Shah Umari
2019-08-19
ஈமான் என்பது தர்க்கத்தின்மூலமாக உருவாகக்கூடிய ஒன்றல்ல. தர்க்கத்தின்மூலமாக நாம் யாரிடமும் ஈமானை உருவாக்கிவிடவும் முடியாது. தர்க்கம் தகர்க்கும் இயல்பைக் கொண்டது. அதன்மூலமாக அடித்தளமற்ற மேம்போக்கான நம்பிக்கைகள் தகர்க்கப்படுகின்றன. அது எந்தவொன்றிலும் நிலைபெறாத முடிவிலி. முடிவேயில்லாமல் சென்று கொண்டேயிருக்கும்.
ஈமான் என்பது நமக்குள் இயல்பாகவே இருக்கக்கூடிய ஓர் உணர்வுநிலை. உள்ளம் அதனை உணரவேண்டுமெனில் முதலில் அதற்காக அது தயாராக வேண்டும். உள்ளத்தை மிகைத்திருக்கும் கர்வமும் வெறுப்பும் காழ்ப்பும் மற்றும் இன்னபிற தீய இச்சைகளும் அதற்குத் தடையாக இருக்கும் தடைக்கற்கள்.
தொடர்ந்து வரக்கூடிய துன்பங்கள் இந்த உணர்வுகளின் ஆதிக்கத்தை மழுங்கடிக்கச் செய்கின்றன. அதனால்தான் துன்பத்தில் இருப்பவன் எவ்வித புறத் தூண்டலும் இல்லாமல் இயல்பாகவே இறைவனின் பக்கம் திரும்புகிறான். அவனிடமே அடைக்கலம் தேடுகிறான்.
தர்க்கத்தைக் கொண்டு வெறுப்பைத் தவிர நாம் வேறு எதையும் சம்பாதிக்க முடியாது. அது இயல்பாவே இரு தரப்பினரின் உள்ளங்களிலும் காழ்ப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. அதன்மூலமாக எதிர்த்திரப்பினரை நாம் வாயடைக்கச் செய்யலாம். ஆனால் அதன்மூலம் அவர்களின் உள்ளங்களில் நமக்கு எதிராகத் தோன்றும் காழ்ப்பிலிருந்து நாம் தப்ப முடியாது.
தர்க்கத்தைக் கொண்டு மதப்பிரச்சாரம் செய்வது ஆபத்தானது. அதனால் நன்மைகளைவிட தீமைகளே அதிகம். அது இனவெறி என்னும் நெருப்பை கொழுந்துவிட்டு எரியச் செய்யும். மற்றவர்களின் உள்ளத்தில் மாற்றம் நிகழ வேண்டும் என்று நாம் விரும்பினால் முதலில் அவர்களின் உள்ளத்தை வென்றெடுக்கும் வழிமுறையை நாம் அறிய வேண்டும்.
No comments:
Post a Comment