Monday, August 19, 2019

அத்திவரதர் பற்றிய பார்ப்பனர்களின் 108 கேள்விகள்!!!

Shri Ram Bhanam
2019-08-19

அத்திவரதர் பற்றிய 108 கேள்விகள்!!!
-----------------------------------------------------------

இந்தக்கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் கொவில் நிர்வாகமும் அரசும் ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களும் மடாதிபதிகளும் பதில் தரவேண்டும். இது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை அரசு சமர்ப்பிக்க வேண்டும்.  இப்பொழுதைக்கு இந்த கேள்விகள்.  வரும் பதிலைக் கொண்டு இன்னும் 1008 கேள்விகள் காத்திருக்கின்றது....

ஊடகங்களில் ஒன்று கூட இந்த ஒரு கேள்வியையாவது கேட்பார்களா?!

1) நம் வீட்டில் ஒரு திருமணம் நடந்தாலும் இன்ன தேதியில் இன்ன லக்னத்தில் இன்ன முஹூர்தத்தில் நடத்தப்படும் என்று பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்டு அந்த சமயத்தில்தான் நடைபெறுமல்லவா?  அப்படி இருக்க 29 ஜூன் மாதம் 2019ஆம் ஆண்டு அத்திவரதரை வெளியே எழுந்தருளப் பண்ணிவிட்டார்கள், ஆனால் 1 ஜூலை 2019ல்தான் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.  அப்படியானால், 29 ஜூன் 2019 அன்று பெருமாளை திருக்குளத்திலிருந்து வெளியே எழுந்தருளப்பண்ண யார் நாள் குறித்தார்கள்?  நாள் குறிப்பிட்ட ஆவணம் எங்கே?!!! அப்படி ஒரு ஆவணம் உண்டா?!

2) தமிழ் வருடப் பிறப்பு என்பது சித்திரை 1 அல்லவா?!   நம் நாட்டு வழக்கம் ஒருவர் பிறந்த நாள் கொண்டாடவேண்டும் என்றால் ஜன்ம நக்ஷத்திரத்தின் அடிப்படையிலேயே கொண்டாடுவோம் அல்லவா?  லௌகீக விஷயங்களுக்காக ஆங்கில நாளை குறிப்பிட்டு வெளிநாட்டவர் மோகத்தால் அந்த நாளை பர்த்டே என்று கொண்டாடினாலும், நாம் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் ஒருவர் ஜன்ம நக்ஷத்திரத்தின் அடிப்படையிலேயே அதை செய்யத் துவங்குவர் இல்லையா?!  பிறந்த நாளுக்கு கூட அது போல கட்டாயம் இல்லை என்றாலும் ஒருவர் இறப்பினை அந்த “திதி” கொண்டே அதற்கான சடங்குகளைச் செய்கிறோம் அல்லவா?!  அதேபோல கோவிலில் நடக்கும் உத்சவங்கள் மாதம்/திதிபடி நடக்கும், அல்லது மாதம்/நக்ஷத்தரத்தின் படி நடக்கும்.  அத்திவரதரை வெளியே எழுந்தருளப் பண்ணப்பட்டது எந்த விதத்தில் நடந்தது?!   இது ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையில் நடத்த பெரியோர்கள் சம்மதித்தனரா? 

3) கோவிலின் ஆஸ்தான ஜோதிடர் யார்?  அவர்தானே நாள் குறித்திருக்க வேண்டும்?!  அவர் குறித்துக் கொடுத்த அடிப்படையை ஏன் அவரிடமே கேட்கக் கூடாது?!

4) கோவிலின் விஷயங்கள் அந்த கோவிலின் பரம்பரை அறங்காவலர்கள் இஷ்டம் என்று சொன்னால், தாத்தாசாரியார் இந்த விஷயத்தில் என்ன எழுதிக் கொடுத்தார்?!  அந்த ஆவணம் எங்கே!! ஏன் தாத்தாசாரியார் எவரையும் எவரும் எதுவும் கேட்கவில்லை?!

5) தாத்தாசாரியார் இஷ்டம் என்றால் அங்கே வடகலை தெங்கலை சண்டையே இருக்க வாய்ப்பில்லைதானே.  அப்படியானால், அந்தக் கோவிலில் தாத்தாசாரியார் மட்டும் முடிவெடுப்பதில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றதல்லவா?!! அப்பொழுது மற்றவர்கள் உள்ளார்கள் என்பதும் தெளிவாகின்றது அல்லவா?  அவர்கள் அத்யாபகர்கள், ஆசார்யபுருஷர்கள், மடாதிபதிகள், அர்ச்சகர்கள் என்று கொண்டால், இவர்கள் அனைவரும் கலந்தல்லவா முடிவெடுத்திருக்க வேண்டும்?! 

a. அப்படி முடிவெடுத்திருந்தால் அந்த ஆவணம் எங்கே?!

b. என்று எப்பொழுது எங்கே இவர்கள் கூடி கலந்து முடிவெடுத்தனர்?! 

c. யார் யார் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்? 

d. எந்த அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டது?!

6) 48 நாட்கள் ஒரு மண்டலம் என்று வைத்துக் கொண்டால், ஒரு மண்டலம் ஒரு உத்ஸவம் நடக்கும் என்று எந்த உத்ஸவமும் நமக்கு தெரிந்தமட்டில் இல்லையே! விரதங்கள் வேண்டுமானால் ஒரு மண்டலம் வரை இருப்பதை கேட்டிருக்கிறோம். ஆனால் உத்ஸவங்கள் 10-11 நாட்கள் தானே நாம் இன்றும் காண்கிறோம். அப்படி இருக்க ஒரு மண்டலம் என்பது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?

7) இந்த வருடம் பெருமாளை எழுந்தருளப் பண்ணப்பட்ட நாள் 29.06.2019.  சேவைக்கு அனுமதிக்கப்பட்ட நாள் 01.07.2019.  48 நாட்கள் என்று கணக்கு வைத்தால், பெருமாள் 15.08.2019 அன்று மீண்டும் திருக்குளத்தில் எழுந்தருளி இருத்தல் வேண்டுமல்லவா?  அப்படி இருக்க 17.08.2019 அன்று உள்ளே எழுந்தருளப்பண்ண யார் முடிவு செய்தது. இது 50 நாட்களாக ஆகின்றதல்லவா?!

8) 02.07.1937, 02.07.1978 மற்றூம் 01.07.2019 ஆகிய தேதிகளில் அத்திவரதர் வெளியே எழுந்தருளப் பண்ணப்பட்டார் என்று மூன்றுகல்வேட்டுகள் கிடைக்கின்றன.  இந்தக் கல்வெட்டுகளில் 1937ல் எழுதப்பட்ட கல்வேட்டு ஏன் 16.08.2019 வரை வெளியே சொல்லப்படவில்லை?!  நீதிமன்றத்தில் முதல் முறையாக அரசு கொடுத்துள்ளது.  ஆனால் இந்தக் கல்வெட்டு பற்றி எந்த விவரங்களும் இந்திய தொல்லியல் துறையிடம் இல்லையே!! அதனால் இந்தக் கல்வெட்டு குறித்த கேள்விகள்

a. என்று எப்பொழுது யாரால் இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டது?

b. இந்தக் கல்வெட்டு எங்கு உள்ளது?

c. 1937ற்கு முன் எந்த கல்வெட்டும் கிடைக்காததால் அதற்கு முன் இந்த வைபவம் நடக்கவில்லையா?!

d. 1937ல் இருக்கும் கல்வெட்டில் எழுத்துக்கள் இன்று பொறிக்கப்பட்டாற் போல உள்ளதே!! கல்வெட்டில் பாயிண்டின் (இரண்டு கற்களுக்குள் இடையே பூச்சு) எப்பொழுது செய்யப்பட்டது? அந்தக் காலத்தில் கல்வெட்டுகளுக்கு இடையே பூச்சே செய்தது கிடையாதே!! பூச்சின் கனம் குறைந்தபக்ஷம் 1.5 அங்குலம் இருக்கும்.  அந்த பூச்சு இல்லை என்றால், அந்தக் கல்லிலேயே கடைசி வரியான “ந்தருளப்பண்ணப்பட்டார்” என்கிறது வந்திருக்குமே!! ஏன் அந்த வரி மட்டும் அடுத்த கல்லில் வந்தது?!

e. 1937ல் இப்படி ஒரு கல்வெட்டு இருந்ததை 1978ல் கண்டுபிடிக்கவில்லை என்றால், அதெப்படி 1979ல் செதுக்கப்பட்ட கல்வெட்டிலும் 1937ல் எழுதப்பட்டிருக்கும் அதே வாசகங்கள் வரும்?!

f. 1979ல் இருக்கும் கல்வெட்டில் கௌரவ தர்மகர்த்தா என்று தாத்தாசாரியார் குறிப்பிடப்பட்டுள்ளார். 1937 கல்வெட்டில் யார் பெயரும் இல்லை. 2019 கல்வெட்டில் தாத்தாசாரியார் பெயரோ தர்மகர்த்தா பெயரோ இல்லை.  1979ல் நிர்வாக தர்மகர்த்தா என்று கோவில் உதவி ஆணையர் பெயர் உள்ளது.  இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி கௌரவ தர்மகர்த்தா நிர்வாக தர்மகர்த்தா என்று எதுவும் இல்லை.  பரம்பறை தர்மகர்த்தா என்பவர்தான் சட்டப்படி கோவில் நிர்வாகம் செய்யவேண்டும்.  அப்படி இருக்க ஏன் 1979ல் இதை மாற்றி அடித்தனர்?!  கோவில் நிர்வாகத்தை அன்றே தாத்தாசாரியர்கள் பறிகொடுத்தனரா!?  சட்டப்படி இது குற்றமில்லையா?!

g. இன்று நம் தமிழக முதல்வர், கோவில் அர்ச்சகர்கள், வைணவப் பெரியோர்கள் மடாதிபதிகளின் தீர்மானப்படிதான் இந்த வைபவம் நடந்தது என்று செய்தியாளர்களிடம் கூறினாரல்லவா?  அப்படி இருக்க 2019 கல்வெட்டில், முதல்வர் வழிகாட்டுதலின் படி என்றும், அமைச்சர் ஆலோசனைப் படி என்றும் எழுதி உள்ளதால் இந்த வருடம் தாத்தாசாரியர்கள் கேட்கப்படவே இல்லை என்பது தெரிகிறது.  ஏன்?

h. ஆகமப் படி இந்த பெருமாள் வெளியே எழுந்தருளப்பண்ணப் படவில்லை என்று சொல்லி இப்படி நடப்பது மரபு என்று சொல்கின்றனர் அரசு தரப்பு அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆளும்கட்சி தலைவர்களும்.  அப்படி இருக்க, 1937 கல்வெட்டில் எந்த ஒருவர் பெயரும் குறிப்பிடப்படவில்ல்லை.  1979 கல்வெட்டில் தாத்தாசாரியார் பெயரும் செயல் அலுவலர் பெயரும் கல்வெட்டை பொறித்தவர் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.  2019ல் முதலமைச்சர், அமைச்சர், மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கல்வெட்டு பொறித்தவர்கள் பெயர்கள் உள்ளன.   இந்த முடிவை எடுத்தவர் யார்?  தாத்தாசாரியாரா அல்லது அரசா?  இதில் ஏன் மரபு கடைபிடிக்கப் படவில்லை?

i. தொல்லியல் துறை 1979ல் ஏன் இந்த இடத்தை பார்வையிடவில்லை? 2019ல் கூட அவர்கள் இங்கு கல்வெட்டுகள் குறித்து ஆராய்ச்சி செய்தாற்போல தெரியவில்லையே!! ஏன்?  பெருமாள் எழுந்துவந்ததால் அரசு தூங்கிவிட்டதா?!

j. கல்வெட்டுகளில் பெருமாள் ஆராதிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்களே!! எந்த ஆகம முறைப்படி இந்த பெருமாள் ஆராதிக்கப்பட்டார் என்று இன்றைய கோவில் அர்ச்சகர்கள் சொல்வார்களா?!

9) ஆகம முறைப்படி இந்தக் கோவிலில் இந்த வைபவம் நடக்கவில்லை என்று சொல்லிவிட்டால், அந்த முடிவை யார் எடுத்தார்கள்?! அரசா அல்லது பரம்பறை அறங்காவலர்களா அல்லது அத்யாபகர்களா, அல்லது ஆசார்ய புருஷர்களா அல்லது மடாதிபதிகளா அல்லது வேறு யாராவதா?!!  அவர்களுக்கு இப்படி ஒரு முடிவை எடுக்க யார் அதிகாரம் கொடுத்தார்கள்?  எந்த அடிப்படையில் அவருக்கு இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டது?!

10) ஆகம முறைப்படி ஒரு கோவிலில் ஒரு செயல் நடைபெற தேவையில்லை என்பதற்கு எங்கு ப்ரமாணம் உள்ளது? வைணவ அசார்யர்கள், மடாதிபதிகள், வித்வான்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கின்ற்னாரா?!  அப்படி ஒப்புதல் அளித்தால் அந்த ஆவணம் எங்கே!!

11) பெருமாள் திருமேனியில் இரண்டு திருத்தோள்களிலும் தகடுகள் பதியப்பட்டுள்ளது நன்கு தெரிகின்றதே!! அந்த திருத்தோள்களில் என்ன பின்னம் ஏற்பட்டுள்ளது?!

12) 3 திருக்கைகளிலும் பின்னங்கள் தெரிகின்றனவே, அதிலும் க்ளாம்ப் போன்ற அமைப்புகள் தெரிகின்றனவே!! அங்கு எல்லாம் என்ன பின்னம் ஏற்பட்டுள்ளது?

13) பின்னங்கள் ஏற்பட்ட பகுதி, மஹாங்கமா, உபாங்கமா, ப்ரத்யங்கமா? 

14) பின்னங்கள் ஏற்பட்ட பகுதி மஹாங்கம் என்றால் அந்தக் கோவிலின் ஆகமம் அது குறித்து என்ன சொல்கிறது? 

15) பின்னங்கள் ஏற்பட்ட பகுதி உபாங்கம்/ப்ரத்யங்கம் என்றால் அது குறித்து அந்தக் கோவிலின் ஆகமம் என்ன சொல்கிறது?

16) பாஞ்சராத்திர ஆகம முறைப்படி நடக்கும் இந்தக் கோவிலில் அந்த பாஞ்சராத்திர ஆகமத்தின் எந்த ஸம்ஹிதைப் படி இந்த கோவில் நடைபெறுகிறது?

17) அந்த ஸம்ஹிதையில் ஒரு மண்டலகாலம் பெருமாளை வெளியே எழுதருளப்பண்ணப் படவேண்டும் என்று கூறியுள்ளதா?! அப்படி என்றால் அந்த ப்ரமாணம் என்ன?

18) அந்த ஸம்ஹிதையில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பெருமாளை வெளியே எழுந்தருளப் பண்ணப் படவேண்டும் என்று எழுதி உள்ளதா?  அப்படி இருந்தால் அதன் நகல்

19) பின்னம் ப்ரத்யங்கம் அல்லது உபாங்கத்தில் ஏற்பட்டிருந்தால் ஆகமம் அந்த விக்ரஹத்தினைப் பற்றி என்ன சொல்கிறது?  பூஜிக்கலாமா?

20) அப்படி பூஜிக்கலாம் என்றால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  விக்ரஹத்திற்கு எப்படி அந்த குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளதா?

21) அப்படி சொல்லப்பட்டபடி சரி செய்யப்பட்டுள்ளதா?  அதன் படிதான் இரண்டு திருத்தோள்களிலும் மூன்று திருக்கைகளிலும் இரும்பு பட்டைகள் வைக்கபப்ட்டுள்ளனவா?

22) உபாங்கம் ப்ரத்யங்கம் பின்னப்பட்டிருந்து அது ஆகமப்படி சரிசெய்யப் பட்டிருந்தால் ஏன் அந்த விக்ரஹத்தை ஆகமம் சொன்னபடி புனப்ரதிஷ்டை செய்யவில்லை?

23) ஒருவேளை பழைய விக்ரஹம் புதைக்கப்பட்டது தெரியவில்லை என்றால் அது கிடைத்ததும் ஆகம விதிகளின் படி பழைய விக்ரஹத்திற்கு புனிதத்தன்மை எப்படி கொடுக்கபட்டது? என்னென்ன சடங்குகள் செய்யப்பட்டன?  அதாவது புதிய விக்ரஹத்திற்கான சடங்குகளா அல்லது பழைய விக்ரஹத்திற்கான சடங்குகளா?!

24) பழைய விக்ரஹம் ஒருவேளை களவு போயிருப்பின் அந்தக் கோவிலின் ஆசார்யர்கள் ஆகமப்படி அந்த விக்ரஹம் கிடைத்த பின்பு ஏன் அதை புனப்ரதிஷ்டை செய்யவில்லை!! எந்த காரணத்தால் பழைய இடத்தில் மீண்டும் எழுதருளப் பண்ணப்பட்டார்?

25) வேறு ஏதேனும் கல்வெட்டுகள் கிடைத்தனவா?  அப்படி கிடைத்திருந்தால் அவை எங்கே?

26) கோவிலில் தாயார் சன்னதி பின்னால் மற்றும் த்வஜஸ்தம்பத்தின் கீழ் கல்வெட்டுகள் கிடைக்கின்றன என்று சொல்கிறார்களே!! அவை எங்கே?!  அவற்றில் என்ன சொல்லப் பட்டுள்ளன?!

27) 1487ஆம் வருடம் பெருமாள் புனப்ப்ரதிஷ்டை செய்யப்பட்டார் என்று அந்தக் கல்வெட்டில் உள்ளதா?

28) இஸ்லாமியர் படையெடுப்பிற்கு பாதுகாக்க பெருமாள் தண்ணீரில் வைக்கப்பட்டார் என்று சொல்லபடுகிறதே!! எந்த வருடம் எந்த அரசனால் கோவில் தாக்கப்பட்டது என்பதற்கு கல்வெட்டு ஆதாரம் உண்டா?!

29) உத்ஸவ மூர்த்தி உடையார் பாளையம் சென்றார் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் உள்ளதா?  அது எங்கே!! அதில் என்ன எழுதி உள்ளது?!  எந்த வருடம் உடையார் பாளையம் சென்றார்?

30) பெருமாள் எந்த வருடம் உடையார்பாளையத்திலிருந்து திரும்ப வந்தார்?!

31) பெருமாள் திரும்ப வந்ததற்கான கல்வெட்டு சான்று உள்ளதா?  அதில் மூலமூர்த்தி பற்றி என்ன எழுதப்பட்டுள்ளது?!

32) பெருமாள் யார் கனவிலோ வந்ததாகச் சொல்கின்றனரே!! அதனால்தான் அவர் வெளியே 40 வருடங்களுக்கு ஒரு முறை 48 நாட்கள் அருள்பாலிக்கின்றார் என்று சொல்லப் படுகின்றதே!! அந்த வரலாறு எங்கு உள்ளது? ஸ்தல புராணத்திலா? 

33) இது குறித்து ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களின் நூல்கள் எதிலாவது குறிப்புகள் உள்ளனவா?  காஞ்சிபுரத்தில் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமிகள் ஸ்ரீவைஷ்ணவ நூல்கள் பல இயற்றியுள்ளாரே!! ஏதேனும் ஒரு நூலில் இது பற்றி அவர் குறிப்பிட்டுள்ளாரா?

34) காஞ்சி ப்ரதிவாதி பயங்கரம் அண்ணாஸ்வாமி வம்ஸத்தினர் இது குறித்து என்ன கருத்து தெரிவிக்கின்றனர்?  அவர்களை ஏன் யாரும் பேட்டி எடுக்கவில்லை?!

35) காஞ்சிபுரத்தில் அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி அத்திவரதர் குறித்து பல பேட்டிகள் கொடுத்துள்ளார். ஆனால் இந்த பெருமாளைப் பற்றி எந்த குறிப்பும் இதற்கு முன் இருந்ததாக அவர் தெரிவிக்கவில்லை.  அவர் வம்ஸத்தினர் இது குறித்து என்ன சொல்கின்றனர்?!

36) புத்தூர் வக்கீல் ஸ்வாமி ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தினைக் குறித்து பல நூல்கள் எழுதி உள்ளார்.  அவர் அத்திவரதர் குறித்து எழுதியதாக ஏதேனும் ஒரு வரியாவது உள்ளதா? 

37) பகவத் ராமாநுஜர் 74 சிம்ஹாசநாதிபதிகளாக ஆசார்ய புருஷர்களை நியமித்தார்.  அதேபோல பட மடங்களை நிர்மாணம் செய்து மடாதிபதிகளையும் நியமித்தார்.  அதில் ஏதேனும் ஒரே ஒரு ஆசார்யர் அத்தி வரதர் குறித்து ஏதேனும் எழுதி உள்ளாரா?
 
38) அந்த 74 சிம்ஹாசநாதிபதிகளையோ அல்லது மடாதிபதிகளையோ ஏதாவது ஒரு முறையாவது எவரேனும் அணுகி இந்த வைபவம் குறித்து அவர்கள் கருத்துகளை சொல்லவேண்டும் என்று கேட்டுள்ளனரா?!

39) ஶாஸ்திர ஸம்பிரதாயத்தினைக் குறித்த சந்தேகங்களை ஸ்ரீவைஷ்னவ ஸம்பிரதாயமும் மற்ற சநாதன ஸம்பிரதாயமும் “ஸதஸ்” என்னும் முறைப்படியே விவாதித்து தீர்வு கண்டுள்ளது என்று பல நூல்களிலும் கல்வெட்டுகளிலும் காணக் கிடைக்கின்றன. பகவத் ராமாநுஜருக்கே “வாதில் வென்றான்” என்று ஒரு பெயரும் ராமாநுஜ நூற்றந்தாதி என்னும் நூலிலிருந்து கிடைக்கின்றது.   அப்படி இருக்க, ஊரே சர்ச்சையில் ஈடுபடும் பொழுது இன்றைய வைணவப் பெரியோர்கள் ஏன் ஒன்று சேர்ந்து ஸதஸ் நடத்தி ஒரு தீர்மானம் செய்யவில்லை?!

40) அரசுக்கு கோவிலின் உள்துறை விவகாரங்களில், அதாவது உத்ஸவ, வழிபாட்டு முறைகளில் எந்த விதத்திலும் தலையீடு இருக்க முடியாது என்று நாட்டின் சட்டம் சொல்லும் பொழுது 2019 கல்வெட்டில், முதல்வர் வழிகாட்டுதல்படி அமைச்சர் ஆலோசனைப் படி என்ற எழுத்துக்கள் ஏன் பொறிக்கப்பட்டன?  அப்படியானால் இவர்கள் தலையீடு இருந்தனவா?!  இது சட்டவிரோதம் இல்லையா?

41) 40 வருடத்திற்கு ஒரு முறை இந்த பெருமாள் வெளியே எழுந்தருளப் பண்ணப் படவேண்டும் என்று அந்த கோவிலுக்கும் அரசுக்கும் தெரியுமல்லவா?   அப்படி இருக்க இது குறித்து முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று யார் முதலில் அதிகார பூர்வமாக எவருக்கு கடிதம் எழுதினார்?  அந்த கடிதத்தின் நகல் எங்கே?!

42) 2019ல் எந்த வருடம் இந்த வைபவத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற துவங்கின?  இதற்காக ஒரு குழு அரசால் அமைக்கப் பட்டதா?  அது என்று எப்பொழுது யார் யார் கொண்டு அமைக்கப்பட்டது? அதற்கான அரசாணை எங்கே?!  அந்தக் குழு தலைவர் யார்?

43) எந்த எந்த நாட்களில் இந்தக் குழு கூடி முடிவுகள் எடுத்தன?  அதற்கான ஆவணங்கள் எங்கே?!

44) குழு ஒன்று ஏற்பட்டிருந்தால், அந்தக் குழுவின் பறிந்துரைகள் என்னென்ன?!  அது குறித்த ஏற்பாடுகள் என்று துவங்கப்பட்டன?!

45) மாவட்ட ஆட்சியருக்கும் காவல் துறையினருக்கும் இந்த முன்னேற்பாடுகளில் என்ன பங்கு இருந்தது? 

46) அடிப்படை வசதிகள் என்று என்னென்ன தீர்மானிக்கப்பட்டு எவ்வளவு அளவு தேவை என்று திட்டமிடப்பட்டது? அதற்கான ஆவணங்கள் ஏதேனும் உள்ளனவா? 

47) 1.7.2019 முதல் 17.8.2019 வரை ஒவ்வொரு நாளும் எத்தனை போலீசார், துப்புறவு தொழிலாளர்கள் பணியில் நியமனம் செய்யப்பட்டனர்?

48) மாடவீதியில் வசிக்கும் குடிமக்களுக்கு கூட்டத்திலிருந்து அவர்களை வேறுபடுத்தி அவர்கள் வீட்டிற்கு சென்றுவர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன?

49) மாடவீதிகளில் வாழும் மக்கள் அவர்கள் வீட்டு வாகனங்களை நிறுத்த என்ன ஏற்பாடுகள் எங்கு செய்யப்பட்டன?

50) பெருமாளை சில நாள் சயன திருக்கோலத்திலும் சில நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் எழுந்தருளப்பண்ண படவேண்டும் என்ற முடிவு யாருடையது?

51) எத்தனை நாள் சயனம் என்றும் எத்தனை நாள் நின்ற திருக்கோலம் என்றும் யார் முடிவு செய்தனர்?
 
52) 1937 மற்றும் 1979ல் எத்தனை நாட்கள் சயன திருக்கோலம் மற்றும் எத்தனை நாட்கள் நின்ற திருக்கோலம்?

53) வந்த பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வசதிகளுக்கு அரசு என்ன ஏற்பாடு செய்திருந்தது? அந்த திட்டத்தின் ஆவண நகலை ஏன் அரசு வெளியிடவில்லை?

54) 1.7.2019 முதல் கோவில் திருக்குளத்திற்கு யாரையும் அனுமதிக்கவில்லை!!! கடந்த முறை, அதாவது 1979ல் அங்ஙனம் இல்லை.  எல்லோரும் மூலவரையும் கூட தரிசனம் செய்தனர்.  அப்படி இருக்க, இந்த வருடம் மூலவர், தாயார் மற்றும் இதர சன்னதிக்கள் மற்றும் திருக்குளத்திற்கு ஏன் எவரையும் அனுமதிக்கப்படவில்லை?!  இந்த முடிவை பரம்பரை அறங்காவலர் எடுத்தார்களா, அல்லது அரசு எடுத்ததா?

55) அரசு இப்படிப்பட்ட முடிவை எடுக்க சட்டம் இடம் கொடுக்கின்றதா?!  வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாக இது அமையவில்லையா?!  இது அடிப்படை உரிமை மீறல் இல்லையா?!

56) 2019ல் என்று முதல் திருக்குளம் தூர்வாரப் பட்டது?!

57) 2019ல் கோவில் திருக்குளம் தூர்வாரப் படவேண்டும் என்ற முடிவை யார் எடுத்தது?!

58) தூர்வாரும் பணியை யார் மூலம் செயல்படுத்தினர்?  தன்னார்வலர்கள் மூலமாகவா, அல்லது பொதுப் பணித்துறை மூலமாகவா அல்லது உபயதாரர்கள் மூலமாகவா அல்லது நிருவனங்கள் மூலமாகவா?!

59) தன்னார்வலர்கள் என்றால் அப்படி தன்னார்வலர்களை யார் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்தனர்?  இதற்கான விளம்பரம் ஏதேனும் இருந்ததா?

60) எந்த தன்னார்வத்தொண்டு நிருவனங்கள் இந்த தூர்வாரும் பணியைச் செய்தன? எத்தனை பேர் இருந்தனர்?

61) கனரக வாகனம் உபயோகப்படுத்தப் பட்டதா?? அப்படி உபயோகப் படுத்தி இருந்தால் அதற்கான செலவை யார் ஏற்றனர்?!

62) உபயதாரர்கள் மூலம் இந்த தூர்வாரும் பணி நடைபெற்றது என்றால், யார் யார் உபயதாரர்கள்?  அவர்களுக்கு யார் உபயம் செய்ய உரிமை அளித்தார்கள்? என்று உபயம் தேவை என்று எதில் விளம்பரம் செய்தார்கள்?!  ஏன் ஒரு சிலருக்கு மட்டும் அதில் உரிமை கொடுக்கப்பட்டது?!  எந்த அடிப்படையில்?

63) தூர்வார பொதுப்பணித்துறை நியமிக்கப்பட்டிருந்தால் அதற்கான அரசாணை எங்கே?!

64) தூர்வார தனியார் நிருவனங்கள் நியமிக்கப்பட்டிருந்தால் அதற்கான டெண்டர் விடப்பட்டதா?

65) L&T தூர்வாரும் பணியை கனராக வாகனங்கள் மூலம் செய்தனர் என்பது உண்மையா?

66) தூர்வாருவது எந்த தொழில் நுட்பத்தின் மூலம் செய்யப்பட்டது?!

67) திருக்குளத்திலிருந்து எவ்வளவு எடை உள்ள கழிவுகள் அகற்றப்பட்டன?!

68) திருக்குளத்தில் இருந்த மீன்கள் என்னவாகின?

69) திருக்குளத்திலிருந்து நீரை வெளியே எடுத்தது யார்?  பொதுப்பணிதுறையா, தனியாரா அல்லது தன்னார்வத்தொண்டர்களா?

70) என்ன தொழில் நுட்பம் கொண்டு நீர் வெளியே எடுட்க்கப்பட்டன?

71) திருக்குளத்தில் இருந்த மீன்களின் அளவு எவ்வளவு?!  அவை மீண்டும் திருக்குளத்தில் விடப்படுமா?

72) திருக்குளத்தில் இருந்த மீன்களை ஏலம் விட்டிருந்தால் அதற்கான டெண்டர், எவ்வளவு பணம் கிடைத்தது யாருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது முதலிய விவரங்கள் எங்கே?!

73) திருக்குளத்தில் பெருமாள் இருந்தமையால், அங்கே தூர்வாரியது அகழ்வாராய்ச்சியாக கருதப்படவேண்டும்.  ஏனென்றால் மிகவும் தொன்மையான பெருமாளை உள்ளே எழுந்தருளப் பண்ணியிருந்தனர்.  அதுவும் அன்னிய படையினர் தாக்குதலுக்கு பயந்து ஒளித்து வைத்ததால் வேறு என்னென்ன அங்கு புதையுண்டு இருந்தன என்பதை அகழ்வாராய்ச்சி செய்தால் அல்லது தெரியவராது. என்னென்ன தொன்மையான பொருட்கள் கிடைத்தன?

74) இந்த தூர்வாரும் பணி/அகழ்வாராய்ச்சி பணியை தொல்லியல் துறை வைத்து ஏன் செய்யவில்லை?

75) குளத்தில் அழுக்குகள் மட்டும்தான் அகற்றப்பட்டது என்பதற்கான ஆதாரம் எங்கே?

76) 48 நாட்களாக தூர்வார அங்கு அவ்வளவு அழுக்கு இருந்தனவா?  அதற்கான அறிக்கைகளை ஏன் வெளிப்படைத்தன்மையோடு அரசு வெளியிடவில்லை?

77) திருக்கோயிலில் முதல் நாள் முதலே தூர் வாரும் பணி தொடங்கி இருந்தால் ஏன் 45 நாட்கள் கழித்து அங்கு இருந்த கல்வெட்டை பற்றி வெளியே செய்தி வந்தது?

78) பக்தர்கள் தரிசிக்க வரும்பொழுது அவர்களில் பாகுபாடுகள் உண்டாக்கும்படி டோனர் பாஸ், விஐபி பாஸ், விவிஐபி பாஸ் என்றும் கட்டண தரிசனம் என்றும் தீர்மானித்தது யார்?

79) விஐபி, விவிஐபி என்று எதை வைத்து நிர்ணயம் செய்யப்படும் என்பதற்கான ஶரத்துக்கள் உள்ளனவா?

80) டோனர் பாஸ் என்றால் என்ன? எந்த உபயம் செய்தவர்களுக்காக டோனர் பாஸ்?

81) ஒரு நாளைக்கு எத்தனை டோனர் பாஸ் கொடுக்கப்பட்டது? அவர்கள் உபயமளித்த பணத்தின் அளவு என்ன? 

82) ஒருவர் டோனராக ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எங்கு யாரால் தீர்மானிக்கப்பட்டது?

83) ஒரு நாளைக்கு எத்தனை விஐபி பாஸ்கள் கொடுக்கப்பட்டன?

84) ஒரு நாளைக்கு எத்தனை விவிஐபி பாஸ்கள் கொடுக்கப்பட்டன?

85) ஒரு நாளைக்கு எத்தனை கட்டண தரிசன டிக்கட்டுகள் விற்கப்பட்டன?

86) கட்டண தரிசனத்தில் மொத்தம் எத்தனை பேர் தரிசனம் செய்தார்கள்? 

87) கட்டண தரிசனத்தில் வந்த வருமானம் எவ்வளவு?

88) அத்திவரதருக்கு தினமும் ஒரு பட்டு வஸ்திரம் யாரால் கொடுக்கப்பட்டது?

89) அந்த பட்டுவஸ்திரங்கள் இப்பொழுது எங்கு உள்ளன?

90) அத்திவரதருக்கு அணிவிக்கப்பட்ட க்ரீடம் மற்றும் மற்ற கவசங்களை யார் கொடுத்தார்கள்?

91) அத்திவரதருக்கு அணிவிக்கப்பட்ட க்ரீடம் மற்றும் கவசங்கள் தங்கமா? அதன் மதிப்பு என்ன?

92) அத்திவரதருக்கு அணிவிக்கப்பட்ட ஆபரணங்கள் யார் கொடுத்தது?  அதன் மதிப்பு என்ன?

93) மூலவருடைய க்ரீடம் மற்றும் கவசங்களை அத்திவரதருக்கு அணிவித்திருந்தால் அதற்கான தீர்மானத்தை யார் செய்தார்கள்?

94) 48 நாட்களுக்கு மூலவர் என்ன க்ரீடம் மற்றூம் கவசங்கள் சாற்றிக் கொண்டு இருந்தார்?

95) இந்த வைபவத்தின் இடையில் ஆண்டாளின் உத்ஸவம் 11 நாட்கள் வரும் என்பது முன்னமே தெரிந்த ஒன்று.  அப்படி இருக்க அந்த உத்ஸவம் நடந்ததா?  நடந்ததென்றால், அப்பொழுது ஏன் பொதுமக்கள் அந்த உத்ஸவத்தில் பங்கு கொள்ள அனுமதிக்கப் படவில்லை?!

96) கல்வெட்டுகளில் அத்திவரதர் ஆராதிக்கப்பட்டார் என்று எழுதி உள்ளது!! என்ன ஆராதனை நடந்தது?!  தினமும் எவ்வளவு அளவு திருவமுது (நைவேத்தியம்) செய்யப்பட்டது.

97) வரும் பக்தர்களுக்கு துளசி, தீர்த்தம் சடாரி ஏன் சாதிக்கபடவில்லை? இந்த முடிவை யார் எடுத்தனர்?!  இதற்கான தீர்மானம் எங்கே?!

98) அத்திவரதருக்கு தினமும் செய்யப்பட்ட அலங்காரத்திற்கான பூக்கள் மற்றும் மாலைகள் யார் கொடுத்தனர். அதற்காக ஆன செலவு என்ன?

99) இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி ஒரு விசேஷத்திற்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டால் Concurrent Audit (உடனுக்குடன் தணிக்கை) நடத்தப்படவேண்டும் என்று உள்ளது.  அப்படிப்பட்ட தணிக்கை நடந்ததா?!

100) அநந்தசரசில் எப்பொழுது நீர் நிறப்பப்படும்?!

101) அந்த மண்டபத்தினுள் எல்லா செய்தியாளர்களையும் ஊடகங்களையும் அனுமதிக்க எந்த ஆகமத்தில் இடம் உள்ளது.  அந்த இடமும் ஒரு கர்பக்ருஹம் போலல்லவா?!

102) நீதிமன்றம் தூர்வாருவது குறித்த வழக்கில் பல கேள்விகள் கேட்டது. அதற்கான பதில்கள் எங்கே?!!

103) இப்பொழுது வெட்டப்பட்ட கல்வெட்டு எங்கே பொறுத்தப்பட இருக்கிறது?

104) தொன்மையான கோவிலில் புதியதான ஒரு கல்வெட்டோ கட்டுமானமோ செய்வது சட்டவிரோதமான செயலல்லவா!! அப்படி இருக்க இந்த கல்வெட்டை எந்த அதிகாரத்தில் யார் வைக்க முடிவு செய்தார்கள்?!

105) இந்த 48 நாட்களில் சிலர் கோவிலில் இறந்து போனார்கள். அதற்கான ப்ராயச்சித்தம் என்ன என்ன செய்யப்பட்டது?

106) பலர் மின்சார தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்று செய்தி கிடைத்தது. அவர்கள் என்ன ஆனார்கள்?!  அவர்களுக்கான பாதிப்பு என்ன?  அவர்களில் ஒருவரை கூட ஏன் ஊடகங்கள் பேட்டி எடுக்கவில்லை?!

107) நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டபோது, ஸம்பிரதாய விஷயத்தில் எப்படி அரசால் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது?! இதை வழக்கு தொடுத்தவர் எதிர்க்காமல் இருந்ததற்கு என்ன காரணம்?!

108) ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், க்ருஷ்ணப்ப்ரேமி மற்றும் திருக்கோவிலூர் ஜீயர் அவர்களின் வேண்டுகோளை பலருக்கு கொடுப்பதாகவும், எல்லா மடாதிபதிகளையும் ஆசார்ய புருஷர்களையும் ஒன்று சேர்த்து முடிவு செய்வதாகவும் பேட்டி அளித்தாரே!! அது என்ன ஆயிற்று?!

கேள்விகள் தொடரும்...

ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!

https://m.facebook.com/story.php?story_fbid=2739273439435797&id=2489874681042342

No comments:

Post a Comment