Friday, September 20, 2019

பொண்டாட்டி _ அராத்து

நிசப்தன்
2019-09-20

பொண்டாட்டி  _ அராத்து
...
ஒரு வாரத்திற்கு முன்பு
எதார்த்தமாக
வாங்கி இரண்டு மாதமாக வாசிக்காமல் இருக்கும்
'பொண்டாட்டி ' நாவலை  பொத்தாம் பொதுவாக திறந்து  இடையில்  ஒரு அத்தியாயத்தை மட்டும்  வாசித்தேன் .
அத்தியாயத்தின் பெயர்
பொண்டாட்டி குறுங்கதைகள் _ 1 .பக்கம் 179.

இந்த அத்தியாயத்தில் பரிமளா என்பவள்
தன் தோழியான சாந்தியிடம்
" சாந்தி எனக்கொரு நல்ல பையன சொல்றியா .. ஒரே ஒரு தடவ மட்டும் அவன் கூட படுக்கனும் .அதுக்குப்பிறகு அவன் என்னை தொந்தரவு செய்யக்கூடாது "  என  கேட்கிறாள் .
சாந்தியும் ' ஊசி ' என்பவனை ஏற்பாடு செய்கிறாள் .கலவி முடிந்து . மீண்டும் ஒரு முறை என கேட்கும் ஊசியிடம் " வேணாம் " என்கிறாள் .
ஊசி " அது என்னா ஒரு தடவைதான் ... " என்கிறான் .

இதற்கு  அவள் சொல்லும் பதில்
காலம் காலமாய் 
உலகம் முழுக்க
சமூகமும் ஆண்களும் பெண்கள் மீது செலுத்திய , செலுத்திக்கொண்டிருக்கும் வன்மம் , குரூரம் .
கரும்பு வெட்டும் வேலைக்கு  சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும்
என் அம்மாவிடம்   அப்பா இப்படி கேட்பார் 
" கருப்பங்காட்டுக்குள்ள எவன் கூட படுத்துட்டு வரடி .அந்த மாப்ள பேரு என்ன, குச்சிக்காரி  " என வசை பெழிந்து அடித்து நொறுக்குவார் .
இன்றும் இந்த குரூரம் என் மனதில் அவ்வப்போது ஓலமிடும். இதை படித்தவுடன்
என் பால்யத்தின் அத்தனை கசப்பும்
தொண்டையை அடைத்தது .

பரிமளாவின் பதில் " என் புருசன  லவ் பண்ணித்தான் கட்டிக்கிட்டேன் .பெருசா வேற ஒன்னும் குறையில்ல .ஆனா , எப்ப பார்த்தாலும் தேவடியா தேவடியானு திட்றான் . வேற என்னா வேணா சொல்லித்திட்டு , இது எனக்கு சுத்தமா புடிக்கலனு சாெல்லிட்டேன் .கேக்க மாட்டேங்கிறான் .அதான் இப்படி பண்ணேன் .இனிமே அவன் என்னை தேவடியான்னு  கூப்பிட்டாவோ , திட்டினாலோ எனக்கு டென்ஷன் ஆகாது "

இதை மேலோட்டமாக அணுகினால்
இது செக்ஸ் எழுத்து மாதிரிதான் தெரியும் .
அப்படித் தெரிந்தால் எதார்த்தம் பற்றிய எந்த புரிதலும் தரிசனமும் அற்றவர்கள்   நீங்கள் என்பதை உறுதியாக சொல்வேன் .
நுட்பமாக வாசித்தால்
"பெண்கள் எவ்ளோ வேணாலும் படிச்சிருக்கலாம் ,
பெரிய பணக்காரியாகவும் இருக்கலாம் ,
ஆனால் ஆணின் போகப்பொருள் தான் பெண் .அவனது நிரந்த உடமைதான்  பெண் "
எனும் உலகின் ஆணாதிக்க திமிர்   புரியும் .
மேலோட்டமாக வாசித்தால்
பரிமளாக்களின் கசப்பும் ,வலியும் ,துயரமும்,
உளவியில் ரீதியான ஊனப்படுத்தல்களும்  தெரியாது.
மேலும்
இந்த அத்தியாயத்தை படித்த போது
அசோகமித்திரனின்  ' இன்று 'நாவலில் வரும்  சீதாவும் , ந.முத்துச்சாமியின் 'நீர்மை' சிறுகதையும்  , தஞ்சை பிரகாஷின் ' வெட்கம் கெட்டவன் '  சிறுகதையும் ஞாபகம் வந்தது .

"நாங்க அப்படி பெண்களை நடத்துவது
இல்லையென " யாரும் கம்பு சுற்ற வேண்டாம் .
பெரும்பான்மையாக இப்படித்தான் நடக்கிறது என்பதே நிதர்சனம் .

சீக்கிரம் முழுதாக வாசிக்க வேண்டும் .
லவ்யூ அராத்து ♥

https://www.facebook.com/100029504687516/posts/204679963858825/

Monday, September 16, 2019

அப்பா என்னோட ஹீரோ" என்று நினைக்கும் பெண்கள

Bharathi kp
2019-09-16

"அப்பா என்னோட ஹீரோ" என்று நினைக்கும் பெண்கள் வளர்சிதை மாற்றத்தின் இடைநிலையில் இருக்கிறார்கள்.

தந்தையை ஹீரோவாக நினைக்கும் பெண்கள் மட்டும் தான் அதுபற்றி பேசுகிறார்கள். ஆதிக்கவாதியான தந்தையை கொண்ட பெண்கள் அது பற்றி பேசுவதில்லை. அதற்கும் வளர்ப்பு தான் கரணம். ஒத்து ஓதுபவர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவார்கள். எதிர்நிலையில் இருப்பவர்களுக்கு அமைதியாக இருக்கும் சுதந்திரம் மட்டுமே உள்ளது. ஏன்னா குழந்தைகளை நம்ம எல்லாருமே நாய்க்குட்டி போலத்தான் வளக்குறோம். அதிலும் பெண் குழந்தைகளை 'எமோஷனல்' டிபெண்டென்சில தான் தந்தைமார்கள் வச்சிருப்பாங்க. அதே வீட்டுல அந்த ஹீரோ தன்னோட ஹீரோயினியை எப்பிடி நடத்தினார்னு ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சா பெண்கள் சீக்கிரம் தந்தைமாரிடம் இருந்து விலக ஆரம்பிப்பார்கள். ஆண் தன் அம்மாவை பொறுத்தவரை ஒரு குட்டி முதலாளி. அவன் மீது செலுத்தப்படுவது 'முழு' அதிகாரமல்ல. ஆனால் மனைவி என்கிற நிலையில் ஒரு பெண் வரும்போது அம்மா போல பணிவிடை செய்வதை விரும்புகிறார்களே ஒழிய அம்மாவின் இடைநிலை அதிகாரம் அந்த பெண்ணுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

ஆண்கள் தன மனைவி "தன் அம்மா" போல இருக்கணும்னு நினைக்கிறதில்லை. 'அப்பாவின் மனைவி' போல தன் மனைவி இருக்கணும்னு நினைக்கிறாங்க. பெண்கள் தன் 'அப்பா' போல புருசன் இருக்கணும்னு நினைக்கிறாங்க. 'அம்மாவின் புருசன்' போல தன் புருசன் இருக்கணும்னு நினைக்கிறதில்லை. அதிகாரம் தான் மேட்டர். பெண் எப்போதும் முழு அதிகார நிலையை அடைய அனுமதிக்கப்படுவதில்லை. அதனால தனக்கு ஓரளவு சுதந்திரம் இருப்பதை சிலாகித்துக்கொள்கிறாள். எந்த பெண்ணாவது தன் அம்மா போல ஆகவேண்டும் என்று விரும்பியதை பார்த்திருக்கிறீர்களா? ஆனால் அப்பாவை போல ஆக விரும்பும் பல ஆண்கள் உண்டு. குடும்ப அமைப்பிலே அதிகார சமநிலை கிடையாது. அவரவர் இருக்க விரும்பும் இடம் தனக்கு என்ன விதமான அதிகாரம் இருக்கிறது என்பதை பொறுத்தது தான்.

இது எல்லாமே தோழர்கள் குடும்பங்களையும் சேர்த்தது தான்.

தன் பிறந்த நாளுக்கு இத்தகைய சிந்தனை தான் பெருசுக்கு வாழ்த்தாக இருக்க முடியும்.

https://www.facebook.com/100002094528574/posts/2517632991649827/

Sunday, September 15, 2019

மண்ணில் தோன்றிய மகத்துவம், அண்ணா என்னும் அதிசயம்

சூரியமூர்த்தி

மண்ணில் தோன்றிய மகத்துவம், அண்ணா என்னும் அதிசயம்
.
1.அண்ணாவின் வாக்கியங்களில் பிடித்தது எது ?

1967 தேர்தலில் தேர்தல் வரலாற்றின் சாதனையாக பிரிவினை கோரிய ஒரு இயக்கம் ஆட்சியை கைப்பற்றிய பின்பு அவர் சொன்னது, "its not because of bullet, its because of ballot".. இந்த வரியின் மீதான அவரது நம்பிக்கை தான் ரத்தம் சிந்தாமல் தமிழர்களை பெரும் அரசியல் புரட்சியை நிகழ்த்த வைத்தது
.
2. அண்ணாவின் மாஸ் எத்தகையது..?

போராட்டங்களின் விளைவாக மிகக்கடுமையாக அரசின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த சூழலில் இந்தோ-சீனா யுத்தம் வருகிறது.. அந்த யுத்தகாலத்தில் தான் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டுவிட்டு இந்தியத்திற்கு துணையாக நிற்கிறார் அண்ணா.. எல்லையிலே ராணுவ வீரர்களுக்கு இரத்தம் தேவையாதலால் இரத்தக்கொடை அளிக்கச்சொல்லி தம்பிகளுக்கு கடிதம் எழுதுகிறார், அந்த கடிதத்தில் "தம்பிகளே உங்களிடம் இரத்தம் கேட்க காரணம் உங்கள் இரத்தத்தின் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை, ஊரை அடித்து உலையில் போடுபவர்களின் இரத்தத்தை (காங். காரர்களை குறிப்பிடுகிறார்) ஏற்றினால் கிடக்கின்ற துப்பாக்கியை எடுத்து கொண்டு போய் கள்ள மார்க்கெட்டில் விற்றுவிடுவார்கள்" என்று எழுதுகிறார்.. இது அண்ணாவின் எழுத்தின் மாஸ்..
அடுத்த நாள் போர் நிதி கேட்டு எழுதுகிறார்.. நம்ப மாட்டீர்கள், பல ஆயிரம் பேர் தங்களால் இயன்றதையெல்லாம் எல்லாம் கொண்டு வந்து தந்தனர் அது நூற்றுக்கணக்கான மாங்கல்யமும் இருந்தது என்ற செய்தி தான் அண்ணாவின் ஆளுமைக்கான மாஸ்
.
3. நவீன தமிழகத்தை கட்டமைத்ததில் அண்ணாவின் பங்கு என்ன..?

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மூலம் uniform distributive & uniform access என்ற முறை தான் இந்த தத்துவம் இங்கே நடைமுறைப்படுத்த காரணம் அண்ணா என்ற அந்த ஒற்றை மனிதனின் பொருளாதார பார்வை தான்

ஒருங்கிணைந்த வளர்ச்சி (inclusive development ) பற்றி இந்தியா பேச தொடங்கியது 2007 வந்த 11 வது ஐந்தாண்டு திட்டத்தில் தான் ஆனால் 1960 homeland magazine ல் எழுதினார் அண்ணா.. குறைந்தது ஆயிரம் கோடிகளாவது ஒதுக்குங்கள் என்று தலைப்பிடுகிறார்,
ஆளும் கட்சி பெயர் பெற்றுவிடும் என்ற தயக்கம் கூட இல்லாமல் அப்படி கோரிக்கை வைத்தவர் அண்ணா.. அவரது மொழிக்கொள்கையும், சுயநிர்ணய உணர்வும் ஆழமான பொருளாதார அறிவும் தான் பீகார், உ.பி.க்கு இனையான பொருளாதாரத்தை கொண்டிருந்த தமிழ்நாட்டை third largest economic power in india என்ற நிலைக்கு உயர்த்தியது
.
4.அண்ணா என்றால் உங்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது..?

1949ல் பெரியாரை விட்டு பிரிந்து திமுக வை தொடங்குகிறார், 1967 ல் ஆட்சியை பிடிக்கிறார்.. இடைப்பட்ட 18 ஆண்டு காலத்தில் அவர்கள் இருவரின் உறவும் உரசலோடு தான் பயணிக்கிறது.. பெரியார் இவரை கடுமையாக விமர்சிக்கிறபோதும் தேவையான இடங்களையன்றி மற்றவற்றுக்கு பதில் சொல்லாமல் கடந்து போகிறார்.. ஆட்சியை பிடித்தவுடன் பெரியாரை தேடி திருச்சிக்கு ஓடி வந்து வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறார்.. ஆக கருத்து முரண்பாட்டால் தந்தையை விட்டு வெளியேறிய மகனை, தந்தை திட்டிக்கொண்டே இருக்கிறார்.. தமயனும் பதிலளித்துக்கொண்டே வருகிறார்.. இந்த சூழலில் வெற்றி பெற்றவுடன் நாமெல்லாம் என்ன செய்வோம், "இந்த பாருய்யா நான் ஜெயிச்சுட்டன் என்று காலரை தூக்கிவிட்டு சென்றிருப்போம்.. ஆனால் அவரோ தந்தைக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறார்"
அண்ணா என்றவுடன் இந்த பண்பு தான் எனக்கு நினைவுக்கு வரும்.. இந்த பண்பு தான் இன்று எல்லோருக்கும் தேவை, அரசியல்வாதியாக அல்ல மனிதனாகவே எல்லோருக்கும் இது தேவை, ஒரு தந்தை மகன் உறவில் தொடங்கி.. ஆசிரியர் மாணவர் உறவு வரை அத்தனைக்கும் தேவைப்படும் பண்பு இது
.
5.அண்ணா - இன்றைய தேவை.. ?

அண்ணாவை மக்கள் படிக்க வேண்டியதை விட, அரசியலுக்கு வர நினைக்கிற அல்லது அரசியலில் இருக்கிற அரசியல்வாதிகள் தான் அவசியம் படிக்க வேண்டும்.. தன்னை மீறி ஒருவன் வந்துவிடுவானோ என்கிற சின்ன பதட்டம் கூட அவரிடம் இல்லை அதனால் தான் அவரது தம்பிகள் அத்தனை பேரையும் தன் நிலையிலேயே வைத்துப்பார்க்க அவரால் முடிந்தது.. தனது தம்பியை பார்த்து, "தம்பி வா தலைமை ஏற்க வா"  என்று அவரை சொல்லவைத்தது பதவி ஆசை ஒரு துளி கூட இல்லாத அவரது மனநிலை தான்...
ஒரு கட்சியை எப்படி கட்டமைக்க வேண்டும் என்கிற party constructing engineering ஐ நீங்கள் அண்ணாவிடம் தான் கற்க வேண்டும்/ கற்க முடியும்..
தனக்கு தெரிந்த அத்தனையையும் தனது தம்பிகளிடம் அவரை சொல்லவைத்தது அவரின் தேடல் மீதான அவரது தன்னம்பிக்கை தான்.. இன்னும் சொன்னால் தனது அறிவின் மீதான கர்வம் எப்போதும் இல்லை என்பதற்கு, அவர் தம்பிகளுக்கு எழுதிய கடிதங்களே சாட்சி.. கிரேக்க வரலாற்றை சொன்னாலும், கிரகங்களின் அறிவியலை சொன்னாலும் இப்படித்தான் முடிக்கிறார்.. "உனக்கு தெரியாததா தம்பி" என்று..
ஒரு கட்சியின் உயிர்ப்பு அதன் இரண்டாம் கட்ட தலைவர்களின் எண்ணிக்கையில் இருக்கிறது.. அண்ணா வளர்த்த இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு இணையாக இன்னொரு இயக்கத்தில் நம்மால் ஆட்களை தேடி விட முடியாது.. ஏறக்குறைய அவர்கள் எல்லோரிடமும் அண்ணாவை போல செயல்படும் ஆற்றல் இருந்தது, தேவையான நேரத்தில் அப்படி செயல்படவும் செய்தார்கள்.. மத்திய அமைச்சர்களுக்கு கருப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிக்கிறார் அண்ணா, ஏறக்குறைய எல்லா முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்ட சூழலில் போராட்டம் ஒடுக்கப்பட்டதாக காவல்துறை நினைத்த நேரத்தில்.. விமான நிலையத்தில் கருப்புகொடி காட்டப்பட்டது.. காட்டியது நாகூர் அனிபா தலைமையிலான குழு.. ஒரு கட்சி இப்படித்தான் இருக்க வேண்டும், அதன் இரண்டாம் நிலை தலைவர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு கட்சி பயணிக்கவே கூடாது.. அப்படி பயணித்தால் அது கூடிய விரைவில் தனது இறுதி பயணத்தை தொடங்கும் என்பது தான் வரலாறு.. இதை சரியாய் செயல்படுத்தியவர் அண்ணா.. அது தான் இன்றைய தேவை
.
6.அண்ணா இன்றைய இந்தியாவிற்கு எப்படி தேவைப்படுகிறார் ?

இந்தியா என்கிற ஒன்றை மிகச்சரியாக வரையறுத்தவர் அண்ணா.. இது பல்வேறு நிலபரப்புகளின், தேசிய இனங்களின் "கூட்டமைப்பு" என்பதை அவர் தான் உரக்க சொல்லி நாடாளுமன்றத்தை நடுங்க வைத்தார்.. இந்தியாவை ஒரு federal structure ஆக பார்க்கும் மரபு பரவலானால் அதன் ஆதிவேர் அண்ணாவாகத்தான் இருப்பார்...
மதச்சார்பிண்மை இந்தியாவின் உயிர்நாடிகளில் ஒன்று, இந்திய அரசே தனது அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் (in preamble) மதச்சார்பற்ற (secular) என்ற வார்த்தையை நெருக்கடி நிலை காலத்தில் தான் சேர்த்தது (1976) ஆனால் அதற்கு முன்பே அரசு என்பது மதச்சார்பற்றது அதன் அலுவலகங்களில் மத அடையாளத்தை குறிக்கும் சின்னங்கள் இடம்பெறக்கூடாது என்று அரசாணை போட்டவர் அண்ணா (29/4/1968) ஏறக்குறைய இந்திய அரசிற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே இதை செய்தது தமிழ்நாடு அரசு.. ஆகவே இன்றைய சூழலில் இந்தியா இந்தியாவாக இருக்க அண்ணா தேவை
.
7.அண்ணாவிடம் நீங்கள் வியந்தது..?

அவரது முடிவெடுக்கும் திறன்.. தனக்கு தன் கட்சிக்கு என்று வரும்போது அவரது முடிவுகள் ஒரு வகையாகவும், மக்களுக்கு நாட்டுக்கு என வரும்போது ஒரு வகையாகவும் இருந்துள்ளது.. முதலில் நாட்டுக்கு, எப்போதெல்லாம் தான் எடுத்த முடிவின் இலக்கை அடைவதற்கு தேர்ந்தெடுத்த பாதையில் மக்களுக்கு துன்பம் வரும் என்று நினைக்கிறாரோ அப்போதெல்லாம் அந்த பாதையை விட்டு அவர் பின்வாங்க அல்லது மாற்றுப்பாதையை தேர்ந்தெடுக்க தயங்கியதே இல்லை, அப்படி பாதையை மாற்றினாலும் இலக்கில் உறுதியாக இருந்தார்.. finding alternative path with maximum similarity என்கிற அடிப்படையை அவர் கையாண்டார், திராவிட நாடு கோரிக்கையை வைத்து திமுக வளர்ந்த சம காலத்தில் அகாலி தளம் ஆசாத் பஞ்சாப் (தனி நாடு) கோரிக்கையை முன்வைத்து வளர்கிறது, அதன் பாதையில் உள்ள ஆபத்தை உணர்ந்து இரண்டு கட்சிகளுமே அதை கைவிடுகின்றன.. இதுவரை சாதரணமானது தான் ஆனால் அந்த கோரிக்கைக்கு மாற்றாக அவர்கள் இருவரும் எதை தேர்ந்தெடுத்தனர் என்பதில் தான் அண்ணா மிளிர்கிறார், அகாலிதளம் ஆசாத் பஞ்சாப் கோரிக்கையை கைவிட்டுவிட்டு "பஞ்சாபி சுபா" தனி பஞ்சாப் மாநிலம் கோரிக்கையை எடுக்கிறது ஆக சுயநிர்ணயம் பேசியதிலிருந்து.. சுருங்கிவிட்டது அகாலிதளம் ஆனால் அண்ணாவோ "மாநில சுயாட்சி" என்ற நெருப்பை கையிலெடுக்கிறார், தனிநாடு கேட்டதும் சுயநிர்ணய உரிமைக்காக தான்.. தற்போது மாநில சுயாட்சி கேட்பதும் அதற்காக தான் ஆக இலக்கில் மாற்றமில்லை, பாதையில் மட்டுமே மாற்றம்

அடுத்ததாக இந்தி திணிப்பு எதிர்ப்பு உச்சத்தில் இருந்த காலகட்டம், ஜனவரி 26ல் தொடங்கிய போராட்டம் பிப்ரவரி 6 வாக்கில் உச்சபட்ச கொதிநிலையை அடைகிறது.. இது மாணவர் நலனுக்கு நல்லதில்லை என்பதை உணர்ந்தவராய், பிப்ரவரி 6 மாலை மாணவர் தலைவர்களை அழைத்து பேசுகிறார், போராட்டத்தை தீவிர படுத்த சொல்லுவார் என்று நாடே எதிர்பார்த்த நிலையில், நிலைமை கையை மீறி போவதால் இப்போதைக்கு ஒத்திவைக்கலாம் என்று சொல்கிறார்.. (இப்படி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று எச்சரிக்கையாய் முடிவுகளை எடுப்பார்) ஆனால் மாணவர்கள் கேட்கவில்லை, எந்த தலைவனும் அந்த இடத்தில் கோவப்பட்டிருப்பர் ஆனால் அண்ணா மறுநாள் காலை மாணவர்களோடு களம் புகுந்தார்.. அது தான் அவர் ஜனநாயகத்தின் மீது வைத்த அளப்பறிய நம்பிக்கை, மதிப்பு எல்லாம்

ஒருபக்கம் இப்படி என்றால், தனக்கு தன் கட்சிக்கு என்றால் முடிவுகள் வேறு வகையில் இருக்கும்.. புத்தகத்தை தடையை மீறி வெளியிட்ட வழக்கில் அபராதம் போட்டால் கட்ட மாட்டேன் என்று பேசி சிறைக்கு போவது, பிரிவிணை கோருவது, பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைதானாலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவது என்று அவர் கட்சிக்காகவும் தனக்காவும் எடுத்த முடிவுகள் அத்தனையும் நெருப்பு... ஒற்றை வரியில் சொன்னால், "கட்சிக்கு அவர் எடுத்த பாதை சிங்கப்பாதை, மக்களுக்கு அவர் காட்டிய பாதை பூப்பாதை".
.
8.அண்ணாவிடம் இளைஞர்கள் கற்க வேண்டியது..?

அரசியலை.. ஒரு கிளர்ச்சியை அரசியல் மயப்படுத்துவதில் தான் அந்த கிளர்ச்சியின் வெற்றி உள்ளது, சல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி தேர்தல் காலத்தில் அது எப்படி எதிரொலிக்கிறது என்பதில் இருக்கிறது, அதாவது கிளர்ச்சியில் தொடங்கி தேர்தல் வரை அந்த கிளர்ச்சியின் தொடர்ச்சி எப்படி இருக்கிறது என்பதில் இருக்கிறது.. ஆனால் இங்கே நடந்த சல்லிக்கட்டு போராட்டம் அரசியல் அரங்கில் ஒப்புக்குக்கூட எதிரொலிக்காது என்பது என் எண்ணம், இந்த இடத்தில் தான் இந்தி எதிர்ப்பு போரை ஜனநாயக மயப்படுத்தி தேர்தல் புரட்சியை நடத்திகாட்டிய அண்ணாவின் அரசியலை இளைஞர்கள் படிக்க வேண்டும்

ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியில் நாற்பதாண்டுகள் முன்னோக்கி இருக்கிறோம், ஐம்பதாண்டுகள் முன்னோக்கி இருக்கிறோம், 70களில் 80களில் தமிழகம் சாதித்ததை 2018ல் பட்ஜெட்டில் கனவுத்திட்டங்களாக இந்திய ஒன்றியம் அறிவிக்கிறது என்று நாம் அடையும் அத்தனை பெருமைக்கும் அடிப்படை அவரே, தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தின் வளர்ச்சிக்கு பின்னாலும் அந்த மனிதரின் பெருங்கனவும், பேரறிவும் இருப்பதை எவராலும் மறுத்துவிட இயலாது, அந்த பேராற்றல் அடங்கிப்போய் 48 ஆண்டுகள் ஓடிவிட்டது, அன்றைக்கு அவர் பேசியதன் அரிச்சுவடியை இந்தியாவின் பல குரல்கள் இன்று பேச தொடங்கியுள்ளது.. உண்மையான அண்ணாயிசம் இந்தியாவெங்கும் ஒலித்தே தீரும்

.
சூரியமூர்த்தி (மீள்) #ANNA #ArchitectOfFederalConcept #BaseOfMordernTN

https://www.facebook.com/100001791863699/posts/2454777017925336/

Saturday, September 14, 2019

தமிழ் எண் வடிவங்கள்

தவ பேரறிவாளன்
2019-09-15

#தமிழ்எண்வடிவங்கள்....
....................................      
....................................
* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

௳ = நாள்
௴ = மாதம்
௵ = வருடம்

தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்

ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக எண்கள்
*****************
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்
----------------
நீட்டலளவு
**********
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்
************
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு
*************
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு
*************
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
.................................     .......................................

https://www.facebook.com/100028881293340/posts/233811864258188/

Tuesday, September 3, 2019

மாய மாத்திரைகள்! - சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்
2019-09-03

மாய மாத்திரைகள்!

-சரவணன் சந்திரன்

சமீபத்தில் தொலைக்காட்சிகள் துவங்கி பத்திரிகைகள், இணையம் வரை ஒரு முக்கியச் செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. கல்லூரி மாணவி ஒருத்தி அவளது காதலனுடன் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டு மாட்டிக் கொண்ட செய்தியே அது. அந்தக் கண்காணிப்புக் காணொளியை நானும் பார்த்தேன். பையன் முகமூடியோடு இருந்தான். அந்தப் பெண் ஏதோ காய்க்கடைக்குப் போவதைப் போலப் பின்னால் சாதாரணமாக அமர்ந்திருந்தாள். அடுத்தமுறை செய்யும் போது அவளும்கூட முகமூடிக்கு மாறி விடலாம். முதல் குற்றத்திலிருந்து வெளியேறிய பின்னர், மீண்டும் செய்யப்படும் குற்றங்கள் நிறையத் தன்னம்பிக்கையைத் தந்துவிடும் என்பதே நிரூபிக்கப்பட்ட உண்மை.

பலரும் மிகச் சாதாரணமாக செய்தியெனவே அதைக் கடந்து போனார்கள். எனக்கு ஏனோ ஒரு முள்ளெலி போலத் தோண்டி அதன் ஆழத்திற்குள் செல்லலாம் எனத் தோன்றியது. 2000 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ‘குற்றம் நடந்தது என்ன?’ என்கிற நிகழ்ச்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்த காலத்திலிருந்து தொன்று தொட்டு வந்த பழக்கமது. பத்திரிகையாளன் என்பவனது அடிப்படைக் குணமும் அதுவே.

அந்த நிகழ்ச்சியின் வழியாகப் பல குற்றச் செய்திகளின் பின்னணியை ஆராய்ந்தோம். கலப்பட பெட்ரோல் துவங்கி, பல்வேறு வகையான முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தோம். கலப்பட பெட்ரோல் பேக்டரி ஒன்றை மறைந்திருந்து படம்பிடிக்கையில், கத்தியோடு துரத்தி வந்தார்கள். குலசாமி புண்ணியத்தில் தப்பித்தோம். காவல்துறையின் கவனத்திற்கே வராத பல குற்றங்களின் நுனியைப் பிடித்து மேலேறி புதுக் கோணங்களை வெளியே கொண்டு வந்தோம்.

அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் குற்றம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. போரூர் ஆலமர பேருந்து நிலையத்திற்குப் பக்கத்தில் இருந்தது அந்த நிறுவனம். அந்த நிறுவனத்தில் வைத்திருந்த பத்தொன்பது இலட்சம் ரூபாய் பணத்தைக் காணவில்லை. இப்போது போல, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத காலம் அதுவென்பதால், பல்வேறு வகையில் காவல்துறையினர் துப்புத் துலக்கினார்கள்.

அந்த விசாரணை முழுக்க காவலர்களோடு இருந்தோம். கடைசியில் அந்த நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றிய, தெக்கத்தி பக்கத்தில் இருந்து இங்கு வந்து செட்டிலான பத்தொன்பது வயது இளைஞன் ஒருத்தனைச் சந்தேகித்து அவனது வீட்டிற்குச் சென்ற போது, பின்னாலேயே ஒளிப்படக் கருவிகளோடு துரத்தினோம். காவலர்கள் வந்ததைப் பார்த்து விட்டு, அந்தச் சிறிய ஓட்டு வீட்டின் சுவரேறிக் குதித்து தப்பிக்க முயன்றவனை வளைத்துப் பிடித்தார்கள். ஒற்றையரை கொண்ட இருள் சூழ்ந்த அந்த வீட்டின் மூலையில் இருந்த அரிசிச் சாக்கொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது அப்பணம். காவலர்கள் சென்ற பிறகு அந்தப் பகுதியில் விசாரித்த போது, எல்லோருமே அந்தப் பையன் குறித்து நல்லவிதமாகவே சொன்னார்கள். “பீடி சிகரெட் பழக்கம்கூட அவனுக்கு இல்லைங்க. தண்ணியடிச்சிட்டு தள்ளாடி வந்ததை நாங்க இங்க இருந்த வரை பாத்ததே இல்லைங்க” என்றார்கள்.

வழக்கமாக எல்லா கதைகளிலும் வருவதைப் போலவே அந்தப் பையனுக்கு அப்பா இல்லை. அம்மாவும் வீட்டு வேலைகளுக்குச் செல்கிறவர். “என்னெண்ணே தெரியாதுங்க. நைட் முழுக்க கோட்டான் மாதிரி முழிச்சிக்கிட்டே இருப்பான். தீடீர்னு சாமி வந்த மாதிரி உடம்பெல்லாம் முறுக்கிக்கிடும் அவனுக்கு. வெறீல கண்டதையும் தூக்கி உடைப்பான். மறுநாள் காலையில எதுவுமே தெரியாத மாதிரி வேலைக்குக் கிளம்பிப் போயிடுவான்” என்று அவனுடைய அம்மா சொன்னது மட்டும் விசித்திரமாக இருந்தது. “பேய் கீய் பிடிச்சிருக்கும். கூப்டு போய் மருந்தெடுத்து விட்டா சரியாயிடும்” என்று உடனிருந்த அவனுடைய மாமா சொன்ன போது அவருடைய கண்களைப் பார்த்தேன். இயலாமை கையறு நிலையோடு கலந்து தெறித்தது.

மறுநாள் அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வந்த போது, விலங்கு போட்டு அழைத்து வந்தார்கள். “நைட்டெல்லாம் இவனோட ஒரே ரோதனை. பய ரெம்ப மூர்க்கமா இருந்தான். எவ்ளோ அடிச்சும் ஒரு வார்த்தைகூட  பேசலை. ஊசி போடற ஆளா இருக்கும் போல” என்றார் எனக்கு நன்றாகத் தெரிந்த கடைநிலைக் காவலர். பையனுடன் பேச்சுக் கொடுத்த போது, கல்லை எடுத்து எங்களை நோக்கி எறிய வந்தான். அதுவரை போதையென்றால் கஞ்சா அல்லது தண்ணியடிப்பது என்றளவிலேயே எல்லோருடைய புரிதலும் இருந்தது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு நகர்ந்து வந்த நாங்களும் அதில் விதிவிலக்கில்லை.

அதற்கடுத்து கஞ்சா மற்றும் ஆல்ஹகால் தவிர்த்த போதைகள் என்னென்ன என்பது குறித்து ஆராய சென்னையின் இருட்டு வீதிகளில் சுற்ற ஆரம்பித்தோம். நண்பனொருத்தன் ராயபுரம் க்ளேவ் பேட்டரி பகுதிக்கு அழைத்துப் போன போதுதான் மருத்துவ உபயோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் கோர்ட்பின், கெனகரான் (வேண்டுமென்றே பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) போன்ற ஊசி மருந்துகளைப் போதைக்காகப் பயன்படுத்தும் கூட்டத்தை அருகிலிருந்து பார்த்தோம். இதுபற்றி ஏற்கனவே தனியாக எழுதியிருக்கிறேன் என்பதால் தவ்விச் செல்கிறேன். அதற்கடுத்து விதம்விதமான மாத்திரைகள் என அந்தப் போதை உலகம் விரிந்தது. அத்தனையையும் விரட்டிப் போய், கடைசியில் மருந்துக் கடைகளில் அதிக விலைக்கு அவை விற்கப்படும் புள்ளியில் போய் நின்றோம். அப்போதெல்லாம் மருந்துக் கடைகளில் சிலர் மட்டும் மனசாட்சி இல்லாமல் அவற்றை விற்றுக் கொண்டிருந்தனர் என்பதன் வாழும் உண்மை நாங்கள்.

சென்னையின் புறநகர் பகுதியில் இருந்த மருந்துக்கடையொன்றில் அதிக விலை கொடுத்து அந்த மாத்திரைகளை வாங்கும் போது மறைந்திருந்து படம் பிடித்து அப்போது சென்னையின் காவல்துறை துணை ஆணையராக இருந்த ஒருத்தரிடம் கொண்டு போய்க் காட்டினோம். அவர் சிரித்துக் கொண்டே, “சென்னையின் இந்த மாதிரி போதைத் தேவைக்கு மருந்துக் கடைகளெல்லாம் எம்மாத்திரம். இவை ஆந்திரா கர்நாடகா போன்ற இடங்களில் இருந்தும் சென்னைக்குள் நுழைகின்றன. இருந்தாலும் பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டு அலட்சியமாக நாங்கள் கிடைக்கும் இடங்கள் என்று பட்டியிலிட்டு தந்த தாளை மேசையில் விட்டெறிந்தார். எதற்கு வேண்டாத வேலை உங்களுக்கு என்றர்த்தம் அதற்கு என்பது பின்னால்தான் எனக்குப் புரிந்தது.

இதேமாதிரி சம்பவமொன்றை இன்னொரு சந்தர்ப்பத்திலும் கேள்விப்பட்டேன். அசோக் நகரில் கிறிஸ்துமஸ் இரவொன்றில் நடந்த பிரபல கொள்ளையில் சம்பந்தப்பட்ட சிறுவர்களை சிறுவர் சீர்திருந்த பள்ளி நீதிமன்றத்தில் சந்தித்தேன். நான்கு பேர் சேர்ந்து அந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர். அத்தனை பேருக்கும் பதினைந்து வயதிற்குள்ளேதான். ஒரே பையனின் அம்மா மட்டும் கழுத்தில், சங்கிலிக்குப் பதிலாக பச்சைக் கயிறு ஒன்றை மட்டும் கட்டியபடி அவன்களோடு நின்று அனத்திக் கொண்டிருந்தார். “என்ன கழுதைய திங்கறாண்ணே தெரியலை. நாய் மாதிரி அந்த நேரத்தில மூர்க்கமா திரியாருணுங்க” என்றார் என்னிடம். அந்தப் பையன்களை நெருங்கி என்னவென்று கேட்ட போது, ”ஹான்ஸ்ண்ணா” என்றார்கள் ஒருமித்த குரலில். அதுவில்லை என்பது தெரியாதா? ஆனாலும் அதற்குமேல் அங்கே பேச தோதில்லை என்பதால் விட்டுவிட்டேன்.

கடைசியாய் நடந்த இந்தக் கல்லூரி மாணவியோடு சேர்ந்த கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு, இந்தக் குறிப்பிட்ட குற்றத்திற்குப் பின்னால் செயல்பட்ட காரணியை நெருங்கிப் போய்ப் பார்க்கத் தீர்மானித்தேன். அந்தக் குழுவில் இருந்த பையனொருத்தனை தெரிந்த ஆட்கள் மூலம் கொக்கி போட்டுப் பிடித்த போது, அவன் தங்குதடையின்றி அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தான். சம்பவத்தில் ஈடுபட்ட பையனின் வீடு லயோலா கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் குடியிருப்புப் பகுதியில் இருக்கிறது. சொல்லி வைத்த மாதிரி இவனுக்கும் அப்பா இல்லை. அம்மா ஏதோவொரு சாதாரண வேலைக்குப் போகிறார். பையன் டாட்டூ போடுவதில் விற்பன்னன். சமூக வலைத்தளங்களின் வழியாக டாட்டூ சம்பந்தமாக வருகிற பெண்களோடு வீட்டுக்கு அழைத்து வருகிறளவிற்குப் பழக்கம் அதிகமாகவே அவனுக்கு இருந்திருக்கிறது. அது அவனுடைய சுதந்திரம் என்பதால் அந்தக் கோணத்து விவரிப்புகளை விட்டு விடலாம். ஆனாலும் காரணமாகத்தான் இந்தயிடத்தில் சொல்கிறேன்.

அப்படி வந்த பெண்தான், இப்போது அவனோடு சேர்ந்து மாட்டிக் கொண்ட பெண். கரூரில் இருந்து சென்னைக்கு காட்சி ஊடகவியல் படிக்க வந்த பெண். டாட்டூ பழக்கம் கடைசியில் மாத்திரை பழக்கம் வரை கொண்டு வந்திருக்கிறது. கைட்டோவின், கைட்டோசென் (வேண்டுமென்றேதான் பெயரை மாற்றி எழுதியிருக்கிறேன்) மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் தீவிர பழக்கம் இருவருக்குமே தொற்றிக் கொண்டிருக்கிறது. பையன் ஏற்கனவே பல பைக் திருட்டுகளிலும் ஈடுபட்டிருக்கிறான். “எந்த பைக்கையும் அசால்ட்டா தூக்கிருவான் அங்கிள். இப்ப மாட்டுனதுகூட திருட்டு பைக்தான். ரெண்டு பேரும் ரூம் போட்டு இருந்தப்பதான் போலீஸ் தூக்குனாங்க. யூட்யூப்லல்லாம் பயங்கர பேமஸா ஆயிட்டான்” என்றான் அவனோடு ஏற்கனவே தொழிலில் இருந்த பையன்.

எல்லோரும் சேர்ந்துதான் முதலில் பைக் திருட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிறகு அவர்களுக்குள் பணத்தைப் பிரித்துக் கொள்வதில் சண்டை வந்த பிறகு, அந்தப் பையன் மட்டும் தனித்துத் தொழிலில் இறங்கி விட்டான். அதற்காக எதற்கு அந்தப் பெண்? “இப்பல்லாம் போலீஸ் ரெண்டு பசங்க சந்தேகப்படற மாதிரி இருந்தா நிறுத்திர்றாங்க. பொண்ணு பின்னாடி இருந்துச்சுண்ணா டவுட் வராது. அதுக்குத்தான் பொண்ண கரெக்ட் பண்றது” என்றான் இந்தத் தொழிலில் இருந்த இன்னொருத்தன். இதை நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது. காவல்துறையும்கூட இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இந்த நகர்வை மோப்பம் பிடித்து விட்டதாகவே தெரிகிறது. இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய இளைஞர்கள் சிலரைச் சந்தித்த போது, அவர்கள் அனைவருக்குமே ஆல்கஹால் சுத்தமாக ஒத்துக் கொள்ளவில்லை என்பது தெரிந்தது. வாங்கித் தருகிறேனென சொன்ன போதுகூட மறுத்து விட்டார்கள். எங்களூரில் குற்றச் சம்பவங்களுக்குப் போவதற்கு முன்பு அண்ணன்கள் கழுத்து வரை குடிக்கிற மாதிரியெல்லாம் இப்போதில்லை.

கஞ்சா, ஊசி என்பதையெல்லாம் தாண்டி அவர்களில் ஒருகூட்டம் பெரும்பாலும் மாத்திரைக்கு நகர்ந்திருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது. சிலநேரங்களில் மாத்திரையோடு சேர்ந்து கஞ்சா. அந்த மாத்திரை அட்டைகள் எப்படிக் கிடைக்கின்றன? சென்னையில் இந்தக் குறிப்பிட்ட மாத்திரைகளை மருந்து அட்டை இல்லாமல் இளைஞர்கள் வந்து கேட்டால், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமென காவல்துறை சமீபத்தில் மறைமுக வேண்டுகோள் விட்டதாகக் கேள்விப்பட்டேன். “பெரும்பாலும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் இந்த மாதிரி போதைகளைத்தான் அதிகமும் நாடுகிறார்கள்” என்றார் காவல்துறை அதிகாரி ஒருத்தர்.

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்படும் பனிரெண்டு மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை இங்கே அறுநூறிலிருந்து தொள்ளாயிரம் ரூபாய் வரைக்கும் விலை வைத்து விற்கப்படுகின்றன. உண்மையில் அதனுடைய விலை ஐம்பது ரூபாய்க்கும் குறைவுதான். ஆளின் சத்தைப் பொறுத்து ஒருத்தர் அரை மாத்திரையிலிருந்து இரண்டு மாத்திரை வரை எடுத்துக் கொள்கிறார்கள். அப்படியே எடுத்து உதட்டுக்கடியில் வைத்து கரைகிற வரை காத்திருக்க வேண்டும். அதற்கடுத்து அது என்ன செய்யும் என அதை உபயோகிக்கும் தம்பியொருத்தனிடம் கேட்டேன். “எப்டீ சொல்றது அங்கிள். ஒருமாத்திரை போட்டீங்கண்ணா உங்கள யாருமே எதுவுமே செய்ய முடியாதுங்கற மாதிரி ஒரு போர்ஸ் வந்து ஒட்டிக்கும். ஆனா வெளீல யாருக்கும் போதையடிச்ச மாதிரியே தெரியாது. என்னக்கூட பப்ளிக் பத்து பேர் சேர்ந்து ஒரு பிள்ளையோட பின்னாடி தட்டினேங்கறதுக்காக அடிச்சாங்க. எனக்கு வலிக்கவே இல்லை. அழுகை வரவே இல்லை. எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கணும்ங்கற வெறீதான் வந்திச்சு” என்றான் அந்தப் பையன்.

அவனே இன்னொரு கதையையும் சொன்னான். பனிரெண்டு மாத்திரை கொண்ட அட்டையொன்றை வாங்குவதற்காக, கல்லூரியில் படிக்கும் பையனொருத்தன் இருபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை தந்திருக்கிறான் என்று சொல்லும் போதே இதற்குப் பின்னால் இருக்கிற விபரீதம் உறைத்தது. மாத்திரை இல்லாத சமயங்களில், உண்மையாகவே மிருகமாகி விடுவார்கள். அப்புறம் எதற்காக போதை மீட்பு மையங்கள் ஆட்களை போட்டு அடிக்கிறார்கள் எனச் செய்தி வருகிறது? ஆல்கஹால் போதைகளை விட இவை எவ்வளவு ஆபத்தானவை என்பதன் அடர்த்தியும் அந்தப் பையன்களின் உலகில் உலவி விட்டு வந்தபிறகு உறைத்தது. போதை அடிக்காத சமயங்களில் குழந்தையாய்க் கொஞ்சுகிறார்கள். சென்னையில் நடக்கும் இளம் சிறார்கள் சார்ந்த குற்றங்கள் அனைத்திற்குப் பின்னாலும் இந்த மாத்திரைகள் பெரும்பாலும் ரெட்டணங்கால் போட்டு அமர்ந்திருக்கின்றன என்று சொன்னால் அது அதிர்ச்சி மதிப்பீடாகத்தான் இருக்கும். ஆனால் தரையில் இறங்கி நோண்டித் தேடிப் பார்த்தால் இதற்குப் பின்னால் இருக்கிற உண்மை விளங்கும்.

எதற்குத் தேவையில்லாமல் இன்னொருத்தரை பயப்படுத்தப் போகிறோம்? கல்லூரிப் பையன்களுக்கு எதற்காக மிகையான பணம் தேவைப்படுகிறது? எதற்காக கொள்ளையடிப்பது என்கிற அச்சமூட்டுகிற செயலுக்கு நகர்கிறார்கள்? பெண்கள் சார்ந்த விஷயங்கள் இதற்குப் பின்னால் இருந்தாலும், இதுமாதிரியான போதை என்கிற அம்சமே உடனடியாக முன்னுக்கு வருகிறது. நான்கு பேர் சேர்ந்து சாயந்திரத்திற்குள் ஒரு அட்டை மாத்திரையை முடித்து விடுவோம் என்கிறார்கள் மிகச் சாதாரணமாக. அதிலும் அந்த மாத்திரையை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொருத்தன் வாயிலும் போடுகிறவனே அன்றைய கதாநாயகனாம். “அதில ஒரு ஸ்டைல் இருக்குதுங்க. சுண்டி விட்டு வாயில போட்டு விடறவந்தான் அன்னைக்கு கெத்து. மாஸ் காட்டுறதுன்னு அதுக்குப் பேரு” என்றான் ஒருபையன். அடுத்த முறை இன்னொருத்தன் மாஸ் காட்ட வேண்டும் என்பது இயல்பானதுதானே? காசில்லாதவன் எங்கே போவான்? இந்தப் பையன்களை விடுங்கள். தர்ஷினி என்கிற சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தர்ஷன்? “அவன் மாத்திரை போடற போதைக்காரன் அங்கிள். எண்ட்டயே வந்து ஒருதடவை வாங்கிட்டுப் போயிருக்கான்” என்றான் ஒருபையன்.

பெரும்பாலும் பெற்றோர்கள் பையன் தண்ணியடிக்கிறானா? அல்லது சிகரெட் குடிக்கிறானா? என்பதைத்தான் உற்று உற்றுப் பார்ப்பார்கள். “தண்ணீ பழக்கம் சிகரெட் பழக்கமெல்லாம் எம்பையனுக்கு ஒத்துக்காதுங்க. நான் சிகரெட் குடிச்சிட்டு போனாகூட மூஞ்சிய சுளிப்பான்” எனப் பெருமையாகச் சொன்ன அப்பா ஒருத்தனின் பையன் ஒரு அட்டையில் மூன்று மாத்திரைகளை ஒரேநாள் போடுகிறான் என்பதை எப்படி விளங்கிக் கொள்ள? உண்மையில் போதை சார்ந்த புரிதல்கள் இங்கு சுத்தமாக இல்லை என்பதே உண்மை.

இரவில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்றுதான் காவல்துறை சோதனை செய்கிறது. இப்படி மாத்திரையைப் போட்டுக் கொண்டு வருகிறவனை எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? இதுசம்பந்தமாகவும் காவல்துறைக்கு விழிப்புணர்வு வரவேண்டும் என நேர்மையான அதிகாரிகள் தங்களது கவலைகளை வெளியிடத் துவங்கியிருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் இன்னொரு முக்கியமான கோணமொன்றும் இருக்கிறது. சென்னையில் மட்டுமே இதுமாதிரியான போதை வட்டம் இருக்கிறது என்றுதான் எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கோவைக்குப் போன போது இதுகுறித்து விசாரித்தால், சென்னையில்கூட கிடைக்காத, எல்லாவித கெமிக்கல் போதைகளும் அங்கே சர்வசாதாரணமாகக் கிடைக்கும் என்றார்கள். அங்குள்ள கல்லூரி மாணவர்கள் மத்தியில் மாத்திரைகள் எல்லாம் மிகச் சாதாரணமானவை என்றார்கள். இப்போது இந்த போதை வலை தமிழகத்தின் சிறுநகரங்களுக்கும் பரவி விட்டது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகமெங்கும் அக்குற்றம் சார்ந்த உணர்ச்சிகரமான ஒரு உரையாடல் நடந்தது. பத்தில் ஒன்பது பேர் அந்தப் பையன்கள் எல்லோரையும் தூக்கில் போட வேண்டுமெனக் கொதித்தார்கள். எல்லோரது பார்வையும் அந்த நேரத்தில் மட்டும் பொள்ளாச்சியிலேயே நிலை கொண்டிருந்தது. அதற்கப்புறம் எல்லோரும் வழக்கம் போல அதை மறந்தும் போனோம். அதற்கடுத்தும் அதுசம்பந்தமான செய்திகளைத் நாளிதழ்களில் தேடித்தேடிப் பார்த்தேன். பொள்ளாச்சி சம்பவத்தைப் போல கடந்த ஆறுமாதத்தில் மட்டும் ஐம்பதிற்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்து விட்டன. இருநூறு பெண்கள் என்று செய்தி வந்ததாலேயே பொள்ளாச்சி சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்று விட்டது. ஒருபெண்ணை மிரட்டி படம் பிடித்தால் அது குற்றச் செய்தியில் வராதா? தமிழகத்தில் தினம்தோறும் ஏதோவொரு சிறுநகரத்தில் இதுமாதிரியான சம்பவங்கள் கண்ணும் காதும் வைத்த மாதிரி நடந்தபடியேதான் இருக்கின்றன.

இது ஒருவகையிலான தொழில்நுட்பம் சூழ்ந்த காலத்தின் சிக்கல். உலகத்தில் உள்ள எல்லா வளரும் நகரங்களும் இந்தச் சிக்கலைக் கடந்தே வந்திருக்கின்றன. இதுவொரு உலகளாவிய பிரச்சினை என்பதை தத்துவார்த்த ரீதியில் உணரத் துவங்க வேண்டும். வளர்கிற பொருளாதாரம் என்று சொல்லும் போது, அதற்குப் பின்னால் இதுபோன்ற விபரீத பின்விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. போதை, பாலியல் குற்றங்கள், திருட்டு, கொள்ளை என எல்லா சங்கதிகளையும் இலண்டன் மாநகரமும் பார்க்கிறது. கலிபோர்னியா நகரமும் பார்க்கிறது. அதில் சென்னையும் பொள்ளாச்சியும் விதிவிலக்கில்லை.

ஆனால் வளர்ந்த நாடுகள் இவை செயல்படும் விதத்தைப் புரிந்து கொண்டு, இதைத் தகர்க்கும் வேறுவேறு ஏற்பாடுகளில் இப்போது இறங்கத் துவங்கி விட்டன. ஒருகுற்றம் நடந்தால், வளர்ந்த நாடுகளில் உள்ள கல்வி நிலையங்கள், மனநல அமைப்புகள் என எல்லோரும் காவல் அமைப்புகளோடு ஒன்றிணைந்து அக்குற்றத்தை ஆராய்கிறார்கள். இங்கே மட்டும்தான் துப்பாக்கியை எடுத்து காவல்துறைக்குச் சுடச் சொல்லி, பொதுச் சமூகம் உத்தரவு கொடுக்கிறது.

நகரங்கள் வளர்கையில் போதையும் போதை சார்ந்த பாலியல் குற்றங்கள், கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்றங்களும் வளர்வதென்பது யதார்த்தமே. தமிழக நகரங்கள் வளர வளர இதுபோன்ற எண்ணற்ற குற்றங்களைக் கடந்தே வந்திருக்கின்றன. அப்போது அவை எட்டாம் பக்கச் செய்தியாகப் பார்வைக்கு வந்ததிதில்லை. இப்போது இணையம், காட்சி ஊடகம் உள்ளிட்ட உடனடியான பார்வை வெளி கிடைத்திருப்பதால் அதிகமும் தட்டுப்படத் துவங்கியிருக்கின்றன. அவ்வளவே வித்தியாசம் என்பதை உணர வேண்டும். இது ஆரம்பம்தான்.

இந்தப் போக்கு எதிர்காலத்தில் இன்னமும் மூர்க்கமாகத் தலைவிரித்தாடும். ஆரம்பத்திலேயே இதன் அடிப்படையைப் புரிந்து கொண்டு செயல்பட்டால், பெருவிளைவுகளை ஓரளவிற்குத் தடுக்கவியலும். கலாசாரத் தடியெடுத்துக் கொண்டு, கொண்டாட்டங்களைப் பரிசளிக்கும் எல்லாவித மித போதைகளையும் எதிர்க்கிற முயற்சி அல்ல இது. ஆழமான, மூர்க்கமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டறிய விழைகிற முனைப்பிது என்பதை உணர்ந்தால் மகிழ்வேன். இதையெல்லாம் யாரை நோக்கிப் பேசுகிறோம்? ஏனெனில் இங்கே அரசாங்கமே போதையை கடைபரப்பிக் கூச்சமே இல்லாமல் விற்கிறது என்பதை நினைக்கையில் துக்கம் தொண்டையை அடைக்கிறது. "என்னது எண்ணூருவாக்கு விக்கறாங்களா. அப்ப நாம நானூறு ஓவாய்க்கு விக்கலாம். பசங்களுக்கு நல்லதுதானே பண்றோம்" என அரசு இந்த வியாபாரத்தில் இறங்கக்கூடச் செய்யலாம். அப்படியானால் எங்களுக்கு மீட்பே இல்லையா?

https://m.facebook.com/story.php?story_fbid=2381801485261419&id=100002947732385