Sunday, December 22, 2019

ஆயிரம் பேர் தங்கும் கேம்ப், 40 கோடி செலவாகும்

Sandy
2019-12-21

குடியுரிமை திருத்த மசோதா (CAB):
கேள்வி-பதில் பாணியில் சில விளக்கங்கள்..

1. இந்தியாவில் இது தான் முதல் குடியுரிமை சட்டம்மா?

இல்லை, 1955 ஆம் ஆண்டு முதல் குடியுரிமை சட்டம், 1995 ஆம் ஆண்டு இரண்டாம் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

2. அந்த சட்டங்கள் குறிப்பிடுவது என்ன?

இந்தியாவில் குடியுரிமை கோரும் வெளிநாட்டவருக்கு குடியுரிமை அளிப்பது தொடர்பாக, 1995 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி, இந்தியாவில் 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்து, குடியுரிமை கோருபவர்களுக்கு, இந்திய குடியுரிமை கொடுக்கலாம்.

3. பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு புகலிடம் தேடி வந்த இந்துக்களுக்கு, இதற்க்கு முன் குடியுரிமை கொடுக்கப்படவில்லையா?

மிகவும் தவறானது, 1947 பிரிவினையின் போது இடம்பெயர்ந்தவர்களுக்கு அப்போதே இந்திய குடியுரிமை கொடுக்கப்பட்டுவிட்டது.. அதின் பின்னர் புகலிடம் தேடி வந்தவர்களுக்கு, அப்போதைய குடியுரிமை சட்டத்தின் படி 11 ஆண்டுகள் இந்தியாவில் வாசித்தபின், இந்திய குடியுரிமை கொடுக்கப்பட்டு வந்தது.

4. அப்படியென்றால், இப்போதைய சட்ட திருத்தம் சொல்வது என்ன?

இந்த சட்ட திருத்தம், பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு புகலிடம் தேடி வரும் "முஸ்லீம்" அல்லாதவர்கள், 11 ஆண்டுகள் இந்தியாவில் வசிக்கவேண்டும் என்ற பழைய சட்டத்துக்கு பதில், 5 ஆண்டுகள் வசித்தாலே, இந்திய குடியுரிமை கொடுக்கலாம் என்பது தான்.

The law reduces duration of residency from existing 11 years to just five years for people belonging to the same six religions and three countries. The Act covers six communities namely Hindu, Sikh, Buddhists, Jains, Parsis and Christian migrants from Pakistan, Bangladesh and Afghanistan

5. அப்படியென்றால் இந்த மூன்று நாடுகள் தவிர, பிற நாடுகளில் இருந்து வந்து இந்திய குடியுரிமை கோருபவர்களுக்கு?

அவர்கள் பழைய சட்டத்தின் படி 11 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்..

6. குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு இந்தியாவில் வசித்திருக்க வேண்டிய ஆண்டுகளின் எண்ணிக்கையை 11 லிலிருந்து 5 ஆண்டுகளுக்கு குறைத்ததற்காகவா இங்கே அந்த சட்டத்துக்கு எதிர்ப்பு?

இல்லை, இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு இரு முனைகளில் இருந்து வருகிறது. 

முதல் வகை : இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக, மத அடிப்படையில் வித்தியாசப்படுத்துவதை எதிர்த்து..

 இரண்டாவது வகை : வடகிழக்கு மாநிலங்களில், ஏற்கனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மீறுவதை எதிர்த்து..

7. ஏன் வடகிழக்கு மாநிலங்களில் எதிர்க்கிறார்கள்?

இந்திய சுதந்திரத்திற்கு முன்பே இந்து முஸ்லிம் உள்ளிட்ட வங்காளிகள் வடகிழக்கு மாநிலங்களில் குடியேறினார்கள், அப்போது அங்கிருந்த அஸ்ஸாம் மற்றும் எண்ணற்ற பூர்வகுடி மக்களுடன் மோதல்கள் உருவாகியது.. தொடர்ச்சியாக இந்த குடியேற்றம் நடந்து வந்தது.. 

1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் என அப்போது அழைக்கப்பட்ட பங்களாதேஷ் நாட்டின் விடுதலை போரின் போது, எண்ணற்ற வங்காள மொழி பேசும் இந்துக்களும் முஸ்லிம்களும் அசாம் திரிபுரா போன்ற மாநிலங்களில் அகதிகளாக குடியேறினார்கள்.. போர் முடிந்த பின் பெருமளவு அகதிகள் மீண்டும் பங்களாதேஷ் நாட்டிற்கு திரும்பி விட்டார்கள், இருந்தாலும் சிலர் இங்கேயே தங்கிவிட்டார்கள்..

இப்படி அம்மாநிலங்களில் குடியேறிய வங்க மொழி பேசும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களால் தங்களது மொழி கலாச்சாரம் பாதிக்கப்பட்டு தாங்கள் தங்களுடைய மாநிலங்களில் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக வட கிழக்கு மாநில இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து இவர்களை எதிர்க்க ஆரம்பித்தார்கள் அப்போது உருவானதுதான் உல்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள்.

பல தீவிரவாத இயக்கங்கள் தோன்றி, குடியேறிய வங்க மொழி பேசும் இந்து மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக போராடினார்கள். அசாம் மாநிலமே தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு, போராடிய தீவிரவாத இயக்கங்களை அழைத்து 1983 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டது, அதுதான் அசாம் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது..

இந்த ஒப்பந்தத்தின் படி 1971 ஆம் ஆண்டுக்கு முன்பு குடியேறிய வங்க மொழி பேசும் மக்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும், அதற்குப்பின் குடியேறிய வங்க மொழி பேசும் மக்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை வழங்கப்படாது என்பதுதான் அசாம் ஒப்பந்தத்தின் அடிப்படை சாராம்சம். இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகுதான் அசாம் மாநிலத்தில் தீவிரவாதம் ஒழிந்து, அமைதி திரும்பியது.

இப்போது, இந்த ஒப்பந்தங்களை மீறி, வடகிழக்கு மாநிலங்களில் குடியேறியுள்ள வங்காள இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்ற இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து தான் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையாக எதிர்த்து போராடுகிறார்கள்..

8. இந்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பா?

நேரடியான பாதிப்பு இல்லை, ஆனாலும் என் ஆர் சி எனப்படும் குடிமக்கள் பதிவேடு சட்டம் வந்தால், வங்காள முஸ்லிம்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு..

 காரணம் மேற்குவங்காளத்தில் அதிகளவு பூர்வீக வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், அவர்களை பங்களாதேஷில் இருந்து வந்தவர்கள் என்ன சொல்ல வாய்ப்புண்டு.. 

அதே போல், குடியுரிமையை நிரூபிக்க பழைய ஆவணங்கள் இல்லை என்றால் சிக்கல் தான்.. இந்தியா போன்ற நாடுகளில் சாதாரண பொதுமக்கள் எத்தகைய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி..

9. அப்படி என்றால் இந்த சட்டத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

காரணம் இதுதான் சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக மத அடிப்படையில் வித்தியாசம் பார்க்கும் சட்டம்.. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருப்பதால் எதிர்க்கிறார்கள்..

10. சிலர் சொல்வதுபோல உண்மையிலேயே அண்டை நாடுகளில் இருந்து கள்ளத்தனமாக இந்தியாவுக்கு வருகிறார்களா?

மிக மிக குறைவு ஆண்டுக்கு 10 பேர் வந்தாலே அதிகம், அதிலும் பாகிஸ்தானில் இருந்து முஸ்லிம்கள் வருவது கிடையாது.. 

அதுபோல வங்காளத்தில் இருந்தும் பெங்காலி முஸ்லிம்கள் வருவது மிக சொற்பமே.. இந்தியாவை சுற்றி இருக்கும் சர்வதேச எல்லையை 24 மணி நேரமும் பாதுகாப்பது, மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் வரும் நமது இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர்.. இவர்களை மீறி, எப்படி பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து கள்ளத்தனமாக ஊடுருவி வருகிறார்கள்?? 

அப்படி என்றால் இந்திய ராணுவ வீரர்கள் திறமை இல்லாதவர்களா??

11. அப்படி என்றால் லட்சக்கணக்கான அகதிகள் எப்போது வந்தார்கள்?

முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட இன்றைய பங்களாதேஷ் நாட்டின் சுதந்திரப் போரின்போது அகதிகளாக வங்காள ஹிந்து மற்றும் முஸ்லிம்கள் அடைக்கலம் தேடி இங்கே வந்தவர்கள்.. அதில் பெரும்பாலானோர் போர் முடிந்தபின் பங்களாதேஷ் நாட்டிற்கு திரும்பிவிட்டனர்.

12. ஏற்கனவே 11 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால் குடியுரிமை வழங்கப்படும் என்று சட்டம் இருக்கும் நிலையில், இந்த சட்டத்திருத்தம் எதற்காக??

அதுதான் பிஜேபியின் அரசியல்.. மேற்குவங்காளத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வருகிறது அங்கு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த இது ஒரு வாய்ப்பு.. 

அதாவது பங்களாதேஷிலிருந்து முஸ்லிம்கள் இங்கே வந்து விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்யவும், முன்னர் வந்த பெங்காலி இந்துக்களுக்கு மட்டும் குடியுரிமை அளிப்போம் என்று சொல்வதன் மூலம், மதரீதியான அணிதிரட்டல் செய்வதற்குத்தான் இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்..

13. சிலர் சொல்லுவது போல் பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளில் உள்ள இந்துக்கள் மக்கள்தொகை குறைந்து விட்டதா? மதரீதியாக கொடுமை படுத்தப்படுகிறார்களா?

அவர்கள் தவறான புள்ளி விவரங்களை கொடுக்கிறார்கள்.. நாடு பிரிவினையின் போது கிழக்கு பாகிஸ்தான் மற்றும் மேற்கு பாகிஸ்தான் இரண்டிலும் இருந்த இந்து மக்கள் தொகையை வைத்து, பங்களாதேஷ் பிரிந்தபின் பாகிஸ்தானில் இந்து மக்கள் தொகை குறைந்துவிட்டதை மறைத்து, தவறாக புள்ளிவிவரங்களை சொல்கிறார்கள்.

 பார்க்கப்போனால் பாகிஸ்தானில் முன்னர் இருந்ததைக் காட்டிலும், ஒரு சதவிகிதம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.. அதுபோல தற்போது இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சூழலைப் போல, கண்டிப்பாக பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் உள்ள இந்துக்களுக்கு எதுவும் நேரவில்லை என்பதை உறுதியாக சொல்லலாம்.. 

வட மாநிலங்களில்  முஹம்மத் அக்லாக்ஹ் போல பலர் கும்பல்களால் அடித்து கொல்லப்பட்டதை போல அங்கே நடப்பதில்லை...

14. இந்த சட்டத்தை உண்மையிலேயே அமல்படுத்த முடியுமா?

உதாரணமா, 10 லட்சம் வங்காள
முஸ்லிம்களை வெளியேற்றம் செய்யன்னும்.. பங்களாதேஷ் ஏற்கனவே சொல்லிட்டாங்க, அவங்க இந்திய குடிமக்கள், நாங்க ஏற்றுக்கொள்ள மாட்டோம்.. எந்த நாடும் ஏற்றுக் கொள்ளாத போது, 10 லட்சம் பேர் எங்க போவாங்க?? 

கேம்ப் கட்டி அவங்கள தனியா தங்க வைக்கணும்ன்னா, ஆயிரம் பேர் தங்கும் கேம்ப், 40 கோடி செலவாகும்.. அசாமில் ஒன்றை கட்டினார்கள்.. அப்படின்னா ஆயிரம் கேம்ப் க்கு 40 ஆயிரம் கோடி..

 இது வெறும் கேம்ப் கட்டும் செலவுதான்.. அப்புறம் 10 லட்சம் பேருக்கு சாப்பாட்டு செலவு எத்தனை ஆண்டுகளுக்கு?? இது வெறும் அசாம் கணக்கு மட்டும்தான்.. மேற்கு வங்காளத்தில் ஒரு 25 லட்சம் இருந்தா, ஒட்டுமொத்த இந்திய பட்ஜெட் அதுக்குத்தான் செலவாகும்.. அதனால இதெல்லாம் ஆகாத காரியம்..

அப்போ என்ன டேஷக்கு இதை பண்றாங்க.  

ரொம்ப சிம்பிள் எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறார் என்று நிரூபிப்பதற்காக.

 திருவாளர் Sandy அவர்களின் பதிவு

No comments:

Post a Comment