Wednesday, June 12, 2019

இஸ்லாமிய குற்றவியல் சட்டம் எப்படியான சமூகத்தில் எப்படி சாத்தியமாகும் ?

Ahamed Shamshad Ahamedsha
2019-06-12

இஸ்லாமிய குற்றவியல் சட்டம் எப்படியான சமூகத்தில் எப்படி சாத்தியமாகும் ?

இஸ்லாம் என்பது களவுக்கு கை வெட்டுதல், விபச்சாரத்துக்கு தலையை வெட்டுதல் என்று மேலோட்டமாகத்தான் நமது சமூகம் புரிந்துள்ளது. இன்று நாம் உலகம் காணாத மிகப்பெரும் ஒழுக்க சீரழிவு மிக்க காலத்தில் இருக்கின்றோம், ஒருவனை பலிவாங்க நினைத்தால் அடுத்த நிமிடமே நாப்பது பொய் சாட்சிகளை கொண்டுவர முடியுமான காலகட்டத்தில் இருக்கின்றோம். அடுத்த கணமே போலி தகவல்களை தயாரிக்க முடியுமான மக்களுடன் வாழ்கிறோம் , இந்த பொய்களை எல்லாம் உண்மை என்று நம்பவைக்க திரும்ப திரும்ப திக்ர், பிரார்தனைகள்போல சொல்லும் அளவு தமது மீடியாக்களை தயார் செய்து வைக்கும் கும்பல்களுக்கு மத்தியில் வாழ்கிறோம். இலங்கையில் குறித்த வைத்தியருக்கு எதிராக சாட்சிகள் மட்டும் போதுமென்றால் அவருக்கு ஆயிரம் மரண தண்டனைகளை வாங்கி கொடுக்க இந்த கூலிபடைகள் போதும்.

இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என்று பல ஆட்சியாளர்கள் வரலாறு நெடுகிலும் வந்துவிட்டனர். ஈரானில் கொமைனி இஸ்லாமிய சட்டத்தை நிலைநாட்டுவதாக சொன்னார், லிபியாவில் கடாபி இஸ்லாமிய சட்டத்தை நிலைநாட்டுவதாக சொன்னார், பாகிஸ்தானில் லியாவுல் ஹக் இஸ்லாமிய சட்டத்தை நிலைநாட்டுவதாக சொன்னார். இவர்களுக்கு எதிராக ஒரு கூட்டம் வந்துதான் நின்றன.
சவுதியில் இஸ்லாமிய சட்டத்தின் சில பகுதிகள் நிலைநாட்டப்பட்டன, அப்படி இருந்தும் மக்காவில் இஸ்லாமிய சட்டம் வேண்டும் என்று கைக்குண்டுகளுடன் ஷீஆக்கள் வரத்தான் செய்தனர். இது உண்மையில் இஸ்லாமிய சட்டத்தை நிறைவேற்றும் கோஷம் கிடையவே கிடையாது, ஒவ்வொருவரும் தாங்கள் ஆட்சிபீடம் வரவேண்டும் என்பதட்காக இஸ்லாத்தை கையில் எடுத்ததன் விளைவுதான் இது. ஆனால் இஸ்லாமோ இவர்களிடமிருந்து மிகவும் தூரமானது. "யார் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு சட்டம் கொடுக்கவில்லையே அவன் காபிர், அவன் அநியாயக்காரன்" என்று வரும் வசனங்கள் என்னதான் சொல்கிறது?

உண்மையில் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இஸ்லாமிய சட்டத்தை நிலைநாட்ட வேண்டியதில்லையா ? ஒவ்வொரு மனிதனும் அடுத்தவர்கள் விடையத்தில் இஸ்லாமிய சட்டம் நிறைவேற்றும் பொறுப்பில்லையா? அடுத்தவர்களை அடக்கி ஆளமுன் தன்னை அடக்கி ஆள்கின்றனரா இந்த இஸ்லாமிய ஆட்சிக்கு கோஷம் போடுபவர்கள்?
குர்ஆனில் ஆட்சி அதிகாரம் பற்றி வரக்கூடிய வசனங்கள் எத்தனை?
கல்வி,ஒழுக்கம், அன்பு, உதவி, வணக்கம், தனிமனித சீர்திருத்தம், அஃக்லாக் பற்றி வரக்கூடிய வசனங்கள் எத்தனை? ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் கல்வி பற்றிய வசனங்கள் வந்திருக்கிறது, சில சூராக்களின் ஆரம்பத்திலும், இடைநடுவிலும் மனிதர்களின் குறை பேசுவதை மிகப்பெரும் நாசத்தை ஏட்படுத்தும் ஒன்றாக பிரகடனம் செய்துவருகிறது. ஒரே ஒரு இடத்தில்தான் அரசாங்கத்துக்கு கையை வெட்டுங்கள் என்று சொல்கிறது. ஆயிரம் இடங்களில் வரக்கூடிய அறிவு, ஒழுக்கம், பண்பாடு, அன்பு, நீதி, உதவி பற்றி வருவதை எல்லாம் விட்டுவிட்டு ஒரே ஒரு இடத்தில் வரக்கூடிய ஆளுதல், ஆட்சி செய்தல் பற்றிய வசனங்களை தூக்கிக்கொண்டு புரட்சிகளில், போராட்டத்தில் இரங்கி விட்டனர் சில இஸ்லாமியர்கள்.

ஈராக், ஈரான், சிரியா, லிபியா, லெபனான், சூடான், அல்ஜீரியா, டியூனீசிய போன்ற நாடுகளில் நடந்தது நடப்பதுதான் என்ன? முஸ்லிம்கள் முஸ்லிமை கொலை செய்கின்றனர். முஸ்லிங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டம் தீட்டுகின்றனர். நமது உணர்ச்சி வசப்படல்கள்தான் இஸ்லாத்துக்கு கொடுக்கும் பெருமானமா? அடுத்தவர்களை கொலை செய்வதுதான் குர்ஆனுக்கு கொடுக்கும் விளக்கமா? வெறுப்புகளை விதைப்பதுதான் குர்ஆன் இறங்கிய நோக்கமா? இஸ்லாம் என்பது எமது எண்ணங்களில் அன்பு புரையோட , எமது நோக்கங்களில் நீதி இழையோட வேண்டும்.
இஸ்லாமிய சட்டங்கள் பொதுமக்களுக்கு நடைமுறைப்படுத்த முன் நமக்குள் உயிரோட்டம் பெறவேண்டும். இது இன்று தொழுதுவிட்டு நாளை நீதிபதியாகும் முறை அல்ல. இன்று நல்லவனாக இருந்துவிட்டு நாளை தலைவனாகும் கலை அல்ல. அது ஒரு சமூகமாக காலம் எடுத்து, கால ஓட்டத்தில் கரைந்து போகும் நீதிமிக்க சமூகம் கையில் எடுக்கும் அமானிதம். ஆயிரம் ரூபா ஒருவருக்கு கொடுக்கவே ஆயிரம் முறை யோசித்து, நம்பக தன்மையை எதிர்பார்க்கும் காலத்தில் மிகப்பெரும் அமானிதத்தை வெறும் கோஷங்களை நம்பி கொடுக்க முடியுமா?

இந்த ஆட்சி அதிகாரங்களுக்கு தகுதியான சமூகம் நிலம் ஒன்றை சொந்தமாக்கி இருக்க வேண்டும், அந்த நிலம் சார்ந்த மக்களுக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்க வேண்டும், அந்த நிலம் சார்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நம்பிக்கையின் சிகரம், நாணயத்தின் குன்று, உண்மையின் கிரீடம் என்று போற்றப்பட்ட நபியின் நுபுவ்வத்தின் கீழ் ஒரு மது சட்டம் மூன்று கட்டங்களாக, படித்தரமாக மாற்றப்படுகிறது என்றால் நம்பகத்தன்மை, ஒழுக்கம், உண்மை, நேர்மை கேள்விக்குறியாக சமூகத்தில் மாற்றங்களை கையில் எடுப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? ஆட்சியை கையில் எடுப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? இஸ்லாமிய சட்டங்களை விளங்குவதட்கு அல்லாஹ்வை விளங்குவது நிபந்தனை, நபி ஸல் அவர்களின் சீறாவை வாசிப்பது வாஜிப்.

சக இஸ்லாமிய இயக்கவாதியை கொலைவெறியோடு பார்க்கின்றனர், சக இஸ்லாமிய இயக்கவாதியை இழிவு படுத்துகிறனர், இலங்கை, இந்தியாவிலிருந்துகொண்டு அமெரிக்காவில் இருக்கும் ஒருவனுக்கு கீபோர்ட் மூலம் காஃபிர் பத்வா கொடுத்துவிடுகின்றனர். இலங்கையில் இருந்துகொண்டு அரபு நாட்டவர்கள் நரகவாதி என்கின்றனர். முகநூலில் வீடியோ போட்ட பெண்ணுக்கு வீட்டில் உள்ள போன் பட்டனை அமுக்கியவாறு தலாக் வாங்கி கொடுக்கின்றனர். அரபிகளில் நாலுபேர் "இஸ்லாமிய ஆட்சி" என்று கோஷம் போட்டால் "மாஷா அல்லாஹ், கிலாஃபா கிளம்பி வந்துவிட்டது" என்று உணர்ச்சி பொங்க பேசுகின்றனர். கணவனும் மனைவியும் எடுத்த போட்டோவை முகநூலில் போட்டால் எடிட் செய்து கேவலமாக பரப்புகின்றனர். ஆனால் இவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சி வேண்டும் என்கிறனர்.

இப்படியான ஒழுக்கக் கேடுகள் கொண்டவர்கள் கையில் இஸ்லாமிய ஆட்சியும், குற்றவியல் சட்டமும் கொடுத்தால் என்ன நிலமை? ஆட்சி அதிகாரம் இல்லாமலே நிலைமை இப்படி என்றால் ஆட்சி கிடைத்தால் நிலைதான் என்ன?
இஸ்லாமிய குற்றவியல் நீதி, அன்பு, அரவணைப்பு, பண்பாடு, மன்னிப்பு, ஒழுக்கம், அஃக்லாக் போன்றவற்றில் உயர்ந்து அதில் பெயர் போன சமூகத்தில்தான் சாத்தியமாகும்.

https://m.facebook.com/story.php?story_fbid=2743705045703173&id=100001911135581

No comments:

Post a Comment