அம்பேத்கர் இராமன் பற்றி..
அண்ணன் தங்கை உறவுடைய இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டதும் ஆரிய திருமண வழக்கத்திற்கு மாறானதுமல்ல. (ஆரியர்களிடையே அண்ணன் தங்கையை மணந்து கொள்ளும் வழக்கமிருந்தது). ஆயின் இந்தக் கதை உண்மையானால் இராமன், சீதை திருமணம் பிறர் பின்பற்றுவதற்கு தக்கது அல்ல எனலாம்.
இராமன் ஏக பத்தினி விரதன் என்பது ஒரு சிறப்பாக கூறப்படுகின்றது, இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாகவே உள்ளது, வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்...
இராவணனை நல்லடக்கம் செய்த பின் இராமன் செய்திருக்க வேண்டிய முதற் காரியம் ஓடோடிச் சென்று தன் மனைவி சீதையை சந்தித்திருக்க வேண்டும், அவன் அப்படிச் செய்யவில்லை,
சீதையை சந்திப்பதைக் காட்டிலும் விபீஷணனை அரியணையிலேற்றுவதிலேயே அவன் அதிக ஆர்வம் காட்டுகிறான். விபீஷணனை ஆட்சியிலமர்த்திய பிறகும் கூட சீதையைக் காண அவனே போகவில்லை. அனுமானைத்தான் அனுப்புகிறான்.
அனுமன் மூலம் அவன் அனுப்பும் சேதிகள் தான் என்ன?
சீதையை அழைத்து வா என்று அனுமனிடம் சொல்லவில்லை. தாமும் தம் தோழர்களும் சகல நலத்தோடிருப்பதாக சீதைக்கு சொல் என்றுதான் சேதி அனுப்புகிறான். இராமனை சந்திக்க வேண்டுமென்ற பேராவலை சீதைதான் அனுமன் மூலம் சொல்லியனுப்புகிறாள். தன்னுடைய சொந்த மனைவி சீதை. இராவணன் அவளைக் கடத்திக் கொண்டு போய் சிறைப்படுத்தி பத்து மாதங்களுக்கு மேலாகிறது. இருந்தும் தனிமையிலிருந்த சீதையைக் காண இராமன் போகவில்லை..
சீதையை இராமன் முன் கொண்டு வருகிறார்கள்.
அவளைப் பார்த்த போதாவது இராமன் சொன்னதென்ன?.
மனித மனம் படைத்த பாமர மனிதன் கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டி ருப்பானா என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாய்த் தோன்றுகிறது. இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமன் நடத்திய முறைமைக்கு வால்மீகி நேரடியாக ஏதும் ஆதாரம் அளிக்கவில்லை எனினும் அடியிற் காணும் பகுதியில் இராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான்..
(யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23) உன்னை சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள் ளேன். என் எதிரியை வீழ்த்தி என் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந் தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.
இராமன் சீதையிடம் இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்திருக்க முடியும்?
இராமன் அதோடு நிற்கவில்லை, சீதையை நோக்கி மேலும் கூறுகிறான், உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது.
ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை.
போரிட்டு உன்னை மீண்டும் மீட்டு வந்தேன்.
என்னுடைய நோக்கம் அவ்வளவே!
உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே.
தான் கவர்ந்து சென்ற சீதையை இராவணன் களங்கப்படுத்தியிருப்பான் என்ற எண்ணத்தை, சிறைப்பட்டிருந்த வேளையில் தன்னை சந்திக்க வந்த அனுமன் மூலம் சொல்லியனுப்பி, அதன் அடிப்படையில் சீதையைக் கை கழுவி விடுகிறேன் என்று இராமன் புலப்படுத்தி இருந்தால் இவ்வளவு சிரமத்திற்கு இடமிருந்திருக்காது, நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே என்று சீதை வெளிப்படையாக சொல்கிறாள். இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே.
-புரட்சியாளர் அம்பேத்கர்..
(இராமன் கிருஷ்ணன் ஒரு புதிர் நூல்.)
No comments:
Post a Comment