Tuesday, December 24, 2019

பெரியாரின் தேசிய இன விடுதலைப் பார்வை

ஆழி செந்தில்நாதன் 
2019-12-24


பெரியாரை நினைவேந்தும் நேரத்தில் நீங்கள் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை,

பெரியாரின் தேசிய இன விடுதலைப் பார்வை   

ஆழி செந்தில்நாதன்

நாம் பெரியார் என்று பேசும்போது பெரும்பாலும் அவரது சமூக நீதி, பகுத்தறிவு, பார்ப்பனீய எதிர்ப்பு, பெண்விடுதலை போன்ற கருத்துகள் பற்றித்தான் அதிகம் பேசுகிறோம். அவரது வாழ்க்கையின் சேதி சமூக நீதிதான். சமூக நீதியை வென்றெடுக்கும்பொருட்டே அவர் சாதியை ஒழிக்கவேண்டும் என்றும் மதங்களை சாய்க்கவேண்டும் என்றும் கடவுள் என்கிற மாயையை நீக்கவேண்டும் என்றும் பேசியும் போராடியும் வந்தார்.

இந்தச் சமூகநீதிக்கானப் போராட்டத்தை இறுதிநாள் வரை தொடர்ந்துவந்த பெரியார் தமிழ்நாட்டின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தார் என்பதும் நாம் அறிந்ததுதான். சுயமரியாதை இயக்க காலத்திலிருந்து அவரது இறுதி சொற்பொழிவுவரை தமிழ்நாட்டை விடுதலை செய்வது என்பது அவரது கோரிக்கையாக இருந்துவந்தது. அந்த விடுதலைக்கோரிக்கையின் அடிப்படையும் சமூகநீதியே என்பதுதான் பெரியாரியப் பார்வை. 
அனைவரும் சமம் என்கிற நோக்கிலிருந்தே பெரியாரின் அனைத்து அரசியல் முடிவுகளும் உருவாகியுள்ளன. தேசிய இனப் பிரச்சினை என்பதும் இனம் அல்லது தேசியம் சார்ந்து சமத்துவத்தைக் கோருவது. மொழி உள்ளிட்ட அடையாள உரிமைகள், பொருளாதாரம், இயற்கை வளம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றுக்கான போராட்டமாகவே பெரிதும் புரிந்துகொள்ளப்படும் தேசிய இனச் சிக்கலுக்கு, பெரியார் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்தார். அதாவது, இன்றைய நவீன அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் கூறினால், இந்தியாவில் தேசியஇனப் பிரச்சினை குறித்த பார்வையில், சமூக நீதி என்ற ஒரு காரணியை பெரியார்தான் நுழைத்திருக்கிறார்.

ஏன் வேண்டும் தமிழ்நாட்டு விடுதலை, அல்லது இந்தியா ஏன் பல்வேறு தேசங்களாக ஆகவேண்டும் என்பதற்கு தேசிய இன உரிமைகளுக்காகப் போராடும் தேசியவாதிகளும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை ஏற்கும் மார்க்சியர்களும் பல காரணங்களை முன்மொழிவார்கள். ஆனால் பெரியார் ஒரு கூடுதல் காரணத்தையும் முன்மொழிந்தார். இந்தியா என்றால் அது பார்ப்பன – பனியா மேலாதிக்க நாடாகத்தான் இருக்கும், ஒருபோதும் அது சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் இழிவுபடுத்தப்படுகிற மக்களின் ஆட்சியாக இருக்காது என்பது அவரது உறுதியானக் கருத்து. 

எனவே இந்தியாவிலுள்ள மக்கள் – ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் – முழுமையான அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்றால் இந்தியாவே பல தேசங்களாகப் பிரிக்கப்படவேண்டும் என்பதுதான் அவரது கருத்து. 

ஆனால் அண்மைக்காலமாக, ஏன் 1990களிலிருந்தே, இங்கே பெரியாரியம் என்கிற கோட்பாடாக முன்வைக்கப்பட்டவற்றில், பெரியாரின் இந்தக் கருத்துப் பற்றி அதிகம் பேசாப்படமால் வந்திருப்பதையும் நாம் காணமுடிகிறது. பெரியாரியத்தை ஏற்பவர்கள், மறுப்பவர்கள் என இருதரப்பினரிடமும் இதில் தடுமாறுகிறார்கள்.

தேசிய இனப் பிரச்சினையில் பெரியாரிய பார்வை என்ற ஒன்று தெளிவாக துலக்கமுறாமல் போனது ஏன் என்று ஆராய்ந்துபார்க்கவேண்டும். அது குறித்து விவாதிக்கும் பொருட்டு, ஒரு குறிப்பிட்ட எடுத்துக்காட்டை முன்வைத்துப் பேசலாம். தோழர்கள் எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா இணைந்து எழுதிய பெரியார்: சுயமரியாதை சமதர்மம் என்கிற புகழ்பெற்ற நூலில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது:

“திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தப் பெரியாரும் அவரது இயக்கத்தினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளை, காங்கிரஸ் தேசியவாதிகள், கம்யூனிஸ்ட் தேசியவாதிகள் முதலியோரின் எதிர்ப்புகள், பெரியாருக்கு கிடைத்த வரலாற்று வாய்ப்புகள், அவர் செய்தவை, செய்யத் தவறியவை ஆகியன பற்றி ஆய்வுக்கு இந்நூல் இடங்கொடுக்காது,. சென்னை மாநிலம் பிரிக்கப்படுவதற்கு ராஜாஜியின் ஒத்துழைத்துழைப்பை நாடியிருந்திருக்கலாம் என்று சிலர் கூறிவருவதால், பெரியார் விரும்பிய சென்னை மாநிலம் (அல்லது திராவிட நாடு/தமிழ்நாடு) பார்ப்பனராதிக்கத்துக்குட்படாத ஒரு நாடு என்பதை மட்டும் இங்குக் குறிப்பிட வேண்டியுள்ளது. பார்ப்பனாதிக்கமே தனி சென்னை மாநிலத்திலும் இருக்குமானால், அதற்குப் பதிலாக இந்தியாவிலே இருந்துவிடலாம் என்றுதான் பெரியார் கருதியிருப்பார்” (பக்கம் 717, பெரியார்: சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா).

பெரியாரின் திராவிட நாடு கோரிக்கை, கிரிப்ஸ் தூதுக்குழுவிடம் பெரியார் உள்ளிட்டோர் பேசியது உள்ளிட்டவை குறித்து இந்த நூல் விரிவாகப் பேசத்தான் செய்கிறது. ஆனால் இவ்விவகாரம் குறித்து மிகவிரிவாக பேச இடமில்லை என்று எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா குறிப்பிட்டிருப்பதையும் ஏற்றுக்கொள்வோம்.

ஆனால், பார்ப்பனராதிக்கத்துக்கு உட்பட்ட ஒரு நாடாக திராவிட நாடு இருக்கும் என்கிற நிலை வருமானால், அதை பெரியார் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்; அதைவிட இந்தியாவிலேயே இருந்துவிடலாம் என்றே கருதியிருப்பார் என தன்னுடையக் கருத்தாக எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா இங்கே குறிப்பிட்டிருப்பதுதான் நம் கவனத்தை ஈர்க்கிறது.
அது ஆச்சரியமாகவும் இருக்கிறது. ஏனென்றால் உண்மை வேறு மாதிரியாக இருந்திருக்கிறது! 

பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு அரசியல் என்பது ஒருபோதும் நெகிழாத, எப்போதும் தாழாத, என்றென்றைக்குமான உறுதியான ஒன்றுதான். நான் விஸ்தீரணத்துக்காக போராடுகிறவன் அல்ல, சமூக விடுதலைக்காக போராடுகிறவன் என்றும்கூட பெரியார் கூறியிருக்கிறார்.  ஒரு பிடி மண்ணாக இருந்தாலும் அது சமூகநீதி நிலவும் மண்ணாக இருக்கவேண்டும் என்பதுதான் அவரது சிந்தனை. ஆனால் சில சமயம் அவரது கனவு தேசமும் நிஜ தேசமும் முரண்படும்போது, நிஜத்தையே பிரதிபலிக்கிறார், 

விடுதலை குறித்த பெரியாரின் கருத்துகளை முழுமையாக அறிந்திருக்கும் யாரும் எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா வந்திருக்கும் இந்த முடிவுக்கு வரமாட்டார்கள். இந்த ஆய்வாளர்களும் பெரியார் “கருதினார்” என்று உத்தரவாதமாகச் சொல்லாமல், “கருதியிருப்பார்” என்று யூகமாகவே சொல்கிறார்கள்.

பெரியாரை ஒரு மிகப்பெரிய அரசியல் ஆசானாக ஆக்கியதில் எஸ்.வி. ராஜதுரை, வ. கீதாவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பெரியாரை இடதுசாரிகளும் பிற நவீன ஆய்வாளர்களும் காத்திரமாக கருத்திலெடுத்துக்கொள்வதற்கான மிகமுக்கிய பங்கினை ஆற்றியவர்கள் இருவரும். அந்த நன்றியறிதலுடனேயே இந்த விமர்சனத்தை நான் வைக்கிறேன். பெரியாரின், ஏன் திராவிட இயக்கத்தின், தேசிய இன விடுதலை அரசியல் பார்வைகள் குறித்து அவர்கள் சற்றே கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கவேண்டும். 

“பார்ப்பனராதிக்கத்துக்குட்பட்ட சென்னை” என்பதை பெரியார் விரும்பியிருக்க மாட்டார்தான் என்ன்பதில் ஐயமில்லை. ஆனால் பெரியார் என்னதான் “கருதியிருப்பார்?”
அதற்கான விடை 1960களில் இருக்கிறது. 1960 மே மாதம் பெரியார் அன்றைய நாம் தமிழர் கட்சித் தலைவர் சி பா ஆதித்தனாரோடு இணைந்து சுதந்தரத் தமிழ்நாட்டைக் கோரியும் தமிழ்நாடு நீங்கலான இந்திய வரைபடத்தை கொளுத்தவேண்டும் என்று அறைகூவல் விடுத்தும் ஓர் இயக்கம் நடத்துகிறார். ஈரோடு, தஞ்சை. திருவையாறு, திருப்பத்தூர் என பல நகரங்களில் கூட்டங்களில் கலந்துகொண்டு இக்கோரிக்கையை வலியுறுத்தி, ஏன் சுதந்தர நாடு வேண்டும் என்று பேசுகிறார். 1956 மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு திராவிடநாட்டுக் கோரிக்கையை கைவிட்டுவிட்ட பெரியார், தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கைக்காக போராடுவதாக அறிவிக்கிறார். பல கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், கோரிக்கை உடன்பாட்டைக் கருதி ஆதித்தனாரோடு இணைந்து இயக்கம் காண்பதாகவும் கூறுகிறார்.
இது ஒரு இனப் போராட்டம் என்கிறார் பெரியார். “நமது சமுதாய இழிவு நீங்கவே இன்றைக்கு நாடு பிரியவேண்டும்; விடுதலை அடையவேண்டும் என்பதாக நாங்கள் சொல்லுகிறோம் என்றால் அது ஏதோ அரசியல் காரணத்துக்காக சொல்லுகிறோம் என்று நீங்கள் நினைக்கக்கூடாது. பணத்தை அவன் கொள்ளையடித்துக்கொண்டு போய்விடுகிறானே என்பதுகூட முக்கியமல்ல, பின்னே எதற்காக என்றால், சமுதாய நோக்கத்துக்காகத்தான் நாடு பிரியவேண்டும் என்று கேட்கிறோம். 3000 ஆண்டுகளாக இருந்துவருகிற பிறவி இழிவு அவமானம் நம்மைவிட்டு ஒழியவேண்டும் என்றால் நமக்கு இதைத்தவிர வேறு வழியே கிடையாது” என்பதுதான் பெரியாரின் பார்வை (சுதந்தரத் தமிழ்நாடு ஏன்? – பெரியார் ஈவெரா, பக்கம் 32). 

நம் நாட்டை நாம்தான் ஆளவேண்டும், நமது மொழிக்காரன், இனத்தவன் அல்லாமல் வேறு யாரும் ஆளக்கூடாது என்றெல்லாம் கூறும் பெரியார் அவரது பேச்சுகளினூடாக இரண்டு இடத்தில் ஆச்சரியப்படத்தக்க ஒரு கருத்தைக் கூறுகிறார். எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா ஆகியோரின் யூகத்துக்கு அது பதிலாக இருக்கிறது.

முதலாவது, 1960 மே 22 இல் ஈரோட்டில் பேசியது): “நம் நாட்டை நாம் ஆளவேண்டும் என்று கேட்பதற்குக்கூட நாதி இல்லையே? நம் நாட்டு ஆதிக்கம் நமக்கு வரவேண்டும் என்று கேட்கிறோம் என்றால், ஆட்சி நம் கைக்கு வரவேண்டிய அவசியம்கூட இல்லை. நம் நாடு பிரிந்து அதிகாரம் பார்ப்பான் கையிலிருந்தால்கூட பரவாயில்லை. டெல்லி ஆதிக்கம் போச்சு என்று தெரிந்தால் அப்புறம் பார்ப்பனர்களெல்லாம் நாம் சொன்னபடி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்! ‘சோத்துக்கில்லாத பார்ப்பான் சொன்னபடியெல்லாம் கேட்பான்’. பிறகு நம் இஷ்டப்படி நாம் பார்ப்பானிடம் வேலைவாங்கமுடியும்.” (சுதந்தரத் தமிழ்நாடு ஏன்? – பெரியார் ஈவெரா, பக்கம் 17, தோழமை வெளியீடு)
இரண்டாவது, இந்திய வரைபடம் எரிப்பு தொடர்பாக தஞ்சை, திருவையாறு, திருப்பத்தூர் போன்ற நகரங்களில் பேசியதிலிருந்து தொகுத்ததிலிருந்து:
“இந்த நாடு சுதந்தரமான நாடான நிலையில் பார்ப்பான் ஆண்டால்கூட பரவாயில்லை. அவனுக்கு இந்த நாட்டின்மீது பற்று இருக்குமானால் சரி. ஏன், இந்த இராஜகோபாலாச்சாரியே வேண்டுமானாலும் ஆளட்டுமே! அப்போது இன்றைய தினம் வடநாட்டு அரசாங்கத்தில் பார்ப்பான் எஜமானானாகவே இருந்து உத்தரவு போடுவதால் பார்ப்பனர்களுக்கு கொண்டாட்டம். நாளை நாடு பிரிந்தால் இந்த சி.ஆர். அவர்களே மந்திரியாக வந்தாலும் அவரை மந்திரி ஆக்கும் நாம் சொல்கிறப்படித்தானே கேட்டாகவேண்டும். இல்லையெனில் வீட்டுக்கனுப்பும் அதிகாரம் நம்மிடம்தானே இருக்கும்?’ - (சுதந்தரத் தமிழ்நாடு ஏன்? – பெரியார் ஈவெரா, பக்கம் 31)
பெரியாரின் பேச்சிலிருந்து எடுத்து நான் கொடுத்திருக்கும் இந்த இரு மேற்கோள்களையும் எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா கூற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள். சொல்லப்போனால் இந்த இரு மேற்கோள்களும் நம் அனைவருக்குமே ஆச்சரியமாகவும் ஏன் நம்பவியலாததாகவும்தான் இருக்கும்.

1947 இல் உருவான ஆட்சியை பார்ப்பனராட்சி என்று வரையறுத்த பெரியார், பார்ப்பனர்களிடம் இருப்பதைவிட வெள்ளைக்காரனிடம் டொமினியன் அந்தஸ்திலேயேகூட திராவிட நாடு இருக்கலாம் என்று யோசித்த பெரியார். பார்ப்பனீயத்தை ஒழிப்பதற்காகவே தன் அனைத்து செயல்பாடுகளையும் செய்துவந்த பெரியார்,  இந்த இடத்தில் மட்டும் தவறிவிடுகிறாரோ என்று ஒரு சந்தேகம்கூட வரலாம். 

ஆனால் இதே பேச்சுக்களின்போது வேறு ஒரு இடத்தில் பெரியார் சொல்கிறார். தன்னுடைய போராட்டத்தை இனப்போராட்டம் (இன்றைய மொழியில் தேசிய இனப் போராட்டம்) என்று கூறுகிறார் அவர்.  “ஒரு இனப்போராட்டம் என்றால், அந்த இனத்துக்குரிய மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், பண்பாடு முதலியவற்றுக்கு முற்றிலும் மாறுபட்ட வேறு இனத்துக்காரன் ஆட்சியை வெறுப்பது, வெறுத்து எதிர்த்து ஒழிப்பது என்பதாகும். இந்தக் கண்ணோட்டத்தோடு இன்றைய தினம் நம் நாட்டில் நடைபெறும் வடவர் – தென்னாட்டவர் கிளர்ச்சி, ஆரியர் – திராவிடர் போராட்டம் (மேல்சாதி – கீழ்சாதி) போராட்டம், இனப்போராட்ட உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதுதான். இன்றைய டெல்லி ஆட்சி பார்ப்பன மேல்சாதிக்கார்கள் ஆட்சியே; அது மேலும் வெளிநாட்டான் (வடநாட்டான்) ஆட்சியே ஆகும்”.

தமிழ்நாடு நீங்கலான இந்திய வரைபட எரிப்புப் போராட்டத்தில், பல நகரங்களில் பெரியார் பேசிய பேச்சுகள்  மிக முக்கியமானதாகும். 
நாடு பிரியவேண்டும், பார்ப்பனர்களே ஆட்சிக்கு வந்தால்கூட பரவாயில்லை, நாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிற பெரியார் பேசியிருப்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது விடுதலையின் முக்கியத்துவத்தையும் அவரசத்தையும் உணர்த்தும் பேச்சுதானே ஒழிய, பார்ப்பனர்களின் அதிகாரத்தோடு அவர் சமரசம் செய்துகொள்கிறார் என்று அர்த்தமில்லை. 

ஒரு தேசிய விடுதலைப் பார்வையில், அது சரியான நிலைப்பாடுதான். பார்ப்பன மேலாதிக்கத்தை தமிழ்நாட்டில் ஒழிக்கவேண்டும் என்றாலும்கூட டெல்லியிலிருந்து தமிழ்நாடு விடுபடாமல் அது நடக்காது என்று பெரியார் உணர்ந்திருந்தார் என்பதை நாம் புரிந்துகொள்வது முக்கியம். (பெரியாரின் இந்த ஒற்றைப்புள்ளிதான், அண்ணாவிடம் வியூகமாகவே உருவெடுக்கிறது என்பது தனியாக ஆராயவேண்டிய ஒரு விஷயம்)

அப்படியிருக்க, “பார்ப்பனாதிக்கமே தனி சென்னை மாநிலத்திலும் இருக்குமானால், அதற்குப் பதிலாக இந்தியாவிலே இருந்துவிடலாம் என்றுதான் பெரியார் கருதியிருப்பார்” என்று எஸ்விஆரும் வ. கீதாவும் எழுதியிருக்கிறார்களே அது எப்படி என்று கேட்கலாம். அவர்கள்தான் அதற்கு பதில் சொல்லவேண்டும். 

இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் உள்பட அனைத்து முற்போக்காளர்களும் இந்தியா என்னும் யானையை தனித்தனி உறுப்புகளாக் கண்டறிந்து தடவிக்கொண்டிருந்தபோது, இது ஒரு தேசம் இல்லை என்று 1930 இலேயே முடிவெடுத்து பேசியவர் பெரியார். முதல் மொழிப்போரின் போது, பிற தமிழறிஞர்களோடு இணைந்து நின்று தமிழ்’நாட்டை’  கண்டறிந்தார் அவர். அது பிறகு திராவிட நாடாக ஆனது. நமக்குள்ள தனிப்பட்ட “தமிழ்நிலை” உணர்ச்சியின் காரணமாகவே நாம் சிறிதேனும் சுயமரியாதை உணர்ச்சியும் சுதந்திர உணர்ச்சியும் கொண்டவர்களாக இருக்கிறோம் என்று 1937 இல் குடியரசில் பெரியார் எழுதியது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு கருத்தாகும். இன்றைய தமிழ்த்தேசியவாதிகள் சிலரும் பெரியாரை முற்றுணராத திராவிட இயக்க வாதிகள் சிலரும் இதையெல்லாம் படித்திருக்கவே வாய்ப்பில்லை. 
1938 இல் சென்னை மாகாணத்திலிருந்து தமிழ் மாகாணம் பிரியவேண்டும் என்கிற கருத்தை பெரியாரும் சோமசுந்திர பாரதியார், எம் எஸ் பூர்ணலிங்கம் பிள்ளை, அண்ணா, உமாமகேசுவரன் பிள்ளை ஆகியோரும் பேசினர் என்பதை மேற்கண்ட நூலில் ஆசிரியர்கள் பதிவுசெய்கிறார்கள். இதுவே பிறகு தனி திராவிட நாடு கோரிக்கையாகவும் மலர்கிறது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் வெளியேறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்கிற நிலையில், முஸ்லீம்கள் காங்கிரஸாரின் இந்துத்துவ மேலாண்மை கண்டு அஞ்சிய நிலையில், ஜின்னாவிடம் திராவிட நாட்டுக்கு ஆதரவு கேட்டார்கள் பெரியாரும் பிற திராவிடத் தலைவர்களும். அப்படியே 1942 இல், கிரிப்ஸ் தூதுக்குழுவைச் சந்தித்துப் பேசிய பெரியார், எம் ஏ முத்தையா செட்டியார், செளந்தபாண்டிய நாடார், சாமியப்பா முதலியார் ஆகியோர் சென்று சந்தித்தனர். புதிய இந்தியா பார்ப்பனராதிக்கம் உள்ளதாகவே இருக்கும் என்றும் அதன் பொருட்டு தாங்கள் தனிநாடுகோருகிறோம் என்றும் அவர்கள் கிரிப்ஸ் குழுவிடம் முறையிட்டார்கள். இன்னொரு பக்கம் மூத்த நீதிக்கட்சித் தலைவர்களான ஆர் கே சண்முகம் செட்டியார், ஏ டி பன்னீர்செல்வம் முதலியோரின் அனுபவங்கள், அதிகார உறவுகளைப் பயன்படுத்தி தனிநாடு கோரிக்கைக்கு வலுசேர்க்கவும் முயன்றார்கள். ஆனால் இவையாவும் பலனளிக்கவிலை என்பதும் அதற்கான காரணங்கள் என்ன என்பதும் முக்கியமான ஆய்வுக்குரியவை.
ஆனால், நமக்கான அரசு வேண்டும் என்கிற அடிப்படை கோரிக்கையைத்தான் இங்கே நாம் பிரதானமானதாக எடுத்துக்கொள்ளவேண்டும். பெரியாரின் மற்றுமொரு முன்னுரிமை தேசிய இனப் பிரச்சினைக்கான விடை தருவது. அவரது சமூகம் சார்ந்த பங்குபணிகளை மட்டும் பேசிவிட்டு, அரசியல் அதிகாரம் சார்ந்த முன்னுரிமைகளைப் பற்றி பேசாமலிருப்பது பெரியாருக்குச் செய்யும் துரோகமாகும். 

இன்று தமிழ்நாட்டில் பெரியார் மீண்டும் பேருரு எடுத்து சங்கிகளின் கனவுகளை நிர்மூலமாக்கிக்கொண்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மீண்டும் பெரியாரை நோக்கிச் செல்கிறார்கள்.  ஆனால் பெரியாரை முழுமையாக புரிந்துகொள்ளவேண்டும் என்றால் நடுத்தரவர்க்க கனவுக்கார்களிடமிருந்தும் அவரை மீட்கவேண்டும். அவரை ஒரு அரசியல் ராக் ஸ்டாராக, அதிர்ச்சி வைத்தியமளிப்பவராக மட்டுமே பார்ப்பது அதிகரித்துவருகிறது. அவரை யதார்த்தத்திலிருந்து விலக்கி, தமிழ் மண்ணிலிருந்து விலக்கி, கட்சி, தேர்தல் போன்ற நடைமுறைகளிலிருந்து விலக்கி, அவரை “சுத்திகரிப்பு” செய்யக்கூடிய ஒரு போக்கையும் நாம அவதானித்துவருகிறோம்.
பெரியாருக்கு தேசிய இனப்பிரச்சினை குறித்து முழுமையான புரிதல் இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது. ஆனால் அதன்  சில முக்கிய கூறுகளில் சரியான புரிதல் உடையவராக இருந்திருக்கிறார் என்பதைத்தான் மேற்கண்ட விவகாரம் கூறுகிறது. அதிகாரம் முதலில் வேண்டும், பிறகு எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள முடியும் என்பதுதான் அவரது கருத்து. இதுதான் தேசிய விடுதலை அரசியலின் அடிநாதமும்கூட. நாம் எத்தகைய சமூகத்தை உருவாக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அகற்கு முதலில் தேவை அரசியல் அதிகாரம் என்பதுதான் அது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்.

பெரியார் கேட்ட அதே பாணியில் இன்று சுதந்திரம் கேட்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் அந்தத் திசைவழியில், ஐயா ஆனைமுத்து உள்ளிட்ட திராவிட இயக்கத்து சிந்தனையாளர்கள் முன்வைக்கும் தன்னாட்சி அரசியலை நாம் முன்னெடுக்கவேண்டும்.   

இன்றைய நிலையில், பெரியாரியவாதிகள் தனியாட்சிக்காகவோ தன்னாட்சிக்காகவோ – அவரவர் விருப்பம், வியூகம், திட்டம் – களத்தில் இறங்கவேண்டும். காவி கும்பலை விரட்டுவது மட்டும் நம் நோக்கமல்ல. டெல்லி ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபெறுவதுதான் நோக்கம். இல்லையென்றால் பாஜக போய் காங்கிரஸ் வந்தால் எல்லாம் “நமத்து” போய்விடும்.
தன்னுடைய அரசியல் வாழ்நாளில் வேறு எந்த இடத்திலும், வேறு எந்த ஒன்றுக்காகவும், பார்ப்பனீய எதிர்ப்பைத் தவிர வேறு எதற்கும் முதலிடம் கொடுக்காத பெரியார். தனிநாட்டு விஷயத்தில் மட்டும் சற்றே நெகிழ்ந்து கொடுத்திருக்கிறார் என்றால், அது பிறழ்ச்சி அல்ல.
பெரியாரியர்கள் இந்த முன்னுரிமையை நினைத்துப்பார்க்கவேண்டும். பெரியாரை நிராகரிக்கும் போலித் தமிழ்த்தேசியவாதிகள் சிலருக்கு பதில் அளிக்கும்போது, “இல்லை இல்லை, பெரியார் தனித்தமிழ்நாட்டுக்காக போராடினார்” என்று மறுப்பு கூறுவதில் இருக்கும் ஆர்வம். இன்றைய தமிழ்த்தேசியஇன பிரச்சினை குறித்த ஒரு பெரியாரிய அணுகுமுறையை உருவாக்குதில் இருப்பதாகத் தெரியவில்லை.

மத்திய அரசை எதிர்த்தல் என்கிற அளவில் மட்டுமே அது முடிந்துவிடாது. அரசியல் அதிகாரம் சார்ந்து நமது கொள்கை என்ன, திட்டம் என்ன, வழிமுறை என்ன என்பதிலும் பெரியாரியர்கள் கவனம் செலுத்தவேண்டும். 

நமது அதிகாரம் நம் கையில் இருக்கவேண்டும். எந்த சட்டத்தையும் நமக்குத் தேவையெனில் நாம் போட்டுக்கொள்ள முடியவேண்டும். டெல்லிக்காரனிடம் கையேந்தி நிற்கும் அவலம் ஏற்படக்கூடாது. உள்ளூரில் நமது பரம வைரியிடம்கூட சற்று சமரசம் செய்துகொள்ளலாம், ஏனென்றால் பிறகு அதை மாற்றிக் கொள்ளமுடியும். ஆனால் அந்த வடநாட்டானிடம் மட்டும் சமரசமே கிடையாது’. – இதுதான் அய்யாவின் வழி. எச் ராஜாக்களை விளாசித்தள்ளுவது ஒரு சிறு பகுதிதான்.

(சிந்தனையாளன் பொங்கல் மலர் 2019 இல் வெளிவந்தது).

No comments:

Post a Comment