Manjai Vasanthan
திராவிடர் என்ற சொல்லை பெரியார் நுழைத்தாரா?
தமிழர் என்ற சொல்லை வேண்டுமென்றே விலக்கி, திராவிடர் என்ற சொல்லை பெரியார் நுழைத்தார். காரணம் அவர் கன்னடர் என்று சிலர் பெரியார் மீது பழி கூறுகின்றனர்.
இது உண்மையா? அல்லது மோசடிப் பிரச்சாரமா?
ஆதாரங்களுடன் விளக்க விரும்புகிறோம்.
1892இல் ஜான் ரெத்தினம் அவர்கள் திராவிடர் கழகம் என்றே ஓர் அமைப்பைத் தொடங்கினார். பண்டிதர் அயோத்திதாசர் ஆதி திராவிட மகாசன சபை என்ற அமைப்பைத் தொடங்கினார். திராவிட என்ற சொல்லை திரு.ஜான் ரத்தினம் அவர்களும் பண்டிதர் அயோத்திதாசரும் ஒடுக்கப்பட்ட, இம்மண்ணுக்கு உரிமையான மக்களை விளிப்பதற்காகப் பயன்படுத்தினர். பின்பு 1912இல் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் குறியீடாக டாக்டர் நடேசன் அவர்கள், திராவிடர் சங்கம் தொடங்குகிறார். 1916இல் பிட்டி தியாகராயர் அவர்களாலும் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களாலும் பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்ற தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. திராவிடன் என்ற பெயரில் இதழும் தொடங்கப்பட்டது. அப்போது காங்கிரசில் இருந்த தந்தை பெரியார் பின்னாளில், திராவிடர் என்ற குறியீட்டைப் பயன்படுத்துகிறார்.
1892இல் ஜான்ரெத்தினம் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு முன், கி.மு. முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி, பத்தாம் அத்தியாயத்தில், 43, 44ஆவது சுலோகத்தில் திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.
ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர்கள்... திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள் என்கிறது மனுஸ்மிருதி.
கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் எழுதிய, கல்லாத பேர்களே நல்லவர்கள் என்னும் பாடலில் திராவிடம் என்ற சொல் மொழியைக் குறிக்க ஆளப்பட்டுள்ளது.
திருஞானசம்பந்தர் திராவிட சிசு என அழைக்கப்பட்டார். இங்கு திராவிடம் என்பது தமிழைக் குறிக்கப் பயன்பட்டது.
1856இல் வெளியிடப்பட்ட கால்டுவெல் என்பவரின் திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar in Dravidian or South Family of Languags) என்ற நூலிற்குப்பின் திராவிடம் என்ற சொல் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.
எனவே, திராவிடம் என்ற சொல்லை நீதிக் கட்சியினரோ, பெரியாரோ, திராவிடர் கழகத்தினரோ, திராவிட முன்னேற்றக் கழகத்தினரோ உருவாக்கவில்லை. குறிப்பாக பெரியார் திணித்தார் என்பது தவறு; மோசடி!
அறிஞர் இராம. சுந்தரம் அவர்கள் இது குறித்து, கால்டு வெல்லுக்கு முன்பே, திராவிட என்ற சொல் தென்னிந்தியர்களை, தென்மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்கிறார்.
குமாரிலபட்டர் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) திராவிட பாஷைகள் பற்றிக் குறிப்பிடுகிறார் (tadyatha dravidadi bhassyam ever.... so in the Dravida and other languages. (ச. அகத்தியலிங்கம், திராவிட மொழிகள், 22).
கியர்சன் (Linguistic Survey of India Vol.I) தனக்குத் தெரிந்தமட்டில் அட்சன் (Dr.Hodgson) என்பவர்தான் திராவிடன் (Dravidan) என்ற சொல்லை முதன்முதலாகத் தென்னிந்திய மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.
உண்மை வரலாறு இப்படியிருக்க பெரியார்தான் திராவிடர் என்ற சொல்லை வலிய, உள்நோக்கத்தோடு நுழைத்தார் என்பது பித்தலாட்ட பிரச்சாரமாகும்.
இந்த நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரையில் இருந்துவரும் போராட்டமெல்லாம் ஆரியர்-திராவிடர் பேராட்டமே ஒழிய, வடமொழி தென்மொழிப் போராட்டமல்லவே! இதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் காட்டலாமே!
தமிழ் என்பது மொழிப்பெயர். திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூட முடியும். ஆனால் தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனாய் இருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில்தான் சேருவான். ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடனென்று கூறிக்கொள்ள முடியாது. தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னை தமிழனென்று கெடுக்கப் பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்படமாட்டான்...
... தமிழர் என்று பொதுவாக அழைக்கும்போது, இவ்வளவு நிபந்தனை (தடை) உண்டா? ஆகவேதான் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். மற்றபடி திராவிடர் என்பதில் எங்களுக்கு வேறென்ன உள்ளெண்ணம் இருக்க முடியும்?
தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த _ நமக்கு மாறுபட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா? இழிவுக்கும் தாழ்வுக்கும் கட்டுப்பட்டுள்ள மக்களையும், இதற்கு நேர்மாறக _ இவ்விழிவுக்கே காரணமான உயர்ஜாதி மக்களையும் ஒன்றாக்கிக் கொண்டால், அதில் இவ்விழிவு நீங்க வழி ஏற்படுமா? முதலில் இவ்விழிவு நீங்கட்டும்! பிறகு எல்லோரும் ஒன்றாவோம்!
.... சூத்திரர் என்பவர்களுக்குத் திராவிடர் தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் யாராவது கூறுவார்களானால் அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு, என் அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன்.
நீங்கள் கொடுக்கும் பெயரில் மேலே சொன்ன அத்தனை பேரும் ஒன்று சேர வசதி இருக்க வேண்டும். அதில் சூத்திரனில்லாத ஒரு தூசி கூட புகுந்து கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்க வேண்டாமா? என்றார் பெரியார். (மொழியாராய்ச்சி எனும் நூலில் பெரியார் எழுதியதிலிருந்து.)
ஆரிய ஆதிக்கத்தின் விளைவாய், இந்த மண்ணின் பெரும்பான்மை மக்கள் (97% மக்கள்) தாங்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்படுவதை மறுத்து, திராவிடர்கள் என்ற சொல்லால் தங்களை அழைத்து, ஆரிய பார்ப்பனர்களிலிருந்து மாறுபட்டவர்கள் தாங்கள் என்பதைக் காட்டிக்கொள்ள திராவிடர் என்ற சொல்லாட்சியே பொருத்தமாய்ப் பயன்பட்டது.
தமிழர் என்னும்போது தாங்களும் தமிழர்கள்தான் என்று ஆரிய பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்து இனப் பகுப்பை சிதைத்துவிடுகின்றனர்.
தமிழினத்தின் பரம்பரைப் பகையினமான ஆரிய பார்ப்பனர்களுள் தமிழர்கள் என்றால், இதைவிட இன மோசடியும், இன கட்டின் தகர்ப்பும் வேறு என்ன இருக்க முடியும்?
ம.பொ.சி. காலத்திலிருந்து சீமான் காலம் வரை ஆரிய பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று உள்ளடக்கி, ஆரியத்திற்கு துணைநிற்கக் கூடியவர்களே திராவிடத்தை எதிர்க்கின்றனர்.
பெரியார் ஈ.வே.ரா முதலில் தமிழரைப் பிளவுபடுத்தும் பிராமணர் _ பிராமணர் அல்லாதார் கூச்சலுக்கு முற்றுப் புள்ளி வைக்கட்டும். அப்பொழுதுதான் தமிழகத்தில் தமிழர் அல்லாதாரின் ஆதிக்கத்தை ஒழித்துத் தமிழினத்துக்கு வாழ்வு தேட முடியும் (தமிழன் குரல் அக்டோபர் 1954 இதழில் ம.பொ.சி.)
ஆக, மலையாளி, கன்னடர், தெலுங்கர்தான் தமிழர்களுக்கு எதிரியே தவிர, ஆரியப் பார்ப்பனர்கள் அல்ல என்பதே இவர்கள் கொள்கை.
திராவிடர் என்பதை விலக்கி தமிழர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ள விரும்புகின்றவர்கள் ஆரிய பார்ப்பனர்களை அறவே விலக்கித் தமிழர்களை கடமைக்கு அணியாக்கிக் காட்ட வழி சொன்னால் அய்யா பெரியார் சொல்வதுபோல அதை அட்டியின்றி ஏற்க நாம் யாராகவுள்ளோம் என்பதை ம.பொ.சி. வாரிசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே, பெரியார், தான் கன்னடர் என்பதால் தமிழர் என்ற சொல்லை நீக்கி, திராவிடர் என்ற சொல்லைப் புகுத்தினார் என்ற குற்றச்சாட்டு அற்பத்தனமானது _ அபத்தமானது ஆகும்.
என்னுடைய தாய்மொழி கன்னடமாக இருந்தபோதிலும், அதனை நான் தினசரி பேச்சு வழக்கத்தில் கொண்டிருக்கவில்லை. எல்லா வற்றிற்கும் தமிழ்மொழியைத்தான் பயன்படுத்தி வருகிறேன். எனக்குக் கன்னடத்தைத் தவிர தெலுங்கிலும் கொஞ்சம் பயிற்சி உண்டு. எப்படி என்றால், வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமேயாகும். (விடுதலை 21.5.1959)
என்று தன்னைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய பெரியார், தமிழின், தமிழரின் மேம்பாட்டிற்கு மட்டுமே பாடுபட்டார். அவர் என்றைக்குமே கன்னடர்களுக்காகப் பாடுபட்டதில்லை.
====================================
உண்மை அறியுங்கள்
- மற்றவர்களுக்கும் பகிருங்கள்
மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
No comments:
Post a Comment