மதம் மாறியவர்களை கொலை செய்ய இஸ்லாம் சொல்கிறதா? ஓர் ஆய்வு
AHAMEDSHA AHAMED JAMSATH (AL AZHARI)
2019-06-22
மதம் மாறியவரை கொலை செய்யுமாறு கூறும் சாரார் எடுத்து வைக்கும் ஹதீஸ்களில் முக்கியமானது இரண்டு. அந்த இரண்டு ஹதீஸ்கள் பற்றிய விளக்கத்துக்கு போக முன்பு மதம் மாறுவது கொலை செய்யப்படும் குற்றம் என்பதட்கு எதிராக வரும் குர்ஆன் வசனங்களை பார்ப்போம்.
மதம் மாறுதல் தொடர்பாக குர்ஆனில் உள்ள வசனங்களை தேடிப்பார்த்தால் மூன்று விதமான வகையில் குர்ஆன் அதனை அணுகுகிறது.
ஒன்று: பொதுவாக முஸ்லிம் முஸ்லிம் அல்லாதவர்களின் மத சுதந்திரம் பற்றி பேசும் வசனங்கள்
இரண்டு: இஸ்லாமிய மதத்திலிருந்து மதம் மாறுவதன் சுதந்திரம் பற்றி பேசும் வசனங்கள்
மூன்று: மதம் மாறியவர் கொலை செய்யப்படாமல் இருக்கும் சந்தர்ப்பங்களை பேசும் வசனங்கள்
இந்த மூன்று வகை வசனங்களும் மதம் மாறுபவனை கொலை செய்ய வேண்டும் என்று எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சொல்லவே இல்லை. இதையும் தாண்டி விரும்பியவர்கள் அவரவர் தமது மதத்தில் இருந்துகொள்ளட்டும் என்று ஏவல் வார்த்தைகளில்கூட குர்ஆன் சொல்வதை காணமுடியும். மேலே சொன்னதுபோல முதல் வகையான முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சொல்லும் பொதுவான வசனங்களை முழுவதுமாக இங்கு பதிந்து அதட்கான விளக்கத்தை பார்ப்போம்.
ஒன்று:
"இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது" 2:256
இரண்டு: “இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது” என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். (18 : 29)
மூன்று: "(நபியே ) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா?"
(10 : 99)
நான்கு: "எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர். புறக்கணித்து (ஏக இறைவனை) மறுப்பவன் தவிர. அவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான். அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது." (88 : 21)
ஐந்து: "நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு” என (முஹம்மதே!) கூறுவீராக!"
(108 : 1)
ஆறு: "இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்."
(9 : 6)
மேலே கூறப்பட்ட மத சுதந்திரம் பற்றிய முதல் வசனம் எல்லோருக்கும் அறிமுகமான பிரபலமான வசனம் ஆகும். இந்த மார்க்கத்தில் நிர்பந்தம் கிடையாது, சத்தியம் எது, வழிகேடு எது என்பது தெளிவாகிவிட்டது. எனவே நிர்ப்பந்தம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்ற கருத்தை நேரடியாகவே தருகிறது. இவ்வாறு நிர்ப்பந்தம் செய்து மார்க்கத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லும் இஸ்லாமா மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாதவரை கொலை செய்ய சொல்லும்?
இந்த மார்க்கத்தை விட்டுப் போகின்றவரை கொலை செய்வது இஸ்லாம் என்றால் "இந்த மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை" என்ற வசனத்தின் அர்த்தம் கேள்விக்குறியாகிவிடும். அதன் மேல் உள்ள நம்பிக்கை இழக்கப்பட்டுவிடும், அதன் நீதி அநீதியாக மாறிவிடும். எனவே குர்ஆன் இம்மார்க்ககத்தில் நிர்பந்தம் இல்லை என்று சொல்வதன் அர்த்தம் மார்க்கத்தை விட்டு செல்லும் சுதந்திரம் இருக்கிறது என்பதுதான் என்பதை தெளிவுள்ளவர்கள் புரிவார்கள்.
18:29 யில் கூறப்படும் வசனம் விரும்பியவர் இந்த மார்க்கத்தை ஏற்கலாம், விரும்பியவர் இந்த மார்க்கத்தை மறுக்கலாம் என்று தெளிவாகவே மத சுதந்திரத்தை பிரகடனம் செய்கிறது. முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் இருசாராரும் இஸ்லாமிய வேதத்தை, இந்த மார்க்கத்தை விரும்பி ஏற்கலாம் விரும்பி மறுக்கலாம் என்று மேலதிக விளக்கம் தேவையில்லாதளவு தெளிவாகவே உள்ளது. இஸ்லாமிய மார்க்கம் பற்றிய அகீதாவை இது பேசுகிறது. இஸ்லாமிய மார்க்கம் பற்றிய கொள்கை நிலைப்பாட்டை இது பேசுகிறது.
இது காலத்துக்கு காலம் மாறும் பிக்ஹ் சார்ந்த சட்டத்தை பேசவில்லை, எனவே மதீனாவில் இந்த சட்டம் மாறிவிட்டது என்ற பேசிச்சுக்கே இடமில்லை. இஸ்லாமிய அகீதாவை வாசித்தவர்களுக்கு தெரியும் பிக்ஹ் சார்ந்த விடையங்கள்தான் நாசிக், மன்சூக், காஸ், ஆம், முத்லக், முகைய்யத் போன்ற சட்டங்களால் மாறும் தன்மை கொண்டது. ஆனால் அகீதா சார்ந்த சட்டங்கள், வரலாறு, சம்பவங்கள் என்பன மாறுவதில்லை. காலத்துக்கு காலம், நேரத்துக்கு நேரம் மாறாதவை. எனவே இது மக்கா வசனம், இது மதீனா வசனம் என்று பிரித்து பார்க்க கிஞ்சீற்றும் இவர்களுக்கு இதில் இடமில்லை.
10: 99 ஆகிய மூன்றாவது வசனம் இன்னும் தெளிவாக நுபுவ்வத்தின் நோக்கம் பற்றி பேசுகிறது. நுவுவ்வத்தின் நோக்கம் மக்களை இந்த மார்க்கத்தில் நிர்ப்பந்தம் செய்து உள்வாங்கி வைப்பது அல்ல என்று மிகத்தெளிவாக நுபுவ்வத்தின் அடிப்படையை, நுவுவத்தின் அகீதா நம்பிக்கையை கொள்கை பிரகடனமாக செய்கிறது. நுபுவ்வத்தின் ஊடாக மக்களை நிர்பந்தம் செய்துதான் இந்த மார்க்கத்தை ஏற்க செய்ய வேண்டும் என்றால் அல்லாஹ் படைக்கும்போதே எல்லோரையும் முஸ்லிமாக படைத்திருப்பான் என்று ஒரு தர்க்க ரீதியான காரணத்தையும் அல்லாஹ் உள்நுழைத்து புரிய வைக்கின்றான், நுபுவ்வத் என்பதே பிரச்சாரம், அறிவூட்டல் என்பதுதான், எனவே இதன் ஊடாகவே மார்க்க நம்பிக்கைகளை ஏட்படுத்த முடியுமே தவிர மரண தண்டனை என்ற பயத்தை ஏற்படுத்தி அல்ல என்பதை அறிவுபூர்வமாக சிந்திக்கும்படி இவ்வசனம் சொல்கிறது. மரண தண்டனையை காட்டி இஸ்லாத்தில் இருக்க சொல்வதுதைவிட வேறு என்ன நிர்ப்பந்தம் இருக்கிறது.
88:21 வசனமும் மேலே மூன்றாவது கூறிய அதே நிலைப்பாட்டையே கூறுவதால் ஐந்தாவதாக கூறிய வசனத்தை பார்ப்போம். இந்த வசனமும் நம் எல்லோருக்கும் தெரிந்த பிரபலமான வசனம்தான். மக்காவில் இருந்த குரைஷிக் காபிர்கள் பற்றியது. அவர்களிடம் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை பிரகடனம் செய்யும்போது "உங்களுக்கு உங்கள் மார்க்கம், எங்களுக்கு எமது மார்க்கம்" என்ற அகீதாவின் அடிப்படையை சொல்கிறது. உங்களது கடவுள்களை நாங்கள் வணங்காமல் இருக்கும் உரிமை இருப்பதுபோல எங்களது கடவுளை நீங்கள் நீங்கள் வணங்காமல் இருக்கும் உரிமை உண்டு.
இந்த உரிமையின் அடிப்படையில் உங்கள் மார்க்கத்தில் நீங்கள் இருக்கும் உரிமையும், எங்கள் மார்க்கத்தில் நாங்கள் இருக்கும் உரிமையும் உண்டு என்று இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது.மக்காவில் சிறுபான்மையாக இருக்கும்நிலையில் இவ்வாறு அவரவர் மதத்தில் அவர் அவர் இருக்கும் உரிமைகள், சுதந்திரங்கள் பற்றி தெளிவாகவே பேசிய நபி ஸல் அவர்களா மதீனாவில் அதிகாரம் கிடைத்ததும் கட்டாயமாக இந்த மார்க்கத்தில் இருக்க வேண்டும் என்ற கருத்தை சொன்னார்கள்? இந்த கருத்து நபி ஸல் அவர்களின் நம்பக தன்மையை கேள்வியாக்கும் போக்கு இல்லையா? இது குர்ஆனின் நீதிக்கு குந்தகம் ஏட்படுத்தும் ஒன்றில்லையா?
மத சுதந்திரம் தொடர்பாக ஆறாவதாக சொல்லப்பட்ட 9:6 இலக்க வசனம் இணைவைப்பாளர்களை இஸ்லாமிய அரசு பாதுகாக்கும் விதமாக பேசுகிறது. தங்களது மதம், உயிர், உடல், உடமைகளுக்கு பாதுகாப்பு கேட்டு வருகின்றவர்களை அரவணைக்க சொல்கிறது இவ்வசனம். அவர்கள் இணைவைக்கும் நிலையில்தான் அதனை சொல்கிறது. இஸ்லாத்துக்கு வந்தால்தான் பாதுகாப்பு கிடைக்கும் என்ற எந்த நிபந்தனையையும் இதில் இஸ்லாம் சொல்லவில்லை. எனவே மத சுதந்திரம் என்று தெளிவாக பேசும் இஸ்லாம் எந்த வகையில் மதம் மாறுபவரை கொலை செய்யும் என்ற கேள்வியை இந்த வசனம் மூலமும் உறுதியாக கேட்க முடியும்.
இரண்டு: இஸ்லாமிய மதத்திலிருந்து மதம் மாறுவதன் சுதந்திரம் பற்றி பேசும் வசனங்கள்
"உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்."
(2 : 217)
இந்த வசனம் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து மதம் மாறியவர்கள் இறை மறுப்பாளராக மறுக்கும் நிலையில் மரணிப்பது பற்றி பேசுகிறது. அவ்வாறு மறுப்பவர் கொலை செய்யப்பட வேண்டியவர் என்று கூறப்படவில்லை. ஏனைய பாவங்கள் செய்த நிலையில் ஒருவர் மரணம்வரை மன்னிப்பு கேட்காமல் சாதாரணமாக மரணிக்கும் வரை அவர் நிலைப்பாடு எப்படி பேசப்படுமோ அப்படியே மதம் மாறியவர்
மரணமும் சாதாரண மரணம்வரை பேசப்படுகிறது, மதம் மாறியவர் மரண தண்டனை மூலம் கொல்லப்படுவார் எனில் இந்த வசனம் அமைந்திருக்கும் விதம் இப்படி இருக்க முடியாது.
மதம் மாறுவதட்கு மரண தண்டனை என்றால் மதம் மாறுவதை பற்றி பேசிவிட்டு மரண தண்டனை பற்றி அல்லவா அல்லாஹ் பேசியிருப்பான், ஆனால் அல்லாஹ் சாதாரண நிலையில் மரணிப்பவர்களின் இம்மை, மறுமை நிலையை பற்றித்தான் மதம் மாறுவது பற்றி பேசும் இடத்திலும் பேசுகிறான். மதம் மாறியவர் மரணம்வரை தனது நிலையை மாற்றிக்கொள்ளாது மரணித்தால் அவருக்கு இவ்வுலக நன்மைகள் அழிந்துவிடும், மறுமையில் தண்டனை உண்டு என்பதுதான் இவ்வசனத்தில் பேசப்பட்டுள்ளது.
இது மரண தண்டனை இல்லாமல் சாதாரணமாக மரணிக்கும் ஒருவருக்கு சொல்லும் சட்டமே. மதம் மாறியவர் அவர் மரணிக்கும்வரை தனது நிலைப்பாட்டை சுயபரிசோதனை செய்யும் கால அவாகசம் உண்டு. ஏனைய பாவங்களுக்கு எப்படி மரணம்வரை கால அவகாசம் உண்டோ அதுபோலவே மதம் மாறும் பாவத்துக்கும் திருந்துவதட்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இவ்வசனம் மூலம் புரியலாம். அப்படி என்றால் மதம் மாறுவதட்கு மரண தண்டனை என்ற சட்டம் எங்கிருந்து வந்தது என்பதை புரிய வேண்டும். அதனை இப்பதிவின் இறுதிப் பகுதியில் தருகிறேன்.
மூன்று: மதம் மாறியவர் கொலை செய்யப்படாமல் இருக்கும் சந்தர்ப்பங்களை தெளிவாக பேசும் வசனங்கள்
இஸ்லாமிய மார்க்கத்தில், இஸ்லாம் அல்லாத மதங்களில் இருக்கும் சுதந்திரம் பற்றி பேசிய ஆறு வசனங்களின் விளக்கத்தை பார்த்தோம், இப்போது இரண்டாம் வகையான மதம் மாறும் சுதந்திரம் இஸ்லாத்தில் உண்டா என்பதை பார்ப்போம். அவரவர் அவரவர் மதத்தில் இருக்கும் சுதந்திரம் உள்ளது என்ற வசனங்களே மதம் மாறும் சுதந்திரத்தை மனிதனுக்கு கொடுக்கிறது என்பதட்கும் ஆதாரம் என்றாலும் மதம் மாறும் சுதந்திரம் பற்றியும் குர்ஆன் பேசித்தான் உள்ளது.
"நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை."
(4 : 137)
இந்த வசனத்தை தெளிவுபடுத்த முன் அந்த வசனங்களை கட்டுடைத்து அதன் பின் விளக்கினால் மேலும் தெளிவு கிடைக்கும்.
ஈமான் கொண்ட நிலை
மதம் மாறிய நிலை
ஈமான் கொண்ட நிலை
மதம் மாறிய நிலை
இதுபோல அடிக்கடி மதம் மாறிக்கொண்டே இருக்கும் நிலை
இந்த வசனத்தில் தெளிவாக இரண்டு தடவை மதம் மாறுவது பற்றியும், அதட்கு மேல் பலதடவை மதம் மாறுபவர் பற்றியும் கூறப்பட்டுள்ளது. மதம் மாறியவர் கொலை செய்யப்படுவார் என்பதுதான் தண்டனை என்றால் இரண்டாவது மூன்றாவது, நான்காவது என்று தொடர்ச்சியாக மதம் மாறுவது சாத்தியம் இல்லை. ஒரு வாதத்துக்கு ஒரு தடவை மதம் மாறியவர் மீண்டும் தவ்பா செய்து இஸ்லாத்துக்கு வருவதட்கு சந்தர்ப்பம் கொடுத்தாக வைத்துக்கொண்டாலும் இரண்டாம் முறை மதம் மாறுகிறார், மூன்றாம் முறை மதம் மாறுகிறார், நான்காம் முறை மதம் மாறுகிறார் என்ற அர்த்தத்தில் வரும் இந்த வசனம் மதம் மாறுதலுக்கு மரண தண்டனையை சொல்வதை மறுக்கும் விதமாக இருப்பதை தெளிவுபடுத்துகிறது. இவர்களுக்கு மறுமையில் உள்ள கடுமையான தண்டனையை பற்றியே பேசுகிறது குர்ஆன்.
மதம் மாறியவன் தவ்பா செய்தால் மன்னிப்பு கொடுப்பது, இல்லை என்றால் மரண தண்டனை கொடுப்பது என்பதுகூட சாத்தியமில்லை. ஏனெனில் அவன் மதம் மாறியதே தெளிவான மார்க்கத்தில் தெளிவு பெறாமல்தான், தெளிவு பெறாதவன் என்று தெரிந்தும் அவனுக்கு தவ்பா செய்தால் மன்னிப்பு, இல்லை என்றால் மரண தண்டனை என்பது ஏற்கனவே சொல்லப்பட்ட மத சுதந்திரம் பற்றிய வசனங்களுக்கும், நிர்ப்பந்தம் இல்லை என்று சொன்ன வசனங்களுக்கும் நேரெதிராக உள்ளது.
கொலை, கொள்ளை, விபச்சாரம் போன்ற கொடிய, கொடூர விடையங்களுக்கு செயல்களுக்கு வேண்டுமானால் மரண தண்டனை நியாயம் ஆகும், ஆனால் ஒரு செய்தியை, வேதத்தை பிழையாக புரிந்து மாற்று மதத்துக்கு செல்வதட்கு மரண தண்டனை எந்த வகையில் நியாயம் ஆகும். மக்காவில் மத சுதந்திரம் பற்றி பேசிய வசனங்களுக்கு எந்த வகையில் அது முரண்படாமல் இருக்கும். அதிகாரம் இல்லாமல் சிறுபான்மையாக இருக்கும்போது மத சுதந்திரம் பேசுவதும், அதிகாரம்தபோது மத நிர்ப்பந்தம் பேசுவதும் எந்த வகையில் இஸ்லாத்தில் இருக்க முடியும்? (அரசாங்கம் ஒன்று உருவான பின் குற்றவியல் தண்டனைக்கு கொடுக்கும் தண்டனை பற்றிய வசனங்கள் வேறு, அதனை இவ்வாறு புரிய முடியாது, அது எல்லா அரசும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விடையம்தான்). நிச்சயமாக இது மனிதன் அவனாக உருவாக்கிக் கொண்ட சட்டம்தான், இதனை பிழையாக இஸ்லாம் என்று புரிந்துகொண்டுள்ளனர்.
மதம் மாறுபவரை கொலை செய்ய சொல்வதாக பிழையாக புரியப்படும் ஹதீஸ்களும் அதட்கான விளக்கமும்
========================
இப்னு அப்பாஸ் ரலி கூறுகிறார்கள் "யார் தனது மார்க்கத்தை மாற்றினாரோ அவரைக் கொல்லுங்கள்" என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்" நூல் : புகாரி (3017)
இந்த ஹதீஸ் மேலோட்டமாக பார்க்கும்போது மதம் மாறுபவரை கொலை செய்யலாம் என்ற அர்த்தம் எடுக்க முடியுமான வசனமாக தோன்றுகிறது, அதனால்தான் மத்ஹப் ஆதிக்கம் உள்ளவர்களால் இந்தக் கருத்து மேலோங்கியது. மத்ஹப் அறிஞர்கள் சொல்லி அது மீள்பரிசீலனைக்கு உட்படாத காரணத்தால் பின்வந்தவர்களும் இதனை அப்படியே ஏற்றுக்கொண்டனர். மத்ஹப் கருத்துக்களில்கூட மீள்பரிசீலனை செய்து முத்தலாக், மரணித்தவர்களுக்கு ஈஸாலு தவாப் செய்தல் போன்ற மஸாயில்களில் மாற்றுக் கருத்து தெரிவித்த இப்னு தைமியா போன்றவர்கள்கூட நூறுவீதமான மஸாயில்களிலும் சீர்திருத்தம் கொண்டுவரவில்லை. மனிதன் என்ற அடிப்படையில் அவரால் முடிந்த சீர்திருத்தங்களை செய்தார், அவரால் புரியமுயடியுமானவற்றை மாற்றி கூறினார். மற்றப்படி அறிஞர்கள், மக்களில் வேரூண்டியிருந்த, இருந்துகொண்டிருந்த நம்பிக்கையைத்தான் அறிஞர்களும் மக்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.இதுதான் யதார்த்தம்.
இந்த ஹதீஸை சரியான முறையில் புரிய வேண்டுமாயின் இரண்டு வகையில் புரிய முடியும்.
ஒன்று: குர்ஆனின் புரிதலுக்கு மாற்றம் இல்லாமல் புரிதல்
இரண்டு: இந்த ஹதீஸில் வரும் "Bபத்தல"(மாற்றுதல்) என்ற சொல் குர்ஆனில் என்ன அர்த்தத்தில் வருகிறது என்று பார்த்து அந்த அர்த்தத்தில் ஹதீஸை விளங்குதல்.
இந்த இரண்டு வகையும் குர்ஆனில் இருந்து ஹதீஸை புரிந்துகொள்ள மிகவும் நெருக்கமான, மிகவும் பொருத்தமான முறைகளாகும். குர்ஆனுக்கு விளக்கமாக வரும் ஹதீஸை குர்ஆனுக்கு நேர் எதிராக புரியாமல் இருக்க இதுதான் சரியான வழி. குர்ஆனுக்கு ஹதீஸ்களை விளக்கமாக கொடுக்க முயட்சிக்க வேண்டிய இடத்தில பெரும்பாலானவர்கள் சறுக்கிய இடம் இதுதான். குர்ஆனிய புரிதல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட தங்கள் சமூகத்தில் பரம்பரை பரம்பரையாக ஆதிக்கம் செலுத்தும் கருத்தில் முக்கியத்துவம் கொடுப்பது குர்ஆனுக்கான விளக்கமாக ஒருபோதும் அமையாது. சமூக கட்டமைப்பிலிருந்து தூரமாக சிந்திக்க தூண்டும் ஆய்வுகளை உள்வாங்க முயட்சிப்பதன் ஊடாகவே சரியான சிந்தனைக்கு வரமுடியும்.
இந்த வகையில் மேலே சொன்ன குர்ஆனின் இரண்டு வகையான புரிதலில் முதல் வகை புரிதல் அடிப்படையில் குர்ஆன் ஒரு இடத்தில்கூட மதம் மாறுவதட்கு மரண தண்டனையை சொல்லவே இல்லை. அதட்கு மாற்றமான நிலைப்பாட்டை பல இடங்களில் சொல்லியுள்ளதைக் காணமுடிகிறது. எனவே இது பற்றிய விளக்கத்தை மேலே நாம் தெளிவாகவே பார்த்துவிட்டோம். இனி இந்த ஹதீஸை மொழி ரீதியாக புரிய இரண்டாவது வகை புரிதலுக்கு செல்வோம்.
இரண்டாவது வகையான மொழி அடிப்படையில் குர்ஆனில் "Bபத்தல" என்ற சொல் பனூ இஸ்ரேவேலர்கள் குறித்து வரும் வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் அவர்கள் தமக்கு சொல்லப்படும் கட்டளையில் வார்த்தைகளை மாற்றுவது தொடர்பாக சொல்லப்பட்டுள்ளது. 2:59 என்ற வசனத்ததை இதட்கு உதாரணமாக எடுக்க முடியும்.
" ஆனால் அநீதி இழைத்தோர், தமக்குக் (கூறப்பட்டதை விடுத்து) கூறப்படாத வேறு சொல்லாக மாற்றினார்கள். எனவே அநீதி இழைத்து, குற்றம் புரிந்ததால் வானத்திலிருந்து வேதனையை அவர்களுக்கு இறக்கினோம்."
இந்த குர்ஆனிய வசனத்தில் வரும் "வேறு சொல்லாக மாற்றினார்கள்" என்ற இடத்தில் " மாற்றினார்கள்" என்ற இடத்தில் ஹதீஸில் வரும் "Bபத்தல" என்ற மாற்றுதல் என்ற அர்த்தமே வருகிறது. எனவே அந்த மார்க்கத்தில் கூறப்பட்டதை அந்த மார்க்கத்தில் இருந்துகொண்டு வேறு மார்க்கமாக மாற்ற முயட்சி செய்வதுதான் குற்றங்களில் மிகப்பெரும் குற்றம். அதனால்தான் பனூ இஸ்ரேவல்களுக்கு வானத்திலிருந்து தண்டனை இறக்குவதாக அல்லாஹ் எச்சரிக்கிறான்.
வேறு மதம் மாறுருவதை பற்றி பல இடங்களில் பேசிய அல்லாஹ் அதட்கு மறுமையில் உள்ள கடுமையான தண்டனை பற்றி மட்டுமே கூறுகிறான். அதே நேரம் தமது மார்க்கத்தில் இருந்துகொண்டு வேறு மதமாக "தப்தில்"(மாற்றம்) செய்வதை அல்லாஹ் கடுமையாக கண்டிக்கிறான். இந்த அடிப்படையில்தான் கலிமா சொன்ன நிலையில் எல்லா வணக்கத்திலும் சரியாக இருந்த சிலர் ஸகாத் எனும் இஸ்லாத்தின் தூணான கடமையை மறுத்ததட்கு எதிராக அபூ பக்கர் ரலி அவர்கள் போர்தொடுத்தார்கள். அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியில் சென்றமை என்பதட்கு அல்ல.
ஏனெனில் லாயிலாக இல்லல்லாஹ்" எனும் கலிமாவை சொன்னவர் இரத்தம் ஹராம் ஆனது என்பது இஸ்லாத்தின் அடிப்படை ஆனால் மார்க்கத்தில் இருந்துகொண்டு மார்க்கத்தின் தூணான சட்டங்களை மாற்றுவது தண்டனைக்குறிய குற்றம் என்பதன் மூலமே இவர்கள் போராட்டம் செய்யப்பட்டார்கள். இது தவிர மதம் மாறுதல் என்ற பாவத்தைவிட குறைந்த பாவமான களவுவெடுத்தல், கொள்ளையடித்தல், விச்சாரம் செய்தல், கொலை செய்தல் போன்றவற்றுக்கூட உலக குற்றவியல் தண்டனை சொன்ன அல்லாஹ் மதம் மாறுதல் பற்றி பேசிய எந்த வசனத்திலும் குற்றவியல் தண்டனையையை சொல்லவே இல்லை.
இவர்கள் ஆதாரமாக காட்டும் இந்த ஹதீஸும் மதம் மாறுதல் பற்றி பேசவில்லை என்பதும் தெளிவு. கொலை போன்ற கடுமையான தண்டனை விடையத்தில் இவர்கள் எடுத்துக்கு வைக்கும் ஆதாரம் இவ்வளவு பலயீனமான அர்த்தம் தரக்கூடிய வகையிலும் குர்ஆனுக்கு நேர் முரணான அர்த்தம் தரும் வகையிலும் இவர்களால் திணிக்கபப்டுகிறது. அறிஞர்கள் தமது கருத்துக்களை பெரும்பாலும் மாற்றக்கூடியவர்களாக இருந்துள்ளனர்.
மாற்று விளக்கங்கள் அவர்களுக்கு செல்லும் நேரம் அதனை அவர்கள் சரிகாணக் கூடிய நம்நிலையில் இருந்துள்ளனர். மத்ஹப் கடும்போக்குவாதிகளை தவிர நான்கு மத்தகபுடைய அறிஞர்களே தமது கருத்தைவிட ஹதீஸ் சரியாகும் பட்சத்தில் ஹதீஸை முட்படுத்த சொல்லியுள்ளனர். குர்ஆன் ஸுன்னாவைவிட எமது கருத்து பலமானது அல்ல என்று அவர்களே வாக்குமூலம் தந்த பின் அவர்களைக் காட்டி நாம் மக்களை ஏமாற்ற நினைப்பது எவ்வளவு அறிவியல் மோசடி ஆகும்.
அடுத்தாக மதம் மாறியவருக்கு மரண தண்டனை என்று சொல்வதட்கு இவர்களில் சிலர் எடுத்துவைக்கும் இன்னுமொரு ஹதீஸ் உள்ளது. அது எவ்வகையில் இவர்கள் பிழையாக புரிந்துள்ளனர் என்பதை பார்ப்போம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்' என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.
(அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. மார்க்கத்தை விட்டு வெளியேறி 'அல் ஜமாஅத்தை ( அரச கட்டமைப்பை) விட்டு பிரிந்து செல்பபவர்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 87.
இந்த ஹதீஸை மட்டும் வைத்து சட்டம் எடுக்கப் போனால் மேலோட்டமாக இப்படி புரியவும் வாய்ப்புள்ளது. இது அல்லாத புரிதல்களும் உள்ளன. ஆனாலும் இந்த ஹதீஸ் மேலதிக விளக்கத்துடன் இன்னுமொரு இடத்தில் வந்துள்ளது. நஸயி, அபு தாவூத் ஆகிய கிரந்தங்களில் இவ்வாறு மேலதிக விளக்கம் வந்துள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று தன்மைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலே தவிர (வேறெந்த நிலையிலும்) முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல; திருமணம் முடித்து விபச்சாரம் செய்பவர், வேண்டுமென்று முஸ்லிமை கொலை செய்பவர், இஸ்லாத்தைவிட்டு வெளியேறி, அல்லாஹ் றஸூலுடன் போரிடுபவர். இவர் கொலை செய்யப்படுவார், அல்லது சிலுவையில் அறையப்படுவார், அல்லது நாடு கடத்தப்படுவார்" ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல் : நஸயீ (3980)"
முதல் ஹதீஸைவிட இந்த ஹதீஸ் மேலதிக தகவலை தருகிறது. விரிவாகவும் விளக்கி சொல்கிறது. முதல் ஹதீஸில் மட்டும் நின்று சட்டம் எடுத்தால் இரண்டாவதாக சொல்லப்படும் கொலைக்கு கொலை என்பது கூட விளக்கம் இல்லாமல் எல்லா வகை கொலைக்கும் கொலைதான் என்ற முடிவு எடுக்க நேரிடும், இரண்டாவது வகை ஹதீஸுடன் ஒப்பிட்டால்தான் வேண்டுமென்று கொலை செய்வதட்குத்தான் மரண தண்டனை என்பது தெளிவாகும். இல்லை என்றால் பொதுவாக எல்லா கொலைக்கும் மரண தண்டனை என்ற கருத்தும் எடுக்க முடியும். எனவே இரண்டாம் ஹதீஸில் கூறப்பட்ட ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் தெளிவாக அல்லாஹ் ரசூலுடன் போராடும் வகையில் உள்ள மதம் மாறியவரைத்தான் கொலை செய்ய ஹதீஸில் ஆதாரம் உள்ளது. மாறாக வெறுமனே மதம் மாறுவதட்கு ஆதாரம் இல்லை.
எனவே மேலே சொன்ன மூன்று காரணத்தை தவிர வேறு காரணங்களுக்கு ஒருவரை கொலை செய்ய முடியாது என்று ஹதீஸில் தெளிவாக ஆதாரம் வந்த பின்பும் மதம் மாறி நமக்கு எந்த தொந்தரவும் செய்யாதவர்களை கொலை செய்ய வேண்டும் என்று சொல்வதட்கு குர்ஆனிலோ, ஹதீஸிலோ எங்கே ஆதாரம் உள்ளது? அறிஞர்கள் சொல்லியுள்ளார்கள் என்பதுதான் ஆதாரமா?
அப்படி என்றால் எல்லோரும் மத்கபில் இருந்துவிட வேண்டியதுதானே. எதட்கு மத்ஹபை எதிர்த்து பிரச்ச்சாரம் செய்ய வேண்டும்? எல்லோரும் ஒற்றுமையாக ஒரே மத்ஹபில் இருந்துவிட்டு எல்லா இயக்கங்களையும் களைந்து விடவேண்டியதுதான். எமது கருத்தைவிட குர்ஆன் சுன்னாவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அறிஞர்களே சொன்ன பின் அவர்கள் பெயரில் ஏன் இந்த பொய் பிரச்சாரம். அறிஞர்கள் சொல்லி இருந்தால்தான் ஏற்க வேண்டும் என்று குர்ஆனும் சொல்லவில்லை, நபி ஸல் அவர்களும் சொல்லவில்லை. அறிஞர்களே சொல்லவில்லை. நிலை இவ்வாறிருக்க அறிஞர்களை சம்மந்தம் இல்லாமல் உள்ளே நுழைத்து குழப்புவது யார் என்பதை தெளிவுள்ளவர்கள் அறிவார்கள்.
இது தவிர நபி ஸல் அவர்கள் காலத்தில் மதம் மாறியவர்கள் பலர் இருந்தனர், அவர்கள் எல்லோரும் நாட்டின் அமைதிக்கும், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் எதிராக இருந்தனர் என்ற அடிப்படையில்தான் எதிர்க்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர். மாறாக மதம் மாறியதட்காக மட்டும் அல்ல. நபி ஸல் அவர்களின் மரணத்தின்பின் எத்தனையோபேர் இஸ்லாத்தை விட்டு போனார்கள், அவர்களை எல்லாம் அபூ பக்கர் ரலி அவர்கள் கொலை செய்யவில்லை. மாறாக ஸகாத் மறுப்பில் இருந்தவர்களோடுதான் போராடினார்கள்.
இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்பது போன்ற வசனங்கள் இஸ்லாத்துக்கு வெளியில் உள்ளவர்களை இஸ்லாத்துக்கு வருமாறு வட்புறுத்துவதுதான் பிழை, இஸ்லாத்தில் இருந்து வெளியில் செல்பவர்களை கொலை செய்வது என்பது நிர்ப்பந்தத்தில் வராது என்ற வாதம் அறிவீனமான வாதமாகும். விரும்பியவர் ஈமான் கொள்ளட்டும் விரும்பியவர் மறுக்கட்டும், இந்த மார்க்கத்தில் நிர்பந்தமில்லை போன்ற வசனங்கள் பொதுவான வசனமாகும். எந்த வகையில் நிர்ப்பந்தம் செய்தாலும் நிர்ப்பந்தம்தான் இப்படி இஸ்லாத்துக்கு வெளியில் உள்ளவர்களை நிர்ப்பந்தம் செய்வதைத்தான் நிர்பந்தம் என்று சொல்லலாம் என்று பொதுவான வசனத்தை குறிப்பாக்க எந்த ஆதாரமும் இல்லை. இஸ்லாமிய சட்டக்கலையில் "முத்லக்" எனும் வரையறையற்ற சட்டம் "முக்கய்யத்" எனும் வரையறை இல்லாதவரை வரையறையற்ற சட்டமாகவே இருக்கும், "ஆம்" எனும் பொதுவான சட்டம் "காஸ்" எனும் தனிப்பட்ட சட்டம் வராதவரை பொதுவாகவே இருக்கும்.
எனவே மேலே சொன்ன வசனங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை இஸ்லாத்துக்கு பலவந்தமாக வாருங்கள் என்று சொல்வதைத்தான் குறிக்கும், இஸ்லாத்தில் இருந்து வெளியேறுவதை குறிக்காது என்ற வாதம் இஸ்லாமிய சட்டக்கலையில் நின்று கூறப்பட்டதாக அமையாது. அதேபோல சில வசனங்கள் முனாஃபிக்குகள் தொடர்பானது எனவே அது மதம் மாறியவர்கள் தொடர்பானது அல்ல என்ற வாதமும் இந்த சட்டக்கலையை புரியாமல் பேசுவதாகவே அமையும். முனாஃபிக்குகள் என்றால் மதம் மாறியவர்கள்தான். மதம் மாறியவர்களில்தான் முனாஃபிக்கும் வருவான்.
மதம் மாறியவனை கொலை செய்யக் கூடாது என்பதில் முனாஃபிக்கும் வருவான். எனவே முனாஃபிக் மதம் மாறியதில் வரமாட்டான் என்பது மேலே சொன்ன இஸ்லாமிய சட்டக்கலை விதிக்கு முரண். முனாஃபிக்குகள் மதம் மாறி இருந்தாலும் அவர்கள் குழப்பம் செய்யக் கூடியவர்களாக இருக்கவில்லை என்பதால்தான் அவர்களை கொலை செய்யவில்லை. எப்போது அவர்கள் குழப்பம் செய்வதாக தெரிய வருகிறதோ அப்போது அவர்களும் கொலை செய்யபப்டுவார்கள். ஒப்பந்தங்களை மீறுவதும் நிஃபாக் என்ற வகைதான். யூதர்கள் ஒப்பந்தங்களை மீறியபோது கொலை செய்தமை இப்படியான குழப்பம் செய்யும் நிஃபாக் வகையை கொண்டுதான். நிஃபாக் என்பது குழப்பமாக, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக, சமூக சீர்கேட்டை தூண்டும் விதமாக இருந்தால் மட்டும்தான் நிஃபாக் கூட கொலை செய்யும் நிலைக்கு போகும். மாறாக மதம் மாறுதல் மட்டும் மரண தண்டனையை ஏட்படுத்தும் காரணி அல்ல.
அறிஞர்களில் பெரும்பாலானோர் மதம் மாறினால் கொலை செய்ய வேண்டும் என்ற கருத்தில் உள்ளனர். இருந்தாலும் சுஃப்யான் அத்தவ்ரி, அந்ஹயி போன்ற அறிஞர்கள் மதம் மாறியவரை கொலை செய்யக்கூடாது என்ற கருத்தில் உள்ளனர், இமாம் அபு ஹனீபா போன்றவர்கள் பெண்கள் மதம் மாறினால் கொலை செய்யக் கூடாது என்ற கருத்தில் உள்ளனர். எது எப்படியோ குர்ஆன் ஹதீஸுகளில் மதம் மாறுபவரை கொலை செய்யுமாறு எந்த ஆதாரமும் இல்லை என்பதை நிரூபித்துள்ளோம். அறிஞர்கள் அந்தக் கருத்தில் இருந்தமைக்கு மத்ஹப் ஆதிக்கம் அதிக காரணமாக இருந்துள்ளது. மத்ஹப் தக்லீக் நூறுவீதம் இஸ்லாமிய சமூகத்திலிருந்து வெளியேறவில்லை.
மத்ஹப் தக்லீதை எதிர்த்து பிரச்சாரம் செய்த பல அறிஞர்கள் மனிதன் என்ற வகையில் பல சட்டங்களை தமக்கு அறியாமல் மத்கப் ரீதியாகதான் அணுகியுள்ளனர். அதனை மாற்றிக்கொள்ளும் சரியான சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் மாற்றும் மனப்பான்மை உள்ளவர்கள் மாற்றியிருப்பர். இஸ்லாத்தில் இருந்த நிலையில் "குஃப்ர்" ஒன்றை ஒருவர் செய்தால்கூட அவருக்கு அந்த விடையத்தில் தெளிவு கிடைக்காத காரணத்தால் அவர்கள் மன்னிக்கப்படுவர் என்று "அல் உத்ர் பில் ஜஹ்ல்" எனும் அடிப்படையில் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இறைவன் தன்னை தண்டிப்பான் என்று அஞ்சி தான் மரணித்ததும் தனது உடலை எரித்து சாம்பலை தண்ணீரில் கரைத்துவிடுமாறு சொன்ன ஒருவரை பற்றி இமாம் இப்னு தைமியா கூறும்போது; "இது தெளிவான குஃப்ர் என்றாலும் இவர் அறியாமை காரணமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் செய்துள்ளமையால் இவருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குவான்" என்று கூறுகிறார்கள். இதைவிடவா பிக்ஹ் மஸாயில்களில் முரண்படும் அறிஞர்கள் பாவம் செய்ததாக நினைக்க வேண்டும்?
அவர்கள் மனிதர்கள், அவர்கள் பாவம் செய்யாதவர்கள் என்று ஏன் நினைக்க வேண்டும்? அவர்கள் (மறைவான)குஃப்ரான நிலைப்பாட்டில் இருந்தால்கூட மன்னிக்கலாம் என்று அவர்களே சொல்லும்போது அவர்களின் பிக்ஹ் நிலைப்பாடு சரியாகத்தான் இருக்கும், அவர்கள் இந்த தவறை செய்ய வாய்ப்பில்லை என்று குருட்டுத்தனமாக முடிவெடுப்பது அறிவுபூரவமானதா? ஈமானிய நிலையில் எடுக்கும் முடிவா? அறிஞர்கள் போன போக்கில் அவர்கள் பிழையாக விளங்கிய விளக்கத்தில்தான் இருப்போம் என்பது பிக்ஹ் மஸாயில்களில் "தஜ்தீதை" எதிர்க்கும் முரட்டுத்தனமான, இறுக்கமான போக்கு அல்லவா?
பிக்ஹ் மஸாயில்கள் இப்படித்தான் சுருங்கிய நிலையில் பார்க்கப்படுமா? இஸ்லாமிய உம்மத் ஆய்வுகளில் தொடரும் காலமெல்லாம் குர்ஆன் சொல்லும் சிந்தனையைக் கொண்ட சமூகமாக இருக்கும். எப்போது ஆய்வுகளை குறிப்பிட்ட நூற்றாண்டுக்குள் வரையறுத்ததோ அது குர்ஆனையும் ஹதீஸையும் குறிப்பிட்ட நூற்றாண்டுகளில் சிறைப்படுத்திவிட்டது. குர்ஆன் ஒரு சுருங்கிய மூடலான போக்கை கொண்டதல்ல, அது ஆய்வுகளை திறந்து வைத்துள்ளது. தன்னை ஆய்வு செய்ய மறுமைவரை ஏவிக்கொண்டே உள்ளது.
தன்னை மறுமைவரை ஓதலாம் என்று சொல்லும் குர்ஆன் தன்னை மறுமைவரை ஆய்வு செய்ய வேண்டாம் என்றா சொல்லும்? எமது முன் சென்ற சமூகம் எந்த குர்ஆனைக்கொண்டு சிறப்பு பெற்றார்களோ அதே குர்ஆனைக் கொண்டு நாமும் சிறப்பு பெறலாம். அவர்களே நூறுவீத உத்தரவாதம் தராத பத்வாக்களை குர்ஆனின் இறுதி முடிவாக, அதன் இறுதி விளக்கமாக ஏற்க வேண்டும் என்ற போக்கு ஜாஹிலிய, வரட்டுவாதம் நிறைந்த போக்காகும். இதிலிருந்து மனிதன் வெளியாகவில்லை என்றால் குர்ஆனை உலக போதனையாக கொண்டு செல்ல முடியாது. குர்ஆன் சில நூற்றாண்டில் சுருங்கியவர்களின் குர்ஆனாகவே இருக்கும்.
அறிஞர்கள் தாங்கள் கூறிய பத்வாக்களை கண்மூடி பின்பற்ற வேண்டாம், குர்ஆன் சுன்னாவுடன் உரசிப்பார்த்து அதட்கு உடன்பட்டால் எடுத்து நடங்கள் என்று கூறி, நாளை மறுமையில் அல்லாஹ்விடம் அவர்கள் குற்றம் அற்றவர்களாக இருக்கும் ஏட்பாட்டை செய்துவிட்ட நிலையில் நமது தவறுகளை எல்லாம் இமாம்களிடம் பாரம் சுமத்த எங்கே நமக்கு ஆதாரம் உள்ளது? குர்ஆனிலும் இதட்கு ஆதாரம் இல்லை, ஹதீஸ்களிலும் ஆதாரம் இல்லை, அறிஞர்களும் தப்பித்துக்கொண்டார்கள், நம்மை வழிநடத்தும் அழைப்பாளர்கள்தான் அறிஞர்களை காட்டி நம்மை பயமுறுத்தி இந்த பத்வாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் என்பது தெளிவு.
ஆய்வுகளை அறிவுபூர்வமாக முன்வைக்க முடியாத நிலையில் அறிஞர்களை காட்டி குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் இல்லாமல் அதட்கு முரணாக பத்வாக்கள் இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். இவர்கள் சொல்லும் அறிஞர்கள் மட்டுமல்ல, நம்மை பெற்ற பெற்றோர், நாம் பெற்ற பிள்ளைகள், கணவன், மனைவி எவரும் நமக்கு மறுமையில் சிபாரிசு செய்ய முடியாது, நமக்கு நாம் ஆதாரமாக முன்வைத்த குர்ஆன், சுன்னாவே மறுமையில் முன்னின்று நம்மைக் காப்பாற்றும். தமது நிலைபாட்டை நிலைநிறுத்த சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதனால்தான் அறிஞர்களை வைத்து பயமுறுத்துகின்றனர் சில அழைப்பாளர்கள்.
இன்னும் சிலர் அல்லாஹ்வின் சிபாத்துக்களை புரிவதில் முன்சென்ற அறிஞர்கள் புரிந்த விதத்தில் புரிய வேண்டும் என்று சொல்லும் அறிஞர்களின் கூற்றை பிக்ஹ் போன்ற நிலைப்பாடுகளுக்கு கோர்த்து விடுகின்றனர். அகீதாவில்கூட கிளை அம்சம் கொண்ட அகீதா மஸாயில்களில் இறுக்கமான நிலைப்பாட்டில் அறிஞர்கள் இல்லாதபோது பிக்ஹ் மஸாயில்களில் இவ்வளவு இறுக்கமான நிலைப்பாட்டையும் முன்னாள் அறிஞர்களின் விளக்கம் என்ற ஆய்வுகளை தூக்கி எரியும் கட்டுப்பாட்டையும் போடுவதை எங்கிருந்து இவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அறிஞர்கள்கூட சொல்லாத அறிஞர் மயப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை சொல்ல இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இவர்கள் இந்த நாட்டாமை மனப்போக்கை நிறுத்த வேண்டும். ஆய்வுகள் மூலம் கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டும். மக்களை அது அல்லாத அறிஞர் வாதம், மத்கப் வாதம், மன்ஹஜ் வாதம் போன்ற ஜாஹிலிய குணங்களுக்கு அழைப்பதை இனிமேலும் தொடர்வதை கைவிட வேண்டும்.
அல்லாஹ் நம் அனைவர்க்கும் நல்ல விளக்கத்தை தரப்பு போதுமானவன்.
https://m.facebook.com/story.php?story_fbid=2771657206241290&id=100001911135581