிர வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் ?  இவன்களுக்கு எல்லாவகைகளிலும் தொடர்ந்து உதவிக் கொண்டிருப்பவர்கள் யார் ?  அவர்களின் பொதுவான பின்புலம் எது என்பதையெல்லாம் ஒரு நூலின் துணைகொண்டு வரையப்பட்ட கட்டுரை.  

இனி அந்தக் கட்டுரை ;

ரமணா படத்தில், காவல்துறை மிகக் குழப்பமாய் முழித்துக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், முடிச்சவிழ்ந்து சிக்கல்கள் தீர, ஒரு பொதுக் காரணத்தை துப்பறிந்துக் கண்டுபிடிக்கும்.

அது என்னவென்றால், படத்தின் நாயகன் பணிபுரியும் ஒரு கல்லூரியில், அவரிடம் படித்த மாணவர்கள் மட்டும், தமிழக அரசுப் பணிகளில், தமிழகம் முழுக்க விரவிக் கிடப்பார்கள்.

ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்க மாட்டார்கள்.  அதேவேளையில் அவர்களுடன் பணி புரியும் சக ஊழியர்களில் யார் யார் லஞ்சப் பேர்வழிகள், எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதை மட்டும் தங்களின் பேராசிரியர்க்கு(நாயகன்) அப்டேட்டாக அனுப்பி வைத்துக் கொண்டிருப்பார்கள்.

நாயகனின் அந்த முன்னாள் மாணவர்கள், பொதுப்பணித்துறை, காவல்துறை, தொழில், வணிகவரி என்று தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் இருப்பார்கள்.

சரி.  இது நாயகனின் நல் நோக்கத்திற்காக, அதாவது ஊழலை அறவே ஒழிக்க, அவர் ஹிம்சை வழியை நாடுகிறார்.  அதாவது ஆயுதங்கள் மூலம் அவர்களில் தலையாயக் குற்றவாளியைக் கண்டறிந்து, கொன்று நடு வீதியில் தொங்க விடுவார்.   இதனால் நம் மாநிலமே ஊழல் செய்ய அஞ்சும். 

ஆனால் அப்படியெல்லாம் ஓர் இயக்கத்தால் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா ?

ஆம்.  ரமணாக்கள் எல்லாம் மோகன் பகாவத்கள் முன் வெறும் தூசுகள்.  ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங் எனப்படும் ஆர் எஸ் எஸ் ஷாகாக்கள்* இப்படியான ஒரு கூட்டத்தை பல வருடங்களாய் உருவாக்கிக் கொண்டே வருகின்றன. 

(*ஷாகாக்கள்  = சீருடை அணிந்து உடற்பயிற்சி, தற்காப்புப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி, இந்துத்துவ உபதேசங்கள், கட்டளைகள், இலக்குகள், அதைக் கண்டடைதல், எதிரிகள் யார் என அறிந்துக் கொள்ளுவது, அவர்களை அகற்றுவதற்கான அரசியல் .... இதையெல்லாம் செயல்படுத்தப் பயன்படும் ஒரு கூட்டம்.  வார விடுமுறை நாட்களில், பூங்காக்களில், சங்கிச்சகவாசம் கொண்ட முதலாளிகளின் பள்ளி அல்லது கல்லூரி விளையாட்டுத் திடல்களில் நிகழ்த்தப்படுபவை)

கிட்டத்தட்ட மூளைச்சலவை செய்யப்படும் மதப் பிரசங்கக் கூட்டத்தைப் போலவே இதிலும் வீராவேச உரைகள் நிகழும்.  அதில் மனம் மயங்கி உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்து, தேசத்தின் பால், அதாவது இந்துஸ்தானத்தின் மீது எவர்களுக்கெல்லாம் ஆர்கஸம் வந்து, என் தாய்நாடு(மதம்) காக்க என்னுயிரையும் தருவேன் என குரல் கொடுக்கிறார்களோ, அவர்கள்தான் மோகன் பகாவத்களின் ஸ்லீப்பர் செல்கள்.

மிகவும் நம்பகத்தன்மையான ஆள், யார் ஆட்சி புரிந்தாலும் தங்களுக்கே விசுவாசமாக இருப்பார் என, ஆழமான ஒரு முத்திரை பதிந்து விட்டால், பிறகு அவருடைய வாழ்க்கை, முழுக்க முழுக்க இந்த இயக்கத்தினராலேயே இயக்கப்படும்.  இவர்கள் எங்கு போனால் என்ன காரியம் தங்களுக்குச் சாதகமாக, தங்களின் இலக்கை நிறைவேற்றும் என்று அங்கு இந்த ஸ்லீப்பர் செல்களை அமர வைத்து, பல காரியங்கள் சாதிப்பார்கள்.

என்னடா, சமஸ் மாதிரி பூச்சாண்டி காட்டுகிறானே ? அவர்கள் என்ன அவ்ளோவ் பெரிய அப்பாடக்கர்களா என மிரளத் தேவையில்லை.  இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல.  மதத்தை ஓர் ஆயுதமாகவும், கேடயமாகவும் உபயோகித்து, மூட அடிமைகளைத் தொடர்ந்து எப்படி உருவாக்கி வருகிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டும் ஒரு முயற்சி மட்டுமே.

அவர்கள் காத்திருக்கிறார்கள்.  தங்களின் காலம் கனியும் வரை பொறுமையாக, இரை தங்களின் அருகே வரும் வரை ஒற்றைக்காலில் கொக்கு போலக் காத்திருக்கிறார்கள்.  

வாஜ்பாய் போன்ற தங்களுடைய ஆட்களின் மைனாரிட்டி ஆட்சியின் போதெல்லாம் அவர்கள் தங்களின் சுயரூபத்தை பெரிதாக வெளிக்காட்ட முனைவதில்லை.

2014 -ல் நிகழ்ந்ததைப் போன்று ஒரு பிரம்மாண்ட பலத்துடன் தனிக்கட்சியாக ஆள வாய்ப்பு வரும்போது, தங்களின் ஸ்லீப்பர் செல்களை எல்லாம் எழுப்பி விட்டு, இந்த ஷாகாக்களின் எந்தச் செயல்களையும் நாடே ரசிக்கிறது, பாராட்டுகிறது, ஏற்கிறது என்றெல்லாம் மொத்த மக்களையும் நம்ப வைப்பதில் மும்முரமாகச் செயல்படுகிறார்கள்.

நீதித்துறை, அரசியல், ஊடகங்கள், நிதி திரட்ட வணிகர்கள், ஆட்சிப்பணி, கல்வி, அறநிலையங்கள், விளையாட்டு, சமூக வலைத்தளங்கள், சினிமா, காவல்துறை, அயலகப் பணி ... இப்படி நாட்டின் மிக மிக முக்கியமாக இருக்கும் எல்லாத் துறைகளிலும் இந்த ஸ்லீப்பர் செல்கள் ஊடுருவி இருக்கிறார்கள்.  

அதிகாரம் அவர்களின் கைகளில் முழுக்க முழுக்க வரும்போது, தங்களின் ஸ்லீப்பர் செல்கள் இவர்கள்தான் எனக் கண்டறிகிறார்கள்.  அவர்களுக்கு நினைவூட்டுகிறார்கள்.  உங்களின் சேவை இப்போது எங்களுக்கு அவசியம் தேவை என அவர்களுக்குத் தேவையான வேலைகளைச் சாதித்துக் கொள்கிறார்கள்.

நமக்கு இங்கு ஏகப்பட்ட சேனல்கள் இருப்பதால் இப்போது நாம் வடக்கின் பல செய்திச் சானல்களை பெரும்பாலும் தவிர்த்தேக் கிடக்கிறோம்.

ஒரே ஒரு நாள், முழுக்க நம் சேனல்களைத் தவிர்த்துவிட்டு, வடக்கின் செய்தி சேனல்களை மட்டுமே பார்த்தால் போதும்.  கிட்டத்தட்ட 99 விழுக்காடு ஊடகங்கள் முழு வலதுசாரிகளாக மாறி, எல்லா ஸ்லீப்பர் செல்களும் முழித்துக் கொண்டதைப் போன்ற ஒரு பிரமிப்பை / பயத்தை தந்துக் கொண்டிருப்பது புரியும்.

சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று ஒரு வீடியோ.  

எங்கு தாக்கினார்கள் ?  யாரைத் தாக்கினார்கள் ? எத்தனை பேரைக் கொன்றார்கள் ?  அதற்கு ஆதாரம் என்ன ?  

ம்ஹூம்.  இப்படி எந்த ஒரு கேள்வியையுமே கேட்காமல், ராணுவம் தந்த அல்லது பாதுகாப்பு அமைச்சகம் தந்த வீடியோ காட்சிகளை நாள்தோறும் ஒளிபரப்புவார்கள்.  அவர்கள் சொன்னதை அல்லது சொல்லிக் கொடுத்ததை மட்டும் அந்தக் காட்சிகளை ஒளிபரப்பும்போது சொல்லியவண்ணம் இருப்பார்கள்.  

நாடு ஏதொ மாபெரும் சாதனையைச் சாதித்து, இந்திய எல்லையில் இருந்த மொத்த எதிரிகள் கூட்டமே சின்னாபின்னமானது போன்ற பெரும் வீரப்பிரதாபம் கட்டமைக்கப்படும்.  

கொஞ்சம் உற்று நோக்கினால் லடாக் எல்லையிலோ, அருணாச்சலப் பிரதேச எல்லையிலோ, சீனாவுக்கெதிராக இப்படிப்பட்ட ஸ்ட்ரைக்குகள் ஒருபோதும் நிகழாது.  பாகிஸ்தான் எல்லையில் மட்டுமே நிகழும்.  பாகிஸ்தான் மட்டுமே நம் பிரம்மாண்ட எதிரி.  

தென்னிந்திய அளவு கூட இல்லாத நாடு, வளர்ச்சியில் நம்மை விட எல்லாத் துறைகளிலும் மிகவும் கீழாக இருக்கும் ஒரு நாடு,  மக்களாட்சியில் அடிக்கடி தோல்வியைத் தழுவிக் கொண்டே வரும் ஒரு மதவாத நாடு.... இது எப்படி நம்முடைய போட்டி நாடு அல்லது எதிரி நாடாக இருக்க முடியும் ?  ஒரே ஒரு காரணம் அது இஸ்லாமிய நாடு.  இஸ்லாமியர்கள் இந்துத்துவாவின் மாபெரும் எதிரி. அவ்வளவுதான்.

எல்லா ஊடகங்களிலும் இணை ஆசிரியர் பதவிகளிலாவது தாங்கள் சொல்லும் ஆட்களை நியமிக்குமாறு, இந்த இந்துத்துவ இயக்கங்களின் பரிந்துரைகள் வடக்கு ஊடகங்கள் முழுக்க உண்டு என்கிற ஒரு சேதியை வாசித்தேன்.  என்டிடிவி  விஷயத்தில் அது பலிக்காதபோது, எதிர்விளைவு கொஞ்சம் மோசமாக இருந்ததையும் பார்த்திருப்போம் (NDTV பற்றி ஏழு வருடங்களுக்கு முன்பு இப்படி எழுதியிருந்தேன்.  பாருங்க NDTV யவே அதானி முழுங்கிவிட்டார்)

மதச்சார்பற்ற ஒரு நாட்டில் மதப் பைத்தியங்கள் பெருகும்போது இப்படிப்பட்ட விபத்துகள் நிகழத்தான் செய்யும்.  எல்லாம் தற்காலிகமானவைகள்.  மக்கள் முழித்துக் கொள்ளும்போது முற்றிலுமாக பல வருடங்களுக்கு ஸ்லீப்பர் செல்களின் செயல்கள் முடங்கிப் போய்விடும்.

சரி, கட்டுரைத் தலைப்புக்கு வருவோமா ?

பாபரி மஸ்ஜித் என்கிற ஒரு கட்டுரைத் தொகுப்பை வாசிக்க எடுத்தேன்.  ஆசிரியர் மு.குலாம் முஹம்மது.  நான்காவது பதிப்பாக, பல ஆவணங்கள், தீர்ப்புகளின் சிறு குறிப்புகள் சேர்க்கப்பட்டு 2012 -ல் வெளியான ஒரு தொகுப்பு.  முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் பார்வையில் செல்லும் ஒரு நூல்தான் !

பாபர் மசூதி - ராம ஜென்மபூமி Dispute வெகு தீவிரமாக, மாபெரும் அரசியல் திருப்புமுனை காரணியாக 1986- களில் இருந்தபோது, நிகழ்ந்த ஓர் அதிமுக்கியமான சம்பவம், தகுந்த ஆதாரங்களுடன் விளக்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன், முகலாயர்களால் கட்டப்பட்ட இந்த மசூதி, முகலாய அரசன் ஜஹாங்கீர் காலத்தில்தான், பாபர் மசூதி எனப் பெயர்ச் சூட்டப்பட்டு, இஸ்லாமியர்களின் தொழுகைக்காகத் திறந்துவிடப்படுகிறது.

அது ஷியா - சன்னி முஸ்லீம்கள் இருவரும் சேர்ந்து தொழ அனுமதிக்கப்பட்ட ஒரு பள்ளிவாசல்.

அது ராமர் பிறந்த அல்லது அவர் கோயில் இருந்த ஓர் இடம். அதைத் தகர்த்துவிட்டே அந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கிறது என்பது இந்துத்துவர்களின்  குற்றச்சாட்டு.

இந்து - முஸ்லீம் மதத்தினர்க்கிடையேயான இந்தப் பள்ளிவாசல் சர்ச்சை ஒருபுறமிருக்க,  சன்னி - ஷியா முஸ்லீம்களுக்கிடையே ஒரு சண்டை வருகிறது.  மசூதி யாருக்குச் சொந்தம் என்று ? 

1940 -ல் வழக்கு நீதிமன்றம் போனபோது, வழக்கு சன்னி முஸ்லீம்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வருகிறது.

அதன்பின், அந்த மசூதிக்கு இன்னும் எதிரிகள் அதிகமாகி விடுகிறார்கள்.  மசூதிக்குள் குழந்தை ராமர் சிலைகள் இருப்பதாகவும், தங்களை மசூதியில் நுழைய அனுமதித்தால் அதை உலகுக்கு காட்டுவோம் என்று நாக சாதுக்கள் எனப்படும் இந்துக்கள் தொடர்ந்து அங்கு முகாமிடுகிறார்கள்.  அதிகாலை தொழுகைக்குச் செல்லும் முஸ்லீம்களை, இருளைப் பயன்படுத்தி கல்லெறிந்து தாக்குகிறார்கள்.

இந்த நாக சாதுக்கள், துறவிகளிலேயே போர் வீரர்கள் என்றழைக்கப்படுபவர்களாம்.  கும்பமேளாக்கள் நிகழும் நேரங்களில் இவர்களின் அணிவகுப்பை ரசிக்க பல லட்சம் பேர் கூடுவார்கள்.  ஆயுதம் வீசி, புஜ பலாக்கிரமங்களுடன் இருக்கும் சாதுக்கள் (!)

23/12/1949 முன்னதிகாலை.  தொழுகைக்காகச் சென்ற இஸ்லாமியர், அங்கு திடீரென முளைத்து நின்ற ராமர் சிலைகளைக் கண்டு மிரண்டு, காவல் நிலையத்திற்கு ஓடி வருகிறார்கள்.

அப்போது அயோத்தி நகரம் இருந்த பைசாபாத் தலைமை நீதிபதி கே.கே. நய்யார் வசம் விவகாரம் போகிறது.  

அவர் சிம்பிளாக, மசூதியை மூடிவிடுவோம், அது மட்டுமே பிரச்சினையைக் குறைக்கும் என உத்தரவிட்டு விடுகிறார்.  அத்துடன் அந்த மசூதியில் தொழுகை முற்றிலுமாக முடங்கிப் போகிறது !

என்ன கூத்து என்றால், இந்த நய்யார்தான் இந்திய அளவில் அம்பலப்பட்ட, இந்துத்துவா இயக்கங்களின் முதல் ஸ்லீப்பர் செல் !

ஏனென்றால், இப்படி சிலைகளை நிறுவ சதியாலோசனைகளும், ஒத்திகைகளும் நடக்கின்றன என்று பைசாபாத் எஸ்.பி கிர்பால் சிங், நய்யாருக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பி வைத்திருக்கிறார்.  ஒன்றல்ல, இரண்டல்ல பல கடிதங்கள்.

எஸ்.பி கிர்பால்சிங் எழுதிய ஒரு கடிதத்தைக் கூட, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாய் நடைபெற்று வரும் இந்தச் சர்ச்சை வழக்கில், நீதிமன்றத்தில் ஆதாரமாக, வழக்காடும் உத்திரப்பிரதேச  அரசு சமர்ப்பிக்கவே இல்லை.

செப்டம்பர் 30, 2010 -ம் ஆண்டு இந்தக் கடிதங்கள் நீதிமன்றங்களில் சமர்பிக்கப் படுகின்றன.  அதுவரை அயோத்தியின் வெளியுலக இஸ்லாமியர்களில் பலரே கூட, சிலைகள் ஆதி காலத்திலிருந்து மசூதிக்கு உள்ளேயேத்தான் இருந்திருக்கின்றன போல ? என்று நினைத்திருக்கலாம்.

குழந்தை ராமர் & கோ சிலைகள் நிறுவப்பட்ட அந்த மசூதியை முழுக்க தன் அதிகாரத்தின் கீழ் கையகப்படுத்தி, மசூதியின் எல்லாக் கதவுகளையும் மூடி, ஒரே ஒரு கதவை மட்டும் திறந்துவிடச் சொல்லி, அங்கு நிறுவப்பட்ட ராமர் சிலைகளுக்கு பூஜைகள் செய்ய அனுமதி தருகிறார் அதே கே. கே. நய்யார் !

பல நூற்றாண்டுகால பள்ளிவாசல் திடுமென பாலராமர் கோயிலாகிப் போன அவலத்தைப் பாரீர் என பிரதமர் நேருவுக்கு, முஸ்லீம்கள் தொடர்ந்து புகார் கடிதங்களை அனுப்புகின்றனர்.

நேரு, அப்போதைய உத்திரபிரதேச முதல்வரான  கே.சி.பந்த்திற்கு ஒரு தந்தியை அனுப்புகிறார்.

A dangerous example is being set there, which will have bad consequences

உ.பி முதல்வர், பிரதமரின் தந்திக்கு மதிப்பளித்து, மாவட்ட தலைமை நீதிபதி கே.கே. நய்யாருக்கு இரு கேள்விகளை அனுப்பி வைக்கிறார்.

1.) சிலைகள் நிறுவியதை ஏன் தடுக்கவில்லை ?

2.) சிலைகளை இன்னும் ஏன் அகற்றவில்லை ?

27/12/1949 அன்று அக் கடிதம் கே.கே. நய்யாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.  கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தவர் அரசின் முதன்மைச் செயலாளர்.

நய்யார் பதில் கடிதத்தை இப்படி எழுதுகிறார்.  

" பள்ளிவாசலில் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடந்துவருவதால், இனி எங்களால் அங்கு தொழுகை செய்ய முடியாது என இஸ்லாமியர்கள் மறுத்துவிட்டனர்.  பள்ளிவாசலை முழுக்க இந்துக்களுக்கே கொடுத்துவிடும் படி சொல்லியும் விட்டார்கள் " 

அதற்கான ஆதாரங்கள் இவையென்று 15 இஸ்லாமியர்களின் பெயர்களும், கையெழுத்துகளும் அந்தக் கடிதத்தில் இருந்தன.

ஆனால் இது நய்யாரின் சூது என்று இஸ்லாமியர்கள் மீண்டும் பிரதமருக்கும், அப்போதைய கவர்னர் ஜெனரல் இராஜகோபாலனுக்கும் கடிதங்களை அனுப்ப, மீண்டும் முதல்வர் நய்யாருக்கு, உடனடியாக அச் சிலைகளை பள்ளிவாசலிலிருந்து அகற்றுமாறு ஆணை இட்டு கடிதம் எழுத, நய்யாரின் பதில் இப்படி இருந்திருக்கிறது.

Have them removed ?  Remove me.  But I will not get them removed.

நாடு விடுதலை அடைந்து, இணைப்புக்காக நடந்த போர்கள், கலவரங்கள், காந்தி படுகொலை என ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்த நேரம் என்பதால், கே.கே. நய்யாரின் இந்தக் கூத்துக்கு எந்த மேலதிக நடவடிக்கைகளுமே நிகழவில்லை.

இத்தனைக்கும் பாதுகாவலர் படைகளையும் அத்துமீறி, மசூதிக்குள் சிலைகளை நிர்மாணித்தார்கள் என்று F I R ஒன்றையும் பதிந்திருக்கிறார்கள்.  சிலைகள் வைக்கப்பட்ட உடன் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை அது.  FIR No.1949, US 147/295/448, DT- 23/12/1949.

குற்றத்தைச் செய்தவர்கள் என்று ராம்தாஸ், சுக்லாதாஸ், சுதர்சனதாஸ் உட்பட 60 நபர்கள் மீது  எஃப் ஐ ஆரில் குற்றம் சாற்றப்பட்டிருந்தது.  

ஆனால் இன்றைய தேதிவரை கூட அந்த எஃப் ஐ ஆரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை.

சரி.  இந்த கே.கே. நய்யார் எப்படி ஸ்லீப்பர் செல் ?  என்ன ஆதாரம் ??

நான்காவது நாடாளுமன்றத் தேர்தலில், ஜன்சங் கட்சி சார்பாக பாக்ரைச் என்கிற உ.பி மாநிலத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார் கே.கே. நய்யார்.  அவர் மனைவி சகுந்தலாவும்.  

ஜன் சங்தான் பிற்பாடு பாரதீய ஜனதா பார்டி என மாற்றிக் கொண்டது என்பது உங்களுக்கு தெரியும்.

கி.பி.1986.

இந்தச் சிலைகளுக்கு நடக்கும் பூஜைக் கூத்துக்கள் பொதுமக்களுக்கானது அல்ல.  நய்யார் நியமித்த பூசாரிகள் அல்லது அவர்களது வாரிசுகள் மட்டும் ஒரே ஒரு வாசல் வழியேச் சென்று பூஜைகள் செய்துவிட்டு வருவார்கள்.  

தொழுகை சமாச்சாரம் 1949 டிசம்பரோடு முடிவுக்கு வந்த ஒன்று.  

இந்நிலை 37 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்வது இந்துத்துவர்களுக்கு ஒவ்வவே இல்லை.  எல்லாக் கதவுகளையும் திறந்துவிட்டு, மக்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ந்து நீதிமன்றம் போனது இந்து அமைப்புகள்.

எல்லா மனுக்களும் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்படவே ... ரமணா பட டெக்னிக் ஒன்றைச் செய்ய முயல்கிறார்கள்.

பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்துக்கு தங்கள் ஆள் ஒருவரையே தலைமை நீதிபதியாகக் கொண்டு வந்துவிட்டால் ?

அவர்தான் நம் நாயகர் கே.எம். பாண்டே.  

இதற்கான ஆதாரங்கள் யாவும் அவர் எழுதிய சுயசரிதையான VOICE OF CONSCIENCE (மனசாட்சியின் குரல்) என்கிற நூலிலிருந்தே நமக்குக் கிட்டுகின்றன.

தன் நூலில் அவர் இவ்வாறு விவரிக்கிறார் ;

“ தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின் பைசாபாத் சென்று, ராமஜென்ம பூமியையும் சென்று பார்த்தேன்.  அப்போது கோயிலுக்குள் யாரும் செல்ல முடியாது.  காரணம் வாசலில் பூட்டுக்கள் போடப்பட்டிருந்தன.  சில பூசாரிகள்தான் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் (பாண்டே கோயில் கோயில் என எழுத, கட்டுரை ஆசிரியர் ஒவ்வொரு கோயிலின் பக்கத்திலும் பள்ளிவாசல், பள்ளிவாசல் என அடைப்புக் குறிக்குள் எழுதுகிறார்.  அவர் பதட்டம் அவருக்கு, பாவம்)

அதில் ஒரு பூசாரி என் வழிகாட்டியாகச் செயல்பட்டவர்.  மிகவும் புத்திசாலி.  அவருக்குப் பழைய வரலாறு தெரியும்.  நான் அவரிடம், 

" பண்டிட்ஜி, எப்படிப் பார்த்தாலும், இது ஒரு வழிபாட்டுத் தலம்.  ஒன்று இது மசூதியாகச் செயல்பட வேண்டும்.  அல்லது ஒரு கோயிலாகச் செயல்பட வேண்டும், அப்படித்தானே ? " என்றேன்.

அந்த மொத்த இடம் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது.  

கடந்த 35 ஆண்டுகளாக வழக்குகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.  

1934 -க்குப் பிறகு இந்த இடம் மசூதியாகச் செயல்படவில்லை என்றார் அந்தப் பூசாரி.

நான், "ஏன் வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்படவில்லை" என்று கேட்டேன்.

"ஒருவேளை அந்த நீதிபதி இன்னும் பிறக்கவில்லை போலும்" என்று அந்த பூசாரி கூறினார்.

ஆதாரம் - Voice Of Conscience, By Justice K.M.Pandey.  Page No.212 & 213.

இந்த நிகழ்வுக்குப் பின், சில நாடகங்கள் நிகழ்கின்றன.  நம் பாண்டே முன், ஒரு மனு சமர்ப்பிக்கப்படுகிறது.

மனுவின் சாரம்சம், எல்லாப் பூட்டுகளையும் கேட்டுகளையும் திறந்து விட வேண்டும்.  மக்கள் சிலைகளைத் தரிசிக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு தாம் குறிப்பிட்டதாக பாண்டே தன் சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.

“எதிர்பாராத விதமாக ஒரு மேல்முறையீடு எனக்கு முன்னால், இந்தப் பூட்டுக்கள் தொடர்பாகவே சமர்ப்பிக்கப்பட்டது.  நான் இந்த விவகாரத்தை இத்தோடு இறுதியாக முடித்துவிடுவதே பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்தேன்.  வழக்கை 01/02/1986 -ற்குள் முடித்துவிடுவதாகவும் சொல்லி இருந்தேன்.  அதன்படியே, எல்லாப் பூட்டுகளையும் திறந்து விடும்படி தீர்ப்பளித்தேன்“

பாண்டேவால் மாலை 04:40 ற்கு வழங்கப்பட்டது இத்தகையத் தீர்ப்பு.  20 நிமிடங்களுக்குள் அனைத்துப் பூட்டுகளும் திறக்கப்பட்டது.  நீதிமன்றத் தீர்ப்பின் நகல்கள் கூட கைக்கு வராத நிலையில், இதெல்லாமே இந்துத்துவர்களின் சிறந்த முன்னேற்பாட்டுடன் செயல்படுத்தப்பட்டவை என  உலகுக்கு அது நிருபித்தது.

"நான் அந்தப் பூட்டுகளைத் திறக்கும் உத்தரவைப் பிறப்பித்த நாளில், ஒரு கருப்புக் குரங்கு, நீதிமன்றத்தின் கூரையின் மேல், நாள் முழுவதும் வீற்றிருந்தது.

அது அங்கிருந்த கொடிக் கம்பத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டே இருந்தது.   நீதிமன்றத்தின் இறுதி உத்தரவை செவிமடுக்க, பைஸாபாத்திலிருந்தும், அயோத்தியாவிலிருந்தும் வந்து குழுமியிருந்த மக்கள் அந்தக் குரங்குக்கு நிலக்கடலை, பலவகைப் பழங்கள் இப்படி எத்தனையோ காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.

ஆனால், அந்தக் காணிக்கைகள் எதையுமே அந்தக் குரங்கு தொடவே இல்லை.  மிக அரிதான நிகழ்வு அது.   நான் மாலை 04:40 ற்கு தீர்ப்பு தந்த மாத்திரத்தில் அது அந்த இடத்தை விட்டு அகன்றது.

பின், நான் என் மாளிகைக்குத் திரும்புகிறேன்.  மாவட்ட நீதிபதியும், தலைமைக் காவல் கண்காணிப்பாளரும் என்னுடன் வந்தார்கள்.  அங்கே, என் வீட்டு வராந்தாவில் அதே குரங்கு இருந்தது.  நான் அதை வணங்கினேன்.  அதை ஒரு தெய்வீக சக்தி என எடுத்துக் கொண்டேன்.

இதை வட்டார பத்திரிக்கைகள் அனைத்தும் வெளியிட்டிருந்தன.  நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இதற்கு சாட்சி"

ஆதாரம் - Voice Of Conscience, By Justice K.M.Pandey.  Page No.215.

பிற்பாடு கல்யாண்சிங்(1991) முதல்வரான பின், 1992 -ல் பாபர் மசூதி முழுக்கத் தகர்க்கப் பட்டபின், 1993 -ல், நம் கருங்குரங்கு பக்தர் பாண்டேவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு கிட்டுகிறது.  இதுவே காலம் தாழ்ந்த, கொடுத்த வாக்கை மீறி, தாமதமாகக் கிட்டிய பரிசு என்று சலிப்புடன் சொல்கிறார் பாண்டே !

பாண்டே, சர்மா, கோஸ்சாமி, ஜோஷி, முகர்ஜி, புரோகித், ராய், பட், ராவ், திரிவேதி, சதுர்வேதி,  இவைகளுக்கெல்லாம் என்ன ஒற்றுமை என கூகுள் செய்யுங்களேன்.  ரமணா படத்தில் வருவது போலவே சிவப்பு பட்டையில் யாவும் ஒருவரே என ஓர் உண்மை உங்களுக்கும் புலப்படும்.

முற்றும்.

மேற்கண்ட கட்டுரை பாபர் மசூதி தகர்ப்பு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முன் எழுதப்பட்டது ஆகும்.

2019 ல் மீண்டும் பீஜேபீயைத் தேர்ந்தெடுத்ததும் தான் இவர்களுடைய ஆட்டம் உச்சகட்டத்திற்கு போனது.

நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, குடியரசுத்தலைவர் என அனைத்தும் அவர்கள் ஆட்டுவிக்கும் குரங்குகளாகின !

அதனாலேயே CAA, NPR, NRC, கஷ்மீர் பிரிவினை, பாபர் மசூதி அநீதி தீர்ப்பு என அனைத்தும் வாய்த்தன.

நீட், ஜி எஸ் டி, கஷ்மீர் பிளவு, ஹிண்டன்பர்க் என அனைத்து வழக்குகளிலும் அவர்களுக்குச் சாதகமாகவே தீர்ப்புகள் வந்தன.

இன்றையப் பாவச் செயலை,  இந்திய மக்கள் பெரும்பாலோரிடம் வலுக்கட்டாயமாகத் திணித்து, அவர்கள் செய்த பாவத்தில் மக்களையும் பங்குதாரர்களாக்கி விட்டனர்.  அந்தவகையில் நம் மண்ணில் இன்று அத்தகைய பாவத்திற்கு உடந்தையாக இருந்தது சின்னஞ்சிறு கூட்டம்தான் !

2024 ல் இவன்களே மீண்டும் வந்தாலும் நம்மால் மிக எளிதாக அதைக் கடந்துவிட முடியும்.  ஆனால் பாலராமன் எழுந்தால் பாலாறும், தேனாறும் ஓடுமென நம்பும் சங்கிகள் வாழ்க்கை ?

இராமனுடைய அந்திம வாழ்க்கை போலவும், அவனுக்கான முடிவு போலவுமே ஆகும், பாவம்.