Sunday, May 19, 2019

ஈழம் என்பது தமிழக அரசியலில் ஒரு வேண்டாத ஆணியே

A. Sivakumar
2019-05-19

ஈழத்தில் போர் உச்சத்தில் இருக்கும்போது, அப்போதைய எதிர்கட்சி தலைவர் அதிமுக ஜெயலலிதா வெளியிட்ட 16.10.2008 & 18.1.2009 தேதியிட்ட இரு அறிக்கைகளை திமுகவினர் பரப்பிவருகிறார்கள்.

அதாவது இப்படியெல்லாம் புலிகளை அவமானப்படுத்தி அறிக்கை விட்ட ஜெயலலிதாவை ஆதரிப்போர், புலிகளை இறுதிவரை விமர்சிக்காத, புலிகள் விமர்சிக்காத கலைஞரை குற்றம் சொல்லலாமா என்ற கேள்வியோடு இக்கடிதங்கள் பரப்பப்படுகிறது.

உண்மையில் புலிகள் விஷயத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாடுதான் சரி. ஈழத்து மக்களுக்காக தமிழ்நாட்டில் பேசுவதால் எந்த பயனுமில்லை என்று முதன்முதலில் உணர்ந்து, அதை தன் செயலிலும் காட்டியவர் அவர்.

எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் திமுக ஈழத்தமிழர்களுக்காக திமுக தமிழ்நாட்டில் நடத்தாத போராட்டமா?

எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் இலங்கை அரசை எதிர்த்து அதிமுக எத்தனை போராட்டம் நடத்தியிருந்தது?

தமிழக மக்கள் இந்த பிரச்சனைக்காக திமுக ஆதரிக்கவாே, அதிமுகவை எதிர்க்கவாே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

எம்ஜிஆர் போனார், ஜெயலலிதா வந்தார். அவராவது புலிகளுக்கு நிதி உதவி, போராளிகள் சந்திப்பு என்றிருந்தார். ஜெயலலிதா என்ன செய்தார்?
புலிகளை வில்லன்களாக்கித்தான் திமுகவை எதிர்த்து அரசியல் செய்தார்.

* 1991 ஜனவரியில் ஆட்சிக்கலைப்பு
* 1991 மே மாதத்தில் ராஜீவ் கொலைப்ழி

திமுகவினர் வெட்டுப்பட்டதும், திமுகவினர் சொத்துக்கள் சேதமானதும் தான் மிச்சம். புலிகளாவது வெளிப்படையாக இந்த கொலை நாங்கள் செய்தது தான். ராஜீவை பழிவாங்கவே இதை செயதோம், இதற்கும் திமுகவுக்கும் குறிப்பாக கலைஞருக்கும் எந்த தொடர்புமில்லை என்று உண்மையை ஒப்புக்கொண்டார்களா? கிடையாது.

பைசா பெறாத ஜெயின் கமிசன் அறிக்கையை காரணம் காட்டி திமுக பங்கு பெற்றிருந்த ஐ.கே.குஜ்ரால் ஆட்சி 1997ல் கவிழ்ந்தது தான் மிச்சம்.

ஆக புலிகளின் ஆதரவால், ஈழத்தமிழர்களின் மேல் காட்டிய அக்கறையால் தமிழகத்தில் திமுக அடைந்த பயன் என்பது எதுவுமேயில்லை. மாறாக புலிகளை அடியோடு வெறுத்த, பகைத்துக்கொண்ட, பிரபாகரனை உயிரோடு பிடித்து தூக்கில் போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை தான் மக்கள் ஆதரித்தார்கள்.

2006-2011 திமுக ஆட்சி... முழுக்க முழுக்க தமிழகம் சார்ந்து வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருந்த காலம்...

* அண்ணா நூற்றாண்டு நூலகம்
* செம்மொழி மாநாடு
* புதிய தலைமைச்செயலகம்
* சமச்சீர் கல்வி
* ராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு
* நுழைவுத்தேர்வு ரத்து
* சென்னையில் மெட்ரோ ரயில்
* கலைஞர் மருத்துவக் காப்பீடு
* அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு
என்று தமிழக மக்களுக்கான சிறப்பான ஆட்சியாக இருந்தது... ஈழத்தில் தலையிடும் வரை.

ஈழத்தில் போர் உக்கிரமாக வெடிக்க தன்னியல்போடு அதை திமுக தன் தலையில் போட்டுக்கொண்டது. போர் முடிந்து பிரபாகரன் சாகும் நாள் வரை புலிகளையும் ஈழத்தையும் எதிர்த்த ஜெயலலிதா திடீர் குபீர் ஈழத்தாய் ஆனார். எதையாவது செய்தாவது தன்னாலான உயிர்களை காப்பாற்றலாம் என்று போராடிய திமுக குற்றவாளி ஆகிவிட்டது.

இணையத்தில் அன்று ஆரம்பித்த தடுப்பாட்டத்தை இன்று வரை திமுகவினர் ஆடி வருகிறார்கள். அவசியமே இல்லை என்பது தான் என் கருத்து.

அன்றும், இன்றும், என்றும் ஈழம் என்பது தமிழக அரசியலில் ஒரு வேண்டாத ஆணியே!!!

எல்லாவற்றிலும் கலைஞரை ஆதரிக்கும் நான் இவ்விஷயத்தில் முழுக்க முழுக்க ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன்.

அப்போ 2011ல் ஜெயலலிதா எடுத்த ஈழ ஆதரவு நிலைப்பாடு?

அது ஒரே தேர்தல் நேர தந்திரமான செயல்பாடு. எல்லாம் முடிந்த பின் தனி ஈழம் அமைப்பன் என்று அவர் என்ன ஈழத்தமிழர்களுக்காக வாக்குறுதியளித்தார்? இல்லை ஈழத்தமிழர்கள் தான் ஜெயலலிதாவை எதிர்ப்பார்த்து நின்றனரா? இங்கிருக்கும் ஈனத்தமிழர்கள் சிலரை மகிழ்ச்சிப்படுத்த அவ்வாறு சொன்னார். அவர்களும் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பம்மினர். அதான் இலை மலர்ந்து 8 ஆண்டுகளாகியதே எங்கேடா ஈழம்? என்று அவர்களை தமிழர்கள் கேட்டார்களா என்ன? கேட்கவே மாட்டார்கள். ஈழம் அமைவதால் ஈக்காட்டுத்தாங்கலில் இருப்பவனுக்கு என்ன லாபம்???

2011ல் முதல்வரான ஜெயலலிதா முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்ததையும், ஈழம் மலரும் கோஷ்டி அதை எதிர்த்து வாய்மூடி மவுனமாய் இருந்ததையும் தொடர்புபடுத்தினால் நான் சொல்வது புரியும். அந்நிகழ்வுக்கு தமிழக மக்களிடம் எந்தவொரு எதிர்ப்பும் இல்லை என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

அண்டை நாட்டில் வாழும் பூர்வக்குடி தமிழன் என்பதற்காக அனுதாபப்படலாம். அவனுடைய போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவளித்திருக்கலாம். அது தான் எல்லை. அதை தாண்டி அதை இங்கிருப்பவர்களின் தலையாய பிரச்சனையாக திணிக்க முயன்றது மாபெரும் தவறு.

பெரும்பான்மை கூட்டத்துக்கு  ஈழத்தமிழர்கள் மீது அனுதாபம் உண்டு, பிரபாகரன் மீது பிரமிப்பும் மரியாதையும் உண்டு, புலிகள் மீதும் அவர்களின் போர் வெற்றிகள் மீதும் ஆர்வமும் ஆசையும் உண்டு. ஆனால் ஈழத்தின் மீதான ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை வைத்து இங்கு நடக்கும் தேர்தலில் அக்கட்சிக்கு வாக்களிக்கனும் என்று எந்த நாளும் அவர்கள் முடிவெடுத்தது இல்லை. இதை திமுக தலைமையும் புரிந்துக்கொள்ளாமல் போனது தமிழகத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு.

ஒரு பேச்சுக்கு 2009ல் ஜெயலலிதா ஆட்சி என்றிருந்தால் பிரபாகரனின் வீர மரணம் அன்றே உறுதிசெய்யப்பட்ட செய்தியாக இருந்திருக்கும். இங்கே தமிழ்நாட்டில் எவனும் அதை எதிர்த்து மூச்சுவிட ஜெயா அனுமதித்திருக்கமாட்டார். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், ஈழத்தில் போர் வெடிக்கப்போகிறது என்றெல்லாம் பிதற்றாமல் அனைவரும் பம்மிக்கொண்டு இரங்கல்பாவோடு நிறுத்தியிருப்பார்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஜெயலலிதா இடித்து தரைமட்டமாக்கிய போது வாய்மூடி இருந்தவர்கள் தானே எல்லாம்.

கலைஞரும் தமிழ்ச்செல்வனுக்கு எழுதியது போல ஒரு இரங்கல் கவிதை எழுதியிருப்பார். நாமும் பிரபாகரனின் ஒவ்வொரு நினைவு நாளன்றும் அதை படித்தோ, கேட்டாே விழியோரம் கண்ணீர் சிந்தியிருப்போம். இன்று அதற்கு வழியே இல்லாமல் போய்விட்டது.

ஒரு இனத்தின் மாவீரன் தனக்கான அஞ்சலி பெரும் வாய்ப்பை இழந்தான்.
அதே இனத்தின் தலைவன் தேவையற்ற பழிசுமக்கிறான்.

ராஜபக்சேவை திட்ட மறந்தவர்கள், திட்டும் எண்ணமே தோன்றாதவர்கள்...தாங்கள் எப்பவும் திட்டும் திமுகவை மே மாதம் மட்டும் ஈழத்துக்காக திட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை, ஈழம், பிரபாகரன், புலிகள் என்ற காரணங்கள் இல்லையென்றாலும் திமுகவை திட்டிக்கொண்டு தானிருப்பார்கள் என்று திமுகவினர் உணர்ந்துக்கொள்வது நல்லது.

நாய்கள் மார்கழி மாதத்தில் மட்டும் குரல் மாற்றி ஊளையிடுவதில்லையா? அது  மாதிரி தான் இதுவும்.

நாலு கால் நாய்களுக்கு தமிழ் மாதம் மார்கழி
இரண்டு கால் நாய்களுக்கு ஆங்கில மாதம் மே.

https://www.facebook.com/581492961/posts/10157275835457962/

No comments:

Post a Comment