Tuesday, September 3, 2019

மாய மாத்திரைகள்! - சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்
2019-09-03

மாய மாத்திரைகள்!

-சரவணன் சந்திரன்

சமீபத்தில் தொலைக்காட்சிகள் துவங்கி பத்திரிகைகள், இணையம் வரை ஒரு முக்கியச் செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. கல்லூரி மாணவி ஒருத்தி அவளது காதலனுடன் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டு மாட்டிக் கொண்ட செய்தியே அது. அந்தக் கண்காணிப்புக் காணொளியை நானும் பார்த்தேன். பையன் முகமூடியோடு இருந்தான். அந்தப் பெண் ஏதோ காய்க்கடைக்குப் போவதைப் போலப் பின்னால் சாதாரணமாக அமர்ந்திருந்தாள். அடுத்தமுறை செய்யும் போது அவளும்கூட முகமூடிக்கு மாறி விடலாம். முதல் குற்றத்திலிருந்து வெளியேறிய பின்னர், மீண்டும் செய்யப்படும் குற்றங்கள் நிறையத் தன்னம்பிக்கையைத் தந்துவிடும் என்பதே நிரூபிக்கப்பட்ட உண்மை.

பலரும் மிகச் சாதாரணமாக செய்தியெனவே அதைக் கடந்து போனார்கள். எனக்கு ஏனோ ஒரு முள்ளெலி போலத் தோண்டி அதன் ஆழத்திற்குள் செல்லலாம் எனத் தோன்றியது. 2000 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ‘குற்றம் நடந்தது என்ன?’ என்கிற நிகழ்ச்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்த காலத்திலிருந்து தொன்று தொட்டு வந்த பழக்கமது. பத்திரிகையாளன் என்பவனது அடிப்படைக் குணமும் அதுவே.

அந்த நிகழ்ச்சியின் வழியாகப் பல குற்றச் செய்திகளின் பின்னணியை ஆராய்ந்தோம். கலப்பட பெட்ரோல் துவங்கி, பல்வேறு வகையான முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தோம். கலப்பட பெட்ரோல் பேக்டரி ஒன்றை மறைந்திருந்து படம்பிடிக்கையில், கத்தியோடு துரத்தி வந்தார்கள். குலசாமி புண்ணியத்தில் தப்பித்தோம். காவல்துறையின் கவனத்திற்கே வராத பல குற்றங்களின் நுனியைப் பிடித்து மேலேறி புதுக் கோணங்களை வெளியே கொண்டு வந்தோம்.

அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் குற்றம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. போரூர் ஆலமர பேருந்து நிலையத்திற்குப் பக்கத்தில் இருந்தது அந்த நிறுவனம். அந்த நிறுவனத்தில் வைத்திருந்த பத்தொன்பது இலட்சம் ரூபாய் பணத்தைக் காணவில்லை. இப்போது போல, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத காலம் அதுவென்பதால், பல்வேறு வகையில் காவல்துறையினர் துப்புத் துலக்கினார்கள்.

அந்த விசாரணை முழுக்க காவலர்களோடு இருந்தோம். கடைசியில் அந்த நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றிய, தெக்கத்தி பக்கத்தில் இருந்து இங்கு வந்து செட்டிலான பத்தொன்பது வயது இளைஞன் ஒருத்தனைச் சந்தேகித்து அவனது வீட்டிற்குச் சென்ற போது, பின்னாலேயே ஒளிப்படக் கருவிகளோடு துரத்தினோம். காவலர்கள் வந்ததைப் பார்த்து விட்டு, அந்தச் சிறிய ஓட்டு வீட்டின் சுவரேறிக் குதித்து தப்பிக்க முயன்றவனை வளைத்துப் பிடித்தார்கள். ஒற்றையரை கொண்ட இருள் சூழ்ந்த அந்த வீட்டின் மூலையில் இருந்த அரிசிச் சாக்கொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது அப்பணம். காவலர்கள் சென்ற பிறகு அந்தப் பகுதியில் விசாரித்த போது, எல்லோருமே அந்தப் பையன் குறித்து நல்லவிதமாகவே சொன்னார்கள். “பீடி சிகரெட் பழக்கம்கூட அவனுக்கு இல்லைங்க. தண்ணியடிச்சிட்டு தள்ளாடி வந்ததை நாங்க இங்க இருந்த வரை பாத்ததே இல்லைங்க” என்றார்கள்.

வழக்கமாக எல்லா கதைகளிலும் வருவதைப் போலவே அந்தப் பையனுக்கு அப்பா இல்லை. அம்மாவும் வீட்டு வேலைகளுக்குச் செல்கிறவர். “என்னெண்ணே தெரியாதுங்க. நைட் முழுக்க கோட்டான் மாதிரி முழிச்சிக்கிட்டே இருப்பான். தீடீர்னு சாமி வந்த மாதிரி உடம்பெல்லாம் முறுக்கிக்கிடும் அவனுக்கு. வெறீல கண்டதையும் தூக்கி உடைப்பான். மறுநாள் காலையில எதுவுமே தெரியாத மாதிரி வேலைக்குக் கிளம்பிப் போயிடுவான்” என்று அவனுடைய அம்மா சொன்னது மட்டும் விசித்திரமாக இருந்தது. “பேய் கீய் பிடிச்சிருக்கும். கூப்டு போய் மருந்தெடுத்து விட்டா சரியாயிடும்” என்று உடனிருந்த அவனுடைய மாமா சொன்ன போது அவருடைய கண்களைப் பார்த்தேன். இயலாமை கையறு நிலையோடு கலந்து தெறித்தது.

மறுநாள் அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வந்த போது, விலங்கு போட்டு அழைத்து வந்தார்கள். “நைட்டெல்லாம் இவனோட ஒரே ரோதனை. பய ரெம்ப மூர்க்கமா இருந்தான். எவ்ளோ அடிச்சும் ஒரு வார்த்தைகூட  பேசலை. ஊசி போடற ஆளா இருக்கும் போல” என்றார் எனக்கு நன்றாகத் தெரிந்த கடைநிலைக் காவலர். பையனுடன் பேச்சுக் கொடுத்த போது, கல்லை எடுத்து எங்களை நோக்கி எறிய வந்தான். அதுவரை போதையென்றால் கஞ்சா அல்லது தண்ணியடிப்பது என்றளவிலேயே எல்லோருடைய புரிதலும் இருந்தது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு நகர்ந்து வந்த நாங்களும் அதில் விதிவிலக்கில்லை.

அதற்கடுத்து கஞ்சா மற்றும் ஆல்ஹகால் தவிர்த்த போதைகள் என்னென்ன என்பது குறித்து ஆராய சென்னையின் இருட்டு வீதிகளில் சுற்ற ஆரம்பித்தோம். நண்பனொருத்தன் ராயபுரம் க்ளேவ் பேட்டரி பகுதிக்கு அழைத்துப் போன போதுதான் மருத்துவ உபயோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் கோர்ட்பின், கெனகரான் (வேண்டுமென்றே பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) போன்ற ஊசி மருந்துகளைப் போதைக்காகப் பயன்படுத்தும் கூட்டத்தை அருகிலிருந்து பார்த்தோம். இதுபற்றி ஏற்கனவே தனியாக எழுதியிருக்கிறேன் என்பதால் தவ்விச் செல்கிறேன். அதற்கடுத்து விதம்விதமான மாத்திரைகள் என அந்தப் போதை உலகம் விரிந்தது. அத்தனையையும் விரட்டிப் போய், கடைசியில் மருந்துக் கடைகளில் அதிக விலைக்கு அவை விற்கப்படும் புள்ளியில் போய் நின்றோம். அப்போதெல்லாம் மருந்துக் கடைகளில் சிலர் மட்டும் மனசாட்சி இல்லாமல் அவற்றை விற்றுக் கொண்டிருந்தனர் என்பதன் வாழும் உண்மை நாங்கள்.

சென்னையின் புறநகர் பகுதியில் இருந்த மருந்துக்கடையொன்றில் அதிக விலை கொடுத்து அந்த மாத்திரைகளை வாங்கும் போது மறைந்திருந்து படம் பிடித்து அப்போது சென்னையின் காவல்துறை துணை ஆணையராக இருந்த ஒருத்தரிடம் கொண்டு போய்க் காட்டினோம். அவர் சிரித்துக் கொண்டே, “சென்னையின் இந்த மாதிரி போதைத் தேவைக்கு மருந்துக் கடைகளெல்லாம் எம்மாத்திரம். இவை ஆந்திரா கர்நாடகா போன்ற இடங்களில் இருந்தும் சென்னைக்குள் நுழைகின்றன. இருந்தாலும் பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டு அலட்சியமாக நாங்கள் கிடைக்கும் இடங்கள் என்று பட்டியிலிட்டு தந்த தாளை மேசையில் விட்டெறிந்தார். எதற்கு வேண்டாத வேலை உங்களுக்கு என்றர்த்தம் அதற்கு என்பது பின்னால்தான் எனக்குப் புரிந்தது.

இதேமாதிரி சம்பவமொன்றை இன்னொரு சந்தர்ப்பத்திலும் கேள்விப்பட்டேன். அசோக் நகரில் கிறிஸ்துமஸ் இரவொன்றில் நடந்த பிரபல கொள்ளையில் சம்பந்தப்பட்ட சிறுவர்களை சிறுவர் சீர்திருந்த பள்ளி நீதிமன்றத்தில் சந்தித்தேன். நான்கு பேர் சேர்ந்து அந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர். அத்தனை பேருக்கும் பதினைந்து வயதிற்குள்ளேதான். ஒரே பையனின் அம்மா மட்டும் கழுத்தில், சங்கிலிக்குப் பதிலாக பச்சைக் கயிறு ஒன்றை மட்டும் கட்டியபடி அவன்களோடு நின்று அனத்திக் கொண்டிருந்தார். “என்ன கழுதைய திங்கறாண்ணே தெரியலை. நாய் மாதிரி அந்த நேரத்தில மூர்க்கமா திரியாருணுங்க” என்றார் என்னிடம். அந்தப் பையன்களை நெருங்கி என்னவென்று கேட்ட போது, ”ஹான்ஸ்ண்ணா” என்றார்கள் ஒருமித்த குரலில். அதுவில்லை என்பது தெரியாதா? ஆனாலும் அதற்குமேல் அங்கே பேச தோதில்லை என்பதால் விட்டுவிட்டேன்.

கடைசியாய் நடந்த இந்தக் கல்லூரி மாணவியோடு சேர்ந்த கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு, இந்தக் குறிப்பிட்ட குற்றத்திற்குப் பின்னால் செயல்பட்ட காரணியை நெருங்கிப் போய்ப் பார்க்கத் தீர்மானித்தேன். அந்தக் குழுவில் இருந்த பையனொருத்தனை தெரிந்த ஆட்கள் மூலம் கொக்கி போட்டுப் பிடித்த போது, அவன் தங்குதடையின்றி அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தான். சம்பவத்தில் ஈடுபட்ட பையனின் வீடு லயோலா கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் குடியிருப்புப் பகுதியில் இருக்கிறது. சொல்லி வைத்த மாதிரி இவனுக்கும் அப்பா இல்லை. அம்மா ஏதோவொரு சாதாரண வேலைக்குப் போகிறார். பையன் டாட்டூ போடுவதில் விற்பன்னன். சமூக வலைத்தளங்களின் வழியாக டாட்டூ சம்பந்தமாக வருகிற பெண்களோடு வீட்டுக்கு அழைத்து வருகிறளவிற்குப் பழக்கம் அதிகமாகவே அவனுக்கு இருந்திருக்கிறது. அது அவனுடைய சுதந்திரம் என்பதால் அந்தக் கோணத்து விவரிப்புகளை விட்டு விடலாம். ஆனாலும் காரணமாகத்தான் இந்தயிடத்தில் சொல்கிறேன்.

அப்படி வந்த பெண்தான், இப்போது அவனோடு சேர்ந்து மாட்டிக் கொண்ட பெண். கரூரில் இருந்து சென்னைக்கு காட்சி ஊடகவியல் படிக்க வந்த பெண். டாட்டூ பழக்கம் கடைசியில் மாத்திரை பழக்கம் வரை கொண்டு வந்திருக்கிறது. கைட்டோவின், கைட்டோசென் (வேண்டுமென்றேதான் பெயரை மாற்றி எழுதியிருக்கிறேன்) மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் தீவிர பழக்கம் இருவருக்குமே தொற்றிக் கொண்டிருக்கிறது. பையன் ஏற்கனவே பல பைக் திருட்டுகளிலும் ஈடுபட்டிருக்கிறான். “எந்த பைக்கையும் அசால்ட்டா தூக்கிருவான் அங்கிள். இப்ப மாட்டுனதுகூட திருட்டு பைக்தான். ரெண்டு பேரும் ரூம் போட்டு இருந்தப்பதான் போலீஸ் தூக்குனாங்க. யூட்யூப்லல்லாம் பயங்கர பேமஸா ஆயிட்டான்” என்றான் அவனோடு ஏற்கனவே தொழிலில் இருந்த பையன்.

எல்லோரும் சேர்ந்துதான் முதலில் பைக் திருட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிறகு அவர்களுக்குள் பணத்தைப் பிரித்துக் கொள்வதில் சண்டை வந்த பிறகு, அந்தப் பையன் மட்டும் தனித்துத் தொழிலில் இறங்கி விட்டான். அதற்காக எதற்கு அந்தப் பெண்? “இப்பல்லாம் போலீஸ் ரெண்டு பசங்க சந்தேகப்படற மாதிரி இருந்தா நிறுத்திர்றாங்க. பொண்ணு பின்னாடி இருந்துச்சுண்ணா டவுட் வராது. அதுக்குத்தான் பொண்ண கரெக்ட் பண்றது” என்றான் இந்தத் தொழிலில் இருந்த இன்னொருத்தன். இதை நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது. காவல்துறையும்கூட இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இந்த நகர்வை மோப்பம் பிடித்து விட்டதாகவே தெரிகிறது. இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய இளைஞர்கள் சிலரைச் சந்தித்த போது, அவர்கள் அனைவருக்குமே ஆல்கஹால் சுத்தமாக ஒத்துக் கொள்ளவில்லை என்பது தெரிந்தது. வாங்கித் தருகிறேனென சொன்ன போதுகூட மறுத்து விட்டார்கள். எங்களூரில் குற்றச் சம்பவங்களுக்குப் போவதற்கு முன்பு அண்ணன்கள் கழுத்து வரை குடிக்கிற மாதிரியெல்லாம் இப்போதில்லை.

கஞ்சா, ஊசி என்பதையெல்லாம் தாண்டி அவர்களில் ஒருகூட்டம் பெரும்பாலும் மாத்திரைக்கு நகர்ந்திருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது. சிலநேரங்களில் மாத்திரையோடு சேர்ந்து கஞ்சா. அந்த மாத்திரை அட்டைகள் எப்படிக் கிடைக்கின்றன? சென்னையில் இந்தக் குறிப்பிட்ட மாத்திரைகளை மருந்து அட்டை இல்லாமல் இளைஞர்கள் வந்து கேட்டால், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமென காவல்துறை சமீபத்தில் மறைமுக வேண்டுகோள் விட்டதாகக் கேள்விப்பட்டேன். “பெரும்பாலும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் இந்த மாதிரி போதைகளைத்தான் அதிகமும் நாடுகிறார்கள்” என்றார் காவல்துறை அதிகாரி ஒருத்தர்.

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்படும் பனிரெண்டு மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை இங்கே அறுநூறிலிருந்து தொள்ளாயிரம் ரூபாய் வரைக்கும் விலை வைத்து விற்கப்படுகின்றன. உண்மையில் அதனுடைய விலை ஐம்பது ரூபாய்க்கும் குறைவுதான். ஆளின் சத்தைப் பொறுத்து ஒருத்தர் அரை மாத்திரையிலிருந்து இரண்டு மாத்திரை வரை எடுத்துக் கொள்கிறார்கள். அப்படியே எடுத்து உதட்டுக்கடியில் வைத்து கரைகிற வரை காத்திருக்க வேண்டும். அதற்கடுத்து அது என்ன செய்யும் என அதை உபயோகிக்கும் தம்பியொருத்தனிடம் கேட்டேன். “எப்டீ சொல்றது அங்கிள். ஒருமாத்திரை போட்டீங்கண்ணா உங்கள யாருமே எதுவுமே செய்ய முடியாதுங்கற மாதிரி ஒரு போர்ஸ் வந்து ஒட்டிக்கும். ஆனா வெளீல யாருக்கும் போதையடிச்ச மாதிரியே தெரியாது. என்னக்கூட பப்ளிக் பத்து பேர் சேர்ந்து ஒரு பிள்ளையோட பின்னாடி தட்டினேங்கறதுக்காக அடிச்சாங்க. எனக்கு வலிக்கவே இல்லை. அழுகை வரவே இல்லை. எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கணும்ங்கற வெறீதான் வந்திச்சு” என்றான் அந்தப் பையன்.

அவனே இன்னொரு கதையையும் சொன்னான். பனிரெண்டு மாத்திரை கொண்ட அட்டையொன்றை வாங்குவதற்காக, கல்லூரியில் படிக்கும் பையனொருத்தன் இருபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை தந்திருக்கிறான் என்று சொல்லும் போதே இதற்குப் பின்னால் இருக்கிற விபரீதம் உறைத்தது. மாத்திரை இல்லாத சமயங்களில், உண்மையாகவே மிருகமாகி விடுவார்கள். அப்புறம் எதற்காக போதை மீட்பு மையங்கள் ஆட்களை போட்டு அடிக்கிறார்கள் எனச் செய்தி வருகிறது? ஆல்கஹால் போதைகளை விட இவை எவ்வளவு ஆபத்தானவை என்பதன் அடர்த்தியும் அந்தப் பையன்களின் உலகில் உலவி விட்டு வந்தபிறகு உறைத்தது. போதை அடிக்காத சமயங்களில் குழந்தையாய்க் கொஞ்சுகிறார்கள். சென்னையில் நடக்கும் இளம் சிறார்கள் சார்ந்த குற்றங்கள் அனைத்திற்குப் பின்னாலும் இந்த மாத்திரைகள் பெரும்பாலும் ரெட்டணங்கால் போட்டு அமர்ந்திருக்கின்றன என்று சொன்னால் அது அதிர்ச்சி மதிப்பீடாகத்தான் இருக்கும். ஆனால் தரையில் இறங்கி நோண்டித் தேடிப் பார்த்தால் இதற்குப் பின்னால் இருக்கிற உண்மை விளங்கும்.

எதற்குத் தேவையில்லாமல் இன்னொருத்தரை பயப்படுத்தப் போகிறோம்? கல்லூரிப் பையன்களுக்கு எதற்காக மிகையான பணம் தேவைப்படுகிறது? எதற்காக கொள்ளையடிப்பது என்கிற அச்சமூட்டுகிற செயலுக்கு நகர்கிறார்கள்? பெண்கள் சார்ந்த விஷயங்கள் இதற்குப் பின்னால் இருந்தாலும், இதுமாதிரியான போதை என்கிற அம்சமே உடனடியாக முன்னுக்கு வருகிறது. நான்கு பேர் சேர்ந்து சாயந்திரத்திற்குள் ஒரு அட்டை மாத்திரையை முடித்து விடுவோம் என்கிறார்கள் மிகச் சாதாரணமாக. அதிலும் அந்த மாத்திரையை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொருத்தன் வாயிலும் போடுகிறவனே அன்றைய கதாநாயகனாம். “அதில ஒரு ஸ்டைல் இருக்குதுங்க. சுண்டி விட்டு வாயில போட்டு விடறவந்தான் அன்னைக்கு கெத்து. மாஸ் காட்டுறதுன்னு அதுக்குப் பேரு” என்றான் ஒருபையன். அடுத்த முறை இன்னொருத்தன் மாஸ் காட்ட வேண்டும் என்பது இயல்பானதுதானே? காசில்லாதவன் எங்கே போவான்? இந்தப் பையன்களை விடுங்கள். தர்ஷினி என்கிற சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தர்ஷன்? “அவன் மாத்திரை போடற போதைக்காரன் அங்கிள். எண்ட்டயே வந்து ஒருதடவை வாங்கிட்டுப் போயிருக்கான்” என்றான் ஒருபையன்.

பெரும்பாலும் பெற்றோர்கள் பையன் தண்ணியடிக்கிறானா? அல்லது சிகரெட் குடிக்கிறானா? என்பதைத்தான் உற்று உற்றுப் பார்ப்பார்கள். “தண்ணீ பழக்கம் சிகரெட் பழக்கமெல்லாம் எம்பையனுக்கு ஒத்துக்காதுங்க. நான் சிகரெட் குடிச்சிட்டு போனாகூட மூஞ்சிய சுளிப்பான்” எனப் பெருமையாகச் சொன்ன அப்பா ஒருத்தனின் பையன் ஒரு அட்டையில் மூன்று மாத்திரைகளை ஒரேநாள் போடுகிறான் என்பதை எப்படி விளங்கிக் கொள்ள? உண்மையில் போதை சார்ந்த புரிதல்கள் இங்கு சுத்தமாக இல்லை என்பதே உண்மை.

இரவில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்றுதான் காவல்துறை சோதனை செய்கிறது. இப்படி மாத்திரையைப் போட்டுக் கொண்டு வருகிறவனை எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? இதுசம்பந்தமாகவும் காவல்துறைக்கு விழிப்புணர்வு வரவேண்டும் என நேர்மையான அதிகாரிகள் தங்களது கவலைகளை வெளியிடத் துவங்கியிருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் இன்னொரு முக்கியமான கோணமொன்றும் இருக்கிறது. சென்னையில் மட்டுமே இதுமாதிரியான போதை வட்டம் இருக்கிறது என்றுதான் எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கோவைக்குப் போன போது இதுகுறித்து விசாரித்தால், சென்னையில்கூட கிடைக்காத, எல்லாவித கெமிக்கல் போதைகளும் அங்கே சர்வசாதாரணமாகக் கிடைக்கும் என்றார்கள். அங்குள்ள கல்லூரி மாணவர்கள் மத்தியில் மாத்திரைகள் எல்லாம் மிகச் சாதாரணமானவை என்றார்கள். இப்போது இந்த போதை வலை தமிழகத்தின் சிறுநகரங்களுக்கும் பரவி விட்டது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகமெங்கும் அக்குற்றம் சார்ந்த உணர்ச்சிகரமான ஒரு உரையாடல் நடந்தது. பத்தில் ஒன்பது பேர் அந்தப் பையன்கள் எல்லோரையும் தூக்கில் போட வேண்டுமெனக் கொதித்தார்கள். எல்லோரது பார்வையும் அந்த நேரத்தில் மட்டும் பொள்ளாச்சியிலேயே நிலை கொண்டிருந்தது. அதற்கப்புறம் எல்லோரும் வழக்கம் போல அதை மறந்தும் போனோம். அதற்கடுத்தும் அதுசம்பந்தமான செய்திகளைத் நாளிதழ்களில் தேடித்தேடிப் பார்த்தேன். பொள்ளாச்சி சம்பவத்தைப் போல கடந்த ஆறுமாதத்தில் மட்டும் ஐம்பதிற்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்து விட்டன. இருநூறு பெண்கள் என்று செய்தி வந்ததாலேயே பொள்ளாச்சி சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்று விட்டது. ஒருபெண்ணை மிரட்டி படம் பிடித்தால் அது குற்றச் செய்தியில் வராதா? தமிழகத்தில் தினம்தோறும் ஏதோவொரு சிறுநகரத்தில் இதுமாதிரியான சம்பவங்கள் கண்ணும் காதும் வைத்த மாதிரி நடந்தபடியேதான் இருக்கின்றன.

இது ஒருவகையிலான தொழில்நுட்பம் சூழ்ந்த காலத்தின் சிக்கல். உலகத்தில் உள்ள எல்லா வளரும் நகரங்களும் இந்தச் சிக்கலைக் கடந்தே வந்திருக்கின்றன. இதுவொரு உலகளாவிய பிரச்சினை என்பதை தத்துவார்த்த ரீதியில் உணரத் துவங்க வேண்டும். வளர்கிற பொருளாதாரம் என்று சொல்லும் போது, அதற்குப் பின்னால் இதுபோன்ற விபரீத பின்விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. போதை, பாலியல் குற்றங்கள், திருட்டு, கொள்ளை என எல்லா சங்கதிகளையும் இலண்டன் மாநகரமும் பார்க்கிறது. கலிபோர்னியா நகரமும் பார்க்கிறது. அதில் சென்னையும் பொள்ளாச்சியும் விதிவிலக்கில்லை.

ஆனால் வளர்ந்த நாடுகள் இவை செயல்படும் விதத்தைப் புரிந்து கொண்டு, இதைத் தகர்க்கும் வேறுவேறு ஏற்பாடுகளில் இப்போது இறங்கத் துவங்கி விட்டன. ஒருகுற்றம் நடந்தால், வளர்ந்த நாடுகளில் உள்ள கல்வி நிலையங்கள், மனநல அமைப்புகள் என எல்லோரும் காவல் அமைப்புகளோடு ஒன்றிணைந்து அக்குற்றத்தை ஆராய்கிறார்கள். இங்கே மட்டும்தான் துப்பாக்கியை எடுத்து காவல்துறைக்குச் சுடச் சொல்லி, பொதுச் சமூகம் உத்தரவு கொடுக்கிறது.

நகரங்கள் வளர்கையில் போதையும் போதை சார்ந்த பாலியல் குற்றங்கள், கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்றங்களும் வளர்வதென்பது யதார்த்தமே. தமிழக நகரங்கள் வளர வளர இதுபோன்ற எண்ணற்ற குற்றங்களைக் கடந்தே வந்திருக்கின்றன. அப்போது அவை எட்டாம் பக்கச் செய்தியாகப் பார்வைக்கு வந்ததிதில்லை. இப்போது இணையம், காட்சி ஊடகம் உள்ளிட்ட உடனடியான பார்வை வெளி கிடைத்திருப்பதால் அதிகமும் தட்டுப்படத் துவங்கியிருக்கின்றன. அவ்வளவே வித்தியாசம் என்பதை உணர வேண்டும். இது ஆரம்பம்தான்.

இந்தப் போக்கு எதிர்காலத்தில் இன்னமும் மூர்க்கமாகத் தலைவிரித்தாடும். ஆரம்பத்திலேயே இதன் அடிப்படையைப் புரிந்து கொண்டு செயல்பட்டால், பெருவிளைவுகளை ஓரளவிற்குத் தடுக்கவியலும். கலாசாரத் தடியெடுத்துக் கொண்டு, கொண்டாட்டங்களைப் பரிசளிக்கும் எல்லாவித மித போதைகளையும் எதிர்க்கிற முயற்சி அல்ல இது. ஆழமான, மூர்க்கமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டறிய விழைகிற முனைப்பிது என்பதை உணர்ந்தால் மகிழ்வேன். இதையெல்லாம் யாரை நோக்கிப் பேசுகிறோம்? ஏனெனில் இங்கே அரசாங்கமே போதையை கடைபரப்பிக் கூச்சமே இல்லாமல் விற்கிறது என்பதை நினைக்கையில் துக்கம் தொண்டையை அடைக்கிறது. "என்னது எண்ணூருவாக்கு விக்கறாங்களா. அப்ப நாம நானூறு ஓவாய்க்கு விக்கலாம். பசங்களுக்கு நல்லதுதானே பண்றோம்" என அரசு இந்த வியாபாரத்தில் இறங்கக்கூடச் செய்யலாம். அப்படியானால் எங்களுக்கு மீட்பே இல்லையா?

https://m.facebook.com/story.php?story_fbid=2381801485261419&id=100002947732385

No comments:

Post a Comment