Tuesday, June 15, 2021

புத்தகம் படிக்கும்போது மனம் அலைபாய்கிறது. ஊன்றிப் படிக்க இயலுவதில்லை. என்ன செய்யலாம்?’

என். சொக்கன்


‘புத்தகம் படிக்கும்போது மனம் அலைபாய்கிறது. ஊன்றிப் படிக்க இயலுவதில்லை. என்ன செய்யலாம்?’ என்று ஒரு நண்பர் ட்விட்டரில் கேட்டிருந்தார். அவருக்கு நான் வழங்கிய குறிப்புகள் இவை. உங்களுக்கும் பயன்படலாம்:

1. கலவையாக எல்லாத் தலைப்புகளிலும் படிக்காமல், அடுத்தடுத்து உங்களுக்குப் பிடித்த தலைப்புகளில்மட்டும் நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். அந்த ஆர்வம் உங்களுடைய கவனத்தை மீட்டுத்தரலாம். படிக்கும் பழக்கத்தை ஒழுங்குபடுத்தியபின் மற்ற தலைப்புகளைப் படிக்கலாம்.

2. படிப்புக்கென்று இலக்குகள் வைத்துக்கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, நாள்தோறும் 10 பக்கம் என்பதுபோல் உங்களுக்குக் கட்டுப்படியாகும் ஓர் இலக்கில் தொடங்கலாம். அந்த இலக்கை நீங்கள் எட்டுகிறீர்களா, இல்லையா என்பதைக் குறித்துவையுங்கள். எட்டாவிட்டாலும் பரவாயில்லை, கணக்கெடுக்கிறோம் என்கிற உணர்வே நமக்கு ஓர் ஒழுங்கைக் கொண்டுவரும்.

3. உங்கள் படிப்புப் பழக்கத்தைக் கண்காணிக்கும் நண்பர் (Accountability Buddy) ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். ‘டேய், அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சியே, என்ன ஆச்சு? எவ்ளோ படிச்சிருக்கே? எப்போ முடிப்பே? இன்னுமா முடிக்கலை?’ என்றெல்லாம் உங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்வது அவருடைய வேலை. (பதிலுக்கு நீங்கள் அவருக்கு ஒரு சாக்லெட் கேக் வாங்கித் தரலாம்.)

4. Goodreads போன்ற வாசிப்போருக்கான இணையத் தளங்கள், ஃபேஸ்புக் குழுக்களில் சேர்ந்து உங்களுடைய படிக்கும் பழக்கத்தைப் பதிவு செய்யத் தொடங்குங்கள். அங்குள்ள மற்றவர்களுடைய படிப்பைப் பார்க்கும்போது இன்னும் ஊக்கம் வரும்.

5. ஒரு புத்தகம் ரொம்பப் போரடிக்கிறது என்றால், அதை விட்டுவிட்டு வேறு புத்தகம் படியுங்கள். காசு கொடுத்து வாங்கிவிட்டோமே என்பதற்காகக் கஷ்டப்பட்டுத் தொடர்ந்து படிக்காதீர்கள், அது உங்கள் ஒட்டுமொத்தப் படிப்பு வேகத்தைக் குறைக்கும், தன்னம்பிக்கையைப் பாதிக்கும்.

6. படிக்கும்போது வெளித் தொந்தரவுகளைக் குறைக்கப் பாருங்கள். எடுத்துக்காட்டாக, தனி அறையில், மொட்டை மாடியில், பக்கத்திலுள்ள பூங்காவில் படிக்கலாம். அப்போது அருகில் தொலைபேசி இல்லாவிட்டால் நல்லது, அது இயலாது என்றால், சைலன்ட் மோட் நல்லது.

7.படிக்கும் புத்தகங்களிலிருந்து குறிப்பெடுங்கள், முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடுங்கள், ஃபேஸ்புக், அமேசான், Goodreads போன்ற தளங்களில் சிறு விமர்சனம் எழுதுங்கள், இவை கூடுதல் ஊக்கத்தைத் தந்து படிக்கும் பழக்கத்தை வளர்க்கும்.

8. படுக்கையில் படிப்பது நல்ல பழக்கம்தான். ஆனால், சிலருக்கு அது தூக்கத்தைக் கொண்டுவரும். அப்படியென்றால், படுக்கையில் படிக்காதீர்கள். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், படுத்துக்கொண்டு படிக்காதீர்கள், உட்கார்ந்த நிலையில் படியுங்கள். (அதே நேரம், படிப்புக்காகத் தூக்கத்தைத் தியாகம் செய்யாதீர்கள். நாள்தோறும் உங்கள் உடலுக்குத் தேவையான தூக்கத்தைக் கண்டிப்பாகக் கொடுங்கள்.)

9. இவை அனைத்தையும் உண்மையுணர்வோடு செய்தபிறகும், ஒரு குறிப்பிட்ட நாளில் உங்களால் படிக்க இயலவில்லை என்றால், பரவாயில்லை, உலகம் இடிந்து விழுந்துவிடாது. ‘நாளைக்குப் படிப்பேன்’ என்று சொல்லிவிட்டு நிம்மதியாக இருங்கள், மன அழுத்தம் வேண்டாம்!

No comments:

Post a Comment