Saturday, July 4, 2020

சீனா தேசம் சென்றாலும் சீர் கல்வியை கற்றுக் கொள்

Lafees Shasheed
2020-07-04

'சீனா தேசம் சென்றாலும் சீர் கல்வியை கற்றுக் கொள்' என்பது முஸ்லிம் சமூகத்தில் மிகவும் பிரபல்யமான ஒரு நாயக வாக்கு. ஆனால் உண்மையில் இந்த ஹதீஸை (?) ஒரு புனைந்துரை (மவ்லூஆத்) என்கிறார்கள் ஹதீஸ் திறனாய்வாளர்கள். சிலர் இதனை புனையப்பட்ட அறிவிப்பு கூட அல்ல, மாறாக இது இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கூற்று என்கிறார்கள். எப்படியோ இது ஆதாரபூர்வமான நாயக வாக்கு அல்ல. ஆனால் முஸ்லிம் வெகுஜன உளவியலில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கூறப்பட்டுள்ள ஹதீஸ்களில் இந்த அறிவுப்பு அளவுக்கு நன்றாக பதிந்து போன வேறு ஹதீஸ்கள் கிடையாது. கல்வி குறித்த இதர ஆதாரபூர்வமான ஹதீஸ்களை விஞ்சிய பிரபல்யம் 'சீனா தேசம் சென்றாலும்...' ஹதீஸுக்கு உள்ளது. இந்த அறிவிப்பின் கருத்தாக ' ஒருவேளை, சீனா வெகு தொலைவில் உள்ள நாடாக அக்காலத்தில் கருதப்பட்டமை ஆக இருக்கும். அல்லது அது (சீனா) அக்காலகட்டத்தில் விஞ்ஞானத் துறையினதும், தொழிற் துறையினதும் தொட்டிலாக புகழ்பெற்று விளங்கியதனாலும் இருக்கும் ' என்கிறார், உஸ்தாத் முர்தஸா முதஹ்ஹரி... ஆனால் எனக்கு ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலியின் அணுகுமுறை அடிப்படையில் இந்த பிரபல்யமான கூற்று குறித்து சிலவற்றை முன் வைக்கலாம் என்று தோன்றுகிறது.

முஸ்லிம்களின் மார்க்கம் பற்றிய புரிதலில் காணப்படும் ஒத்திசைவற்ற தன்மை (Incoherence) குறித்து கவனம் குவிப்பார், எமது ஆசிரியர் ஷெய்க் அல் கஸ்ஸாலி. அதாவது ஒரு விடயத்தில் முன்னுக்குப் பின் முரணாக கோட்பாட்டையும் நடைமுறையையும் கட்டியெழுப்பி இருப்பது.

உதாரணமாக நம்பிக்கை சுதந்திரம் குறித்து முஸ்லிம் அறிஞர்கள் வலியுறுத்தி பேசி இருக்கிறார்கள். இந்த மார்க்கத்தை ஏற்பதில் எந்த நிர்பந்தமும் இல்லை, ஒருவர் புற ரீதியான அழுத்தங்கள் எதுவுமின்றி சுயமாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் சட்ட வல்லுநர்களிடத்தில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை. ஆனால் சமவேளையில் இஸ்லாத்தில் இருந்து ஒருவர் வெளியேறினால் அவருக்கு மரண தண்டனை என்றும் அவர்கள் கூறுவார்கள். இது நம்பிக்கை சுதந்திரத்துக்கு எதிரான ஒரு கருத்து என்பது அவர்களுக்கு புரிவது இல்லை. இத்தகைய ஒத்திசைவற்ற புரிதல்களை கேள்விக்குட்படுத்தி அறிவுப் புலத்திலும், பொது மன்றத்திலும் இயங்கியவர், முஹ‌ம்ம‌த் அல் கஸ்ஸாலி. அதே அணுகுமுறை அடிப்படையில் 'சீனா தேசம் சென்றாலும்....' என்கிற அறிவிப்பை நோக்கலாம்.

இந்த அறிவிப்பை உலமாக்களும், மார்க்க உபன்யாசகர்களும், ஆன்மீக பயிற்றுவிப்பாளர்களும், பொது மக்களும் அடிக்கடி பாவித்து வருகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் முஸ்லிம் சமூகத்தில் மார்க்க கல்வி மற்றும் உலகக் கல்வி என்கிற என்கிற பிரிவினையும் தீவிரமாக உள்ளது. உலகக் × மார்க்கக் கல்வி என்கிற எதிர் முரணை உருவாக்கி உலமாக்கள் உலகக் கல்வியை விட மார்க்கக் கல்வியை சிறந்ததாகவும், ஆன்மிக பரிபூரணம் கொண்டதாகவும் வாதிட்டு வருகிறார்கள். இந்த வகையில் மார்க்கக் கல்வி என்பது இன்றைய காலத்தின் மாபெரும் அதிகார சொல்லாடல் கட்டுமானமாக இருந்து வருகிறது. இந்த சொல்லாடல் கட்டுமானத்தின் செல்வாக்கு காரணமாகவே மத்ரஸாக்களின் அடித்தளம் இவ்வளவு பலம் வாய்ந்ததாக முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகிறது. இதன் சமூக பரிமாணங்களை ஆராய இப்படியான பதிவுகளின் எல்லை போதாது. ஆனால் நுணுக்கமாக யோசித்துப் பார்த்தால் மேற்போந்த 'சீனா தேசம் சென்றாலும்....' என்கிற ஹதீஸின் கருத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் இந்த நடைமுறை அடிப்படையிலேயே முரண்படுகிறது.

நபிகளாரின் காலத்தில் சீனா தேசத்தில் எந்த மத்ரஸாவும் இருக்கவில்லை ; இறைதூதர்களும் இருக்கவில்லை. எனில் அங்கே சென்று அறிவு பெறுவது என்பதன் அர்த்தம் என்ன? உண்மையில் அப்படி ஒன்று இருப்பின் அது ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி கூறியது போன்று விஞ்ஞானத்தினதும், தொழில் நுட்பத்தினதும், தத்துவத்தினதும் அறிவு தான். ஏனெனில் அது தான் அப்போது சீனா தேசத்தில் இருந்தது. உண்மையில் அல் குர்ஆனிய உலக நாகரீக கண்ணோட்டத்தின் படி அறிவு என்பது பிளவுபடாதது. அனைத்து அறிவுகளினதும் மூலம் பிரபஞ்சத்தின் தலைவனான இறைவனே. இந்த தெளிவு எமது முஸ்லிம் அறிஞர்களுக்கு இருந்ததனால் தான் அவர்கள் கிரேக்க தத்துவத்தையும், பாரசீக மெய்யியலையும், இந்திய கணிதத்தையும் அரபியில் கொண்டு வந்தார்கள். அவற்றை அகவயப்படுத்திக் கொண்டு அல் குர்ஆனிய உலக நாகரீக கண்ணோட்டத்திற்கு முரண்படாமல் வளர்த்து எடுத்தார்கள். அல் குர்ஆன், ஸுன்னாவை போலவே இயற்கையும் இறைவனை காட்டும் மூலங்களில் ஒன்று தான். இதனால் தான் 'அல் குர்ஆன் பேசும் பிரபஞ்சம் ; பிரபஞ்சம் மெளன அல் குர்ஆன்' என்று கூறினார், ஷெய்க் அல் கஸ்ஸாலி. உலகக் கல்வி, மார்க்க கல்வி என்கிற பிரிவினை எமது அறிவு மரபுக்கு அந்நியமான ஒன்று. அது நவீனத்துவத்தை எதிர் கொண்ட பழமைவாதத்தின் தோல்வி உளவியலின் வெளிப்பாடே அன்றி இஸ்லாமிய பண்பாட்டு மரபின் குரலல்ல அது.

பாரியதொரு கலாசார, விஞ்ஞான இயக்கத்தை இஸ்லாம் உலகிற்கு வழங்கியது. பல நூற்றாண்டுகளாக அதுவே கல்வி, அறிவியல், கலாசார, பண்பாட்டு துறைகளில் கொடி கட்டிப் பறந்தது. இப்னு சீனா, அல் பிரூனி, இமாம் கஸ்ஸாலி ஒமர் கைய்யாம் போன்ற மகத்தான இஸ்லாமியக் கற்றறிவாளர்களை அதுவே உருவாக்கியது. ஆனால் இந்த மரபை கொண்டாடும் நாம் சமவேளையில் உலகக் கல்வியை விட மார்க்க கல்வி உயர்ந்தது என்கிறோம்.. இத்தகைய மார்க்கம் குறித்த ஒத்திசைவற்ற புரிதல்களை களைவதே எமது எழுச்சிக்கான அடிப்படை நிபந்தனை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இமாம் முஹம்மத் அப்துஹு, ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி போன்றவர்களின் கோட்பாடு சட்டகங்களில் சமூக எழுச்சிக்கான முக்கியமான முறைமை சார்ந்த அணுகுமுறைகள் உள்ளது. அவற்றை நாம் கவனமாக பயில வேண்டும். சிந்தனை என்பது தொடரியக்கம். விமர்சன சிந்தனை தான் அறிவு!

#இங்கிருந்து அறிவோம்

#பாதையை_செப்பனிடல்

#பயகம்பர் நாயகமே

#இது_போன்று இன்னொன்றில்லை

No comments:

Post a Comment