Saturday, March 30, 2024

கொங்கு வெள்ளாள கவுண்டர்களும் இடஒதுக்கீடும்

A. Sivakumar

கொங்கு வெள்ளாள கவுண்டர்களும் இடஒதுக்கீடும்

♦ காகா கலேல்கர் கமிசன்

மத்திய அரசின் இந்த கமிசனின் அளவுகோளின்படி, "பொதுக்கல்வி அறிவு இல்லாத பெரும்பான்மை மக்களை கொண்ட, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்முறை கல்லூரிகளில் இடம்பெறாத, அரசுத்துறையில் போதிய பிரதிநிதித்துவமில்லாத, பெருமான்மையாகவே விவசாயம் செய்பவர்களாகவோ, நிலமற்ற  விவசாய தொழிலாளர்களாகவோ, உடல் உழைப்பை நம்பிய ஆணும் பெண்ணும் நிறைந்திருக்கும் தாழ்த்தப்பட்டவர் அல்லாத சாதியினரே பிற்படுத்தப்பட்டவர்கள்."

இந்த அளவுகோளின்படி இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்ற சாதிகளின் மொத்த எண்ணிக்கை - 2399.

அதே சமயத்தில், இந்த கமிஷனின் அளவுகோலில் அப்படியே பொருந்தக்கூடிய கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் 1954லேயே பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இடம்பெறவில்லை.

♦ சட்டநாதன் கமிசன்

1969ல் அமைந்த இந்த கமிசன் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கும் சாதியினர் கல்வி & வேலை வாய்ப்பில் எந்தளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளனர் என்று கண்டறிய அமைக்கப்பட்ட கமிசன். எந்த சமூகத்தை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்று பரிந்துரைக்கும் அதிகாரம் இக்கமிசனுக்கு இல்லை. ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் கொங்கு வெள்ளாள கவுண்டர்களை இணைக்க கூடாது என்று கூறியுள்ளது.

இதே சட்டநாதன் கமிசன் தன் அறிக்கையில் கொங்கு மண்டலத்தில் 8 தாலுகாக்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதையும், அங்குள்ள மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் கூறியுள்ளது. கொங்கு மண்டலத்தின் பெரும்பான்மை மக்கள் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தான் என்பது நாம் யாருக்கும் தனியாக சொல்ல வேண்டியதில்லை.

♦ கொங்கு வெள்ளாள கவுண்டர்களை ஏன் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும்?

1951ல் நாமக்கல் நகரத்திலிருந்து நான்கே நான்கு தொலைவிலிருந்த சேம்பரை புதூர் கிராமத்தில் வாசித்த 93 குடும்பங்களில் 90 குடும்பங்கள் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள். இந்த 90 குடும்பத்தாரும் எழுத படிக்க தெரியாதவர்களே!

ஒரு கிராமத்திலிருக்கும் 96 சதவிகித பெரும்பான்மையினரான  கொங்கு வெள்ளாள கவுண்டர்களில்  ஒருவர் கூட கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை, அதுவும் 1951ல். அப்படியானால் இதை அப்படியே ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்துக்கும் அப்படியே கூட பொறுத்த வேண்டாம்...இதில் பாதி பொருத்தி பார்த்தல் கூட போதும், இவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் தான் இணைக்கப்பட  வேண்டும் என்று எளிதில் புரியும்.

1947ல் பெற்ற சுதந்திரத்துக்கு பின் அடுத்த 27 ஆண்டுகளில் அரசின் எந்த ஒரு முதல் நிலை பதவிக்கும் ஒரே ஒரு கொங்கு வெள்ளாள கவுண்டர் கூட தேர்வாகவில்லை. 1974 வரை அரசு உயர் பதவிகளில், ஏன் அரசு அலுவலகங்களில் கூட கொங்கு வெள்ளாள கவுண்டர்களை காண்பது அரிது என்பது தான் யதார்த்த நிலை. 

1947 ஆண்டிலிருந்து 1974 வரை காவல்துறையிலும் வணிகவரித்துறையிலும் துறைக்கு ஒன்றாக மொத்தமே இருவர் தான் கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியிலிருந்து Group 1 தேர்வில் வெற்றிப்பெற்று வேலையிலிருந்தனர்.

கொங்கு வெள்ளாள கவுண்டரான திரு.சுப்பராயன் முதல் அமைச்சராக இருந்த 1929ல் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தேர்வாணைய குழுவில் கொங்கு வெள்ளாள கவுண்டர் பிரிவை சேர்ந்த ஒருவர் கூட 1973 வரை இடம்பெற்றதில்லை.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு தேர்வாணைய குழு உறுப்பினராக  இடம்பெறும் முதல் கொங்கு வெள்ளாள கவுண்டராக  பேராசிரியர் திரு.அ.பழனிச்சாமி அவர்களை 26.6.1974 அன்று நியமித்தார் தலைவர் கலைஞர்.

இந்த நிலையை உணர்ந்த கொங்குப்பகுதி மாணவர்கள், சங்கத்தினர், அரசு ஊழியர்கள் எல்லாம் இணைந்து 1972 ஆம் ஆண்டு தொடங்கி கொங்கு வெள்ளாள கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். 

1975ல் 20 சட்டமன்ற உறுப்பினர்கள், 1 சட்டமன்ற மேலவை உறுப்பினர், 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 23 பேர் இக்கோரிக்கையை அரசிடம் கொண்டு சேர்க்கின்றனர். 

♦ இந்த 20 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் இஸ்லாமியர் என்பது இங்கே  குறிப்பிடத்தக்கது. அவர் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் ஜப்பார்.

ஊர் கூடி தேரிழுத்த இந்த தொடர் முயற்சியால் 11-4-1975 நாள் கொங்கு வெள்ளாள கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கும் அறிவிப்பை வெளியிட்டார் அந்நாள் முதல்வர் தலைவர் கலைஞர்.

1975 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி இந்த அறிவிப்பினை செய்தமைக்காக கொங்கு மாணவர்கள், கொங்கு வேளாள நற்பணி மன்ற நண்பர்கள் உள்ளிட்ட கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் இணைந்து தலைவர் கலைஞருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தனர். 

விழாவில் கலைஞருக்கு கொங்கு வெள்ளாளர் சமூக மக்களின் படைக்கலனாக விளங்கும் வெள்ளியிலான ஏர்கலப்பை பரிசாக அளிக்கப்பட்டது. 

♦பிறப்பால் கொங்கு வெள்ளாள கவுண்டர்களான டாக்டர் சுப்பராயன் சாதிக்காததை, சி.சுப்பிரமணியம் சாதிக்காததை, எந்நாளும் செய்ய முடியாததை முதல்வர் கலைஞர் அவர்கள் செய்திருக்கிறார்.
- திரு. சர்க்கரை மன்றாடியார், முன்னாள் அமைச்சர்

♦கொங்கு வெள்ளாள கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற பல ஆண்டு கால போராட்டம் முதல்வர் கலைஞர் கையால் முடிவுக்கு வந்திருக்கிறது. சந்தனத்திலே மணம் இருக்கின்ற வரை கொங்கு வெள்ளாள சமுதாயம் முதல்வர் கலைஞரை மறவாது.
- திரு. கே.என்.குமாரசாமி, சட்டமன்ற உறுப்பினர்

♦நான் வாக்களித்தபடி உங்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறேன்.

கொங்கு வெள்ளாள கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்ததால், அவர்கள் பின் தங்கியவர்கள் ஆக்கிவிட்டார்கள் என்று சிலர் பேசுவதாக சொன்னார்கள். பின்வாங்குவதென்பது முன்னேறத்தான். ஊஞ்சலில் கூட முன்னுக்குப் போக பின்னுக்குச் சென்றால் தான் முடியும். பந்தை உதைப்பதனாலும் காலைப் பின்வாங்கி உதைத்தால் தான் பந்தை உதைத்து முன்னே செலுத்த முடியும். 

அக்கல்வி வேலைவாய்ப்பில் சமுதாயத்தில் பின்தங்கியோர் முன்னேற்றம் காண பொருளாதார உதவிகள் மட்டும் போதாது, அவர்களுக்கு சமுதாய அடிப்படையிலான உரிமைகளை வழங்க வேண்டும். அதுவே முன்னேற்றத்துக்கான திறவுகோல்.

ஆகவே இப்போது உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது சலுகை அல்ல என்றுணர்ந்து உரிமை என்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன். சலுகை என்று சொன்னால் அதில் உரிமைக்கு உத்திரவாதம் இருக்காது. உரிமை என்று சொன்னால் அதில் எப்போதும் சலுகைக்கு உத்திரவாதம் உண்டு.
- முதல்வர் கலைஞர்

வெள்ளாளக் கவுண்டர், நாட்டுக் கவுண்டர், திருமுடி வெள்ளாளர், தொண்டு வெள்ளாளர், பால கவுண்டர், பூசாரி கவுண்டர், அனுப்ப வேளாளக் கவுண்டர், குறும்ப கவுண்டர், நரம்புக்கட்டி கவுண்டர், படத்தலை கவுண்டர், செந்தலை கவுண்டர், பவளம்கட்டி வெள்ளாள கவுண்டர், பால வெள்ளாள கவுண்டர், சங்கு வெள்ளாள கவுண்டர், ரத்ன கவுண்டர் என்று மொத்தம் 15 உட்பிரிவுகளை உள்ளடக்கிய கொங்கு வெள்ளாள கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கும் அரசாணை 16-5-1975ல் வெளியானது. 

1992 முதல் மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் (OBC) பட்டியலில் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் இணையவும் 1975ல் வெளியான பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியல் சேர்க்கை  காரணமாகியது.

சரி...இப்படியெல்லாம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ந்ததால் என்ன ஆனது?

இதற்கான பதிலையும் அவர்களே சொல்லியிருக்கிறார்கள்,

1) திரு.E.R.ஈஸ்வரன், பொது ச் செயலாளர், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி

நமது சமுதாயம் BC ஆனதால் தான் நான் பொறியியல் கல்வி படித்து பட்டதாரி ஆக முடிந்தது. இல்லையேல் நான் B.E படித்திருக்க முடியாது.

2) திரு.Dr.சித்தரஞ்சன், ஊத்தங்கரை 

விவசாயக் குடும்பத்தில் பிறந்து முதல் தலைமுறைக் கல்லூரி மாணவனாக அரசு மருத்துவக்கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு சேர்ந்தேன். நமது சமுதாயம் BC ஆக்கப்படாமல் போயிருந்தால் என்னால் மருத்துவம் படிக்க முடியாமல் போயிருக்கும்.

இது கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் கடந்தக் கால சரித்திரம்.

இப்போ நிகழ்காலத்துக்கு வருவோம். . .

சுதந்திரம் பெற்ற 1947ல் இருந்து மத்திய தேர்வாணையக் குழுவில் இதுவரை கொங்கு வெள்ளாள கவுண்டர் பிரிவை சேர்ந்த  ஒருவர் கூட இடம்பெறவில்லை.

மத்தியரசின் IAS, IPS, IRS, IFS பதவி நியமனங்களை செய்வது இந்த மத்திய தேர்வாணையக் குழு தான்.

1947ல் இருந்து 1992 வரை, அதாவது மண்டல் கமிசனின் OBC நடைமுறைகள் மத்திய அரசால் ஏற்கப்படும் வரை கொங்கு வெள்ளாள கவுண்டர் பிரிவை சேர்ந்த ஒரே ஒருவர் தான் IAS அதிகாரியாக இருந்துள்ளார்.

மருத்துவம் சார்ந்த UG, PG & Dental படிப்புகளில் 40,842 இடங்கள் ஒட்டுமொத்தமாக மத்திய அரசால் OBC மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு தவறான வழியில் முன்னேறிய சமுதாயத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது.

தமிழ்நாடு அளவில் என்று எடுத்துக் கொண்டால் கூட, அகில இந்திய ஒதுக்கீட்டில் மட்டும் 11,027 இடங்கள் மருத்துவம் சார்ந்த UG, PG & Dental படிப்புகளில் பறிக்கப்பட்டுவிட்டது.

இதை எல்லாம் களைந்து, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க என்ன செய்ய வேண்டும் என்று காராள வம்சம் தான் முடிவு செய்ய வேண்டும்.

#OBCReservation
#கொங்குநாடு

https://www.facebook.com/share/p/AZhtv8Pq8a3Fxqim/?mibextid=oFDknk

No comments:

Post a Comment