Thursday, November 9, 2017

பொருளாதார சீர்குலைவு நாள்

பொன்வன்னன் கணபதி
Via Facebook
2017-11-09

செல்லாத காசும் மதுவிலக்கும்

  நல்ல திட்டம் தான் ஆனால் நிறைவேற்றிய விதம்,முறை தவறு .அதற்கு எதிரான மக்கள் ,அதன் நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளாத மக்களும்,ஊழையர்களும் தான் அதன் தோல்விக்கு,பாதிப்புகளுக்கு காரணம் என்று பல நண்பர்கள் பதிவுகள் இருப்பது ஆச்சரியத்தையும் வேதனையையும் தருகிறது.

  முழுக்க முழுக்க முட்டாள்தனமான,வெறிகொண்டு மக்களின் திண்டாட்டத்தை ரசிக்கும் சாடிஸ  முடிவு தான் செல்லாக்காசு அறிவிப்பு என்பதில்  மாற்றுக்கருத்து  இருப்பதே ஆச்சரியம் தான்.மதுவிலக்கு என்ற மற்றொரு மாயமானுக்கு இருக்கும் அதே ஆதரவு தான் இதற்கும் இருக்கிறது.இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் அலாவுதீன் அற்புத விளக்கு போல எளிதாக பல சாதனைகளை சாதிக்க விரும்பும் கூட்டம் அதிகமாக இருப்பது வருத்தம் தான்.

  இதனால் என்ன பயன்கள் என்பதை பற்றி இன்றுவரை யாரும் தெளிவாக சொல்ல முடியவில்லை.ஒரு மத்திய அமைச்சர் பாலியல் தொழில்,கடத்தல் அடி வாங்கியது என்று அடித்து விடுகிறார்.இன்னொருவர் டிஜிட்டல் எக்கனாமி எனும் அற்புதம் செழிக்க உதவியது என்கிறார்.தீவிரவாதம் நசுக்கப்பட காரணமாக இருக்கிறது என்கிறார் இன்னொருவர்.இவை அனைத்துமே வடிகட்டிய பொய்கள் தான்.

   இதே போல முட்டாள்தனமாக மதுவிலக்கு கொண்டு வரப்படுகிறது என்று வைத்து கொள்வோம்.முதலில் அதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு.இங்கு புது நோட்டுக்களை அச்சடிக்க செலவான தொகை மட்டும் பல ஆயிரம் கோடிகளை தாண்டும்.பழைய நோட்டுக்களை வாங்கி,எண்ணி அதனை இறுதியாக அழிக்க ஆர் பி ஐ இடம் ஒப்படைக்க ஆகும் செலவு சில ஆயிரம் கோடிகள்.அரசுக்கு மட்டும் ஏற்படும் செலவுகளை எடுத்து கொள்கிறேன்.

  இதன் அடிப்படையில் ஆராய,வழக்கு போட,அதில் முறையீடு செய்ய ஆகும் செலவுகள் சில நூறு கோடிகளுக்கு குறையாமல் இருக்கும்.இது அப்படியே மதுவிலக்குக்கும் பொருந்தும்.மதுவிலக்கு அறிவிக்கப்பட்ட பிஹார் மாநிலத்தில் 18 மாதங்களில் எழுவது ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.இதை போல பத்து மடங்கு பேரை பணம் வாங்கி கொண்டு காவல்துறை விட்டு விட்டிருக்கும்.பக்கத்து மாநிலத்தில் சட்டரீதியாக தவறாக இல்லாத செயலுக்கு பிஹாரில் இததனை ஆயிரம் மக்கள்குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.மதுவிலக்கு என்பதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு மற்றும் தன் மாநில மக்களில் பல ஆயிரம் பேரை குற்றவாளிகளாக ஆக்கும் நிலையை தான் மதுவிலக்கு சாதித்தது .

  கருப்பு பணம் பெரும்பூதமாக முன் நிறுத்தப்படுவது போல தான் மதுவும் முன் நிறுத்தப்படுகிறது.தனி மனிதனாக திருந்தாவிட்டால் இரண்டையும் ஒழிக்க முடியாது.ஒவ்வொரு தனி மனிதனும் தரும் ,பெரும் கருப்பு பணம்ப தான் வரதட்சிணை.சட்டங்களின் மூலம் அது ஒழிந்து விட்டதா என்ன?கடந்த சில ஆண்டுகளில் மிகவும் நிறைத்து தான் உள்ளது.இது இங்கும் பொருந்தும்.

பல கோடி மது அருந்தும் மக்களில் ஒரு சில சதவீதத்தை தவிர மற்றவர் யாரும் மதுவுக்கு அடிமை ஆகி,உடல்,உயிர்,சொத்து இழப்பது கிடையாது.அப்படி இழக்கும் கூட்டம் மதுவிலக்கு போன்ற முட்டாள்தனங்களினால் அதில் இருந்து விடுபட்டு விடாது.எங்கு கிடைக்குமோ அங்கு சென்று குடிக்க இன்னும் அதிக பணத்தை செலவு செய்யும்.அதற்காக குற்றவாளிகளாக மாறவும் தயங்காது.அவர்களின் குடும்பங்களுக்கு மதுவிலக்கு என்பது அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்த பாதிப்புகளை விட அறிவிக்கப்பட்ட பிறகு பாதிப்புகள் பல மடங்கு அதிகம்.ஊதியம் பெற்று கொண்டு அதனை அருகில் உள்ள மாநிலம் சென்று பாட்டில்களாக வாங்கி கொண்டு வருவதால்,அங்கேயே குடித்து விட்டு விழுந்து கிடைப்பதால் ஏற்படும் நட்டம் பல மடங்கு அதிகம் தான்.

கைது ஆனால் அதற்காக ஆகும் செலவு குடும்பத்தை கந்துவட்டியின் மீளாத வலையில் தான் சிக்க வைக்கும்.பிஹார் போன்ற மாநிலங்களில் இருந்து தினமும் பணிக்காக பல கிலோமீட்டர் சென்று வருபவர்கள் குறைவு.இங்கு தமிழ்நாட்டில் மதுவிலக்கு இருந்த காலகட்டத்திலும் இதே நிலை தான்.இப்போது மது அரசின் அனுமதியோடு விற்கப்படும் அண்டை மாநிலங்கள்,நம்  மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து ஓரிரு மணி நேரங்களில் சென்று வரும் தொலைவில் தான் இருக்கின்றன.ஒரு நாளைக்கு அண்டை மாநிலங்களில்  இருந்து உள்ளே வரும் வாகனங்கள் மட்டும் பல லட்சம் .

  லட்சக்கணக்கான  வாகனங்களை,ரயில்,பஸ் மூலம் வரும்  லட்சக்கணக்கான பயணிகளை சோதனை போட எத்தனை ஆயிரம் கூடுதல் காவலர்கள் தேவைப்படும்.இது சாத்தியமா?இதே தான் கருப்பு பண ஒழிப்பு எனும் முட்டாள்தனத்திலும் நடந்தது.எத்தனை கோடி வங்கி கணக்குகளை சில ஆயிரம் வருமானவரித்துறை ஊழியர்கள் அலச முடியும்.அதில் எததனை பேருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியும்.அதில் எத்தனை பேரோடு வழக்காட முடியும்.பணம் கொடுக்க முடித்தவர்களுக்கு குறைந்த Fine  போட்டு விட்டு கொடுக்க முடியாதவர்கள் மீது பேருக்கு வழக்காடுவது தான் நடக்கும்.

   வங்கி கணக்கில் ஒரு சில நூறுகளுக்கு மேல் பார்க்காத வங்கி கணக்காக இருந்தாலும் அதில் 250000 வரை யார் டெபாசிட் செய்து இருந்தாலும் அதனை இன்று உள்ள சட்டங்களின் கீழ் கேள்வி கேட்க முடியாது.வருவாயே  இல்லாத வயதான தாத்தா பாட்டி,தாய்,தந்தை,அதை சித்தப்பா ,பணியாளர்களின் உறவுகள் என எல்லா கணக்குகளில் சில லட்சம் ரூபாயை டெபாசிட் செய்து விட்டு எடுத்திருந்தால் என்ன செய்ய முடியும்.

  ஒரு குறிப்பிட்ட கமிஷனுக்காக இதனை செய்யும் கூட்டம் சில நாட்களில் உருவாகி விட்டது. இவர்களுக்கு இடையே இருந்த போட்டியில் கமிஷன் தொகை பத்துக்கு கீழே குறைந்தது தான் மிச்சம்.வரதட்சினையாக வாங்கிய பல லட்சம் ரூபாய் பழைய நோட்டுக்களை திருப்பி கொடுத்து விட்டு திருமணத்துக்கு முன்பு புது நோட்டுக்களாக வாங்கிய குடும்பங்களை தனிப்பட்ட முறையில் நான் அறிவேன்.பெண் வீட்டாரின் ,உறவுகள்,நட்புகள் என அனைவரும் பங்கு கொண்டு அதனை மாற்றி கொடுத்தனர்.நான் பணியாற்றிய ஆந்திர பிரதேசத்தில் குறைந்த பட்ச வரதட்சிணை சில லட்சங்களில் இருந்து கோடிகள் வரை செல்வது சாதாரணமான நிகழ்வு .

  பணமதிப்பு திட்டத்தால் வரதட்சிணை ஓழிந்து விட்டது என்று யாராவது அமைச்சர் சொன்னது போல எனக்கு தெரியவில்லை.இது குறையவில்லை இதை போல ரொக்கமாக பணப்பரிமாற்றம் நடைபெறும் வேறு எந்த தொழில் மட்டும் எப்படி பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும்.

   விஞ்ஞான வளர்ச்சி பெரும்பாலான மக்கள் எளிதாக பல ஆயிரம் மைல் பயணம் செய்வதை,அங்கு சென்று பணி செய்வதை,ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் இருந்தாலும் எளிதாக தொடர்பு கொள்வதை எளிதாக்கி விட்டது.பணி இழந்த பல வெளிமாநில தொழிலாளர்களோடு ஏஜெண்ட்களும் அவர்கள் ஊருக்கு சென்று அங்கே அவர்கள் பெயரில் பணமாற்றம் செய்ததும் அதிக அளவில் நடந்தது.பணி இழந்த தொழிலாளர்களுக்கு ஊதியமாக இந்த கமிஷன் தொகை தான் கிடைத்த அவலத்தை தான் செல்லாக்காசு சாதித்தது.

  1977 ஆம் ஆண்டு ஆயிரம் ரூபாய் செல்லாக்காசாக அறிவிக்கப்பட்ட போது மக்களிடையே தொடர்புகள் குறைவு. பணக்காரர்களை தவிர யாரும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தியது கிடையாது.வங்கி கணக்குகளும் வெகு குறைவு.அதனால் 25 சதவீத அளவுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு வராமலேயே அழிக்கப்பட்டது.ஆனால் இந்த முறை அரசு வெளியில் இருக்கிறது என்று அறிவித்த பணத்தை விட அதிகமாக உள்ளே வந்திருக்க தான் வாய்ப்புகள் அதிகம்.அதனால் தான் அரசு இன்னும் தெளிவான தகவல்களை வெளியிடாமல் எண்ணி கொண்டே இருக்கிறது.

  மதுவிலக்கிலும் இதே தான் நிகழும்.மதுவிலக்கு இருக்கும் குஜராத்,பிஹார் தங்கள் மாநில மக்களை லட்சக்கணக்கில் குற்றவாளிகளாக மாற்றியது,பல லட்சம் ஏழை மக்களை கள்ள சாராயம் காய்ச்சுபவர்களாக,சாராயத்தை விற்பனை செய்பவர்களாக ,சாராயத்தை கடத்துபவர்களாக மாற்றியது தான் இதனால் கிடைத்த ஒரே பலன்.எந்தவித திட்டமாக இருந்தாலும் அதனால் ஏற்படும் சாதகபாதகங்கள்,ஏற்படும் அரசு வருவாய் இழப்பு,தனி நபர் வருவாய் இழப்பு போன்றவற்றை அலசி முடிவுக்கு வராமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பது மக்கள் ஆட்சியில் தவறாக கருதப்பட வேண்டும்.

#EconomicDisasterDay #EDD811 #பொருளாதாரசீர்குலைவுநாள்

https://m.facebook.com/story.php?story_fbid=1707735809238205&id=100000054060235

No comments:

Post a Comment