Saturday, August 3, 2019

பிக்பாங் புரிகிறதா? 01 - ராஜ் சிவா

Raj Siva
2019-07-30

என்ன... புரிகிறதா?   01
-ராஜ்சிவா(ங்க்)

எப்போதும்போல, என் விருப்பத்திற்குரிய ‘பிக்பாஸ்’ பற்றி ஏதாவது எழுதலாமே என்று யோசித்தேன். சாரி...! சாரி...! ரொம்ப ரொம்ப சாரி. பிக்பாஸ் இல்லை, பிக்பாங். இந்த மைந்தன் சிவா (Mynthan Shiva), அர்விந்த் யுவராஜ் (Arrawinth Yuwaraj), கிர்த்திகா தரன் (Kirthika Tharan) போன்ற நட்புகளின் இடைவிடாத பிக்பாஸ் பதிவுகளைப் படித்துப் படித்து, எனக்கும் பிக்பாங், பிக்பாஸ் ஆகிவிட்டது. சொன்னதை அழிச்சிடுங்க. மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

எப்போதும் போல, என் விருப்பத்திற்குரிய ‘பிக்பாங்’ பற்றி ஏதாவது எழுதலாமே என்று யோசித்தேன். ரொம்பவே நீட்சியாக இல்லாமல், குறுந்துணிக்கையாக.

நேரடியாக விசயத்துக்கு வருகிறேன். பிக்பாங் கணத்தின்போது, இப்போதுள்ள ஒட்டுமொத்தப் பிரமாண்டப் பேரண்டத்துக்குக் காரணமான, அந்த ஒற்றைப் புள்ளி பெருவிரிவாய் விரியக் காத்திருந்தது. அந்தக் கணப்பொழுதில், நேரமென்ற (காலம்) ஒன்றோ, இடமென்ற (வெளி) ஒன்றோ இருக்கவில்லை. சொல்லப்போனால், அந்தச் சொற்களுக்கே அங்கு அர்த்தம் இல்லை. அவற்றிற்கு மட்டுமில்லை. எவற்றிற்கும் அர்த்தமில்லை. ‘இல்லாமையின் கணத்தில் இருத்தலுக்கு அர்த்தங்கள் கிடையாது’. உதாரணமாக, நீங்கள் பார்த்தே இருக்காத ஒரு நிறத்தை உங்களால் கற்பனை செய்ய முடியுமா என்று பாருங்கள். சரி போகட்டும். இப்போ அது இல்லை பிரச்சனை.

பிக்பாங் கணத்தில் அந்த ஒருமைப் புள்ளி மிகச்சிறியதாக இருந்தது என்று பலர் சொல்வார்கள். இப்போதும் சொல்கிறார்கள். அதிகம் ஏன், நானே பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். சிலர் ஒருபடி மேலே போய், அது சிறிய பந்தைப் போலென்றும், ஊசி முனை போன்றது என்றும் சொல்வார்கள். எல்லாமே தப்பு. மகாத்தப்பு.

அந்தக் கணத்தில், எப்படிக் காலம் மற்றும் இடத்திற்கு அர்த்தம் இல்லையோ, அதுபோலப் பருமன் என்பதற்கும் அர்த்தம் கிடையாது. சிறியது,பெரியது என்ற சொற்களுக்கு அங்கே இடமேயில்லை. அந்தப் புள்ளி எதைவிடவும் சிறியதும் இல்லை. எதையும்விடப் பெரியதும் இல்லை. எதையும் எதனுடனும் ஒப்பிடவே முடியாத, மனிதனால் கற்பனை செய்ய முடியாத அற்புதப் புள்ளி அது. பருமனற்ற, உருவமற்ற ஏதோவொன்று. அது இப்பிடி இருக்குமென்று சிந்தித்தால் குழம்பிப் போய்விடுவீர்கள். இனி யாரும் அதைச் சிறியதொரு புள்ளி என்று சொன்னால், அப்படியே விட்டுவிடுங்கள். ஆனாலும், அதை ஒருமைப்புள்ளியென்றே அழைத்தும் கொள்கிறோம். பரிமாணமே இல்லாத ஒருநிலை என்பதால்.

இதைத் தாண்டியும் அந்தப் புள்ளியின் பருமனை விளக்க வேண்டுமென்று யாரும் கேட்டால், “கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 14:53 மணியின் அளவு பெரிதாக இருந்தது என்று சொல்லிவிடுங்கள்.

என்ன புரிகிறதா? 😜😜😜

https://m.facebook.com/story.php?story_fbid=2371876352879378&id=100001711084852

No comments:

Post a Comment