Friday, September 4, 2015

பெரியார் சமஸ்கிருதம் பயிலாதவர் தான்

6) ஈவேரா சமஸ்கிருதம் பயின்றவரா? பின்பு எதை வைத்து இந்து வேதங்களுக்கு அர்த்தம் கூறினார்?

பெரியார் சமஸ்கிருதம் பயிலாதவர் தான். ஆனால் அவர் சொல்லியதில் எது தவறென உங்களால் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா? அண்ணல் அம்பேத்கர் சமஸ்கிருதம் பயின்றவர் என்பது மட்டுமல்ல, இந்து மதம் சார்ந்த சமஸ்கிருத அறிவுஜீவிகளின் விளக்கங்களையே மேற்கோள் காட்டி இந்து மதத்தை நார்நாராக கிழித்து தொங்க விட்டார். எதை மறுக்க முடிந்தது உங்களால்? வேதம் என்ன சொல்லுகிறது? யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்றா? எல்லோருக்கும் சாமியை தொட பாத்யதை உண்டு என்றா? பார்ப்பனன் தலையிலும் பிறக்கவில்லை, சூத்திரன் காலிலும் பிறக்க வில்லை, எல்லோரும் சமமென்றா? எதை பெரியார் திரித்துவிட்டார்? இந்து மத வேதங்களும் புராணங்களும் ஆபாச கதைகளின் தொகுப்பன்றி வேறென்ன?


7) பிராமணரை எதிர்த்த ஈவேரா ராஜாஜியுடன் மட்டும் ஏன்நட்பில் இருந்தார்?

தந்தை பெரியார் ராஜாஜியுடன் நட்பு பாராட்டினார் தான். ஆனால் ராஜாஜியின் இந்தி திணிப்பு, குலக்கல்வி முறை ஆகியவற்றிற்கு பெரியாரும் அவர் தொண்டர்களும் காட்டிய எதிர்வினைப் போராட்டம் அவர் கொள்கையில் உறுதியாக நின்றார் என்பதற்கான சான்று. பார்ப்பனியம் தான் எங்கள் எதிரியே அன்றி பார்ப்பனர்கள் அல்ல.

8) உலகில் இந்தியாவில் மட்டும்தான் சாதி சண்டைகள் நிகழ்கின்றனவா?

உலக அளவில் இந்து மதம் தானே சாதியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்திய கிறிஸ்தவர்களிடம் மட்டும்தான் சாதி போக்கு இருக்கிறதென்பதும் சாதி இந்து மதத்தின் ஊற்றுக்கண் என்பதற்கான ஆதாரமே! ஆக இந்து மதம் எங்கெல்லாம் கிளை பரப்புகிறதோ அங்கெல்லாம் சாதியும் சேர்ந்தே பரவும். ஆனால் இந்தியாவைப் போன்று வேறெந்த நாட்டிலும் சாதி இத்தனைக் அகோரமாய் பல்லிளிக்கவில்லை. அப்படி வேறு எந்த நாட்டில் சாதி கலவரம் ஏற்பட்டது , அதன் பின்னனியிலுள்ள இந்து மதம் சாராத வேறு எந்த மதம் இருந்தது என்பதற்கான விவரம் இருந்தால் பகிரவும்.

9) எந்த சலுகையும் இல்லாமல், 100% வேலை வாய்ப்பும் மருக்கப்படும் பிராமணருக்கு இருக்கும் தேசப் பற்று உங்களில் எவருக்காவது உள்ளதா?

100% வாய்ப்புகள் மறுக்கப்பட்டு...... இந்த வாக்கியத்தை படித்து முடிக்கும் முன்பே பார்ப்பனர்கள் மீது அளவில்லா பரிதாபம் பொங்கியெழுவதை தவிர்க்க முடியவில்லை. அய்யோ பாவம் பார்ப்பனர்கள், அவர்கள் பார்ப்பனர்களாய் பிறந்ததன்றி வேறு என்ன பாவம் செய்தார்கள்? அவர்களை ஏன் இப்படி வஞ்சிக்க வேண்டும்? 100% வாய்ப்பு மறுக்கப்படும் பார்ப்பனர்கள் என்பது எவ்வளவு அப்பட்டமான பொய். தமிழக அளவில் 39% உம், இந்திய அளவில் 49%உம் பொது பிரிவில் உள்ளது. இன்றும் அரசின் அத்தனை உயர் பொறுப்புகளிலும் பார்ப்பனர்கள்தான் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். 3000ஆண்டுகளாக நூறு சதவீதம் மறுக்கப்பட்டவர்களுக்கு இப்போது தமிழகத்தில் 19 சதவீதமும் இந்திய அளவில் 22.5 சதவீதமும் வழங்கப்படுவதுதான் இவர்கள் கண்ணை உறுத்துகிறது. இவர்களின் நீலிக்கண்ணீர் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறுகிறார்களே என்ற சாதி வயித்தெரிச்சலன்றி வேறில்லை. பார்ப்பனர்களின் தேசப் பற்று? இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மனியின் கை ஓங்கியிருந்த சமயம் இங்கிருந்த பார்ப்பனர்கள் ஜெர்மன் கற்க தொடங்கினார்கள் என்பதிலிருக்கிறது இவர்களது தேசப்பற்று. இவர்களது சில்வர் டங்க் ஆங்கிலமும் இப்படியான பிழைப்புவாத பார்ப்பனியம் தான்.

10) இந்து தர்மத்தை மட்டும் வசைபாடும் பகுத்தறியாதவாதிகள் இஸ்லாம், கிறுத்துவத்தில்உள்ள மூட பழக்கங்களை பேசாதது ஏன்?

10. எல்லா மதங்களையும் பகுத்தறிவுவாதிகள் புறக்கணிக்கவே செய்கிறார்கள். ஆனால் இந்து மத அளவிற்கு வேறெந்த மதமும் மனித ஏற்றத்தாழ்வையே அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. எங்களின் மீதான இழிவை நீக்குவதே பிரதானமென்பதால் இந்துத்துவம் முதன்மையாக விமர்சிக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனியம் தான் விமர்சிக்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு துணை நின்று காக்கவேண்டியதே உண்மையான நடுநிலைவாதியின் வேலை. அதைத்தான் பகுத்தறிவாளர்கள் செய்கிறார்கள். இந்தியா இந்துக்கள் மிகுந்த நாடு. அமெரிக்காவிலா போய் இந்துத்துவத்தை விமர்சிக்க முடியும்? எங்கு எதற்கான தேவை இருக்கிறதோ அங்கு அதை செய்வதே பகுத்தறிவாளன் பணி.

No comments:

Post a Comment