Saturday, May 18, 2019

பிரபாகரனை எனக்கு அறிமுகப்படுத்தியது தி.முக.காரரான என் அப்பாதான் - சுகுணா

சுகுணா Diwakaran
2019-05-18

பிரபாகரனை எனக்கு அறிமுகப்படுத்தியது தி.முக.காரரான என் அப்பாதான். அப்போதெல்லாம் பிரபாகரன் என்று பெயர் வைத்தவர்களின் தந்தை திராவிடர் கழகத்துக்காரராகவோ தி.மு.க.காரராகவோ இருப்பார். என் சிறுவயதில் பிரபாகரன் திண்டுக்கல்லுக்கு வந்து சென்றதை அறிந்தேன். சாலையில் ஏதேனும் வாகனம் செல்லும்போது 'பிரபாகரன் போகிறார்' என்று பேசிக்கொள்வார்கள். அப்போதைய தி.மு.க. திண்டுக்கல் நகரச்செயலாளர் மணிமாறன் வீட்டுக்கு அடிக்கடி பிரபாகரன் வந்து செல்வாராம். சிறுமலையில் புலிகள் ஆயுதப்பயிற்சி எடுத்தார்கள். முருக பக்தரான பிரபாகரன் பழநிக்குச் செல்வதும் வழக்கமாம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஈழத்தமிழர் படுகொலை கண்காட்சி ஒன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. ஈழத்தமிழர் படுகொலை பற்றிய புகைப்படங்கள், 'இங்கு தமிழன் கறி கிடைக்கும்' என்பதான சித்திரங்கள், முதல் தற்கொடைப் போராளி சிவக்குமார் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் ஆகியவற்றைப் பார்த்திருக்கிறேன்.

தி.மு.க. குடும்பத்தில் பிறந்தவர்களுக்குப் பிரபாகரன் சாகச நாயகன். சினிமா நடிகர்களைவிட மிகப்பெரிய சாகசக்காரனாக இருந்தவர் பிரபாகரன். அவரது சாகசக் கதைகளைக் கேட்டுக் கேட்டு வளர்ந்தோம். குட்டிமணியின் கண்கள் பூட்ஸ் காலால் நசுக்கப்பட்ட கதை தொடங்கிப் பிரபாகரனின் கெரில்லா தாக்குதல் வரை விதவிதமான கதைகள். 'பிரபாகரன் இறந்துவிட்டார்' என்று அடிக்கடி செய்தி வரும். ஆனால் சிலநாள்களில் பிரபாகரன் உயிருடன் தோன்றுவார். உண்மையில் அப்போது மரணத்தை வென்ற மாவீரன் பிரபாகரன் தான்.

எங்கள் வீட்டில் ஒரு கலைஞர் படமிருந்தது. கன்னத்தில் கைவைத்து சிரிப்பார் கலைஞர். அந்தப் புகைப்படத்தில் பிரபாகரன் படம் ஒன்று செருகப்பட்டிருக்கும். கையில் சிறுத்தை ஒன்றை ஏந்தியவாறு நிற்பார் பிரபாகரன். அவர் எனக்குப் பிடித்த அழகன். குறிப்பாக அரை வட்டமாய் நெற்றியில் வந்து விழும் அவர் ஹேர் ஸ்டைலும் அடர்த்தியான மீசையும் அவ்வளவு அழகு. ராஜூவ் காந்தி கொல்லப்பட்டபோதுகூட வீட்டிலிருந்து பிரபாகரன் படம் அகற்றப்படவில்லை. ராஜீவ் கொலை செய்தி வந்த நேரம் தேர்தல் நேரம். அ.தி.மு.க, காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ்.. காலிகள் தி.மு.க. கொடிக்கம்பங்களை வெட்டிச் சாய்த்தார்கள். எங்கள் தெருவில் இருந்த ஒரே ஒரே தி.க.காரர் எழுதிப்போட்ட ஒரே ஒரு பகுத்தறிவுப் பொன்மொழிப் பலகையை உடைத்துப்போட்டார்கள். தி.க. கொடிக்கம்பமும் வெட்டிச் சாய்க்கப்பட்டது. தேர்தல் பணிகளுக்காக அமைக்கப்பட்ட 'தி.மு.க. மன்றம்' தீக்கிரையாக்கப்பட்டது. அதற்குப் பிறகு பிரபாகரன், புலிகள் என்று பேசுவது சட்ட மீறலாக்கப்பட்டது.

கலைஞர் படத்திலிருந்து எங்கள் வீட்டில் பிரபாகரன் புகைப்படம் அகற்றப்பட்டது, 'கலைஞரைக் கொல்ல புலிகள் சதி செய்தார்கள்' என்ற குற்றச்சாட்டின் பேரில் வைகோ தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டபோதுதான். ஆனால் அப்போதும் நான் புலி ஆதரவாளனாகவே தொடர்ந்தேன். எத்தனை தி.மு.க. தொண்டர்களுக்கு அந்த உளவுத்துறை அறிக்கைமீது நம்பிக்கை இருந்தது என்று தெரியவில்லை.  'வைகோவை வெளியேற்றுவதற்காக உளவுத்துறையின் அறிக்கையைப் பயன்படுத்திக்கொண்ட கலைஞரின் தந்திரம் அது,  மற்றபடி புலிகளாவது, கலைஞரைக் கொல்ல சதி செய்வதாவது' என்றுதான் நினைத்தேன். ஆனால் என் அப்பா புலிகளையும் பிரபாகரனையும் விமர்சிக்கத் தொடங்கினார். நான் கொஞ்சம் வைகோ ஆதரவாளன் ஆனேன் என்றுகூட சொல்லலாம்.
கல்லூரிக் காலத்தில் பெரியாரியக்கத் தொடர்புகளுக்குப் பிறகு நான் முழுமையாகவே புலி ஆதரவாளனாகவே இருந்தேன். 'வெடிக்கட்டும் வெடிக்கட்டும் விடுதலைப் புலிகள் துப்பாக்கி' என்று கோஷம் போட்டிருக்கிறோம். 'மானமுள்ள தமிழன் புலியாய் வாழ்கிறான்; மானங்கெட்ட தமிழன் ரசிகர் மன்றம் அமைக்கிறான்' என்று எழுதி, கல்லூரி மரங்களில் அட்டைகள் தொங்கவிட்டிருக்கிறோம். என்னிடத்தில் தென்மொழி இதழ் வெளியிட்ட, பிரபாகரன் படம் போட்ட, பாக்கெட்டில் வைக்குமளவு கையடக்க தமிழ் காலண்டர் ஒன்று இருந்தது. அது எப்போதும் என் பாக்கெட்டில் இருக்கும்.

என்ன, அந்தப் படத்தில் இருந்த பிரபாகரனிடம் இப்போது அந்த அழகான மீசை இல்லை. சற்று பருத்திருந்தார். முன்நெற்றியில் புரளும் கேசமில்லை. தொப்பி அணிந்திருந்தார். தமிழ்க்கவி அல்லது தமிழினி எழுதியிருந்தார்கள் என்று நினைக்கிறேன். பிரபாகரனுக்கு முன் வழுக்கை விழுந்ததால்தான் அவர் தொப்பி அணியத் தொடங்கினார் என்றும் சம்பந்தமேயில்லாமல் பல முன்னணித் தளபதிகளும் தொப்பி அணிந்து அதை இயக்க மரபு ஆக்கிவிட்டார்கள் என்றும். எப்படியோ, ஆனால் அந்த அழகான மீசையை ஏன் மழித்தார் எங்கள் சாகச நாயகன் என்று தெரியவில்லை.

பின்னாட்களில் ஈழப்போராட்டம் குறித்த பல விமர்சனப் பார்வைகள் கண்ணில் பட்டன; காதில் கேட்டன. சகோதரப் படுகொலைகள், ஜனநாயக மறுப்பு, முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை, மலையகத் தமிழரை ஒதுக்கிவைத்த யாழ் வெள்ளாள மேலாதிக்கம் எனப் பல விஷயங்கள் புதிதாகவே இருந்தன. ஏனெனில் பெரியாரியக்கங்கள் எவற்றிலும் இத்தகைய விமர்சனப் பார்வைகள் இருந்ததாகத் தெரியவில்லை. முழுக்கப் புகழ் பாடுதலும் சாகசக் கொண்டாட்டமும்தான். நான் இப்போது புலி எதிர்ப்பாளன் ஆனேனா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் புலிகள் மீதான விமர்சனப் பார்வை கொண்டவன் ஆனேன். ஏனோ அப்போதும்கூட என்னிடம் பிரபாகரன் மீதான சாகச மனநிலை நீங்கவேயில்லை. எனக்குப் புலிகள் மீது எவ்வளவு விமர்சனங்கள் இருந்தபோதும் பிரபாகரன் மீதிருந்த மரியாதையும் நேசமும் விலகவேயில்லை.

2009. இறுதிப்போர். கொந்தளிப்பு உருவாகியிருந்தது. எல்லா விமர்சனங்களையும் தாண்டி நானும் கொந்தளிப்பில் மூழ்கினேன். குறிப்பாக முத்துக்குமார் மரணம் எங்கள் கொதிநிலையை அதிகப்படுத்தியது. முழுக்க ஈழப்போர் நிலவரம் குறித்த செய்திகளை அறிவது, போருக்கு எதிரான எல்லா நிகழ்வுகளிலும் கலந்துகொள்வது என்று காலம் கழிந்தது. கருணாநிதி இப்போது எனக்கும் தமிழினத் துரோகியாய்த்தான் இருந்தார். கடைசியில் எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப்போயின. இனப்படுகொலை நடந்து முடிந்தது. ஈழப்போராட்டம் முடிவுக்கு வந்தது. ஒவ்வொருநாளும் துயரச் செய்திகள்.
சிறுவயதிலிருந்தே சாசகவாத மனநிலையுடன் அணுகியதாலோ என்னவோ, 'விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்க முடியும்' என்றோ 'பிரபாகரனுக்கும் மரணம் உண்டு' என்றோ என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, புலி எதிர்ப்பாளனாக அடையாளம் சுட்டப்பட்ட நாள்களிலும்கூட. எதிர்பார்க்காத, சந்திக்க விரும்பாத நாளும் வந்தது. சிறுவயதிலிருந்து நேசித்த சாகச நாயகன் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று மீண்டும் மீண்டும் நீரில் உப்பிய படம் ஒன்று தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அப்போது கவிஞர் தமிழ்நதி நல்ல தொடர்பில் இருந்தார். 'உண்மைதானா தமிழ்?' என்று கேட்டேன். 'கிராஃபிக்ஸ் என்கிறார்கள்' என்றார். ஆனால் மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட அந்தப் படம், உடைந்தேன். வாழ்நாளில் சிலரது மரணத்துக்கு மட்டும்தான் அப்படி அழுதிருப்பேன். அவர்களில் ஒருவர் பிரபாகரன்.

ஆனால் 'பிரபாகரன் நிச்சயம் இறந்திருக்க மாட்டார். அவரை யாராலும் கொல்ல முடியாது. தப்பியிருப்பார்' என்ற நம்பிக்கையும் ஓர் ஓரத்தில் இருந்தது. என் அப்பா  'பிரபாகரன் மாவீரன். நிச்சயம் தப்பிச்சிருப்பான்' என்றார். நானும் கொல்லப்பட்டதாகக் காட்டப்பட்ட படம் வேறு யாருடையதோ என்றுதான் நினைத்தேன். இடையில் இறுதிப்போர்க் காலகட்டத்தில் புலிகள், தப்ப விரும்பிய தமிழ் மக்கள்மீதே தாக்குதல் நடத்தியதைப் பல நெருக்கமான நண்பர்கள் சொன்னார்கள். 'புலி அரசியலில் இருந்து விடுதலை அடைவோம்' என்று எழுதினேன். பல நண்பர்கள் எதிரிகள் ஆனார்கள். பணம் பெறப்பட்டது உள்பட பல அவதூறுகள், விமர்சனங்கள் சுமத்தப்பட்டன. பத்தாண்டுகளுக்குப் பிறகு யோசித்துப் பார்க்கையில் அப்போது அவர்கள் இருந்த மனநிலையை உணர்ந்துகொள்ள முடிகிறது. இந்தப் பத்தாண்டுகளில் எவ்வளவோ மாறிவிட்டது. புலிகளை விமர்சித்தவர்கள்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த பலர் மாறினார்கள். புலிகள் அமைப்புக்குள்ளே இருந்தவர்கள் பலரே புலிகள் அமைப்பை விமர்சிக்கத் தொடங்கினார்கள். புலிகளைக் கடுமையாக விமர்சித்த பலர் ஈழ ஆதரவாளர்கள் ஆனார்கள்.  புலிகள் குறித்துப் பல நூல்கள் தமிழில் வெளியாகின.

அதில் இரு சம்பவங்கள், பிரபாகரன் குறித்து எனக்கு நானே கட்டமைத்த பிம்பங்களில் கீறல்களை ஏற்படுத்தின.
ஈழப்போரின் இறுதி நாட்கள் குறித்து காலச்சுவடில் 'அநாமதேயன் குறிப்புகள்' என்ற பெயரில் வெளியிடப்பட்ட கட்டுரையில் ஒரு சம்பவம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இறுதிப்போர்க்காலத்தில் தொடர்ச்சியான இழப்புகளைப் பிரபாகரனிடம் சுட்டிக்காட்டியபோது அவர் '300 பருத்தி வீரர்கள்' படத்தின் சி.டியைக் கொடுத்து, 'இப்படித்தான் நாம் போராடப் போகிறோம்' என்று தெரிவித்ததாக 'அநாமதேயன்'  எழுதியிருந்தார். அதேபோல் ஈழப்போராட்டம் குறித்த கணேச (அய்யரின்)னின் புத்தகத்தில், விடுதலைப்புலிகளின் தொடக்ககாலத்தில் ராகவன் ஒரு மார்க்சியப் புத்தகம் படித்துக்கொண்டிருந்ததைப் பிரபாகரன் பிடுங்கி எறிந்ததாக எழுதியிருப்பார். வாசிப்பை நிராகரித்த பிரபாகரனின் பண்பு, எனக்குள் சிறுகீறலை ஏற்படுத்தியது.

2009க்குப் பிறகு சில மாதங்கள் வரை பிரபாகரன் உயிருடன் இருப்பார் என்றுதான் நான் நம்பினேன். ஆனால் போகப்போக நம்பிக்கை தகர்ந்தது. இப்போது நெடுமாறன், வைகோ போன்ற சிலர், அதுவும் சில சந்தர்ப்பங்களில்தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால் எனக்கு அந்த நம்பிக்கையில்லை. நிச்சயம் அவர் சரணடைந்திருக்க மாட்டார், போராடி வீரச்சாவு அடைந்திருப்பார் என்றுதான் நம்புகிறேன். எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் அவர் ஒரு மகத்தான மாவீரன் என்றே கருதுகிறேன்.

சார்லஸ் ஆண்டனி இறந்த செய்தி இறுதிப்போர்க் காலகட்டத்திலேயே வந்தது. இறுதிப்போருக்குப் பின் பாலச்சந்திரன் கொலைப் படம் வெளிவந்து கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரபாகரன் இறந்ததாகக்கூட படங்கள் வந்துவிட்டன. ஆனால் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் மகள் துவாரகாவும் என்ன ஆனார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை. அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையோ மரியாதையான மரணங்களோ நிகழ்ந்திருக்க வேண்டும் என்றுதான் மனது விரும்புகிறது.

பிரபாகரன் இறந்து கிடந்தார். அவரது விழிகளில் சரித்திரம் உறைந்திருந்தது. அரசியல் பற்றிப் பேசுவதைத் தாண்டி என் பள்ளிப் பிராயத்திலிருந்து பிம்பமாய்ப் பயணித்த பிரபாகரன் என்னும் சாகச நாயகனுக்கு என் இறுதி மரியாதையைச் செலுத்தவே விரும்புகிறேன். பிரபாகரன் சிலருக்குத் தேவதை, சிலருக்குப் பிசாசு, சிலருக்கு ரட்சகன், சிலருக்கு பாசிஸ்ட். ஆனால் என்னைப் பொறுத்தவரை இப்போதும் எனக்குப் பல விமர்சனங்கள் இருந்தபோதும் தமிழர்களின் சுயமரியாதைக்கும் வீரத்துக்குமான குறியீடு பிரபாகரன்.
இனி பிரபாகரன் திரும்பப்போவதில்லை. பிரபாகரன் மாதிரியான ஒரு தமிழ் சாகச நாயகன் பிறக்கப்போவதுமில்லை. நாயகனே, உனக்கு என் பத்தாண்டுகால அஞ்சலிகள்!

https://www.facebook.com/1037767751/posts/10216953294798093/

No comments:

Post a Comment