Saturday, May 25, 2019

37 MP-க்கள் என்ன செய்ய முடியும்

Anbu & Aazhi Senthil Nathan
Thanks go to Rexon Fernando

தமிழ்நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும் என்று சில பத்திரிகைகளும் புத்திசாலிகளும் கேட்கிறார்கள். சாதாரண மக்களிடம் அந்தக் கேள்வி இருந்தால் அதை அறியாமை என்று கூறலாம். பாஜக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் கேட்பதை என்ன என்று கூறுவது?

இங்கே ஒரு விசமப் பிரச்சாரம் நடக்கிறது. தேர்தலுக்கு முன்பு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது மத்திய அரசு விவகாரங்களில் மாநிலக் கட்சிகள் வாக்குறுதி தரலாமா என்று கேள்வி கேட்டார்கள். தமிழ் இந்து இன்று கூட இதை எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் போல சித்தரித்து கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் எம்.பி.கள் தில்லியில் எதுவும் செய்யமுடியாது என்கிற கருத்தை விதைப்பது ஜனநாயக விரோதமானது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமையை உடையவர். அவரது முடிவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். ஆனால் அவரது..

கோரிக்கைகளை அரசு பரிசீலித்தே ஆகவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அது ஆளும் கட்சியின் தவறே ஒழியே கேள்விகேட்கும் உறுப்பினரின் தவறு இல்லை. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கட்சிக்கும் மாநிலத்துக்கும் அப்பாற்பட்டு மக்கள் பிரதிநிதி என்கிற அடிப்படையில் சம உரிமை உடையவர். அவர் இந்தியாவின் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தின்

உறுப்பினர். அங்கே பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற பலம் மாறுபடலாம். உறுப்பினரின் உரிமை மாறுபடாது. ஒரு குறிப்பிட்ட துறையின் அதிகாரம் மத்திய அரசுக்கு உட்பட்டதாக இருந்தாலும் மாநிலக் கட்சியின் உறுப்பினர் அது குறித்து ஒரு சட்டமுன்வரைவைத் தாக்கல் செய்யலாம்.ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தன் தொகுதி அல்லது மாநிலத்தின் பிரதிநிதி மட்டுமல்ல...

வெறுமனே குரல் கொடுப்பதற்காகவும் அவர் அங்கே செல்லவில்லை. இந்திய அரசமைப்பின்படி உச்சபட்ச அதிகாரமுள்ள பாராளுமன்றத்தில் இந்தியாவின் அனைத்து அதிகாரங்களுக்கும் சேர்த்தே அவரும் செயல்படுகிறார். தன் தொகுதியில் பாலம் கட்டுவதற்கான நிதியைக் கோருவதற்காக அவர் அங்கே செல்லவில்லை. அவர் ஒரு சட்டமியற்றி  - Law Maker.

சட்டமியற்றும் (legislative) அவையான பாராளுமன்றத்தில் முன்மொழிவு ஏற்கப்பட்டால் அதை நிறைவேற்றும் பொறுப்பு  காபினட் தலைமையிலான நிர்வாகத்துறைக்கு (executive) இருக்கிறது. அந்தச் சட்டம் மீறப்படாமல் பாதுகாக்கப்படவே நீதித்துறை (judiciary) இருக்கிறது. ஆனால் மக்களின் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர்தான் உச்சபட்ச அதிகாரமுள்ளவர்.

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தனிக்குரலாக ஒலிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் தமிழக எம்.பிகள். குறிப்பாக  தோழர்கள் தொல். திருமாவளவன், கனிமொழி, ஆ ராசா, ரவிக்குமார், ஏ கணேசமூர்த்தி, சு வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் மீது ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பே இருக்கிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் பெரும்பான்மையிருந்த ஆட்சிகளின்..

போது மக்களவை அல்லது மாநிலங்களவையில் அண்ணாவும் சம்பத்தும் செழியனும் எப்படியெல்லாம்  செயல்பட்டார்கள் என்பதைப் பார்க்கவேண்டும்.  ஆக்கபூர்வமாகவும் எதிர்க்குரலாகவும் அவர்கள் செயல்பட்டார்கள்,  இந்தி எதிர்ப்பு போராட்டக் காலத்தில் மொழித்திணிப்பு இருக்காது எனறு ஈ வி கே சம்பத்துக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி

உறுதிப்படுத்தினார் ஜவஹர்லால் நேரு.! எங்கள் நாட்டுக்கான சுயநிர்ணய உரிமைக்காகப் பேசும் உரிமையை விட்டுத்தரமுடியாது என்று குரல் கொடுத்த அண்ணா, இந்திய அரசின் நிதிக்கொள்கை, வெளியுறவுக்கொள்கை உட்பட எல்லா மத்திய அரசு அதிகாரங்களையும் கிழித்துத் தொங்கப்போட்டார். போர்க்காலத்தில் அரசோடு சேர்ந்தும் நின்றார்.

எமர்ஜென்சியின் போது இரா செழியன் இந்திரா காந்திக்கு எதிராக பாராளுமன்றத்தில் முழங்கியதை நாம் மறக்கமுடியுமா? அவரது அந்தப் புகழ்பெற்றப் பேச்சு எல்லோருக்கும் பாடநூல்.. எத்தனை தடவை வைகோவும் கணேசமூர்த்தியும் திருச்சி சிவாவும் அண்மையில் கனிமொழியும் தமிழ்நாட்டின் குரலை ஒலிக்கச்செய்திருக்கிறார்கள்!

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் எனறு தமிழ்நாட்டுக்காக இங்கே தான் வங்காளத்து கம்யூனிஸ்ட் பூபேஷ் குப்தா குரல்கொடுத்தார். இந்த அரங்கில்தான் இந்தியாவிலுள்ள அனைத்து எஸ்சி, பிஸி மக்களுக்கான சமூக நீதிக்குரல்களை திராவிடக் கட்சிகளின் எம்பிகள் எழுப்பினார்கள். இதே மன்றத்தில்தான் எங்கள் நிதியைத் தின்று தீர்க்கின்றன வட மாநிலங்கள்..

என்று ஜெயலலிதாவும் குற்றம் சாட்டினார். இப்படி எவ்வளவோ சொல்லமுடியும். எனவே மாநிலக் கட்சிகளின் எம்பிகளாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சிகளின் எம்பிகளாக இருந்தாலும் சரி பாராளுமன்றத்தில் அவர்களுக்கு உள்ள உரிமையும் கடமையும் ஒன்றுதான். அவர்களால் என்ன செய்யமுடியும் என்று கேட்பது, அவர்கள் என்ன சொன்னாலும்..

கேட்கமாட்டோம் என்கிற திமிர்.. தமிழ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தில்லியில் எதுவும் செய்யமுடியாது, மோடிக்கு ஓட்டுப்போடாத தமிழ்நாடும் மோடி அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படும், அதனால் தமிழ்நாட்டு மக்கள் வருந்த வேண்டிய நிலைமை வரும் என்கிற நிலை ஏற்படுமானால், ஆள்பவர்கள்தான் தேச விரோதிகளாக ஆவார்கள்.

Sunday, May 19, 2019

கோட்சே ஒரு பார்பன தீவிரவாதி

மு. செ.
2019-05-19

கமலின் "கோட்சே ஓர் இந்துத் தீவிரவாதி" - என்ற சொல்லாடல் அப்பட்டமான வரலாற்றுத் திரிபு.

ஆனால் இது, "கோட்சே ஒரு பார்பன தீவிரவாதி" - என்ற சரித்திர உண்மையை மிக நேர்த்தியாக, உள்நோக்கத்தோடு மறைக்கும் அயோக்கியத்தனம்.

"வடநாட்டு பார்பன தீவிரவாதியை, தென்னாட்டு போலி முற்போக்கு பார்பனன் காப்பாற்றுகிறான்" - என்பதைத் தவிர இதில் எதுவுமில்லாததால் நண்பர்கள் சில்லறையை சிதற விட வேண்டாம்.

"வைதீக பார்பனனை நம்பினால் கூட நம்பு, ஆனால் முற்போக்கு பார்பனனை நம்பாதே" - என்று பெரியார் சொன்னது எவ்வளவு பெரிய தீர்க்கதரிசனம்.

மீண்டும் உரத்துச் சொல்வோம்:

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியும்  பார்பனன்தான் (கோட்சே), முதல் ஊழல்வாதியும் பார்பனன்தான் (கிருஷ்ணமாச்சாரி).






ஈழம் என்பது தமிழக அரசியலில் ஒரு வேண்டாத ஆணியே

A. Sivakumar
2019-05-19

ஈழத்தில் போர் உச்சத்தில் இருக்கும்போது, அப்போதைய எதிர்கட்சி தலைவர் அதிமுக ஜெயலலிதா வெளியிட்ட 16.10.2008 & 18.1.2009 தேதியிட்ட இரு அறிக்கைகளை திமுகவினர் பரப்பிவருகிறார்கள்.

அதாவது இப்படியெல்லாம் புலிகளை அவமானப்படுத்தி அறிக்கை விட்ட ஜெயலலிதாவை ஆதரிப்போர், புலிகளை இறுதிவரை விமர்சிக்காத, புலிகள் விமர்சிக்காத கலைஞரை குற்றம் சொல்லலாமா என்ற கேள்வியோடு இக்கடிதங்கள் பரப்பப்படுகிறது.

உண்மையில் புலிகள் விஷயத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாடுதான் சரி. ஈழத்து மக்களுக்காக தமிழ்நாட்டில் பேசுவதால் எந்த பயனுமில்லை என்று முதன்முதலில் உணர்ந்து, அதை தன் செயலிலும் காட்டியவர் அவர்.

எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் திமுக ஈழத்தமிழர்களுக்காக திமுக தமிழ்நாட்டில் நடத்தாத போராட்டமா?

எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் இலங்கை அரசை எதிர்த்து அதிமுக எத்தனை போராட்டம் நடத்தியிருந்தது?

தமிழக மக்கள் இந்த பிரச்சனைக்காக திமுக ஆதரிக்கவாே, அதிமுகவை எதிர்க்கவாே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

எம்ஜிஆர் போனார், ஜெயலலிதா வந்தார். அவராவது புலிகளுக்கு நிதி உதவி, போராளிகள் சந்திப்பு என்றிருந்தார். ஜெயலலிதா என்ன செய்தார்?
புலிகளை வில்லன்களாக்கித்தான் திமுகவை எதிர்த்து அரசியல் செய்தார்.

* 1991 ஜனவரியில் ஆட்சிக்கலைப்பு
* 1991 மே மாதத்தில் ராஜீவ் கொலைப்ழி

திமுகவினர் வெட்டுப்பட்டதும், திமுகவினர் சொத்துக்கள் சேதமானதும் தான் மிச்சம். புலிகளாவது வெளிப்படையாக இந்த கொலை நாங்கள் செய்தது தான். ராஜீவை பழிவாங்கவே இதை செயதோம், இதற்கும் திமுகவுக்கும் குறிப்பாக கலைஞருக்கும் எந்த தொடர்புமில்லை என்று உண்மையை ஒப்புக்கொண்டார்களா? கிடையாது.

பைசா பெறாத ஜெயின் கமிசன் அறிக்கையை காரணம் காட்டி திமுக பங்கு பெற்றிருந்த ஐ.கே.குஜ்ரால் ஆட்சி 1997ல் கவிழ்ந்தது தான் மிச்சம்.

ஆக புலிகளின் ஆதரவால், ஈழத்தமிழர்களின் மேல் காட்டிய அக்கறையால் தமிழகத்தில் திமுக அடைந்த பயன் என்பது எதுவுமேயில்லை. மாறாக புலிகளை அடியோடு வெறுத்த, பகைத்துக்கொண்ட, பிரபாகரனை உயிரோடு பிடித்து தூக்கில் போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை தான் மக்கள் ஆதரித்தார்கள்.

2006-2011 திமுக ஆட்சி... முழுக்க முழுக்க தமிழகம் சார்ந்து வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருந்த காலம்...

* அண்ணா நூற்றாண்டு நூலகம்
* செம்மொழி மாநாடு
* புதிய தலைமைச்செயலகம்
* சமச்சீர் கல்வி
* ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு
* நுழைவுத்தேர்வு ரத்து
* சென்னையில் மெட்ரோ ரயில்
* கலைஞர் மருத்துவக் காப்பீடு
* அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு
என்று தமிழக மக்களுக்கான சிறப்பான ஆட்சியாக இருந்தது... ஈழத்தில் தலையிடும் வரை.

ஈழத்தில் போர் உக்கிரமாக வெடிக்க தன்னியல்போடு அதை திமுக தன் தலையில் போட்டுக்கொண்டது. போர் முடிந்து பிரபாகரன் சாகும் நாள் வரை புலிகளையும் ஈழத்தையும் எதிர்த்த ஜெயலலிதா திடீர் குபீர் ஈழத்தாய் ஆனார். எதையாவது செய்தாவது தன்னாலான உயிர்களை காப்பாற்றலாம் என்று போராடிய திமுக குற்றவாளி ஆகிவிட்டது.

இணையத்தில் அன்று ஆரம்பித்த தடுப்பாட்டத்தை இன்று வரை திமுகவினர் ஆடி வருகிறார்கள். அவசியமே இல்லை என்பது தான் என் கருத்து.

அன்றும், இன்றும், என்றும் ஈழம் என்பது தமிழக அரசியலில் ஒரு வேண்டாத ஆணியே!!!

எல்லாவற்றிலும் கலைஞரை ஆதரிக்கும் நான் இவ்விஷயத்தில் முழுக்க முழுக்க ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன்.

அப்போ 2011ல் ஜெயலலிதா எடுத்த ஈழ ஆதரவு நிலைப்பாடு?

அது ஒரே தேர்தல் நேர தந்திரமான செயல்பாடு. எல்லாம் முடிந்த பின் தனி ஈழம் அமைப்பன் என்று அவர் என்ன ஈழத்தமிழர்களுக்காக வாக்குறுதியளித்தார்? இல்லை ஈழத்தமிழர்கள் தான் ஜெயலலிதாவை எதிர்ப்பார்த்து நின்றனரா? இங்கிருக்கும் ஈனத்தமிழர்கள் சிலரை மகிழ்ச்சிப்படுத்த அவ்வாறு சொன்னார். அவர்களும் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பம்மினர். அதான் இலை மலர்ந்து 8 ஆண்டுகளாகியதே எங்கேடா ஈழம்? என்று அவர்களை தமிழர்கள் கேட்டார்களா என்ன? கேட்கவே மாட்டார்கள். ஈழம் அமைவதால் ஈக்காட்டுத்தாங்கலில் இருப்பவனுக்கு என்ன லாபம்???

2011ல் முதல்வரான ஜெயலலிதா முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்ததையும், ஈழம் மலரும் கோஷ்டி அதை எதிர்த்து வாய்மூடி மவுனமாய் இருந்ததையும் தொடர்புபடுத்தினால் நான் சொல்வது புரியும். அந்நிகழ்வுக்கு தமிழக மக்களிடம் எந்தவொரு எதிர்ப்பும் இல்லை என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

அண்டை நாட்டில் வாழும் பூர்வக்குடி தமிழன் என்பதற்காக அனுதாபப்படலாம். அவனுடைய போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவளித்திருக்கலாம். அது தான் எல்லை. அதை தாண்டி அதை இங்கிருப்பவர்களின் தலையாய பிரச்சனையாக திணிக்க முயன்றது மாபெரும் தவறு.

பெரும்பான்மை கூட்டத்துக்கு  ஈழத்தமிழர்கள் மீது அனுதாபம் உண்டு, பிரபாகரன் மீது பிரமிப்பும் மரியாதையும் உண்டு, புலிகள் மீதும் அவர்களின் போர் வெற்றிகள் மீதும் ஆர்வமும் ஆசையும் உண்டு. ஆனால் ஈழத்தின் மீதான ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை வைத்து இங்கு நடக்கும் தேர்தலில் அக்கட்சிக்கு வாக்களிக்கனும் என்று எந்த நாளும் அவர்கள் முடிவெடுத்தது இல்லை. இதை திமுக தலைமையும் புரிந்துக்கொள்ளாமல் போனது தமிழகத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு.

ஒரு பேச்சுக்கு 2009ல் ஜெயலலிதா ஆட்சி என்றிருந்தால் பிரபாகரனின் வீர மரணம் அன்றே உறுதிசெய்யப்பட்ட செய்தியாக இருந்திருக்கும். இங்கே தமிழ்நாட்டில் எவனும் அதை எதிர்த்து மூச்சுவிட ஜெயா அனுமதித்திருக்கமாட்டார். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், ஈழத்தில் போர் வெடிக்கப்போகிறது என்றெல்லாம் பிதற்றாமல் அனைவரும் பம்மிக்கொண்டு இரங்கல்பாவோடு நிறுத்தியிருப்பார்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஜெயலலிதா இடித்து தரைமட்டமாக்கிய போது வாய்மூடி இருந்தவர்கள் தானே எல்லாம்.

கலைஞரும் தமிழ்ச்செல்வனுக்கு எழுதியது போல ஒரு இரங்கல் கவிதை எழுதியிருப்பார். நாமும் பிரபாகரனின் ஒவ்வொரு நினைவு நாளன்றும் அதை படித்தோ, கேட்டாே விழியோரம் கண்ணீர் சிந்தியிருப்போம். இன்று அதற்கு வழியே இல்லாமல் போய்விட்டது.

ஒரு இனத்தின் மாவீரன் தனக்கான அஞ்சலி பெரும் வாய்ப்பை இழந்தான்.
அதே இனத்தின் தலைவன் தேவையற்ற பழிசுமக்கிறான்.

ராஜபக்சேவை திட்ட மறந்தவர்கள், திட்டும் எண்ணமே தோன்றாதவர்கள்...தாங்கள் எப்பவும் திட்டும் திமுகவை மே மாதம் மட்டும் ஈழத்துக்காக திட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை, ஈழம், பிரபாகரன், புலிகள் என்ற காரணங்கள் இல்லையென்றாலும் திமுகவை திட்டிக்கொண்டு தானிருப்பார்கள் என்று திமுகவினர் உணர்ந்துக்கொள்வது நல்லது.

நாய்கள் மார்கழி மாதத்தில் மட்டும் குரல் மாற்றி ஊளையிடுவதில்லையா? அது  மாதிரி தான் இதுவும்.

நாலு கால் நாய்களுக்கு தமிழ் மாதம் மார்கழி
இரண்டு கால் நாய்களுக்கு ஆங்கில மாதம் மே.

https://www.facebook.com/581492961/posts/10157275835457962/

Saturday, May 18, 2019

சீமானே, நீ யாரின் கைக்கூலி

தமிழினி
2019-05-19

நீ யாரின் கைக்கூலி?

மறைமலையடிகள் வேண்டும். ஆனால்.,
அவர் போற்றிய பெரியார் வேண்டாம்.

பாவாணர் வேண்டும். ஆனால்.,
அவர் போற்றிய பெரியார் வேண்டாம்.

பெருஞ்சித்திரனார் வேண்டும். ஆனால்.,
அவர் போற்றிய பெரியார் வேண்டாம்.

பாரதிதாசன் வேண்டும். ஆனால்.,
அவர் போற்றிய பெரியார் வேண்டாம்.

குன்றக்குடிகள் வேண்டும். ஆனால்.,
அவர் போற்றிய பெரியார் வேண்டாம்.

ஈழக்கவி காசி ஆனந்தன் வேண்டும். ஆனால்.,
அவர் போற்றிய பெரியார் வேண்டாம்.

பெருந்தலைவர் காமராசர் வேண்டும். ஆனால்.,
அவர் முதலமைச்சராக காரணமாயிருந்த பெரியார் வேண்டாம்.

அம்பேத்கர் வேண்டும். ஆனால்.,
அவர் மதித்த பெரியார் வேண்டாம்.

எனில் நீ யார்?

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றும் பிரபாகரனை பயங்கரவாதி என்றும் கூறிய ம.பொ.சி. வேண்டும்.

தனித்தமிழ் நாடு கேட்ட பெரியார் வேண்டாம் என சொல்ல நீ யார்?

சாதி கூடாது என எதிர்த்தாரா?

தமிழ் மொழி கருவறைக்குள் செல்லாது என்பதை எதிர்த்தாரா?

தமிழ் நீச பாசை என்ற சங்கராச்சாரியை எதிர்த்தாரா?

திருக்குறளை அவமதித்த நாகசாமியை எதிர்த்தாரா?

இதில் எதையும் எதிர்க்க மாட்டார் சீமான்.

ஆனால் பெரியாரை எதிர்ப்பார்.
திராவிடத்தை எதிர்ப்பார்.

எனில் நீ யார்?
சொல் நீ யாரின் கைக்கூலி?

https://m.facebook.com/story.php?story_fbid=695269634633942&id=679203636240542

பிரபாகரனை எனக்கு அறிமுகப்படுத்தியது தி.முக.காரரான என் அப்பாதான் - சுகுணா

சுகுணா Diwakaran
2019-05-18

பிரபாகரனை எனக்கு அறிமுகப்படுத்தியது தி.முக.காரரான என் அப்பாதான். அப்போதெல்லாம் பிரபாகரன் என்று பெயர் வைத்தவர்களின் தந்தை திராவிடர் கழகத்துக்காரராகவோ தி.மு.க.காரராகவோ இருப்பார். என் சிறுவயதில் பிரபாகரன் திண்டுக்கல்லுக்கு வந்து சென்றதை அறிந்தேன். சாலையில் ஏதேனும் வாகனம் செல்லும்போது 'பிரபாகரன் போகிறார்' என்று பேசிக்கொள்வார்கள். அப்போதைய தி.மு.க. திண்டுக்கல் நகரச்செயலாளர் மணிமாறன் வீட்டுக்கு அடிக்கடி பிரபாகரன் வந்து செல்வாராம். சிறுமலையில் புலிகள் ஆயுதப்பயிற்சி எடுத்தார்கள். முருக பக்தரான பிரபாகரன் பழநிக்குச் செல்வதும் வழக்கமாம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஈழத்தமிழர் படுகொலை கண்காட்சி ஒன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. ஈழத்தமிழர் படுகொலை பற்றிய புகைப்படங்கள், 'இங்கு தமிழன் கறி கிடைக்கும்' என்பதான சித்திரங்கள், முதல் தற்கொடைப் போராளி சிவக்குமார் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் ஆகியவற்றைப் பார்த்திருக்கிறேன்.

தி.மு.க. குடும்பத்தில் பிறந்தவர்களுக்குப் பிரபாகரன் சாகச நாயகன். சினிமா நடிகர்களைவிட மிகப்பெரிய சாகசக்காரனாக இருந்தவர் பிரபாகரன். அவரது சாகசக் கதைகளைக் கேட்டுக் கேட்டு வளர்ந்தோம். குட்டிமணியின் கண்கள் பூட்ஸ் காலால் நசுக்கப்பட்ட கதை தொடங்கிப் பிரபாகரனின் கெரில்லா தாக்குதல் வரை விதவிதமான கதைகள். 'பிரபாகரன் இறந்துவிட்டார்' என்று அடிக்கடி செய்தி வரும். ஆனால் சிலநாள்களில் பிரபாகரன் உயிருடன் தோன்றுவார். உண்மையில் அப்போது மரணத்தை வென்ற மாவீரன் பிரபாகரன் தான்.

எங்கள் வீட்டில் ஒரு கலைஞர் படமிருந்தது. கன்னத்தில் கைவைத்து சிரிப்பார் கலைஞர். அந்தப் புகைப்படத்தில் பிரபாகரன் படம் ஒன்று செருகப்பட்டிருக்கும். கையில் சிறுத்தை ஒன்றை ஏந்தியவாறு நிற்பார் பிரபாகரன். அவர் எனக்குப் பிடித்த அழகன். குறிப்பாக அரை வட்டமாய் நெற்றியில் வந்து விழும் அவர் ஹேர் ஸ்டைலும் அடர்த்தியான மீசையும் அவ்வளவு அழகு. ராஜூவ் காந்தி கொல்லப்பட்டபோதுகூட வீட்டிலிருந்து பிரபாகரன் படம் அகற்றப்படவில்லை. ராஜீவ் கொலை செய்தி வந்த நேரம் தேர்தல் நேரம். அ.தி.மு.க, காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ்.. காலிகள் தி.மு.க. கொடிக்கம்பங்களை வெட்டிச் சாய்த்தார்கள். எங்கள் தெருவில் இருந்த ஒரே ஒரே தி.க.காரர் எழுதிப்போட்ட ஒரே ஒரு பகுத்தறிவுப் பொன்மொழிப் பலகையை உடைத்துப்போட்டார்கள். தி.க. கொடிக்கம்பமும் வெட்டிச் சாய்க்கப்பட்டது. தேர்தல் பணிகளுக்காக அமைக்கப்பட்ட 'தி.மு.க. மன்றம்' தீக்கிரையாக்கப்பட்டது. அதற்குப் பிறகு பிரபாகரன், புலிகள் என்று பேசுவது சட்ட மீறலாக்கப்பட்டது.

கலைஞர் படத்திலிருந்து எங்கள் வீட்டில் பிரபாகரன் புகைப்படம் அகற்றப்பட்டது, 'கலைஞரைக் கொல்ல புலிகள் சதி செய்தார்கள்' என்ற குற்றச்சாட்டின் பேரில் வைகோ தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டபோதுதான். ஆனால் அப்போதும் நான் புலி ஆதரவாளனாகவே தொடர்ந்தேன். எத்தனை தி.மு.க. தொண்டர்களுக்கு அந்த உளவுத்துறை அறிக்கைமீது நம்பிக்கை இருந்தது என்று தெரியவில்லை.  'வைகோவை வெளியேற்றுவதற்காக உளவுத்துறையின் அறிக்கையைப் பயன்படுத்திக்கொண்ட கலைஞரின் தந்திரம் அது,  மற்றபடி புலிகளாவது, கலைஞரைக் கொல்ல சதி செய்வதாவது' என்றுதான் நினைத்தேன். ஆனால் என் அப்பா புலிகளையும் பிரபாகரனையும் விமர்சிக்கத் தொடங்கினார். நான் கொஞ்சம் வைகோ ஆதரவாளன் ஆனேன் என்றுகூட சொல்லலாம்.
கல்லூரிக் காலத்தில் பெரியாரியக்கத் தொடர்புகளுக்குப் பிறகு நான் முழுமையாகவே புலி ஆதரவாளனாகவே இருந்தேன். 'வெடிக்கட்டும் வெடிக்கட்டும் விடுதலைப் புலிகள் துப்பாக்கி' என்று கோஷம் போட்டிருக்கிறோம். 'மானமுள்ள தமிழன் புலியாய் வாழ்கிறான்; மானங்கெட்ட தமிழன் ரசிகர் மன்றம் அமைக்கிறான்' என்று எழுதி, கல்லூரி மரங்களில் அட்டைகள் தொங்கவிட்டிருக்கிறோம். என்னிடத்தில் தென்மொழி இதழ் வெளியிட்ட, பிரபாகரன் படம் போட்ட, பாக்கெட்டில் வைக்குமளவு கையடக்க தமிழ் காலண்டர் ஒன்று இருந்தது. அது எப்போதும் என் பாக்கெட்டில் இருக்கும்.

என்ன, அந்தப் படத்தில் இருந்த பிரபாகரனிடம் இப்போது அந்த அழகான மீசை இல்லை. சற்று பருத்திருந்தார். முன்நெற்றியில் புரளும் கேசமில்லை. தொப்பி அணிந்திருந்தார். தமிழ்க்கவி அல்லது தமிழினி எழுதியிருந்தார்கள் என்று நினைக்கிறேன். பிரபாகரனுக்கு முன் வழுக்கை விழுந்ததால்தான் அவர் தொப்பி அணியத் தொடங்கினார் என்றும் சம்பந்தமேயில்லாமல் பல முன்னணித் தளபதிகளும் தொப்பி அணிந்து அதை இயக்க மரபு ஆக்கிவிட்டார்கள் என்றும். எப்படியோ, ஆனால் அந்த அழகான மீசையை ஏன் மழித்தார் எங்கள் சாகச நாயகன் என்று தெரியவில்லை.

பின்னாட்களில் ஈழப்போராட்டம் குறித்த பல விமர்சனப் பார்வைகள் கண்ணில் பட்டன; காதில் கேட்டன. சகோதரப் படுகொலைகள், ஜனநாயக மறுப்பு, முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை, மலையகத் தமிழரை ஒதுக்கிவைத்த யாழ் வெள்ளாள மேலாதிக்கம் எனப் பல விஷயங்கள் புதிதாகவே இருந்தன. ஏனெனில் பெரியாரியக்கங்கள் எவற்றிலும் இத்தகைய விமர்சனப் பார்வைகள் இருந்ததாகத் தெரியவில்லை. முழுக்கப் புகழ் பாடுதலும் சாகசக் கொண்டாட்டமும்தான். நான் இப்போது புலி எதிர்ப்பாளன் ஆனேனா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் புலிகள் மீதான விமர்சனப் பார்வை கொண்டவன் ஆனேன். ஏனோ அப்போதும்கூட என்னிடம் பிரபாகரன் மீதான சாகச மனநிலை நீங்கவேயில்லை. எனக்குப் புலிகள் மீது எவ்வளவு விமர்சனங்கள் இருந்தபோதும் பிரபாகரன் மீதிருந்த மரியாதையும் நேசமும் விலகவேயில்லை.

2009. இறுதிப்போர். கொந்தளிப்பு உருவாகியிருந்தது. எல்லா விமர்சனங்களையும் தாண்டி நானும் கொந்தளிப்பில் மூழ்கினேன். குறிப்பாக முத்துக்குமார் மரணம் எங்கள் கொதிநிலையை அதிகப்படுத்தியது. முழுக்க ஈழப்போர் நிலவரம் குறித்த செய்திகளை அறிவது, போருக்கு எதிரான எல்லா நிகழ்வுகளிலும் கலந்துகொள்வது என்று காலம் கழிந்தது. கருணாநிதி இப்போது எனக்கும் தமிழினத் துரோகியாய்த்தான் இருந்தார். கடைசியில் எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப்போயின. இனப்படுகொலை நடந்து முடிந்தது. ஈழப்போராட்டம் முடிவுக்கு வந்தது. ஒவ்வொருநாளும் துயரச் செய்திகள்.
சிறுவயதிலிருந்தே சாசகவாத மனநிலையுடன் அணுகியதாலோ என்னவோ, 'விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்க முடியும்' என்றோ 'பிரபாகரனுக்கும் மரணம் உண்டு' என்றோ என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, புலி எதிர்ப்பாளனாக அடையாளம் சுட்டப்பட்ட நாள்களிலும்கூட. எதிர்பார்க்காத, சந்திக்க விரும்பாத நாளும் வந்தது. சிறுவயதிலிருந்து நேசித்த சாகச நாயகன் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று மீண்டும் மீண்டும் நீரில் உப்பிய படம் ஒன்று தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அப்போது கவிஞர் தமிழ்நதி நல்ல தொடர்பில் இருந்தார். 'உண்மைதானா தமிழ்?' என்று கேட்டேன். 'கிராஃபிக்ஸ் என்கிறார்கள்' என்றார். ஆனால் மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட அந்தப் படம், உடைந்தேன். வாழ்நாளில் சிலரது மரணத்துக்கு மட்டும்தான் அப்படி அழுதிருப்பேன். அவர்களில் ஒருவர் பிரபாகரன்.

ஆனால் 'பிரபாகரன் நிச்சயம் இறந்திருக்க மாட்டார். அவரை யாராலும் கொல்ல முடியாது. தப்பியிருப்பார்' என்ற நம்பிக்கையும் ஓர் ஓரத்தில் இருந்தது. என் அப்பா  'பிரபாகரன் மாவீரன். நிச்சயம் தப்பிச்சிருப்பான்' என்றார். நானும் கொல்லப்பட்டதாகக் காட்டப்பட்ட படம் வேறு யாருடையதோ என்றுதான் நினைத்தேன். இடையில் இறுதிப்போர்க் காலகட்டத்தில் புலிகள், தப்ப விரும்பிய தமிழ் மக்கள்மீதே தாக்குதல் நடத்தியதைப் பல நெருக்கமான நண்பர்கள் சொன்னார்கள். 'புலி அரசியலில் இருந்து விடுதலை அடைவோம்' என்று எழுதினேன். பல நண்பர்கள் எதிரிகள் ஆனார்கள். பணம் பெறப்பட்டது உள்பட பல அவதூறுகள், விமர்சனங்கள் சுமத்தப்பட்டன. பத்தாண்டுகளுக்குப் பிறகு யோசித்துப் பார்க்கையில் அப்போது அவர்கள் இருந்த மனநிலையை உணர்ந்துகொள்ள முடிகிறது. இந்தப் பத்தாண்டுகளில் எவ்வளவோ மாறிவிட்டது. புலிகளை விமர்சித்தவர்கள்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த பலர் மாறினார்கள். புலிகள் அமைப்புக்குள்ளே இருந்தவர்கள் பலரே புலிகள் அமைப்பை விமர்சிக்கத் தொடங்கினார்கள். புலிகளைக் கடுமையாக விமர்சித்த பலர் ஈழ ஆதரவாளர்கள் ஆனார்கள்.  புலிகள் குறித்துப் பல நூல்கள் தமிழில் வெளியாகின.

அதில் இரு சம்பவங்கள், பிரபாகரன் குறித்து எனக்கு நானே கட்டமைத்த பிம்பங்களில் கீறல்களை ஏற்படுத்தின.
ஈழப்போரின் இறுதி நாட்கள் குறித்து காலச்சுவடில் 'அநாமதேயன் குறிப்புகள்' என்ற பெயரில் வெளியிடப்பட்ட கட்டுரையில் ஒரு சம்பவம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இறுதிப்போர்க்காலத்தில் தொடர்ச்சியான இழப்புகளைப் பிரபாகரனிடம் சுட்டிக்காட்டியபோது அவர் '300 பருத்தி வீரர்கள்' படத்தின் சி.டியைக் கொடுத்து, 'இப்படித்தான் நாம் போராடப் போகிறோம்' என்று தெரிவித்ததாக 'அநாமதேயன்'  எழுதியிருந்தார். அதேபோல் ஈழப்போராட்டம் குறித்த கணேச (அய்யரின்)னின் புத்தகத்தில், விடுதலைப்புலிகளின் தொடக்ககாலத்தில் ராகவன் ஒரு மார்க்சியப் புத்தகம் படித்துக்கொண்டிருந்ததைப் பிரபாகரன் பிடுங்கி எறிந்ததாக எழுதியிருப்பார். வாசிப்பை நிராகரித்த பிரபாகரனின் பண்பு, எனக்குள் சிறுகீறலை ஏற்படுத்தியது.

2009க்குப் பிறகு சில மாதங்கள் வரை பிரபாகரன் உயிருடன் இருப்பார் என்றுதான் நான் நம்பினேன். ஆனால் போகப்போக நம்பிக்கை தகர்ந்தது. இப்போது நெடுமாறன், வைகோ போன்ற சிலர், அதுவும் சில சந்தர்ப்பங்களில்தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால் எனக்கு அந்த நம்பிக்கையில்லை. நிச்சயம் அவர் சரணடைந்திருக்க மாட்டார், போராடி வீரச்சாவு அடைந்திருப்பார் என்றுதான் நம்புகிறேன். எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் அவர் ஒரு மகத்தான மாவீரன் என்றே கருதுகிறேன்.

சார்லஸ் ஆண்டனி இறந்த செய்தி இறுதிப்போர்க் காலகட்டத்திலேயே வந்தது. இறுதிப்போருக்குப் பின் பாலச்சந்திரன் கொலைப் படம் வெளிவந்து கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரபாகரன் இறந்ததாகக்கூட படங்கள் வந்துவிட்டன. ஆனால் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் மகள் துவாரகாவும் என்ன ஆனார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை. அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையோ மரியாதையான மரணங்களோ நிகழ்ந்திருக்க வேண்டும் என்றுதான் மனது விரும்புகிறது.

பிரபாகரன் இறந்து கிடந்தார். அவரது விழிகளில் சரித்திரம் உறைந்திருந்தது. அரசியல் பற்றிப் பேசுவதைத் தாண்டி என் பள்ளிப் பிராயத்திலிருந்து பிம்பமாய்ப் பயணித்த பிரபாகரன் என்னும் சாகச நாயகனுக்கு என் இறுதி மரியாதையைச் செலுத்தவே விரும்புகிறேன். பிரபாகரன் சிலருக்குத் தேவதை, சிலருக்குப் பிசாசு, சிலருக்கு ரட்சகன், சிலருக்கு பாசிஸ்ட். ஆனால் என்னைப் பொறுத்தவரை இப்போதும் எனக்குப் பல விமர்சனங்கள் இருந்தபோதும் தமிழர்களின் சுயமரியாதைக்கும் வீரத்துக்குமான குறியீடு பிரபாகரன்.
இனி பிரபாகரன் திரும்பப்போவதில்லை. பிரபாகரன் மாதிரியான ஒரு தமிழ் சாகச நாயகன் பிறக்கப்போவதுமில்லை. நாயகனே, உனக்கு என் பத்தாண்டுகால அஞ்சலிகள்!

https://www.facebook.com/1037767751/posts/10216953294798093/