Friday, September 23, 2022

பயிற்சிபெற்ற தொழில்முறை ஓட்டுனராக இருந்தாலும்

RS பிரபு

ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் வரும் வழியில் நேற்று நம் வாகனத்துக்கு 30 மீட்டர் முன்பு சென்று கொண்டிருந்த மினிலாரியின் வலதுபுற டயர் வெடித்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் செல்லத் தொடங்கியது. 60 கி.மீ வேகத்தில் சீராகச்சென்ற  வண்டியை ஓட்டுனர் மிகவும் திறமையாக கையாண்டு கிட்டத்தட்ட நிறுத்திய பின்பும் அதன் தொடர் உந்தம் காரணமாக மெதுவாக கவிழ்ந்து விழுந்தது. 

அந்த ஓட்டுனருக்கு என்ன ஆனதோ என்ற பதைபதைப்பில் ஓடிச்சென்று பார்ப்பதற்குள் அவராகவே மேலே ஏறி வந்தார். எந்த காயமும் இல்லாமல் வெளியே வந்தாலும் மரணபயமும், பதட்டமும் அவரிடம் இருந்தது. குடிக்க தண்ணீர் கொடுத்து சமாதானப்படுத்தியபின் அவர் சொன்ன முதல் வாக்கியம். "நாலு நடையா இந்த ரீபில்ட்டு டயர போட்டுட்டு, கம்பெனி டயர் மாட்டச்சொல்லி அந்த தாயோலிகிட்ட சொன்னேன். கேக்க மாட்டேனுட்டான்".  

டயர் வெடித்து விபத்துக்குள்ளாகும் வாகனங்களை ஆராய்ந்தால் கண்டிப்பாக அது பாடாவதி டயராகத்தான் இருக்கும். ஒருவேளை எதிரில் ஒரு பேருந்து வந்திருந்தால் அது மிகப்பெரிய விபத்தாக இருந்திருக்கும். அங்கிருக்கும் புளியமரத்தில் மோதியிருந்தாலும் ஓட்டுனர் கடுமையாக காயமுற்றிருப்பார். 

தனியார் நிர்வாகம், efficiency, திறமை, உழைப்பு, முதலாளித்துவம், லாபம், சுரண்டல், வர்க்க சிக்கல்கள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் "நீ கம்யூனிஸ்ட்டா?" என்று அறிவாளித்தனமாக கேட்டு வைப்பார்கள். 

*அதனால் சொல்லவந்ததை சொல்லிவிடுகிறேன்:*

1) நீங்கள் எவ்வளவுதான் பயிற்சிபெற்ற தொழில்முறை ஓட்டுனராக இருந்தாலும், சாலையில் கண்டிப்பாக கவனம் தேவை. 

2) கண்டிப்பாக சீட் பெல்ட் அணியுங்கள். பலத்த காயமென்றாலும் உயிர்பிழைக்க நிறைய வாய்ப்பை அது தரும். பல அனுபவஸ்தர்கள் சொன்ன உண்மை இது.

3) வேகத்தை கட்டுபாட்டுக்குள் வையுங்கள். 80 கி.மீ. மேல் செல்லுமளவுக்கு நமது நெடுஞ்சாலைகளும் தரமானது அல்ல என்பதே உண்மை.

4) வாகனத்தை நல்ல பணிமனையில் விட்டு முறையாக பராமரியுங்கள். வாகன அலங்கார செலவுகளில் சிக்கனம் செய்யலாமே தவிர, Core maintenance என்பதில் compromise செய்யவேண்டாம்.  

5) நல்ல ஓட்டுனரின் முதல் ப்ரேக் என்பது ஆக்சிலரேட்டர்தான். சரியான கணிப்பு பயணத்தை இனிமையாக்குவதோடு எரிபொருளையும் மிச்சபடுத்தும். 

6) நீங்கள் மாதம் 3000 கிலோமீட்டருக்கு குறைவாக வாகனம் ஒட்டுபவரெனில் இரவு 10 முதல் காலை 6 வரை வாகனம் ஓட்டுவதை தவிருங்கள். பேருந்து/ரயில் பயணம் சிறப்பு. வாடகைக்கு எடுத்தாலும் கவனம் தேவை. 

7) குடித்துவிட்டு ஓட்டுவது எவ்வளவு ஆபத்தானதோ அதே அளவுக்கு அக்கம்பத்தில் உள்ள நண்டுசிண்டுகளை தற்காலிக ஓட்டுனராக அமர்த்துவதும் ஆபத்தானது.

8)  எல்லாவற்றுக்கும் மேலாக, சாலை உங்கள் திறமையை காட்டும் இடமன்று. உங்கள் குடும்பம் உங்களை எதிர்பார்ப்பதைப்போல, சாலையில் செல்லும் அனைவருக்கும் கடமைகள் இருக்கிறது. 

No comments:

Post a Comment