Sunday, October 13, 2019

சர்வாதிகாரிகளின் பொதுப்பண்பு

சர்வாதிகாரிகளைப் பொருத்தவரை அனைவருக்குமே ஒரு பொதுவான modus-operandi உண்டு.

* வெளிப்படையான வன்முறைப் பேச்சு,

* கூச்சமின்றிப் பொய் சொல்லுதல்,

* தான் மட்டுமே யோக்கியன் என்று பேசுதல்,

* அபாயகரமான விசயங்களை எல்லாம் விளையாட்டாக சமூகத்தில் நஞ்சை விதைத்தல்,

* தன் தொண்டர்களிடையே தனிமனித வழிப்பாட்டை ஊக்கப்படுத்துதல்,

* இல்லாத ஒரு அரசியல் எதிரியை வலிந்து உருவாக்குதல்,

* அந்த எதிரியிடமிருந்து என்னால் மட்டுமே உங்களை காப்பாற்றமுடியும் என்று பரப்புரை செய்தல்,

* வன்முறைதான் அனைத்திற்கும் தீர்வு என்று தன் ஆதரவாளர்களை முழுமையாக நம்ப வைத்தல்...

இப்படி எல்லா சர்வாதிகாரிகளின் அரசியல் பயணத்திலும் சில தவிர்க்கமுடியாத ஒற்றுமைகள் இருக்கும். ஹிட்லர், முசோலினி, கிம் இல் சங், இடி அமீன் என்று இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல.

-Ganesh Babu

Wednesday, October 9, 2019

தமிழக கிரிக்கெட்டின் மறுபக்கம் - சிவம் முனுசாமி.

சிவம் முனுசாமி.
2019-10-09

தமிழக கிரிக்கெட்டின் மறுபக்கம்

இதுவரை தமிழ் நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அணிக்காக விளையாடிவர்கள் மொத்தம் 21 பேர் இதில் எத்தனை பேர் என்ன சாதியினர் என்று பார்த்தோம் என்றால் அத்தனையும் அய்யர், அய்யங்காராகவே இருப்பார்கள். இதில் அய்யர்களை விட அய்யங்கார்களே அதாவது பார்த்தசாரதிகளும் சேசாத்ரிகளுமே அதிகமாக இருப்பார்கள். ஸ்ரீ வைஷணவத்தை பின்பற்றும் அய்யங்கார்களின் ஆதிக்கமே இங்கு அதிகம்.

இந்த 21 பேரில் #இரண்டு பேர் தான் அய்யர் அல்லது அய்யங்கார் இல்லாதவர்கள். சரி அப்படியென்றால் மற்ற சாதியினர் கிரிக்கெட் விளையாடுவதில்லையா என்று கேட்டால் விளையாடுகிறார்கள் ஆனால் அவர்களுக்கான வாய்ப்பு என்பது எவ்வளவு நன்றாக விளையாடினாலும் பாராட்டு என்ற பெயரில் முதுகை தடவி பூணூல் இருக்கிறதா என்று பார்த்து தான் கொடுக்கப்படும்.

உதரணமாக அனிருதா நமது முன்னாள் இந்திய கிரிகெட் வீரர் ஸ்ரீகாந்த் அவர்களின் மகன், வருங்கால விளையாட்டு வீரர்கள் என்று தெர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்த்ரேலியாவில் நடந்த போட்டிக்கு அனுப்பப்பட்டார் இந்தியா சார்பாக விளையாட, அப்பொழுது தேர்வு குழு உறுப்பினாராக இருந்தவர் ஸ்ரீகாந்து, இதை குறித்து வினாக்கள் எழுப்பப்பட்ட பொழுது கூட இருந்த தேர்வுகுழு உறுப்பினர்கள் மூவரும் ஸ்ரீகாந்தை காப்பாற்றினார்கள். ஆனால் அனிருத் விளையாடிய போட்டிகளும் அவர் அதில் எடுத்த ரன் மற்றும் விக்கெட்டுகளை விட அதிகமாக எடுத்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை. அதாவது ஒரு கிரிக்கெட்டர் டிவிசன்களில் விளையாடி தனது திறமையை நிருபிக்க வேண்டும். இதற்கு 1, 2, 3A, 3B, 4A, 4B, 5A, 5B, 6A, 6B என்று 10 டிவிசன்கள் இருக்கிறது, இதில் 135 அணிகள் உள்ளன இவற்றில் விளையாடும் வீரர்கள் அவர்களின் திறமைக்கு ஏற்ப ஒவ்வொரு டிவிசனிலும் விளையாடி முதல் டிவிசன் லீக் அணிகள் 12ல் தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாட வேண்டும். முதல் டிவிசனில் விளையாடுபவர்களே தமிழ்நாடு அணியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய அளவிளான ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட தமிழ்நாடு சார்பாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ரஞ்சி கோப்பையில் அவர்களின் விளையாட்டுத் திறனின் அடிப்படையிலேயே இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இப்படி முதல் டிவிசன் லீக்கில் விளையாடும் வீரர்களில் இருந்து ரஞ்சிக் கோப்பை போட்டிக்கு தேர்ந்து எடுக்கப்படும் வீரர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே அதாவது பூணூல் போட்டவர்களாகவே இருப்பார்கள். மற்றவர்கள் எவ்வளவு நன்றாக விளையாடினாலும் ரஞ்சி போட்டிகளுக்கு அனுப்ப மாட்டார்கள், அப்படியும் திறமையை நிறுபித்து ஒரு சிலர் வந்தால் அவர்களை அணியில் எடுத்துக் கொள்வார்கள் ஆனால் ரஞ்சிக் கோப்பை போட்டிகள் அனைத்திலும் அனுமதிக்காமல் சப்ஸிடியுட்டுகளாக அமர வைக்கப்படுவார்கள், வருடத்திற்கு இரண்டு போட்டிகளில் அனுமதிக்கப்பட்டால் அதிகம். ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் பொழுது இங்கே நடக்கும் முதல் டிவிசன் லீக் போட்டிகளிலும் கலந்து கொள்ள இயலாமல் இருப்பார்கள். அடுத்த வருடம் ரஞ்சி அணி தேர்ந்தெடுக்கும் பொழுது அதிக ரன் அடிக்கவில்லை என்று போட்டிகளில் விளையாடமலேயே தேர்வுக் குழுவினரால் ஆடாமலேயே தோற்கடிக்கப்படுகின்றனர், இப்படி பலரின் வாழ்க்கையை குதறியிருக்கிறார்கள்

இரண்டு வருடம் முன்பு தனது 14 வயதில் டிவிசன் லீக் போட்டிகளில் விளையாட ஆரம்பித்து மிக வேகமாக முதல் டிவிசன் லீக் போட்டிகளில் விளையாடியவர் பிகே தர்மா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர், லட்சுமிபதி பாலாஜியின் உடல் நிலை சரியில்லாத பொழுது தமிழகத்துக்கு விளையாடினார். ஆனால், அதற்கு பிறகு நிலையாக தமிழக அணியில் இவரை வைத்துக் கொள்ளவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் அதுவும் காலையில் ஒரு போட்டியில் விளையாடிவிட்டு வீட்டுக்கு திரும்ப வந்தவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவரின் தற்கொலைக்கு காதல் என்று சொன்னார்கள் ஆனால் அதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை, 21 வயதில் ஒரு அருமையான விளையாட்டு வீரர் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
அடுத்து சடகோபன் ரமேஷ் மற்றும் திருகுமரன் என்ற கென்னி இருவரும் சம காலத்தில் விளையாடியவர்கள் 1999 ஜனவரியில் சடகோபன் ரமேஷ் இந்திய அணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு 2001 செப்டம்பர் வரையில் இருந்தார். இவர் என்ன விளையாடினார் என்பது நமக்கு நன்றாகவே தெரியும், ஆனால் 1999 நவம்பரில் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் திருகுமரன். ஆனால் 2000 ஜூனுக்கு பிறகு திரும்பவும் இந்திய அணிக்கு தேர்ந்து எடுக்கப்படவில்லை அவருக்கான விளையாடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. தமிழகத்திற்காக 2007ம் ஆண்டு வரை விளையாடிவிட்டு அதாவது ஆடாமல் தோற்றுவிட்டு தனது ஓய்வை அறிவித்து விலகினார். இவரின் திறமையை உணர்ந்து அமெரிக்கா தனது தேசிய அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமித்துள்ளது, தற்பொழுது அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

முதலில் ஸ்ரீகாந்த் அவர்களின் மகன் அனிருதாவை பற்றி பார்த்தோம் அனிருதா 1987ம் ஆண்டு பிறந்தவர். இவருக்கும் 1990 ஆண்டு பிறந்தவரும் தமிழ்நாட்டிற்காக விளையாட அனுமதிக்கப்பட்டவருமான வேலூரை சேர்ந்த தாராபக் பெய்க் என்பவரின் போட்டிகளின் வித்தியாசங்களை பார்த்தாலே தெரியும், இருவரும் ஏறத்தால ஒரே காலகட்டத்தில் தான் முதல் டிவிசன் போட்டிகளில் விளையாடி வருகின்றனர் ஆனால் அனிருதா ஸ்ரீகாந்த் ரஞ்சி போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார், தாராபக் பெய்க் பாலி உமர் கோப்பை போட்டிகள் போன்றவற்றில் விளையாட அனுமதிக்கப்பட்டிருந்தாலும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் அனுமதிக்கப்பட வில்லை. தற்பொழுதைய ரஞ்சி கோப்பை போட்டிக்காக அறிவிக்கப்பட்ட அணியிலும் பெய்க் பெயர் இல்லை. ரஞ்சிக்கோப்பைக்கான 14 பேர் கொண்ட அணியில் கிட்டத்தட்ட 10 பேர் பார்ப்பனர்களே, ஆனால் ஒரே ஒரு சந்தோசம் முதன் முதலாக இரண்டு கிருத்துவர்களுக்கு இடம் கொடுத்துள்ளனர். ஆமாம் தமிழ்நாடு கிரிக்கெட்டில் சாதியம் பார்ப்பது மட்டுமில்லை மதமும் தொடர்ந்து கடைபிடிக்கப் படுகிறது, தமிழ்நாட்டில் இருந்து இஸ்லாமியர்களோ கிருத்துவர்களோ இது வரை இந்திய அணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டதில்லை.

இப்படி மிகச்சிறந்த பூணூல் திறமையுடைய அணியாக இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட், 1935ல் இருந்து நடக்கும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது, ஆனால் தமிழக அணி இது வரை இரண்டு முறை தான் கோப்பையை வென்றுள்ளது. 1987-88ம் ஆண்டு போட்டியில் தான் கடைசியாக ரஞ்சிக் கோப்பையை தமிழ்நாடு பூணூல் அணி கைப்பற்றியது அதற்கு பிறகு 26 வருடங்களாக பூணூல் அணி கோப்பைக் கனவு மட்டுமே கண்டு கொண்டுள்ளது. மும்பை அதிகபட்சமாக 40 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது கிரிக்கெட்டை பொறுத்தவர மும்பை, டில்லி, கொல்கத்தாவிற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு அணி உள்ளது ஆனால் ராஜஸ்தானிடம் எல்லாம் மரண அடி வாங்கி ஓடி வந்தது தான் பூணூல் அணியின் வரலாறு.

இந்திய அணியிலும் பார்ப்பனியம் காப்பாற்றப்பட்டாலும் அவ்வப்பொழுது கபில்தேவ், அசாருதீன், தோனி போன்றவர்களால் பார்ப்பனியம் உடைக்கப்படுகிறது ஆனால் தமிழ்நாட்டில் பார்ப்பனியம் தனது கால்களை ஆழமாகவும் நல்ல அகழமாகவும் வேரூண்றி நிற்கிறது, இதை வேருடன் புடுங்கி எரிய வேண்டிய தேவை உள்ளது. நிறவெறியை பாவித்த தென்னாப்ரிக்க அணி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்டது போல் ஒதுக்கப்பட வேண்டும். ஜிம்பாபுவே கிரிக்கெட் அணியில் இருப்பது போல் இடஒதுக்கீடு முறை கொண்டுவர வேண்டிய தேவை TNCAவில் இருக்கிறது. அல்லது குஜராத்தில் மூன்று கிரிக்கெட் கழகங்கள் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் நமக்கான ஒரு கிரிக்கெட் கழகத்தை தொடங்க வேண்டியது உள்ளது TNCA ஆவாளுக்கு ஆனதாக தொடரட்டும் நம்மவர்கள் விளையாடும் வகையில் நமக்கான ஒரு கிரிக்கெட் கழகத்தை தொடங்க வேண்டும்.

இல்லையென்றால் முத்துசாமிக்கள் தென்ஆப்ரிக்கா போன்ற அணிக்கு தேர்வானாலும் தமிழக அணியில் வாய்ப்பே கிடைக்காது.

By சிவம் முனுசாமி.

https://www.facebook.com/100004426182966/posts/1473890619435130/

Tuesday, October 8, 2019

ஜாதி பார்க்கும் தமிழ்தேசியம் ஹராமா?

Rajarajan RJ
2019-10-08

"இலங்கையில் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் ஏன் தங்களை தமிழர்கள் என்று சொல்லாமல் முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்" - என்று யோசித்து இருக்கிறேன். அதற்கு அவர்கள் மதப்பற்று மட்டுமே காரணம் என நினைத்திருக்கிறேன்.

இப்போது யோசித்து பார்த்தால், "முஸ்லிம்கள் தங்களை தமிழர்கள் என்று கூறிக் கொண்டாலும், சாதி சமய வெறிகொண்ட யாழ்ப்பாணத்து தமிழர்கள், இஸ்லாமியர்களை தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" - என்றே நினைக்கிறேன்.

ஈழத்தமிழர்களுக்கு இதில் மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லவும்.

இப்போது நாம் தமிழர் போன்ற கட்சிகளின் "இஸ்லாமியர்களை கவனத்துடன் அணுக வேண்டும்" - என்ற பார்வையும் இலங்கையில் இருந்து இறக்குமதியானது போலத்தான் இருக்கிறது.

எப்படி இந்துத்துவவாதிகள், இஸ்லாமியர்களை "தாய் மதத்திற்கு திரும்புங்கள்" - என்று கூறுகிறார்களோ, அதேப்போல இந்த தமிழ்தேசியவாதிகளும் "இஸ்லாத்தையும்/ கிருஸ்துவ மதத்தையும் விட்டு விட்டு தமிழர் மதமான சைவத்திற்கு திரும்புங்கள்" - என்று கூறமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

கடைசியாக ஒன்று,

உங்கள் மதம், உங்களுக்கு படிப்பை தருகிறதா!
உங்கள் மதம், உங்களை சமமாக நடந்துகிறதா! அப்படி என்றால் உங்கள் மத அடையாளம் தமிழன் என்ற அடையாளத்தைவிட எந்த விதத்திலும் தாழ்ந்தது இல்லை.

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பதை கற்பிக்கும் எந்த அடையாளத்தையும் ஏற்காமல் இருப்பதே நல்லது. இஸ்லாமியன் என்றால் சாதியற்றவன் எனப்பொருள்.

"இன்னக்கிதான் அவன் இஸ்லாமியன், நேத்து அவன் அகமுடையத்தேவர்" - என்பது தமிழ் தேசியம் அல்ல. இந்து தேசியத்தின் கள்ளக் குழந்தையான சாதி தேசியம். புரிந்து கொள்ளுங்கள். கவனமாக இருங்கள்!

https://www.facebook.com/1671484748/posts/10213332361418145/

Monday, October 7, 2019

ஹாம் ரேடியோ - RS Prabhu

RS Prabhu
2019-10-08

ஹாம் ரேடியோ குறித்து அறிந்துகொள்வோம்.

ஹாம் வானொலியை (HAM radio) அமெச்சூர் ரேடியோ (Amateur radio) என்றும் சொல்லுவார்கள். நாம் பாடல்கள் கேட்கும் FM வானொலி ஒருவழி ஒலிபரப்பு. அதாவது வானொலி நிலையம் ஒலிபரப்புவதை நாம் கேட்க மட்டுமே முடியும். அதனால் ஒலிபரப்பு செய்யுமிடம் நிலையம் என்றும் அதைக் கேட்கும் பயனாளர்களை நேயர்கள் என்றும் அழைப்பர்.

ஹாம் வானொலி என்பது இருவழி ஒலிபரப்பு. அதாவது நாம் பேசி முடித்த பிறகு அடுத்த முனையில் இருப்பவர் பேச முடியும். அதை அந்த அலைவரிசையில் இருக்கும் அனைவரும் கேட்க முடியும். செல்போன் போல அல்லாமல் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே ஒலிபரப்ப முடியும். அதனால் ஒலிபரப்புபவரும், அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் ஸ்டேஷன் என்றே அழைக்கப்படுவர்.

ஒவ்வொரு ஒலிபரப்பாளருக்கும் அதாவது ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ஒரு அழைப்புக்குறி (Call Sign) உண்டு. ஒவ்வொரு முறை பேசும்போதும், பேசி முடிக்கும்போதும் தங்களது அழைப்புக்குறியையும், அடுத்த முனையில் இருக்கும் நிலையத்தாரது அழைப்புக்குறியையும் சொல்லியே பேசுவர்.

உதாரணமாக VU3WWD என்ற நிலையத்தார் VU3ZRF என்ற நிலையத்தை அழைக்கையில் This is Victor Uniform number three Whisky Whisky Delta calling Victor Uniform number three Zulu Romeo Foxtrot, and standing by என்று சொல்லிவிட்டு பத்து வினாடிகள் காத்திருந்து பதில் இல்லையெனில் மறுபடியும் அழைப்பர். மூன்று முறைக்கு மேல் பதில் இல்லையெனில் அழைப்பதை நிறுத்திக்கொள்வர். அந்த நிலையத்தார் Victor Uniform number three Whisky Whisky Delta, this is Victor Uniform number three Zulu Romeo Foxtrot. Go ahead என்று பதில் தருவார். உரையாடல் முடிந்தபின் இரு ஸ்டேஷன்களும் அதேபோல் அழைப்புகுறியைச் சொல்லி Signing Clear என்று முடித்துக்கொள்வர்.

அழைப்புக்குறியைப் பெற மத்தியத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் Wireless Planning Coordination and Monitoring Wing நடத்தும் Amateur Station Operator Certificate (ASOC) தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அழைப்புக்குறி இல்லாத நபர்கள் வயர்லெஸ் ரேடியோவில் பேசுவது சட்டப்படி தவறு என்பதோடு எந்த நிலையமும் அத்தகைய அந்நிய நபர்களுடன் உரையாட முன்வர மாட்டார்கள். Radio language தெரியவில்லையெனில் பெரும்பாலும் ஹாம் ஸ்டேஷன்கள் பேசிக்கொள்வது மற்றவர்களுக்குப் புரியாது.

ASOC தேர்வில் இரண்டு வகை உண்டு. Restricted grade தேர்வில் மின்னியல், காந்தவியல், மின்னணுவியல், வானொலி அலைவரிசைகள், சட்ட திட்டங்கள் குறித்த அடிப்படை கேள்விகள் இருக்கும். இதற்கென பிரத்தியேக குறிப்புகள், மாதிரி வினா விடைகள் கொண்ட புத்தகத்தை உங்களுக்குத் தெரிந்த ஹாம் எவரிடம் கேட்டாலும் தருவார்கள். இணையத்திலும் இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு வார படிப்பே தேர்ச்சி பெறப் போதுமானது.

General grade தேர்வில் restricted grade தேர்வில் வரும் பாடத்திட்டததுடன் கொஞ்சம் கூடுதலான பகுதிகள் இருப்பதோடு மோர்ஸ் குறியீடு (Morse Code) தேர்வும் உண்டு. நிமிடத்துக்கு ஆறு வார்த்தைகள் அனுப்பவும் எட்டு வார்த்தைகளைக் கேட்டு, தாளில் எழுதவும் தெரியுமளவுக்கு புலமை வேண்டும்.

மோர்ஸ் குறியீடு என்பது ஆங்கில எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறியீடுகள் ஒவ்வொன்றுக்கும் பிப், பீப் என்ற ஒலியாக மாற்றி ஒலிபரப்புவதாகும். மிகக்குறைந்த சக்தியில் நீண்டதூரம் தகவல்களை அனுப்ப தந்தி சேவையில் பயன்படுத்தப்பட்ட மோர்ஸ் குறியீடு இன்னமும் பல இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. பழைய நோக்கியா அலைபேசிகளில் குறுந்தகவல் வந்தால் பிப்பிப் என்ற சத்தம் வருவதைக் கேட்டிருப்பீர்கள். அது SMS என்ற வார்த்தையின் மோர்ஸ் குறியீட்டு ஒலியே. அது நினைவுக்கு வரவில்லை என்றால் இந்த சுட்டியில் கேட்டுப் பாரக்கவும் (https://youtu.be/h6WUC8abUA8)

Restricted grade தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது அழைப்புக்குறி VU3 என்று ஆரம்பிக்கும். General grade தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது அழைப்புக்குறி VU2 என்று ஆரம்பிக்கும். VU என்பது இந்தியாவுக்கான சர்வதேச வானொலி அடையாளக் குறி. Victoria's Union என்று அந்தக்காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டது இன்றும் அப்படியே உள்ளது.

கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தைப் படித்தவர்களுக்கு தேர்வின் முதல் பகுதியில் விலக்கு உண்டு. யார் வேண்டுமானாலும் general grade தேர்வை நேரடியாக எழுதலாம். Restricted grade எழுதியே general grade எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் மோர்ஸ் கோடு சரளமாக அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் பெற்றோர் ஒப்புதலுடன் ஹாம் ரேடியோ தேர்வு எழுதி அழைப்புக்குறி பெற்று வானொலியில் பேசலாம். நீச்சல், மிதிவண்டி, இருசக்கர, நான்குசக்கர வாகனம் ஓட்டுதல் போல   குழந்தைகளுக்குக் அவசியம் கற்றுத்தர வேண்டிய விசயங்களுள் வயர்லெஸ் தகவல் தொடர்பும் ஒன்று. வானொலி அலைகள், ஆன்டெனா, ரிப்பீட்டர், அயன மண்டல வானிலை, சேட்டிலைட் தகவல் தொடர்பு என கற்றுக்கொள்ள ஏகப்பட்ட விசயங்கள் இருப்பதோடு பல புதிய நபர்களை உட்கார்ந்த இடத்திலேயே அறிமுகப்படுத்திக்கொண்டு தொடர்ந்து தீவிரமாகப் பயணிக்க, கவனச்சிதறலைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட விசயத்தில் Mastery-க்கு முயற்சிக்க பதின்ம வயது மாணாக்கர்களுக்கு ஹாம் ரேடியோ ஓர் அற்புதமான கருவி.

உங்களது மகன்/மகளுடன் சேர்ந்து மோர்ஸ் கோடு பழகுவது அதைக்  கற்றுக்கொள்ளுவதின் வேகத்தை நிச்சயமாக அதிகரிக்கும். அதற்கென ஏகப்பட்ட app-கள் உள்ளன. அதில் ஈடுபாடு இல்லையென்றாலோ, பொறுமை இல்லையென்றாலோ restricted grade தேர்வு எழுதலாம். Choose the best அடிப்படையில் ஒரு மணி நேரத் தேர்வு. இதில் தேர்ச்சிக்கு நாற்பது மதிப்பெண் எடுத்தால் போதுமானது.

Restricted grade-க்கும் General grade-க்கும் என்ன வித்தியாசம் என்றால் ஒலிபரப்பும் கருவியில் உள்ள Watt அளவு அனுமதியில் உள்ள உச்சவரம்பு மட்டுமே. அஃது ஒரு அதரப்பழசான சட்ட நடைமுறை என்பதால் யதார்த்தத்தில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை.

சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத் போன்ற நகரங்களில் WPC,  தேர்வுகளை அவ்வப்போது நடத்துகிறது. தேர்வுக்கட்டணம் 100 ரூபாய் மட்டுமே. தேர்ச்சி பெற்ற பின் அழைப்புக்குறி பெற one time கட்டணமாக 20 ஆண்டுகளுக்கு 1000 ரூபாய், 40 ஆண்டுகள் அல்லது உங்களது 75 வயது வரைக்கும் 2000 ரூபாய் மட்டுமே. இடையில் வேறு எந்த கட்டணமும் கிடையாது.

விண்ணப்பித்த பின் தேர்வு எழுதி, முடிவு வெளியிடப்பட்டு, பின்னர் டெல்லிக்கு விண்ணப்பித்து அழைப்புக்குறி பெற குறைந்தது 9 - 12 மாதங்களாகும். அதனால் ஹாம் வானொலி உங்களது படிப்பையோ, அலுவலகப் பணிகளிலோ இடையூறு செய்யாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

அழைப்புக்குறி பெற்ற பின் வயர்லெஸ் சாதனங்கள் வாங்கினால் போதுமானது. காவல்துறையினர் பயன்படுத்தும் வாக்கி  டாக்கி போன்ற கருவியை Handy என்றும் அவர்களது வாகனங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய பெட்டி போன்ற தனியாக மைக் உடன் கூடிய கருவி Base என்றும் சொல்லுவார்கள். Handy  3000 ரூபாயிலிருந்தும், ஆன்டெனாவுடன் கூடிய Base 6000 ரூபாயிலிருந்தும் கிடைக்கிறது. சீனத் தயாரிப்புகள் வழக்கம்போல் ஹாம் சந்தையிலும் புதிய பாய்ச்சலை உண்டாக்கியிருக்கிறது. மகிழ்வுந்திலும் ஆன்டெனா வைத்து Base கருவியை வைத்துக்கொள்ளலாம்.

ரெட்மி, சாம்சங், ஐபோன் என்று செல்போனில் பல்வேறு range இருப்பதைப்போல விலையுயர்ந்த பிராண்டு கருவிகளும் ஹாம் வானொலிப்  பயன்பாட்டில் உண்டு. உங்களுடைய தேவை, பொருளாதார வசதி போன்றவற்றைப் பொறுத்து கருவிகளை வாங்கலாம். மற்றபடி, இது வரவேற்பறையில் வைக்கக்கூடிய பொருள் அல்ல என்பதால் விலையுயர்ந்த சமாச்சாரமாக இருக்குமோ என்று அச்சப்படத் தேவையில்லை.

VHF (Very High Frequency, 30 - 300 MHz) அலைவரிசைக்கு Repeaters உண்டு. ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் ஒலி அலைகளைப் பெற்று amplify செய்து வேறு ஒரு அலைவரிசையில் அதிக சக்தியுடன் ஒலிபரப்பு செய்யக்கூடிய தானியங்கி கருவியை ரிப்பீட்டர் என்பார்கள்.  கோயமுத்தூர், உடுமலைப்பேட்டை, கொடைக்கானல், இராஜபாளையம், ஏற்காடு, சென்னை என பல இடங்களில் தன்னார்வலர் குழுக்களால் ரிப்பீட்டர்-கள் நிறுவப்பட்டு தினசரி காலையும் மாலையும் வருகைப்பதிவுகள் நடத்தப்படுகின்றன.

புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் நமது செல்போன் நெட்வொர்க்குகள் டவர் சாய்ந்தோ, வெள்ளத்தில் மூழ்கியோ, கேபிள்கள் அறுந்தோ, மின் இணைப்பு இல்லாமலோ செயல்படாமல் நின்றுவிடும். ஆனால் ஹாம் ரேடியோவில் பேசுவது நேரடியாக  ரிப்பீட்டரை அடைந்து காற்றில் பயணித்து அடுத்த ஹாம் கருவியை அடைவதால் நடுவில் எத்தகைய உபகரண உதவியும் தேவையில்லை. அதனால் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் தகவல் தொடர்பை மீட்டு, உதவி புரிவது ஹாம் நெட்வொர்க் மட்டுமே.

காவல்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, போக்குவரத்துக் கழகம், மாநகராட்சிகள், தீயணைப்புத் துறை போன்றவற்றின் வயர்லெஸ் நெட்வொர்க் அலைவரிசை அந்தந்தத் துறை பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதோடு பேரிடர் காலங்களில் அவர்களது துறை சார்ந்த தேவைகளுக்கே அந்த அலைவரிசை போதாது என்பதால் பொதுமக்களின் அவசரகால தகவல் தொடர்புக்கு ஹாம் ரேடியோ ஆர்வலர்களின் சேவை மிகவும் முக்கியமானது.

ஹாம் ரேடியோ பயனாளர்களுடன் காடுகளில் ட்ரெக்கிங் செல்லும் குழுக்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள ஒரு குறிப்பிட்ட Simplex mode அலைவரிசையிலும் (3 - 10 கிமீ தொலைவுக்குள்), நகரப் பகுதிகளுக்குத் தொடர்புகொள்ள ஒரு ரிப்பீட்டருடனும் இணைந்திருப்பர். அதனால் காட்டுக்குள் காணாமல் போவதோ, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் சிக்குவதையோ தவிர்க்கப்படும். மேலை நாடுகளில் இத்தகைய நடைமுறைகள் பரவலாக புழக்கத்தில் உண்டு. சுனாமி, கஜா, ஒக்கி புயல் காலத்தில் ஹாம் வானொலியாளர்கள் மிக முக்கிய களப்பணியாளர்களாக இருந்தனர். தேனி குரங்காணி காட்டுத்தீ விபத்தில் வயர்லெஸ் கருவிகள் யாரிடமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கும்போது May day, May day, May day என்று சொல்லி தங்களது பெயர், இடம், ஆபத்தின் தன்மை, என்ன மாதிரியான உதவி தேவை என்பதை சொல்லுவது ரேடியோ ஒலிபரப்பில் அனைத்து அலைவரிசைகளிலும் நடைமுறை.  வயர்லெஸ் ரேடியோவை அருகிலுள்ள ரிப்பீட்டர் அலைவரிசையில் stand by-இல் வைத்துவிட்டு தங்களது அலுவல்களைப் பார்ப்பது ஹாம் பயனாளர்களின் பழக்கம். அதனால் ரிப்பீட்டர்களில் May day அழைப்பு வந்தால் யாரோ ஒருவர் உடனடியாக பதில் சொல்லுவதோடு உடனடியாக அடுத்தகட்ட உதவி நடவடிக்கைகளுக்கு ஆவண செய்வர். அதாவது யாரோ ஒருவர் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நமக்காக உதவக் காத்திருப்பார்.

One world, one language என்ற வாசகத்துடன் Hobby என்றே அறியப்படும்  ஹாம் வானொலி மிகவும் அன்றாடம் இயல்பாகப்  பயன்படுத்தப்பட்டாலும் அவசர காலங்களில் மிக முக்கியமானது. வரும் ஆண்டில் எதையாவது புதிதாகக் கற்கவேண்டும் என்று நினைத்திருந்தால் ஹாம் ரேடியோ பயன்பாட்டைக் கற்றுக்கொள்ளுங்கள். என்றாவது ஒருநாள் அஃது உங்களைப்  பெருமைப்படச் செய்யும்.

73,
பிரபு
VU3WWD

https://www.facebook.com/595298772/posts/10156948731663773/