Friday, November 17, 2017

தடுப்பூசி மீதான தாக்குதல்

Dr. பூவண்ணன் கணபதி
Via Facebook
2017-11-18

தடுப்பூசி

  மீண்டும் தடுப்பூசி மீதான தாக்குதல் களை கட்ட துவங்கி இருக்கிறது.முதலில் இயக்குனர்  தோழர் கோபி அவர்களுக்கு படம் வெற்றி பெற்றதற்கான வாழ்த்துக்கள்.மத நமபிக்கை போல ஒவ்வொரு மனிதருக்கும் பல்வேறு நம்பிக்கைகள் இருப்பதை நாம் மறுக்க இயலாது.அது அவரவர் தனி உரிமை.அதனை பரப்பும் உரிமையும் முழுமையாக உண்டு என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

  தடுப்பூசி கூடாது,ரத்தம் ஏற்றி கொள்வது பெரும் பாவம்,பெரும் குற்றம்,அறுவை சிகிச்சை அக்கிரமம் என்று சொல்லும்,எழுதும்,படம் எடுக்கும் உரிமையை யாரும் தடை செய்வதை,அதனை குற்றமாக்கி தண்டிப்பதை விட அந்த கருத்துக்கு அதிக நன்மையை செய்து விட முடியாது.பல நண்பர்கள்  இதனை போன்ற மாற்று கருத்துக்களை கூறுபவர்களை தண்டிக்க வேண்டும் இன்று எண்ணுவது,எழுதுவது தவறான ஒன்று.யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து மாற்று கருத்து தண்டனைக்குரிய குற்றமாக மாறி விடும் அபாயம் மறக்க கூடாத ஒன்று

     அண்ணலை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளும் ஆற்றலை தூண்டியது அருண் ஷோரி எழுதிய ஒர்ஷிப்பிங் பால்ஸ் காட்ஸ் புத்தகம் தான்.அதற்கு மறுப்பு கூட்டங்களை ,மறுப்புக்களை,அண்ணலின் கருத்துக்களின் ஆழத்தை அறிய வைக்கும் செயல்களை  திராவிட கழகம் செய்தது.அதே போல பெரியார் புத்தகங்கள் பல இருந்தாலும் எடுத்து தீவிரமாக படித்து மறுப்புரை எழுத,இன்னும் புரிந்து கொள்ள உதவியவர் தோழர் அனந்தகிருஷ்ணன் அவர்கள் தான்.

   எந்த துறையாக இருந்தாலும் கேள்விகளின் முக்கியத்துவம் அதிகம்.அதனால் தடுப்பூசி மீதான கேள்விகளை நல்ல மாற்றமாக தான் நான் பார்க்கிறேன்.என்னிடம் தினமும் வரும் நோயாளிகளில் ஐம்பதில் ஒருவராவது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ,உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் நான் தருவதால் இங்கு வைத்து கொள்ளுங்கள்,தோன்றும் போது படியுங்கள்,உங்கள் குடும்பத்துக்காக பிரார்த்திக்கிறேன் என்று பிரார்த்தனை செய்பவராக இருப்பார்.அவர்களின் தீவிர மதப்பற்று,அதனை எடுத்து செல்ல செய்யும் முயற்சிகள் மிகவும் வியப்பளிக்கும்.

  இப்போது அவர்களை மிஞ்சும் மிஷனரிகளாக ஹீலர் உரைகளை கேட்டீர்களா?தடுப்பூசி எவ்வளவு பெரிய சதி தெரியுமா ?சைவமே சிறந்தது என்று கூறும் மக்கள் வருகிறார்கள்.பல மாதங்களாக,வருடங்களாக இருந்த நோய்,எந்த மருந்திலும் தீராத நோய் குறிப்பிட்ட வாழ்வியல்  மாற்றங்களினால் ,உணவினால் ,சொல்லும் மந்திரங்களினால் ,கேட்கும்  ஹீலர் சொற்பொழிவுகளினால் ஓடி விட்டது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

   மத நம்பிக்கையை மிஞ்சும் மூட நம்பிக்கையாக உணவே மருந்து,பாரம்பரிய உணவே,கக்கா போகும் முறையே ,சித்தர் சொன்ன வழிகளே சர்வரோக நிவாரணி என்று நம்புகிறார்கள்.இந்த நம்பிக்கை மதம்,சாதி,இனம் ,மொழி,கடவுள் மறுப்பாளர்,கம்யூனிஸ்ட் என்று அனைத்து குழுக்களை சார்ந்த மக்களிடமும் இருக்கிறது.நவீன மருத்துவம் படித்த மருத்துவர்களும் இதில் அடக்கம்

  சைவம்,மண்ணின் மருத்துவம்,பாரம்பரியம் ,விவசாயம் என இவை அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை.இவை அனைத்துமே சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்தது தான் ,பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தது தான் என்ற எளிய உண்மையை மீண்டும் மீண்டும் பதிய வைத்தால் இவர்களில் பலர் விஞ்ஞான வளர்ச்சி,அறிவியல் ஆராய்ச்சி ,நிரூபணம் என்பதனை ஏற்று கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்

எதனால் தடுப்பூசி தவறு என்கிறார்கள் என்ற கேள்வியில் இருந்து ஆரம்பிக்கலாம் ?

  உலகின் எந்த பகுதியாக இருந்தாலும் அங்கு வாழ்ந்த மக்கள் இடையே வருமுன் காப்போம் என்பதின் மீது பிடிப்பு இருந்தது.நம்பிக்கை இருந்தது.அதற்காக  பல்வேறு முயற்சிகளை தொடர்ச்சியாக எடுத்து வந்திருக்கின்றனர்.காது குத்துதல்,மொட்டை அடித்தல் ,தாயத்து கட்டி கொள்ளுதல்,அரணா கயிறு கட்டுதல் ,மசூதிக்கு சென்று ஓதி விடுதல்,சுற்றி போடுதல் ,தீட்டு கழித்தல் ,குறிப்பிட்ட வயதில்,குறிப்பிட்ட காலத்தில் ,கர்ப்பமாக இருக்கும் போது ,கர்ப்பம் ஆக குறிப்பிட்ட உணவை தவிர்த்தல்,எடுத்து கொள்ளுதல் என எல்லாமே வருமுன் காப்போம் எனும் தடுப்பூசிகள் தான்.

விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து இதில் பயன் இருந்தால் அவை உலகெங்கும் பின்பற்றப்படுகின்றன.இவை மூட நம்பிக்கைகள்,இதனால் தீங்கு தான் அதிகம் என்றால் அவை பரவாமல் அதனை மதம்,சாதி சார்ந்த பழக்கமாக என்னும் குழுவிடம் மட்டுமே தங்கி விடும் சடங்காக ,செயலாக மாறி விடுகின்றன

  அம்மை நோய் ஏன் பால் கறக்கும் ,மாடு வளர்க்கும் தொழில் செய்பவர் இடையே வருவதில்லை என்பதை ஆராய்ந்ததில் உருவான தொழில்நுட்பம்,மருத்துவ முறை தான் தடுப்பூசி.

தொடரும்

https://m.facebook.com/story.php?story_fbid=1717017191643400&id=100000054060235

No comments:

Post a Comment