Wednesday, August 26, 2015

ஆளாளுக்கு ஒரு கோடி குடுத்துட்டா

இதை எழுதி ஒரு வருஷம் ஆச்சு. இருந்தாலும் இந்த பேச்சு இன்னும் முடியல. ஃபேஸ்புக் முழுக்க சுத்திக்கிட்டே இருக்கு. ஸோ ரீபோஸ்டிங் ஒன் மோர் டைம்.
"அதுக்கு 4000 கோடி ஒதுக்கினோம்னு. இதுக்கு 5000 கோடி ஒதுக்கினோம்னு சொல்றாங்க. இந்தியாவுல இருக்கறதே மொத்தம் 120 கோடிதான். ஆளாளுக்கு ஒரு கோடி குடுத்துட்டா பிரச்சனை இல்லையே.."
இப்படி ஒரு முட்டாள்தனமான பதிவை மூஞ்சிபுக்ல எவனோ ஒருத்தன் போட்டு இருக்கான். அது கூட ஏதோ விளையாட்டுக்குனு நினைச்சு விட்டுடலாம். அதை ஒரு பிரபல பத்திரிக்கை பிரசுரம் பண்ணி இருக்கு. இவனுகளுக்கு அறிவு வேணாமா? இது மக்களுக்கு ஒரு தவறான கண்ணோட்டத்தை உருவாக்காதா?? பொருளாதாரம்னா என்னனு கேக்குறவன் எழுதுன பதிவுதான் இது.
முதலில் ரூபாய், டாலர், யூரோ எல்லாமே வெறும் பேப்பர்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆதியில் நெல் குடுத்தாத்தான் பருப்பு கிடைக்கும். பஞ்சு குடுத்தாத்தான் மிளகாய் கிடைக்கும். ஆடு குடுத்தாதான் மாடு கிடைக்கும். இதுதான் பண்ட மாற்று முறை.
இந்த முறை வர்த்தகத்துக்கு சிரமமாக இருந்ததால், பண்டத்துக்கு தங்கம், வெள்ளி மாற்றாக அளிக்கப்பட்டது. மக்கள் நெல்லை குடுத்துவிட்டு தங்கத்தை வாங்கிக் கொண்டனர். பின்னர் தங்கத்தை கொடுத்துவிட்டு பருப்பை வாங்கிக் கொண்டனர். இதனால் தங்கத்துக்கும், வெள்ளிக்கும் மதிப்பு உண்டானது. அதனால் அதற்கு தட்டுப்பாடும் உருவானது. மக்கள் அவற்றை பதுக்க ஆரம்பித்தார்கள்.
அதன் பின்னர்தான் பணம் உருவாக்கப்பட்டது. பண்டத்தை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்றும், பின்னர் பண்டத்தைக் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்குப் பொறுப்புதான் ரிசர்வ் வங்கி (இந்தியாவில்).
இப்போ நம்ம பிரச்சனைக்கு வருவோம். ரூபாய்னா வெறும் பேப்பர்னு புரிஞ்சுக்கிட்டோம்ல. இப்போ எல்லாருக்கும் ஒரு கோடி ரூபாய் கொடுத்தா, அது வெறும் பேப்பர் குடுத்தது போலத்தான். என்கிட்ட ஒரு வாழைப்பழம் இருந்தா, அதை நான் உனக்கு 5 ரூபாய்க்கு தர மாட்டேன். ஏன்னா என்கிட்ட ஏற்கனவே ஒரு கோடி இருக்கு. அப்பறம் எதுக்கு அந்த 5 ரூபாய்?? எனக்கு இப்போ பண்டம்தான் முக்கியம். பணம் முக்கியம் இல்ல.
இதனால பணத்தோட மதிப்பு சர்ர்ருனு இறங்கும். வெளி நாட்டு காரனுக்கு இந்தியா இப்படி பண்ணிடுச்சினு தெரிஞ்ச உடனே நம்ம நாட்டுடனான ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை போட்டுடுவான். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பல ஆயிரம் ரூபாயாயிடும். ஏன் லட்சங்கள் கூட ஆகலாம்.
பல ஆப்பிரிக்க நாடுகள்ள இந்த நிலைமை இருக்கு. அவங்க ஊர்ல அவங்க நாட்டு பணம் ஏற்றுக் கொள்ளப் படாதுனு கடைகள்ள போர்டு தொங்கும். டாலர் அல்லது யூரோ மட்டுமே ஏற்றுக் கொள்வோம்னு சொல்லுவான். நம்ம நாட்டுக்கும் அதே நிலைமை வரும். அப்பறம் எல்லார் கிட்டயும் ஒரு கோடி இருந்தாலும், ஒரு டாலர தேடி அலைய வேண்டியதுதான்.
நான் ஒன்றும் பொருளாதார மேதை இல்லை. இது அடிப்படை பொருளாதாரம். கூச்சமே இல்லாம அந்த பதிவுல போய் "இது ஏன் நம்ம அரசியல் வாதிகளுக்கு தோணல"னு கமெண்ட் போட்டு இருக்கானுக..

No comments:

Post a Comment