Saturday, August 24, 2019

விவசாயத்துறையைப் பொறுத்தவரை மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது.

பொருளாதார மந்தநிலை ஆரம்பித்துவிட்டது என்று பல்வேறு துறையினர் இன்று கதறினாலும்  விவசாயத்துறையைப் பொறுத்தவரை மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது.

விதை, பூச்சிக்கொல்லி, உரத் தொழில்நுட்பங்களில் இந்தியாவில் முதலீடு செய்ய எந்த சர்வதேச நிறுவனங்களும் தயாரில்லை. இங்கு Rule of law இல்லாதது, ஒப்பந்தங்களை மதித்து நடக்காதது, அந்தந்த துறைக்கு தொடர்பில்லாத ஆட்கள் சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது, அரசியல் தலையீடுகள் போன்றவற்றால் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர்.

பருத்தி விதை வியாபாரத்தில் நம்மிடம் ஒரு தொழில்நுட்பமும் கையில் இல்லாதநிலையில் மான்சான்டோவிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து பருத்திக்கு சுபம் போட்டு முடித்து வைத்தனர். நமது பாரம்பரிய விதைகளில் எல்லாம் உள்ளது என்று பேசும் ஊர்ச்சாவடி, மரத்தடி வாழ் நிபுணர்கள் சொல்வது முழுக்க முழுக்க உள்ளூர் தயாரிப்பான கட்டைவண்டியில் பயணிப்பதை. நாம் பேசும் வீரிய விதைகள், உயிரித்தொழில்நுட்பம் என்பது இன்றைய கார், பைக், லாரி போன்ற ஆட்டோமொபைல் துறை போன்ற மிகப்பெரிய அமைப்பின் முன் உள்ள சிக்கலை.

பருத்தி சந்தைக்கான பிரச்சினையின் ஆரம்ப்பபுள்ளி குறித்து அறிய இதை படித்துப் பார்க்கலாம்.

http://www.rsprabu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2/43/

பின்னர் வந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி பஞ்சாலைத் தொழிலை படுகுழியில் தள்ளியிருக்கிறது.

அண்மையில் மக்காச்சோளத்தில் வந்த படைப்புழு தாக்குதல் மக்காச்சோள விலையைத் தாறுமாறாக ஏற்றிவிட்டிருக்கிறது. இரண்டு மூன்று நாட்களில் மொத்த பயிரையும் புழுக்கள் தின்றுவிடும் என்பதால் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடுவதற்கு அஞ்சுகின்றனர்.

மக்காச்சோளம் விலை ஏறியதால் கோழித்தீவன உற்பத்திச் செலவும் கணிசமாக ஏறியிருக்கிறது. கோழப்பண்ணையாளர்கள் இனிமேல் எப்படி பண்ணையை நடத்துவது என்று கையைப் பிசையும் நிலைமை. பாதிப் பண்ணைகள் வங்கிக் கடனில் ஓடுகின்றன. பண்ணைக்காரர்கள் திவாலானால் வங்கிக் கடன்கள் திரும்ப வராது. சொத்து ஏலத்துக்குக் கொண்டுவரப்பட்டால் அந்தந்தப் பண்ணையை ஆரம்பித்த விவசாயிகள் அவரவர் ஊர்களிலேயே நடுத்தெருவுக்கு வருவார்கள்.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கோழிப்பண்ணை தமிழகத்தில் ஒரு சிறந்த organized industry. எனவே அதற்குண்டான பன்முக அரசு ஆதரவு உண்டு. அதுவே இன்று பெரும் கொடுமையாகிவிட்டிருப்பது காலத்தின் கொடுமை என்கிறார்கள் கோழிப்பண்ணையாளர்கள்.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சத்துணவு முட்டைக்கு மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டது. சராசரி விலையை அனுசரித்து யார் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாம். அதனால் ஆங்காங்கே சிறிய அளவில் பலர் இணைந்து ஏலம் எடுத்து சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை சப்ளை செய்ததால் பண்ணைகளில் வளர்ச்சி ஓரளவு சமமாக இருந்தது.

இன்று தமிழகம் முழுவதும் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை வழங்க ஒரே நிறுவனம் என்பதால் அவர்கள் ஏலம் எடுக்கும் மாதம் மட்டுமே விலை ஏறுவதும் பின்னர் தொடர்ந்து இறங்குமுகமாக இருப்பதும் அதிசயத்திலும் அதிசயம் என்கிறார்கள் நாமக்கல்வாழ் சிறு பண்ணை அதிபர்கள்.

எந்தத் தொழிலாக இருந்தாலும் Free trade என்று வந்துவிட்டால் திறம்பட தொழில் நடத்துபவர்களே சந்தையில் இருப்பார்கள். ஆனால் சிறிய கோழிப்  பண்ணையாளர்களை திட்டமிட்டு அப்புறப்படுத்த ஆட்சியாளர்கள் துணையுடன் லாபி செய்து அவர்களைப் பங்கேற்கவே விடாமல் செய்துவிடுவது பச்சை அயோக்கியத்தனம் என்று விவரம் தெரிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது மாநில அளவில் செயற்கையாக உண்டாக்கப்படும் பிரச்சினை என்றால் சத்துணவுத் திட்டத்தில் இருந்து முட்டையை முற்றிலும் அகற்றி சைவ உணவைத் திணிப்பதற்கு மத்திய அரசு ஒருபுறம் முயற்சிக்கிறது. அட்சய பாத்ரா என்ற தொண்டு நிறுவனம் மூலம் முட்டை, வெங்காயம், பூண்டு இல்லாத உணவை வழங்க இங்கேயும் ஒருசாரார் கடுமையாக வேலை செய்கின்றனர்.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது பூச்சிக்கொல்லிகளுக்கு 12%, உரத்துக்கு 18% வரி போடப்பட்டது. இன்றைய ஆளுங்கட்சி அதை அப்படியே ஏற்றுக்கொண்டது. பச்சைத்துண்டு போட்ட விவசாய சங்க ஆட்களுக்கு அதைப்  போராட்டத்தின் கடைசி கோரிக்கையாக வைப்பதற்கே சலிப்பாக இருந்தது. நூறு நாள் வேலைத் திட்டத்தைக் குறை சொல்வது மட்டுமே அவர்களில் பெரும்பாலோனோருக்கு மகிழ்ச்சி தந்தது.

திமுக ஆட்சிக்குப் பிறகும் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பூச்சிக்கொல்லி, உரத்துக்கு தமிழகத்தில் வரிவிலக்கு இருந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

உயர்விளைச்சல் தரும் விதைகளை உண்டாக்குவதில் பெரிய தொய்வு தனியார் துறையிலும் ஏற்பட்டிருக்கிறது. ஒரே இரகத்தை பல நிறுவனங்கள் வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்துகொண்டிருக்கின்றன. தனித்துவமிக்க இரகம் ஒன்றை உண்டாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்தால் அதற்கு எந்தவித சட்டப் பாதுகாப்பும் கிடையாது. ஊரெல்லாம் போலி வியாபாரம் தூள்பறக்கும். தட்டிக் கேட்டால் விவசாயிகளிடமே கேள்வி கேட்கிறாயா என்று கிளம்பிவிடுவார்கள.

அண்மையில் பெப்சி நிறுவனத்தின் உருளைக்கிழங்கு விதைகளைத் திருடி வியாபாரம் செய்தவர்களை அவர்கள் நீதிமன்றத்துக்கு இழுக்கப்போய் கடைசியில் நம்மூர் வழக்கப்படி குற்றம் சாட்டுபவனே பாரம் சுமக்க வேண்டிய துன்பத்துக்கு ஆளானது பல நிறுவனங்களுக்கு பெரிய படிப்பினையானது.

பதஞ்சலி பாபா புதிதாக விதைக் கம்பெனி போட்டிருக்கிறார். பெரும்பாலான காய்கறிகளில் அத்தனை இரகங்களை வெளியிட குறைந்தது ஐந்து முதல் பத்து வருடங்கள் தேவைப்படும். ஆனால் அவர் சக்திவாய்ந்த பாபா என்பதால் உடனே ஹைப்ரிட் இரகங்களை உருவாக்கிவிட்டதோடு ஆர்கானிக் ஹெபிரிட் இரகம் என்று புதிதாக படம் காட்டுகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் விதை வியாபாரத்தில் நடந்த மெடிக்கல் மிராக்கில் பதஞ்சலி விதைகள் மட்டுமே. இனி அரசாங்கத்தின் உதவியுடன் ஏகபோகமாக டெண்டர்களின் மூலமே பல கோடிகளை ஈட்டுவார்கள். அந்த விதைகள் மண்ணில் முளைக்கப் போகிறதா அல்லது குப்பையாக வீசப்படுகிறதா என்பதல்ல கேள்வி. Incumbent players யாருக்கும் கிடைக்காத ஓர் இடம் அவர்களுக்கு கிடைக்கும். மற்றபடி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க எந்தத் துரும்பும் கிள்ளிப் போடப்படவில்லை. சும்மா பேப்பரில் அறிவிப்பதோடு சரி.

அது திவ்ய விதைகளோ, திவ்யா விதைகளோ மொத்தத்தில் பதஞ்சலி பாபா இராமதேவ் கொண்டுவந்திருக்கும்  விதைகள். தேசபக்தர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு பாக்கெட் வாங்கினாலே ஆர்கானிக் ஹைப்ரிட் விதை வியாபாரம் தூள் கிளப்பும்.

ஜெய் திவ்ய பீஜ்! சூப்பர்நேச்சுரல் பீஜ்!!

No comments:

Post a Comment