Saturday, August 3, 2019

பிக்பாங் புரிகிறதா? 02 - ராஜ் சிவா

Raj Siva
2019-07-31

என்ன... புரிகிறதா?   02
-ராஜ்சிவா(ங்க்)

நாம் இப்போது, பி.பி 13.8பி இல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதாவது, பிக்பாங்கின் பின் 13.8 பில்லியன் வருடங்களை இதுவரை கடந்திருக்கிறோம். இந்தக் காலக் கணக்கு, பேரண்டத்தின் அனைத்து இடங்களுக்கும் பொதுவானது. வருடம் என்னும் அலகு பூமி சார்ந்ததாக இருந்தாலும், அந்தக் கால இடைவெளியின் அளவீட்டைப் பேரண்டம் முழுவதுமுள்ள இடங்களில் பொருத்திப் பார்க்கையில், பேரண்டம் உருவானது 13.8 பில்லியன் பூமி வருடங்கள். பால்வெளி உடுத்திரள் ஆனாலென்ன, ஐம்பது மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பாலிருக்கும் M87 உடுத்திரள் ஆனாலென்ன, இரண்டு இடத்திலுமே இந்தக் கணத்தில், பேரண்டம் உருவாகி 13.8 பில்லியன் வருடங்கள்தான். சரி, நான் இப்போது ஒன்று சொல்லப் போகிறேன். அதுபற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அதற்கான பதிலும், விளக்கமும் என்னிடமில்லை. உங்களைக் குழப்பிவிடுவதற்காகவும், பேரண்டத்தின் புரிந்துகொள்ள முடியாத பேராச்சரியங்களைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் மட்டுமே இதை எழுதுகிறேன்.

சரி, இப்போது விசயத்துக்குள் போகலாமா? பிக்பாங் பெருவிரிவு நடந்த சில மில்லியன் வருடங்களின் பின்னர் முதல் நட்சத்திரங்களும், நட்சத்திரக் கூட்டங்களும் உருவாக ஆரம்பித்தன. ஈர்ப்புவிசையின் அழுத்தம் மற்றும் பிசகல் காரணமாக அனைத்துவிதமான விண்வெளிப் பொருட்களும் தோன்ற ஆரம்பித்தன. அதில் நட்சத்திரங்கள், கோள்கள், நெபுலாக்கள், கருங்குழிகள், குவேசார்கள் என எல்லாமே அடக்கம். பெருவிருவின் பின் 690 மில்லியன் வருடத்தில் தோன்றிய குவேசாரைக் கண்டுபிடித்திருக்கிறோம். இந்தச் சமயத்தில் தோன்றிய ஒரு கருங்குழியை கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இண்டார்ஸ்டெல்லார் படத்தில், கூப்பர் வந்திறங்கிய நீர்க் கோளமான ‘Gargantua‘ இல் காலம் மெதுவாகிறது என்று குறிப்பிட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். Gargantua கோளின் ஒரு மணி நேரம், பூமியின் ஏழு வருடங்களுக்குச் சமமானது என்று சொல்லப்பட்டிருக்கும். அதுபோன்று, பெருவிரிவின் ஆரம்ப காலங்களில் தோன்றிய
கருங்குழியொன்றின் நிகழ்வெல்லைக்கு அருகே அல்லது நிகழ்வெல்லையிலேயே, ஒரு கோள் இருந்து, அதில் உயிரினம் வாழ்ந்தால், அவர்களுக்கான நேரம் பூச்சியத்துக்கு அருகிலேயே இருக்கும் அல்லவா? கருங்குழியின் மிகை ஈர்ப்புவிசையில், காலம் மெதுவாகி மெதுவாகிப் பூச்சியத்தை அண்மிக்குமென்று பல தடவைகள் சொல்லியிருக்கிறேன்.

அப்படியெனில், அந்தக் கோளில் வாழும் உயிரினத்திற்கு, காலம் நகராததால், பேரண்டம் உருவாகி 13.8 பில்லியன் வருடங்கள் ஆகியிருக்காது. வெறும் 700 மில்லியன் வருடங்களாக மட்டுமே இருக்கும். அதாவது, பேரண்டம் எங்கும் அது தோன்றி 13.8 பில்லியன் வருடங்கள் ஆகியிருக்கும்போது, அங்கு மட்டும் 700 மில்லியன் வருடங்கள் மட்டுமே ஆகியிருக்கும்.

என்ன புரிகிறதா?

https://m.facebook.com/story.php?story_fbid=2373660946034252&id=100001711084852

No comments:

Post a Comment