ஆர்.கே. ராகவனின் எஸ்.ஐ.டி மோடிக்கு ‘க்ளீன் சிட்’ கொடுத்த வரலாறு - அம்பலப்படுத்துகிறார் மனோஜ் மிட்டா
– அ.மார்க்ஸ்
– February 13, 2014 at 12:16am
முன் கதைச் சுருக்கம்:
பிப் 28, 2002 – அகமதாபாத், அதாவது மோடியின் தலைமையகத்திற்கு அருகில் சமன்புரா என்கிற இந்துப் பெரும்பான்மையினர் வசிக்கும் பகுதியில் இருந்த ‘குல்பர்க் சொஸைடி’ எனும் நடுத்தர வர்க்க முஸ்லிம்கள் வசிக்கும் காலனி ஒன்றில் 69 முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 73 வயது முன்னாள் காங் எம் பி ஈஷான் ஜாஃப்ரியும் இதில் ஒருவர். கண்ட துண்டமாக வெட்டி அவர் கொல்லப்பட்டார். கொல்லப்படுவதற்கு முன் காவல்துறையினர். காங் தலைவர்கள் என அவர் பலருக்கும் போன் செய்து, தன்னையும் மற்றவர்களையும் காப்பாற்றச் செய்த முயற்சி பலனற்றுப் போனது. “அவர் துப்பாக்கியை எடுத்துச் சுட முயன்றார் . கோபம் கொண்ட மக்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை” எனக் கூறிப் புன்னகைத்தது மோடியின் குஜராத் காவல்துறை.
2006ல் ஈஷான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி, மோடி உள்ளிட்ட 63 பேர்கள் மீது இந்தப் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள், உதவி புரிந்தவர்கள் சதியில் பங்குபெற்றவர்கள் என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்குத் தொடரப்ப்பட வேண்டும் என நீதிமன்றத்தைக் கோரி மனு அளித்தார். உச்ச நீதிமன்றம் 2008ல் முன்னாள் சி.பி.அய் இயக்குனர் ஆர்.கே.ராகவன் தலைமையில் நால்வர் கொண்ட ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஆணையிட்டது.
பிப் 2012ல் ராகவன் தலைமையிலான எஸ்.ஐ.டி மோடி உட்பட அனைவரும் குற்றமற்றவர்கள் எனக் கூறி Clean chit அளித்துத் தன் அறிக்கையை சமர்ப்பித்தது. இதற்கு எதிராக ஸாகியா சமர்ப்பித்த மனுவை சென்ற டிசம்பரில், மோடியை பிரதமர் வேட்பாளராக இந்துத்துவ சக்திகள் அறிவித்த கையோடு, நீதிமன்றம் நிராகரித்தது. “ஆகா, நான் சொன்னது சரிதான் என நிரூபணமாகிவிட்டது (I am Vindicated) என்று குதூகலித்தார் ராகவன்.
இப்போது: “THE FICTION OF FACT-FINDING: MODI & GODHRA” BY MANOJ MITTA, HARPERCOLLINS | PAGES: 259 | RS.599 என்றொரு நூல், ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு எவ்வாறு மோடியைக் காப்பாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு, காரியத்தைக் கச்சிதமாக நிறைவேற்றியுள்ளது என்பதை விரிவாக விளக்கி வெளிவந்துள்ளது. நூலாசிரியர் மனோஜ் மிட்டாவின் இது தொடர்பான கட்டுரை இவ்வார ‘அவுட்லுக்’ ஆங்கில இதழில் வெளிவந்துள்ளது. அதிலிருந்து சில பகுதிகளை மட்டும் இங்கே தருகிறேன். ஆங்கிலம் எளிதாக வாசிப்பவர்கள் முழுக் கட்டுரையையும், முடிந்தால் முழு நூலையும் வாசியுங்கள்.
1. ஸாகியாவின் புகார் மனு குஜராத்தின் 14 மாவட்டங்களில் நடந்த அனைத்துப் படுகொலைகளிலும் முதல் குற்றவாளியாக மோடியைக் குறிப்பிட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதியரசர் அர்ஜித் பசாயத் தலைமையிலான அமர்வு இது குறித்து விசாரித்து “உரிய சட்ட நடவடிக்கைகளை” மேற்கொள்வதற்கென ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி) நியமித்தது. அதாவது குற்ற நடவடிக்கைச் சட்டம் 154 வது பிரிவின்படி ஸாகியாவின் மனுவைப் பரிசீலனை செய்து, “கைது செய்யப்பட வேண்டிய குற்றம்” (Cognizable Offence) என்றால், முதல் தகவல் அறிக்கை (FIR) ஒன்றைப் பதிவு செய்து விசாரணையைத் துவங்க வேண்டும் என்பது விதி. ஆனால் அடுத்த ஓராண்டு முழுவதும் சுமார் 163 சாட்சிகளை விரிவாக விசாரித்த ராகவனின் குழு எஃப்.ஐ.ஆர் எதையும் பதிவு செய்யவே இல்லை. ஒராண்டு காலம் நடைபெற்ற இந்த விசாரணைகளை வெறுமனே “முதற்கட்ட விசாரணை” எனப் பெயரிட்டு எஃப்.ஐ.ஆர் ஐப் பதிவு செய்வதைத் தவிர்த்தார் ராகவன்.
2. இந்த ‘முதற்கட்ட விசாரணை’ முடிந்த பின்னும் கூட எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதைத் தவிர்த்த ராகவனின் எஸ்.அய்.டி, 2010 மே 12 அன்று, மோடியைத் தவிர்த்துவிட்டு இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் கோர்தான் ஸடாபியா எனும் அமைச்சர் ஆகிய மூவர் மீது, குல்பர்க் சொசைடி படு கொலைகள் குறித்து மட்டும் “மேலும் விசாரணை” நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஸாகியாவின் புகார் மனு குல்பர்க் சொசைடி படுகொலைகள் மட்டுமின்றி அனைத்துப் படுகொலைகலையும் விசாரிக்க வேண்டும் எனக் கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இராகவன் குழு அதைக் கண்டு கொள்ளவில்லை. நீதியரசர் டி.கே ஜெயின் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அதற்கு அனுமதியும் அளித்தது. எனினும் மோடியும் இந்த விசாரணையில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் எனப் பின் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. இந்தப் பின்னணியில், எஃப்.ஐ.ஆர் எதுவும் பதிவு செய்யப்படாமலேயே தன் “விசாரணையை” முடித்த ராகவனின் எஸ்.ஐ.டி, சென்ற பிப் 08, 2012 அன்று தன் “இறுதி அறிக்கையை” சமர்ப்பித்தது. ஸாக்கியாவின் மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மோடி உள்ளிட்ட அனைவரும் “குற்றமற்றவர்கள்” என இதன் மூலம் சான்றளிக்கப்பட்டது.
3. மார்ச் 27, 2010 அன்று ஒரே ஒருமுறை மட்டுமே, அதாவது ராகவனின் ‘முதற்கட்ட விசாரணை’ யின் போது மட்டுமே மோடி விசாரிக்கப்பட்டார். மறுமுறை அவர் அழைக்கப்படவே இல்லை. எனவே குற்றச்செயல் குறித்துத் தகவல் அறிந்தவராகக் கருத்தப்படும் ஒருவரிடம் குற்ற நடவடிக்கைச் சட்டம் 161 வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டிய வாக்கு மூலம் பதிவு செய்யப்படவில்லை. மோடி “மறு விசாரணைக்கு” அழைக்கப்பட்டிருந்தால் CrPc 161 ன் நிபந்தனைகளுக்கு அவர் கட்டுப்பட்டிருக்க நேந்திருக்கும். அதாவது அனைத்துக் கேள்விகளுக்கும் அவர் “உண்மையாகப் பதில் சொல்ல” நேந்திருக்கும் (subject to the universally recognised right against self-incrimination). 161 பிரிவின் கீழ் வேறு பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னும் கூட மோடி மீண்டும் அழைக்கப்பட்டு அந்த வாக்குமூலங்களின் அடிப்படைகளில் விசாரிக்கப்படவே இல்லை.
4. மார்ச் 27, 2010 அன்று மோடி இரு அமர்வுகளில் 9 மணி நேரம் “விசாரிக்கப்பட்டர்”.. 71 கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஏ.கே. மல்கோத்ரா எனும் முன்னாள் சி.பி.அய் அதிகாரிதான் ‘விசாரணை’ செய்தார். மோடியின் கையொப்பத்துடன் கூடிய பதில்களை இணையத்தில் பார்க்கலாம் (உரிய சுட்டியை கட்டுரையில் காண்க). கேட்கப்பட்ட கேள்விகட்கு மோடி சொன்ன பதிலகளை எஸ்.ஐ.டி அப்படியே பதிவு செய்துள்ளது. எந்தக் குறுக்குக் கேள்வியும் கேட்கப்படவில்லை. மோடி சொன்னவை அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மோடியின் கூற்றில் உள்ள எந்த முரண்களும், எந்த இடைவெளிகளும் கேள்விக்குள்ளாக்கப்படவே இல்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் மோடி தரப்புச் சமாளிப்புகளைப் பதிவு செய்வதாக மட்டுமே ‘விசாரணை’ அமைந்துள்ளது. மற்றவர்களை விசாரிக்கும்போது இந்தப் போலீஸ்காரர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்.
5. ஒரு எடுத்துக்காட்டு: பிப் 27, 2002 மாலை கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதில் பலர் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து, அதை ஒரு “பயங்கரவாதச் செயல்” என மோடி பேசியது அடுத்த நாள் தொடங்கிய வன்முறைகளுக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது என்பது அவர் மீதான் ஒரு முக்கியக் குற்றச்சாட்டு. கோத்ரா ஒரு “அதிர்ச்சி அளிக்கக்கூடிய செயல் என்ற போதிலும் அது ஒரு முன் கூட்டித் திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் அல்ல” என கோத்ரா குறித்த விசாரணை ஆணையம் தெளிவாகக் கூறியுள்ளது. எனினும் எந்த விசாரணைக்கும் முன்னதாக சம்பவத்தன்றே அதை ஒரு “முன்கூட்டித் திட்டமிட்ட பயங்கரவாதச் செயல்” என மோடி கூறியுள்ளார். இரட்டைக் கோபுரங்கள் அமெரிக்காவில் தகர்க்கப்பட்டது, இந்தியப் பாராளும்ன்றம் தாக்கப்பட்டது ஆகியவற்றை ஒட்டி “முஸ்லிம் பயங்கரவாதச் சொல்லாடல்” ஒன்று கட்டமைக்கப்பட்டிருந்த சூழலில் மோடி இவ்வாறு கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது குறித்த கேள்வியை மல்ஹோத்ரா மோடிக்கு மிகச் சாதகமான முறையில் முன்வைக்கிறார். கேள்வியில் “பயங்கரவாதம்” என்கிற சொல் மிகக் கவனமாகத் தவிர்க்கப்படுகிறது. மாலையில் பேசிய அந்தப் பேச்சு குறித்ததாக அந்தக் கேள்வி அமையாமல் மதியம் சட்டமன்றத்தில் பேசியது குறித்த கேள்வியாக அது முன்வைக்கப்படுகிறது.
மல்ஹோத்ரா: கோத்ராவை முன்கூட்டித் திட்டமிடப்பட்டது எனவும், பாக் மற்றும் ஐ.எஸ்.ஐ அதற்குப் பின்னால் இருந்தது எனவும் நீங்கள் அறிவித்தீர்களா? அப்படியாயின் எந்த அடிப்படையில் அதைச் சொன்னீர்கள்?
மோடி: நான் சட்டமன்றத்தில் அப்படி எதுவும் சொல்லவில்லை. மீடியாவில் ஏதோ கேட்டார்கள். புலன் விசாரணை முடியுமுன் ஏதும் சொல்ல முடியாது என நான் சொன்னேன்.
அடுத்த கேள்வி என்னவாக இருந்திருக்க வேண்டும்? “விசாரணை முடியுமுன் ஏதும் சொல்ல இயலாது எனச் சொன்ன நீங்கள் அன்று மாலையே எப்படி அதை ஒரு திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் என்றீர்கள்?” என்றுதானே கேட்டிருக்க வேண்டும்? ஆனால் ‘விசாரணை’, இல்லை உரையாடல் இப்படித் தொடர்கிறது:
மல்ஹோத்ரா: கோத்ராவில் ஊடகத்துறையினரை நீங்கள் சந்தித்தீர்களா?
மோடி: கோத்ரா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான் இருந்தபோதூ ஏராளமான ஊடகத் துறையினர் வந்திருந்தனர். நான் அவர்களிடம் நிகழ்ந்தவற்றைச் சுருக்கமாகச் சொன்னேன். குற்றவாளிகள் தப்பிக்க இயலாது என்றேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலா 2 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்றேன். மாக்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டேன். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் மற்றும் காயம்பட்டவர்கள் சொன்ன உண்மைகளிலிருந்து நடந்த சம்பவம் தீவிரமான, முன்கூட்டியத் திட்டமிட்ட ஒன்று எனத் தோன்றுகிறது எனவும் அவர்களிடம் சொன்னேன்.
கவனியுங்கள். பிப் 27 அன்று வெளியிடப்பட்ட அதிகாரபூர்வமான பத்திக்கைச் செய்தியில் “நேரடி ஆய்வில் அது முன் கூட்டித் திட்டமிட்ட பயங்கரவாதச் செயல்” என மோடி கூறியதாக உள்ளது. (On the strength of his “spot assessment of the situation”, it quoted Modi as saying that the Godhra incident was a “preplanned inhuman collective violent act of terrorism”). ஆனால் அதை மோடி எப்படியெல்லாம் வளைத்து, திரித்துப் பசப்புகிறார் என்பதையும், அதை மல்ஹோத்ரா – ராகவன் குழுவினர் கண்டு கொள்ளாமல் புன்னகைத்து மகிழ்ந்து உட்கார்ந்திருந்தனர் என்பதையும் சற்று யோசித்துப் பாருங்கள். “ஆனால் அரசு அறிவிப்பில் நீங்கள் அதை ஒரு முன்கூட்டித் திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் என்றல்லவா இருக்கிறது? அதெப்படி ஒரு “ஸ்பாட் இன்வெஸ்டிகேஷனில்” அது ஒரு முன்கூட்டிய திட்டமிட்ட செயல் எனக் கண்டுபிடித்தீர்கள்? இது நீங்கள் அன்று மதியம் விசாரணை முடியுமுன் ஏதும் சொல்ல இயலாது எனச் சொன்னதிலிருந்து முரண்படுகிறதே” என்றெல்லாம் கேட்டிருக்க வேண்டாமா? உண்மையான விசாரணை என்றால் கேட்டிருப்பார்கள். ஆனால் இது கட்டித் தழுவுக் கொஞ்சி மகிழ்ந்த நாட்கமல்லவா?
6. இன்னொரு கேள்வியும் பதிலும்:
மல்ஹோத்ரா: குல்பர்க் சொசைடியில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய செய்தி உங்களுக்கு வந்த்ததா? அப்படியாயின் யார் மூலம் எப்போது வந்தது? அதை ஒட்டி என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
மோடி: எனக்கு நினைவுள்ளவரை (to the best of my knowledge) அன்று இரவு நடந்த சட்ட ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில்தான் மெகானி நகர் பகுதியில் உள்ள குல்பர்க் சொசைடியிலும்,
நரோடா பாடியாவிலும் நடந்த தாக்குதல்கள் பற்றி எனக்குச் சொல்லப்பட்டது.
ராகவனின் எஸ்.ஐ.டி அறிக்கையின்படி (பக்.256) மோடி சொல்லும் இந்த ஆய்வுக் கூட்டம் பிப் 28 இரவு 8.30 மணிக்கு நடந்துள்ளது. அதே ராகவனின் அறிக்கையில் (பக்.494), அகமதாபாத்தில், மிக அருகில் நடந்த, 69 பேர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட குல்பர்க் சொசைடி கொடூரம் நிகழ்ந்த நேரம் அன்று மதியம் 3.45 எனக் கூறப்பட்ட்டுள்ளது. சுமார் ஐந்து மணி நேரம் கழித்துத்தான் நிர்வாகத் திறமை மிக்க இந்த முதலமைச்சரின் அறிவுக்கு இப்படி 69 பேர்கள், அதில் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அடக்கம், படு கொலை செய்யபட்டது தெரியுமாம். குல்பர்க் சொசைடி முற்றுகையும் கொலைகளும் எட்டு மணிநேரம் நடந்தது. காவல்துறை கூடுதல் ஆணையர் எம்.கே. டான்டனுக்கு அது மாலை 4 மணிவாக்கில்தான் தெரிந்தது என்கிற கூற்று உண்மை என்றே கொண்டாலும், அதற்குப் பின் அய்ந்து மணி நேரம் அருகிலுள்ள முதலமைச்சர் மோடிக்கு இந்தத் தகவல் தெரியவில்லை என்றால் இதை என்ன சொல்வது? எப்படி நம்புவது?
தான் விரும்பிய ஒரு பெண்ணின் ஒவ்வொரு நிமிட அசைவையும் கண்காணிக்க முடிந்த மோடிக்கும் அவரது போலீசுக்கும் 69 பேர் எட்டு மணி நேரம் முற்றுகை இடப்பட்டுக் கொல்லப்பட்டது தெரிந்திருக்கவில்லை, சொல்லப்படவில்லை என்பதை நாம் நம்பித்தான் ஆக வேண்டுமா?
சரி, அதையும் நாம் நம்பித் தொலைப்பதாகவே வைத்துக் கொள்வோம். எட்டு மணி நேரம் முதலமைச்சருக்கு, இப்படியான ஒரு சம்பவத்தை, இப்படியான ஒரு சூழலில், தகவல் தெரிவிக்காதது ஒரு மாபெரும் குற்றம். இந்தக் குற்றம் நடந்தது பிப் 28, 2002ல். மோடி விசாரணைக்கு வந்தது மார்ச் 27, 2010ல். இடையில். எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. “மோடி, இந்தக் குற்றத்திற்காக நீர் எத்தனை போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தீர்?” என்கிற கேள்வியை ராகவன் குழுவினர் கேட்டிருக்க வேண்டாமா?
ஏன் கேட்கவில்லை?
வாயில் கொழுக்கட்டையா இருந்தது?
(தொடரும்.- அடுத்த சில நாட்கள் வேலை உள்ளது. இந்தக் கட்டுரையின் அடுத்த சில பத்திகளை அக்கறை உள்ள நண்பர்கள் யாராவது மொழி பெயர்த்து அல்லது நான் செய்துள்ளது போல அதைத் தழுவிய கட்டுரையாக்கி வெளியிட முயற்சியுங்களேன்)
https://www.facebook.com/notes/612451195494275/