Viduthalaiarasu
Via Facebook
2017-Feb-19
"திராவிடக் கட்சிகளால்தான் நாடு குட்டிச் சுவரானது" - என்று ஒப்பாரி வைத்து தமிழ் நாட்டை காப்பாற்றப் புறப்பட்டிருக்கும் திடீர் ஊழல் ஒழிப்பு போராளிகளின் மேலான கவனத்திற்கு,
*ஊழல் 1*
தஞ்சையை ஆண்ட மன்னர் ஒருவர் படை பரிவாரங்களுடன் பயணம் சென்றாராம். இடையே ஒரு இடத்தில் உணவருந்திவிட்டு, தாம்பூலம் தரித்துக்கொண்டு மந்திரி பிரதானிகளிடம் பேசிக் கொண்டிருந்தாராம். பேச்சுவாக்கில் இன்று என்ன திதி என்று கேட்டாராம். இன்றிருப்பதை போல் அன்று நாட்காட்டி இல்லாததால் மந்திரிகள் உடனடியாக ஒரு பஞ்சாங்க பார்ப்பனரை மன்னரிடத்தி்ல் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
பஞ்சாங்கத்தை கணித்த பார்ப்பனர், "மன்னா, இன்று ஏகாதசி திதி" - என்று சொல்ல மாவீரர் குலத்திலகமான மன்னாதி மன்னரும், மங்குனி மந்திரிகளும் அதிர்ச்சியடைந்து அலறினார்களாம்!
காரணம், ஏகாதசியன்று மன்னர் விரதமிருப்பார். உணவருந்தமாட்டார். ஆனால், இன்று உணவும் உண்டு தாம்பூலமும் தரித்தாகிவிட்டது. என்ன செய்வது? விரத பங்கமாகிவிட்டதே? பாவம் வந்து சூழ்ந்து விட்டதே? நரகத்திற்கு செல்லாமல் தப்புவது எப்படி? நம்பெருமான் மோட்சத்திற்கு செல்வதெப்படி? என ஒரே பரபரப்பு, அங்கலாய்ப்பு.
பரிகாரமென்ன பூதேவரே? என்று பஞ்சாங்க பார்ப்பனரின் காலைப்பிடித்து மன்னர் கெஞ்ச, *"கவலைவேண்டாம் அரசே, பரிகாரம் உள்ளது, நீங்கள் தங்கியுள்ள இந்த இடத்தில் கிழக்கு மேற்காக அய்ம்பத்து நான்கு வீடுகளும், வடக்கு தெற்காக அய்ம்பத்து நான்கு வீடுகளும் கட்டி, இரண்டு வீட்டிற்கு ஒரு கிணறு வெட்டி, ஆகமொத்தம் நூற்றி எட்டு அந்தணர்களுக்கு பொன்னும், பொருளும், நிலமும், பசுவும் கொடுத்து குடியமர்த்தினால் செய்த பாவம் தீருமென்று"* - சொன்னானாம் பஞ்சாங்கப்புலி! அப்படியே ஆகட்டுமென்றான் மன்னன்.
அரசகட்டளை பிறந்தது! அந்தணர்கள் மனம் குளிர தாணங்கள் வாரிவழங்கப்பட்டது,
வந்த பாவம் தொலைந்ததென்று அகமகிழ்ந்தானம் அறிவுகெட்ட அரசன்.
"உத்தமமான தானத்தை செய்ததால் இன்று முதல் இவ்வூர் உத்தமதானபுரம்" - என்று அழைக்கப்படும் என புகழ்ந்து பாடினார்களாம் புத்திகெட்ட புலவர் பெருமக்கள்!
இந்த உத்தமதானபுரம் தஞ்சைமாவட்டம்
பாபநாசம் அருகில் உள்ளது. இதுதான் மகாஉபாத்யாயா உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்! தன் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் தனது ஊரின் தோற்றத்தை எழுதியிருக்கிறார் தமிழ்தாத்தா.
*ஊழல் 2*
ஒருநாள் மன்னர் கிருஷ்ணதேவராயர்
சோகத்துடன் அரசவையில் அமர்ந்திருந்தாராம். என்னவென்று தெரியாமல் எல்லோரும் கலங்கி நிற்க.
அரண்மனை ராஜகுருவை அழைத்தாராம் மன்னர். வந்த ராஜகுருவின் காலில் விழுந்த மன்னரைப் பார்த்து மங்கலம் உண்டாகட்டும் என்று ஆசீர்வாதம் செய்துவிட்டு "ஏனிந்த கவலை?" - என்று கேட்டாராம் ராஜகுரு.
"குலகுருவே, எனது தாயார் மரணப்படுக்கையில் இருந்தபோது மாம்பழம் சாப்பிட வேண்டுமென ஆசைப்பட்டார். ஆனால், உயர்ரக மாம்பழங்களை கொண்டு வருவதற்குள் உயிர் பிரிந்து விட்டதே, பெற்ற தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாத பாவியாகி விட்டேனே, இதற்கு பரிகாரமென்ன?" - என்று கேட்டாராம்.
அதற்கு ராஜகுரு "மன்னா, இதென்ன பிரமாதம்? நமது நாட்டிலுள்ள வேதமறிந்த பிராமணர்களுக்கு தங்கத்தால் மாம்பழம் செய்து தானம் கொடுத்தால் பாவம் தீரும், தங்களது தாயின் ஆசையும் நிறைவேறும்" - என்றாராம்.
மன்னரின் பாவம் தொலைக்க மக்கள் பணத்தில் தங்க மாம்பழம் வழங்கப்பட்டது பார்ப்பனர்களுக்கு!
*யோக்கியன் வாரான், செம்ப எடுத்து உள்ள வை*
இப்படி மன்னராட்சி காலத்திலும், அதன்பிறகு வந்த வெள்ளையர் காலத்திலும் மக்கள் பணத்தை, பொதுச் சொத்தை, அரச சுகபோகத்தை, வேலை வாய்ப்பை ஏகபோகமாக கொள்ளையடித்த இவர்கள்தான் இன்று ஊழல் ஒழிப்பு பேசுகிறார்கள்.
ஒரு அறுபது ஆண்டுகளாக,தேர்தல் முறை வந்த இந்தகாலத்தில் அரசை கைபற்றிய சாமானிய மக்களுக்கு அதை முறையாக, மக்களுக்குரியதாக பயன்படுத்த தெரியவில்லை.
புதிதாக உள்ளே நுழைந்தவன் கிடைத்தவரையில் சுருட்டுகிறான். கேள்வி கேட்பாரற்று அன்று பட்டபகலில் கொள்ளையடித்த பார்ப்பனர்கள் இன்று
புனிதர் வேடம் போடுகின்றனர், ஊழல் ஒழிப்பு என ஆடுகின்றனர்.
சில காவல் துறையினர் சில்லறைத் திருடர்களை கண்டும் காணாமல் இருப்பது போல இருப்பார்கள். கையூட்டு பெற்றுக் கொண்டு வளர்த்தும் விடுவார்கள். ஆனால், தங்களு்க்கு ஆபத்து வரும் நேரத்தில்,
மக்களிடத்தில் அம்பலப்படும் நேரத்தில் சில்லறைத் திருடர்களை பிடறியில் அடித்து கைது செய்து வழக்கும் பதிந்து தங்களது நேர்மையை நிலைநாட்டுவார்கள்!
இதைப் போன்றது தான் பார்பனர்களின் ஊழல் ஒழிப்பு நாடகம்! நம்மாட்கள் கரி திருடியவன், பார்ப்பனர்கள் ரயிலையே விழுங்கியவர்கள்!
இன்று, ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
ஆனால், உத்தமதானபுரங்களும், சதுர்வேதிமங்கலங்களும், மடாதிபதிகளின் கணக்கற்ற சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படுமா? பறிமுதல் செய்ய போராடுவார்களா ஊழல் ஒழிப்பு போராளிகள்?
இந்திய சமூக வரலாற்றை நுட்பமாக
ஆய்ந்து, அறிந்து, தேர்ந்து, தெளியாமல் இது புரியாது.
நமக்காகவே இந்த சமூகத்தை அலசி ஆராய்ந்து தங்களது சிந்தனைகளை பல்லாயிரம் பக்கங்களில் செதுக்கி வைத்திருப்பவர்கள் அம்பேத்கரும், பெரியாரும்.
இவர்களது எழுத்துக்களை நான்கு பக்கமாவது வாசிக்காமல் இன்றைய இளைஞர்கள் எந்த போராட்டம் செய்தாலும் அது பயனற்றதாகும். பார்ப்பனர்க்கே பயனளிப்பதாகும். ஆழ்ந்து சிந்தியுங்கள்
No comments:
Post a Comment