பெரியாரின் சபை நாகரீகம்
*நிகழ்வு 1:*
வடலூர் சத்தியஞான சபைக்கு வந்தார் பெரியார். ஒருகட்டம் வரை வந்தவர் ஜோதி எரிந்து கொண்டிருக்கும் இடத்துக்குள் நுழைய மறுத்தார்.
அங்கே, 'கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’ என எழுதப்பட்டிருந்தது.
எவ்வளவோ வலியுறுத்தினார்கள். 'நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்’ என மறுத்த மாண்பாளர் தந்தை பெரியார்.
*நிகழ்வு 2:*
சைவப்பழமான திரு.வி.க-வுடன் பெரியாரின் நட்பு உருக்கமானது. 'நான் செத்தால் அழுவதற்கு என நீங்கள்தான் இருக்கிறீர்கள்’ என இறப்புக்குச் சில நாட்களுக்கு முன் பெரியாரிடம் சொன்னவர் திரு.வி.க.
.... அவர் மறைந்தபோது தனது தொண்டர்களுடன் மயானக் கரைக்கு வந்தார் பெரியார். திராவிடர் கழகத்தினர், திரு.வி.க-வுக்குக் கொள்ளி வைக்கத் தயாராக இருந்தனர்.
...அப்போது தமிழ் அறிஞர்களான அ.ச.ஞானசம்பந்தனும், மு.வரதராசனாரும் வந்து, 'திரு.வி.க. எங்கள் இருவரைத்தான் கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார்’ எனச் சொன்னார்கள்.
.... 'சரி’ என, தன் தொண்டர்களை அமைதியாக இருக்கச் சொன்னார் பெரியார். 'திருவாசகத்தில் சிவபுராணத்தைப் பாடப்போகிறோம்’ என அ.ச.ஞா சொன்னார். 'அப்படியே செய்யுங்க’ எனச் சொல்லிவிட்டு அவர்கள் பாடும்போது எழுந்து நின்றவர் பெரியார்.
*நிகழ்வு 3:*
குன்றக்குடி அடிகளாரைப் பார்க்க, அவரது மடத்துக்கே பெரியார் ஒருமுறை போனார். அவருக்கு வைதீக முறைபடி பூரண
கும்ப மரியாதை தரப்பட்டது.
அடிகளார், மரியாதையின் அடையாளமாக விபூதியை எடுத்துப் பூசினார். பெரியார் அழிக்கவில்லை.
சில நாட்கள் கழித்து பெரியாரிடம் ஒரு தொண்டர் கேட்டபோது, 'விபூதியை நான் எடுத்துப் பூசிக் கொள்ளவில்லை. அடிகளார்தான் பூசிவிட்டார். அப்போது தலையைத் திருப்புவது அவரை அவமதிப்பதுபோல் ஆகாதா?’ எனக் கேட்டார்.
அடுத்தவர் உணர்வுக்கு மரியாதை கொடுத்து நடந்தவர்.
*நிகழ்வு 4:*
தான் நடத்திய அநாதைகள் இல்லத்தில் பெரியார் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சந்திக்க வந்த கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு பேசிக்கொண்டு இருந்தார்.
கடவுள் வாழ்த்து என்ற பாடலை அந்தப் பிள்ளைகள் வாசித்ததை நெ.து.சு. கவனித்து, "உங்கள் பிள்ளைகள் மட்டும் கடவுள் வாழ்த்து படிக்கிறார்களே?" எனப் பெரியாரிடம் கேட்டார்.
"ஆதரிக்க ஆள் இல்லாத அநாதைப் பிள்ளைகள் இவர்கள். சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக நாத்திகத்தை அவர்கள் தலையில் திணிக்கவில்லை.
வயது வந்தால் அவர்கள் படித்துத் தெரிந்துகொள்வார்கள். தங்கள் சிந்தனையால் அவர்கள் நாத்திகர்களானால் சரி" எனச் சொன்னார்.
*நிகழ்வு 5:*
திருச்சியில் ராமசாமி அய்யங்கார் என்பவருடைய கலைக் கல்லூரி. அந்தக் கல்லூரியின் ஒரு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தந்தை பெரியார் செல்கிறார்.
விழாவின் துவக்க நிகழ்ச்சியாக கடவுள் வாழ்த்து பாடப்படுகிறது. அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். பெரியாரும் எழுந்து நிற்கிறார்.
அதைக் கண்ட ராமசாமி அய்யங்கார் பதறிப் போய் வேகமாக வந்து “நீங்க உட்காருங்கோ” என்கிறார். பெரியார் மறுத்து விடுகிறார்.
அனைவரும் அமர்ந்த பின்பே பெரியார் அமர்கிறார். ராமசாமி அய்யங்கார் பெரியாரிடம் "நீங்க கடவுள் நம்பிக்கை இல்லாதவா. நீங்க எழுந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே" என்று கூறினார்.
"உண்மைதான். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைதான். சபை நாகரீகம் என்று ஒன்று இருக்கிறது. அனைவரும் நிற்கும்போது நான் மட்டும் உட்கார்ந்திருப்பது நாகரீகம் ஆகாது. நாகரீகம் இல்லாதவன் நல்ல மனிதனாக இருக்க முடியாது” என்றார் பெரியார்.
*நிகழ்வு 6:*
கல்கி கிருஷ்ணமூர்த்தி மகள் திருமணத்திற்கு வந்த பெரியாரிடம் கையில் திருநீறு கொடுத்து மணமக்களுக்கு பூசி ஆசிர்வதிக்க சொன்னார். பெரியாரும் அப்படியே செய்தார்.
அப்போது அருகியிருந்த கல்கி புகைப்படகாரர் "இதை படம் எடுத்து பெரியாரின் இரட்டை வேடம் என்று செய்தி வெளியிடலாமே" - என்ற போது கல்கி அதை தடுத்து "நாம் தான் அவரை வற்புறுத்தினோம். நம் மனம் கோணக் கூடாது என்பதற்காகவே அவர் அதை செய்தார். அதற்காக அவருடைய கொள்கையை அவர் என்றுமே சமரசம் செய்து கொள்ள மாட்டார்" - என்று சொன்னார்.
#சங்கு_சுட்டாலும்_வெண்மை_தரும்
No comments:
Post a Comment