கார்ல மார்க்ஸ் கணபதி
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி இரண்டாண்டுகள் நிறைவடைகிறது. நான்கூட இந்த சண்டை உடனே முடிவுக்கு வந்துவிடும் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஏகாதிபத்தியங்களின் முடிவிலிப் போராக இது நீடிக்கிறது. மேற்கத்திய நாடுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அஜெண்டாக்கள் இருக்கின்றன. இந்தப் பக்கம் ரஷ்யாவின் ஆதரவு அணியும் பலம் பொருந்தியதாக இருக்கிறது.
வழக்கமானப் போர்களில் இருந்து இன்றைய நவீன யுத்தங்கள் முழுக்கவும் வேறு பரிமாணம் கொண்டிருக்கின்றன. தேசப்பற்று என்பதே போர்களுக்கான அடிப்படை. ஆனால் அது மறு வரையறை செய்யப்பட்டிருக்கிறது. யுத்தங்கள், ஒப்பந்த அடிப்படையில் நிறுவனங்கள் ஈடுபடும் தொழிலாக மாறியிருக்கிறது. இதைப்பற்றி போதுமான விவாதங்கள் நமது சூழலில் ஏற்படவில்லை.
ரஷ்யா - உக்ரைன் போரில், போர் வீரர்களுக்கு உதவி செய்யும் பணியாட்களாக உக்ரைனில் சில இந்தியர்கள் வேலை செய்கிறார்கள் எனும் செய்தி கடந்த சில மாதங்களாக கசிந்து கொண்டிருந்தது. உறுதியான தகவல் இல்லை, அல்லது என் பார்வையில் அது படவில்லை. ஆனால், ரஷ்யாவும் சில ஏஜெண்டுகளின் வழியாக, நூற்றுக்கணக்கான இந்தியப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறது எனும் கட்டுரைகள் மேற்கத்திய ஊடகங்களில் வந்தன. இப்போது அந்த செய்திகள் இந்திய மீடியாக்களிலும் வருகின்றன.
திடீரென்று என்ன கரிசனம்?
உதவியாளர் வேலைக்கு என்று அழைத்து செல்லப்பட்ட இந்தியர்கள், சில நாட்கள் போர்ப் பயிற்சியளிக்கப்பட்ட பிறகு கட்டாயமாக யுத்தக்களத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு அனுப்பப்பட்ட ஒரு இருபத்து மூன்று வயது இந்தியர் போரில் கொல்லப்பட்டிருக்கிறார். மற்றவர்கள் எப்படியாவது எங்களை மீட்டுவிடுங்கள் என்று கண்ணீருடன் ஒளித்துணுக்குகளை அனுப்புகிறார்கள்.
"இந்தியத் தூதரகத்தைப் பலமுறை அணுகினோம் எங்களுக்கு சரியான பதில் இல்லை" என்கிறார்கள் போர் முனையில் மாட்டிக்கொண்டிருக்கும் இந்தியர்கள். "எத்தனை பேர் அங்கு இருக்கிறார்கள் என்கிற சரியான தகவல் எங்களிடம் இல்லை" என்கிறது ரஷ்யாவில் இருக்கும் இந்தியத் தூதரகம். ரஷ்யத் தளபதிகளிடம் சென்று, "நாங்கள் வந்தது உதவியாளர் வேலைக்கு, போரில் ஈடுபடுவதற்கு அல்ல" என்று முறையிடுகையில், "நீங்கள் கையெழுத்திட்ட உங்களது ஒப்பந்தத்தைப் படித்துப் பாருங்கள்" என்று அவர்கள் நீட்டும் காகிதத்தில் தலை சுற்றும் வாக்கியங்கள் இருக்கின்றன. என்னால் அத்தகைய ஒப்பந்தங்கள் எப்படி வடிவமைக்கப்படும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. "எந்த வேலை கொடுத்தாலும் செய்யவேண்டும்" என்று ஒரு வரி ஜோடனையான மொழியில் இருக்கும். "இந்தா இதுதான் உன் வேலை" என்று கையில் துப்பாக்கியைக் கொடுத்தால் போர்முனைக்கு செல்லத்தான் வேண்டும், சாகத்தான் வேண்டும். முறையிடுவதற்கு அங்கு யாரிடம் போவது?
ஒப்பந்தப் போராளிகள் என்பது அமெரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள் மீது நடத்திய ஆக்கிரமிப்புப் போர்களின் போது வெளிச்சத்துக்கு வந்து இப்போது அது ஏகாதிபத்தியங்களின் வழக்கமான நடைமுறையாகிப் போயிருக்கிறது. ஈராக் யுத்தத்தின் போது இதை முழு வீச்சில் பயன்படுத்திய அமெரிக்கா, போர் என்பதை ஒப்பந்தக்காரர்கள் அரசின் முகவர்களாக நின்று ஈடுபடும் தொழில் என்று ஆக்கிவிட்டது. மேற்பார்வையும், ஆயுத விநியோகமும், அரசியல் கருத்துருவாக்கமுமே அரசின் வேலை என்று ஆகியிருக்கிறது.
ராணுவ வீரர்களில், நிரந்தர வீரர்கள், ஒப்பந்த வீரர்கள் என்கிற இரண்டு வர்க்கங்கள் வந்திருக்கின்றன. ஓய்வூதியம், நீண்ட கால மருத்துவ உதவி, குடும்பப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, போருக்குப் பின்பான உளவியல் சிகிச்சைகள் போன்ற தார்மீக ரீதியான கடமைகளில் இருந்து அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகிறது.
ஆயுதம் உற்பத்தி செய்ய கார்ப்பரேட்டுகள், அதை விநியோகிக்க ஆயுதத் தரகர்கள், அவர்களது வாடிக்கையாளர்களாக மாறியிருக்கும் ஸ்திரத்தன்மை அற்ற அரசுகள் மற்றும் போராளிக் குழுக்கள், போரிட வீரர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் நிறுவனங்கள் என போரின் தன்மை நம்மால் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு விரிந்திருக்கிறது.
போருக்கு ஆதரவான கருத்துருவாக்கம், எதிரான கருத்துருவாக்கம் இரண்டுக்கும் பில்லியன் கணக்கில் டாலர்கள் செலவிடப்படுகின்றன. சமூக ஊடகங்கள் லாபியிஸ்ட்டுகளின் வேலையை எளிதாக்குகின்றன. ஜனநாயக, சுதந்திர, அறம்சார் ஊடகங்கள் முடக்கப்படுகின்றன அல்லது அவையாகவே ஆவியாகிவிடுகின்றன. வெள்ளமாகப் பாயும் பணத்தின் முன்னால் அவற்றால் நிலைக்க முடிவதில்லை. நாம் எவ்வளவு நேரம் சமூக ஊடகங்களில் இருக்கிறோமோ அதற்கு ஏற்றாற்போல் நாம் மூளைச்சலவை செய்யப்படும் நேரம் கூடுகிறது.
இந்த ரஷ்யா-உக்ரைன் போரிலும், ரஷ்யா ஒப்பந்த அடிப்படையிலான வீரர்களைப் பயன்படுத்துவது வெளிச்சத்துக்கு வந்தது. போர் முனையில் இருந்த ஒப்பந்த வீரர்களின் தலைவருக்கும் (Yevgeny Prigozhin), ரஷ்ய அதிபர் புதினுக்கும் பூசல் வந்தது. அவர் படைகளைத் திருப்பிக் கொண்டு ரஷ்யத் தலைநகரை நோக்கி வரத் தொடங்கினார். ரஷ்யாவின் சுதேசிப் படைகளுக்கும், ரஷ்யாவின் ஒப்பந்தப் படைகளுக்குமான போராக மாறும் சாத்தியங்களை அது கொண்டிருந்தது. பிறகு ஒரு மூன்றாம் நாட்டின் தலையீட்டில் இரண்டு தரப்புக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்து அவர் துருப்புகளைத் திருப்பிக்கொண்டு மீண்டும் போர்முனைக்குப் போனார்.
அடுத்த சில மாதங்களில் Yevgeny Prigozhin ஐ ஏற்றிக்கொண்டு பறந்து சென்ற ஹெலிகாப்டர் நடு வானில் வெடித்துச் சிதறியது. அவரைக் கொன்றது ரஷ்யாதான் என்பது ஒன்றும் புரியாத ரகசியம் இல்லை. அவர் துருப்புகளைத் திருப்பிக்கொண்டு, கிரெம்ளின் நோக்கி வரும்போதே, அவரது தேதி குறிக்கப்பட்டுவிட்டது என்று நினைத்தேன். ரஷ்யாவின் சுபாவம் குறித்து நம் ஊர் கம்யூனிஸ்ட்களுக்கு இருப்பது போன்ற மயக்கம் எதுவும் எனக்கில்லை. ரஷ்யா-உக்ரைன் போரையொட்டி, அமெரிக்காகவுக்கும் ரஷ்யாவுக்கும் இருக்கும் ஆறு வித்தியாசங்களை யாராவது பட்டியலிட்டால், அது இந்தியாவில் வரப்போகிற புரட்சியை விட சுவாரஸ்யமாக இருக்கும்.
இப்போது நாம் போர் முனைகளில் மாட்டிக்கொண்டிருக்கும் இந்தியர்களைப் பற்றி இவ்வளவு விரிவாக ஏன் எழுதுகிறேன் என்கிற இடத்துக்கு வருகிறேன். அதாவது இரண்டாண்டுகளுக்கு முன்பு, அக்னீபாத் வீரர்கள் என்று இந்த வலதுசாரி அரசாங்கம் பீற்றிக்கொண்ட முன்னெடுப்பு பற்றி, மேற்கண்ட பின்புலத்தில் அதை ஆராய்வதே என் நோக்கம்.
அமெரிக்காவும், ரஷ்யாவும் மற்ற பிற நாடுகளும் நடைமுறைப்படுத்தியிருக்கிற ஒப்பந்த வீரர்களின் இந்திய வடிவமே அக்னீபாத் வீரர்கள். அதன் விபரீத பின்விளைவுகள் என்னவாக இருக்கக் கூடும் என்று யோசித்தாலே அச்சமாக இருக்கிறது. நான் கொஞ்சம் மிகைப்படுத்துகிறோனோ, என்று கூட எனக்குத் தயக்கமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த அச்சத்தை நான் பகிர்ந்துகொள்கிறேன்.
இரண்டு வருட காலம் நமது ராணுவத்தால் பயிற்சியளிக்கப்பட்டு, பிறகு விடுவிக்கப்படும் அக்னீபாத் வீரர்கள், (அதாவது நமது ராணுவத்தால் எடுத்துக்கொள்ளப்படும் சொற்ப வீரர்களைத் தவிர மீதமுள்ள வீரர்கள்) எங்கு போவார்கள்? சந்தையில், அவர்களை எடுத்துக் கொள்வதற்கு இதைப் போன்ற ஒப்பந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டும்தானே? அதைத் தடுக்கும் வழிமுறைகள் எதுவும் அவர்களுக்குப் பயிற்சியளிக்கும்போதே உறுதி செய்யப்படுகிறதா? அல்லது அவர்கள் நமது ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று இருக்கிறதா? அப்படித்தான் இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.
Russian Contract soldiers or american contract soldiers and disputes என்று கூகூகிள் தட்டித் தேடிப்பாருங்கள். நான் சொல்வதன் வீர்யம் புரியும். அவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுக்கப்படும் வீரர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக போராடுவதெல்லாம் நடக்கிறது. அவர்களது ஒழுங்கு, தார்மீகம், அத்துமீறல்களை பொறுப்பு கூற வைப்பது போன்றவை எல்லாம் பிறகு.
ஏன் இத்தனை இந்திய இளைஞர்கள் உயிரைப் பணயம் வைத்து இத்தகைய வேலைக்குப் போகிறார்கள்? யுத்த முனையில் வேலையாள் பணி என்றாலும் கூட அது உயிருக்கு ஆபத்தான பணிதானே? இருந்தாலும் ஏன் போகிறார்கள்? இது மட்டுமல்ல, சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குக் குடியேற முயல்பவர்கள், கனடாவுக்குச் செல்பவர்கள் என்று இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கின்றது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? அப்படியானால் இந்த வலதுசாரி அரசு சொல்லும் வளர்ச்சி, முன்னேற்றம் போன்ற குறியீட்டு எண்களுக்கு என்னதான் பொருள் என்று ஆயாசமாக இருக்கிறது.
இந்த விஷயத்தில் நான், நமது பொருளியல் அறிவு ஜீவிகள் சொல்வதை ஏற்கிறேன். இந்த அரசு நம்பர்களுடன் விளையாடி நமது சமூக, பொருளாதார யதார்த்தத்தை மறைக்கிறது. பணம் இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்குமான வேறுபாடு நமது கற்பனைக்கு எட்டாத வகையில் அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதே நிஜம். இதை வெறும் மதத்திற்குள் வைத்து பொதிந்து விட முடியாது. நீண்ட, ஆழமான, பொறுப்பான அரசியல் விவாதங்கள் தேவை.
No comments:
Post a Comment