Friday, December 18, 2015

விளம்பரம்! விமர்சனம்!

சத்தமில்லாமல் நாங்களெல்லாம் சேவை செய்கின்றோம், ஆனால் குறைகுடம் கூத்தாடும் என்ற பழமொழிக்கேற்ப இஸ்லாமியர்களின் விளம்பர அலப்பறை தாங்கவில்லை என்று சில பிரிவினைவாதிகளும், ஆளுங்கட்சியின் காலை நக்கிப் பிழைக்கும் கிஷோர் போன்றவர்களும் எழுதி அதை மிகக் கடுமையாகப் பரப்பியிருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் செய்யும் களப்பணிகளை விட அதிகமாக இந்த விமர்சனம் முஸ்லிம்களின் மீது சாட்டப்படுகின்றது.

சுதந்திர போராட்ட காலத்தில் அதிகமான பணிகளையும், தியாகத்தையும் இஸ்லாமியர்கள் செய்தார்கள். கப்பல் வாங்க காசு கொடுத்தார்கள். INA இந்திய தேசிய ராணுவம் அமைக்க சுபாஷ் சந்திர போஸூக்கு தன் சொத்தையெல்லாம் எழுதிதந்தார்கள். விளம்பரங்கள் செய்யாமல் ரகசியமாக செய்த காரணத்தால் முஸ்லிம்கள் எல்லாம் இன்றைக்கு தேசதுரோகிகள் ஆகி விட்டோம். ஆனால் போஸ்ட் ஆபிஸ் வாசலில் நின்று போஸ்ட் பாக்ஸில் தீயை அள்ளிப்போடும் போது அதை பராக்கு பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் தியாகி ஆகிவிட்டார்கள் என்று நேற்று ஒரு சகோதரர் எழுதியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

சென்னையில் இப்போதும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய முழு சக்தியையும் திரட்டி முழுவீச்சில் களப்பணியில் ஈடுபட்டு வருகிறது.

எந்த ஒரு காரியமும் சரியான திட்டமிடல் மூலமே சாத்தியமாகும் என்பதற்கு சிறந்த உதாரணம் தவ்ஹீத் ஜமாஅத். நிவாரணப் பணி திட்டமிடுதலை மிகச்சிறப்பாக அமைத்துக் கொண்டார்கள். பாதிக்கப்பட்ட மூன்று மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி நிவாரணக் களம் துல்லியமாக திட்டமிடப்பட்டது.

முதலில் ஒரு பிரிவினர் தத்தளிக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டும். அதேநேரத்தில் ஒரு பிரிவினர் அவர்களுக்கு உணவு மற்றும் தேவைகளை செய்து தரவேண்டும். இது முதல் கட்டப்பணி. இரண்டாம் கட்டப் பணி ஒரு பிரிவினர் கழிவுகளையும் குப்பைகளையும் அகற்ற வேண்டும். ஒரு பிரிவினர் மருத்துவ சேவையை மேற்கொள்ள வேண்டும். இந்த திட்டமிடலே தவ்ஹீத் ஜமாஅத்தின் களப்பணியை வெற்றிகரமாக அமைத்தது.

இதுபோல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி களப்பணியார்களை வகைப்படுத்தி முதல் 4 நாட்கள் தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று களமிறங்கிய வேறு அமைப்புகளையோ, கட்சிகளையோ, இயக்கங்களையோ இந்த வசைபாடும் வசவாளர்கள் காட்டமுடியுமா?

அடுத்து, எங்கு பார்த்தாலும் முஸ்லிம்கள் போட்டோவை போட்டு விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் விளம்பரம் செய்து கொள்ளவில்லை, வலது கை கொடுப்பது இடது கைக்கே தெரியாத மாதிரி இவர்கள் உதவினார்களாம். வலது கையே எதுவும் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. முதல் கட்ட நிவாரணப் பணியில் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பலரை மீட்டதாக நாங்கள் சொல்லவில்லை அனைத்து பத்திரிகைகளும் படங்களோடு சொல்கின்றன. உதாரணம் சகோ.யூனுஸ் சம்பவம். அதேபோல இறந்து போன உடல்களை அவ்வளவு மோசமான வெள்ளத்தில் நீந்திச் சென்று மீட்டது யார்?

தமுமுகவைச் சேர்ந்த சகோதரர்களும், தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்களும் என்று நாங்கள் சொல்லவில்லை, இந்த வார ஜூனியர் விகடன் சொல்கின்றது, தட்ஸ் தமிழ் ஒன் இந்தியா இணையதளம் சொல்கிறது, தினகரன் பத்திரிகை சொல்கிறது, பாலிமர் செய்திகள் சொல்கிறது, சத்தியம் செய்திகள், நியூஸ் 7 செய்திகள் சொல்கிறது.
முஸ்லிம்கள் போட்டோ போடுகிறார்கள், முஸ்லிம்கள் விளம்பரம் செய்து கொள்கிறார்கள் என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறும் பிரிவினைவாதிகள் அதற்கு போட்டியாக நீங்களும் கழுத்தளவு வெள்ளத்தில் நீந்திச் சென்று மக்களை மீட்டது, இறந்து போன உடல்களை மீட்டது, தத்தளித்த மக்களுக்கு நீந்திச் சென்று உணவளித்தது, கர்ப்பினிப்பெண்களைக் காப்பாற்றியது போன்ற படங்கள் இருந்தால் நீங்களும் போடுங்களேன் நாங்களும் பார்க்கிறோம்? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.

தண்ணீர் வற்றிய பிறகு கரண்டைக்கால் அளவு கிடக்கும் தண்ணீரில் கழுத்தில் ஸ்டெத்தை மாட்டிக் கொண்டு காளியாத்தா போல வந்து போட்டோவுக்கு தரிசனம் கொடுத்ததை நாங்கள் ஏதும் விமர்சனம் செய்தோமா? அல்லது அடைத்து வைக்கப்பட்ட அறைக்குள் அட்டைப் பெட்டியைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு கண்டெய்னரில் நிவாரணப் பொருட்கள் ஏற்றும் எங்களின் தேசிய தலைவர் என்று படம் போட்டீர்களே! அதை நாங்கள் விமர்சனம் செய்தோமா? நிவாரண முகாம்களுக்கு தமுமுகவினர் ஒப்படைத்த பொருட்களை அடுக்கி வைத்து அதன்பின்னால் சேவா பாரதி பேனரைக் கட்டி போட்டோ எடுத்து இதோ நிவாரண பொருட்கள் என்று படம் போட்டதை நாங்கள் ஏதும் விமர்சனம் செய்தோமா? 4000 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் களத்தில் என்று ஒரு அப்பட்டமான செய்தியைப் போட்ட தினமலரை நாங்கள் ஏதும் ஏளனம் செய்தோமா? ஆந்திர வெள்ளத்தில் ஆர்.எஸ்.எஸ் வழங்கிய நிவாரண உதவிகளை சென்னை வெள்ளத்துக்கு வழங்கியது போல படம் போட்டார்களே! அதை நாங்கள் ஏதேனும் குறை சொன்னோமா? கேரள கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு உணவு வழங்கிய படத்தை வைத்துக் கொண்டு சேவா பாரதியின் சென்னை சேவை என்று போட்டார்களே! அதில் கேரளப் பெண்மணி இருந்ததால் அந்தப் படமும் மண்ணைக் கவ்வியதே! அதை நாங்கள் ஏதும் கேட்டோமா?

அதிலும் சமூக ஆர்வலர் கிஷோர் சுவாமி அவர்கள் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார் பாருங்கள். ஏதாவது ஒரு பாதிப்பு வந்து விட்டால் நமது வேலை என்ன தெரியுமா? யாருக்கும் உதவி செய்து அதை போட்டோவாகப் போடக்கூடாது. அரசுக்கு உதவியை செய்து விட்டு போர்வையைப் போர்த்திக் கொண்டு வீட்டிற்குள் படுத்து விட வேண்டுமாம். இது எப்படி உள்ளதென்றால் உன் வீட்டுப் பெண்களை எவனாவது மானபங்கம் செய்ய வந்தால் நீ அவர்களைத் தடுக்கக் கூடாது, உடனே காவல் நிலையத்திற்கு சென்று அங்கே புகார் அளித்து அவர்கள் வந்து சமூக விரோதிகளை கைது செய்யும் வரை நீ உக்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்வதற்கும் ஒப்பாகும். இந்த நாட்டில் குடிகாரனுக்கும் பொம்பளைப் பொறிக்கிப்பயலுக்கும் பெயர் சமூக ஆர்வலராம். தொண்டு செய்பவனுக்குப் பெயர் விளம்பர விரும்பியாம்!

எங்களின் வேலையை நாங்கள் பார்க்கின்றோம். நீங்கள் செய்யவில்லை என்று நாங்கள் குறை சொன்னால் தான் அதற்கு நீங்கள் பதில் தரவேண்டுமே தவிர, அய்யய்யோ! அய்யய்யோ! இஸ்லாமியர்கள் போட்டோ போடுகிறார்களே! அய்யய்யோ! இஸ்லாமியர்கள் தங்களை நல்லவன் என்று காட்டுகிறார்களே! என்று ஏன் அலறித்துடிக்கிறீர்கள்? இத்தனை காலமும் நீங்கள் மக்களிடம் போட்டுக் காட்டிய தவறான பிம்பத்தை அந்த மக்களே அடித்து உடைத்து விட்டார்களே இனிமேல் நம் பிரிவினைவாத அரசியல் மக்களிடத்தில் எடுபடாது என்கின்ற பயமா?

நாங்கள் போட்டோ போட்டால் நீங்களும் பதிலுக்கு போட்டோ போடுங்கள். ஆனால் போடுவதற்கு உங்களிடத்தில் போட்டோ இல்லை. இருந்தால் தானே போடுவதற்கு. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமைக்கு தினம் தினம் மாற்றுமத சகோதரர்கள் நிறைய பேர் வந்து வாழ்த்தும் நன்றியும் சொல்லி வருகிறார்கள். அதை போட்டோ எடுத்து நாங்கள் போடுகிறோம். அதேபோல உங்கள் அலுவலகத்திற்கு வந்து உங்களின் சேவைகளுக்கு நன்றி சொன்னவர்கள் இருந்தால் அதை நீங்கள் போடுங்கள். போட்டோ இருக்கிறதா?

போட்டோ ஏன் போடுகிறீர்கள்? போட்டோ ஏன் போடுகிறீர்கள்? விளம்பரம் ஏன் செய்கிறீர்கள்? என்று கூச்சல் போடுபவர்களே! தவ்ஹீத் ஜமாஅத்தின் அசராத இடைவிடாத கூச்சப்படாத எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத சேவையைப் பாராட்டி தங்களின் பொருளாதாரத்தை அள்ளித்தந்த அமலநாதன், ராஜகுமார், ரோஸ்வினி, செந்தில் உள்ளிட்ட இன்னும் ஏராளமான மாற்றுமதச் சகோதரர்களின் பணம் சரியாக மக்களிடம் போய்ச் சேர்ந்ததா இல்லையா என்பதை வெளிப்படுத்த நாங்கள் போட்டோ போட்டுத்தான் ஆகவேண்டும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எந்த விதமான வெளிநாட்டு அரசாங்கத்திடம் நிதி உதவி வாங்கும் அமைப்பு கிடையாது. அதுபோல உள்ளூர் அரசாங்கத்திடமும் பெரிய பெரிய டிரஸ்டிகளிடமும் பணத்தை வாங்கி அதில் பொது சேவை செய்யும் அமைப்பு கிடையாது. பொதுமக்களிடம் துண்டு ஏந்தி பத்து ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த காசுகள் தான் நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. தனியார் அமைப்புகளிடமும் வெளிநாட்டு அரசிடமும் காசுகள் வாங்கினால் ஏதோ கடமைக்கு லெட்ஜர் தயார் செய்து 10 பக்கத்துக்கு பிரிண்ட் செய்யப்பட்ட கணக்கை காட்டி விடாலாம். ஆனால் இது பொதுமக்களிடம் வசூல் செய்யப்படும் பணம். அவர்களிடம் வாங்கிய பணத்திற்கு நாங்கள் செய்யும் நிவாரண உதவிகளை படமெடுத்து போட்டால் மட்டுமே அதற்கான அத்தாட்சிகளை மக்கள் அறிந்து கொள்வார்கள்.

அதெல்லாம் போகட்டும். தூய்மை இந்தியா என்ற பெயரில் குப்பைகளை பையில் கொண்டுவந்து ஓரிடத்தில் தூவிவிட்டு தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத்தொண்டு, ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடிப்பார் சுயநலமுண்டு என்ற பாணியில் எல்லோரும் வந்து தூய்மை இந்தியாவை கூட்டிவிட்டு விதவிதமாய் போட்டோ எடுத்து அதை பல பக்கமும் பல நாட்கள் பரப்பினீர்களே! அந்தப் பக்கம் ஒருத்தர் எந்நேரமும் கேமிராவைப் பார்த்து விதவிதமான போட்டோக்களை எடுத்து தள்ளி வருகிறாரே! அப்போதெல்லாம் அதை கேள்வி கேட்காதவர்கள், இஸ்லாமியர்கள் உண்மையாக உயிர் கொடுத்து நிவாரணப் பணிகள் செய்து விட்டு நானும் களத்தில் இருக்கிறேன் என்று பெருமையாக புகைப்படம் எடுத்து போடும் போது மட்டும் உங்களுக்கு புகை வருகிறதே!

ஆக எங்களின் சகோதரச் சமுதாயம் எங்களைப் புரிந்து கொண்டது. நமக்கு ஒன்னுன்னா இஸ்லாமியன்தான் வருவான். நம்முடைய பாதுகாவலன் என்று சொல்லிவிட்டது பிரச்சினை வந்ததும் பாதாளக்கிட்டங்கியில் பதுங்கிக் கொண்டு ஸ்டேட்டஸ் போடுபவன் வரமாட்டான் என்பதை எங்களின் தொப்புள் கொடி உறவுகள் புரிந்து கொண்டார்கள். இதற்கு மேல் வேறேந்த பிரதிபலனும் எங்களுக்கு வேண்டாம் எங்களின் இறைவன் தருவதைத் தவிர.

https://www.facebook.com/permalink.php?story_fbid=545524115604405&id=100004404646040

No comments:

Post a Comment